Krishna stayed at Vrikasthala! | Udyoga Parva - Section 84 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –13)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் தொடர்ந்து சென்று படைகளையும்; ஹஸ்தினாபுரத்திற்கு நேரிட்ட தீய சகுனங்களையும், கிருஷ்ணன் கடந்து சென்ற இடங்களில் நேர்ந்த இனிமையான அனுபவங்களையும் வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; விருகஸ்தலத்தை அடைந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனை உபசரித்த அந்தணர்கள்; அந்தணர்களுக்கு உணவளித்து இரவை மகிழ்ச்சியாகக் கழித்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளை அடிப்பவனே {ஜனமேஜயா}, வலிய கரங்களைக் கொண்ட அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்} (ஹஸ்தினாபுரத்திற்குப்) புறப்பட்டபோது, எதிரி வீரர்களைக் கொல்லவல்லவர்களும் பலமிக்கவர்களுமான பத்துத் தேர்வீரர்கள் அவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆயிரம் {1000} காலாட்படை வீரர்களும், ஆயிரம் {1000} குதிரைவீரர்களும், நூற்றுக்கணக்கான பணியாட்களும் அபரிமிதமான உணவுப்பொருட்களுடன் அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தாசார்ஹ குலத்தவனான அந்த ஒப்பற்ற மதுவைக்கொன்றவன் {மதுசூதனன்}, தனது பயணத்தை எப்படிச் செய்தான்? அந்த வீரன் {கிருஷ்ணன்} புறப்பட்ட போது என்னென்ன சகுனங்கள் காணப்பட்டன?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த ஒப்பற்ற கிருஷ்ணன் (ஹஸ்தினாபுரத்திற்குக்) கிளம்பியபோது காணப்பட்ட இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான சகுனங்களை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. வானம் மேகமற்று இருந்தாலும், மின்னல்கீற்றுகளுடன் கூடிய இடி உருளும் ஒலி கேட்டது. தெளிந்த வானில் {கண்களுக்குத் தெரியாதபடி} வரிசையாக வந்த மேகங்கள் இடைவிடாமல் பின்புறத்தில் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. கிழக்கு நோக்கிப் பாயும் சிந்து நதி உட்பட்ட ஏழு பெரிய ஆறுகள் எதிர் திசை {மேற்கு} நோக்கிப் பாய்ந்தன. எதையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாவண்ணம் எல்லாத் திசைகளும் எதிர்மறையானதைப் போலத் தோன்றின.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} எங்கும் நெருப்புகள் சுடர்விட்டு எழுந்தன, பூமி மீண்டும் மீண்டும் நடுங்கியது. நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் நீர் பாத்திரங்கள் {நீர்} பெருகி வழிந்தோடின. மொத்த அண்டமே இருளில் மூழ்கியது. புழுதி நிறைந்த சுற்றுச்சூழலில், அடிவானத்தின் திக்குகளையும், மூலத்திசைகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை. வானத்தில் இருந்து பெரும் கர்ஜனைகள் கேட்கப்பட்டன, ஆனால் எந்த உருவமும் தென்படவில்லை.
ஓ! மன்னா {ஜனமேஜயா} அற்புதம் நிறைந்த இந்த நிகழ்வு நாடு முழுவதும் காணப்பட்டது. கடுமையான இடியைப் போன்ற ஒலியுடன் வீசிய தெற்மேற்கு காற்று, ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து, ஹஸ்தினாபுர நகரத்தை நசுக்கியது.
எனினும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} கடந்த சென்ற இடங்களில் இனிமையான தென்றல் வீசியது, அனைத்தும் மங்கலகரமாக ஆனது. தாமரைகள் மற்றும் நறுமணமிக்க மலர்கள் அங்கே பொழிந்தன. கூரிய புற்களும் முட்களும் அற்றிருந்த அந்தச் சாலை இனிமையானதாக இருந்தது. அவன் {கிருஷ்ணன்} தங்கிய இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வந்து செல்வத்தைத் தானமளிக்கும் அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து, தயிர், நெய், தேன் போன்ற உணவுகள் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.
பெண்களே கூட, வெளியே சாலைக்கு வந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஒப்பற்ற வீரனின் {கிருஷ்ணனின்} மேனியில் நறுமணமிக்கக் காட்டு மலர்களைத் தூவினர். பிறகு அவன், இதயத்துக்கு இனிமையைத் தரவல்லவையும், கண்களுக்கு இனிய காட்சிகளைக் கொண்டவையும், வண்டுகள் நிறைந்தவையுமான பல்வேறு கிராமங்களைக் கடந்தும், பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளைக் கடந்தும், புனிதமானதும், அழகுள்ளதும், அனைத்து வகைப் பயிர்கள் நிரம்பியதும், இனிமையானதுமான சாலிபவனம் என்கிற இடத்தை அடைந்தான்.
எப்போதும் உற்சாகம் கொண்டவர்களும், நல்ல இதயம் படைத்தவர்களும், பாரதர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவர்களும், அதன்காரணமாகப் படையெடுப்பாளர்கள் குறித்த அச்சங்களில் இருந்து விடுபட்டவர்களும், எந்தவித துயரத்தையும் அறியாதவர்களுமான உபப்லாவ்யத்துக் குடிமக்களில் பலர், தங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்து, கிருஷ்ணனைக் காணும் விருப்பத்தில் ஒன்றிணைந்து {அங்கே சாலிபவனத்தின் சாலை} வழியில் நின்றார்கள். சுடர்மிக்க நெருப்பைப் போன்ற அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்} அந்த இடத்திற்கு {சாலிபவனத்திற்கு} வந்ததைக் கண்டதும், தங்கள் வழிபாட்டுக்குகந்த அவனை {கிருஷ்ணனை}, தங்கள் இல்லத்திற்கு வந்த ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல மரியாதையுடன் வழிபட்டார்கள்.
கடைசியாக அந்த எதிரிவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விருகஸ்தலத்தை அடைந்த போது, இங்குமங்குமாய்ச் பிரிந்த சூரியக்கதிர்கள் வானத்தைச் சிவப்பாக்கியதாகத் தோன்றியது. தனது தேரில் இருந்து இறங்கிய அவன் {கிருஷ்ணன்}, தான் வழக்கமாகச் செய்யும் சுத்திகரிப்புச் சடங்குகளை முறையாகச் செய்து, குதிரைகளுக்குச் சேணம் அகற்றச் சொல்லி உத்தரவிட்டு, தனது மாலைநேரத் துதிகளைச் சொல்ல தன்னைத் தயாரித்துக் கொண்டான். {தேரோட்டி} தாருகனும், குதிரைகளை விடுவித்து, குதிரை அறிவியல் விதிகளின்படி அவற்றை மேய்த்து, நுகங்களையும், தடயங்களையும் அகற்றி அவற்றுக்கு விடுதலை கொடுத்தான். இது செய்து முடிக்கப்பட்டதும் மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, "யுதிஷ்டிரரின் தூதுக்காக நாம் இந்த இரவை இங்கே கழிக்க வேண்டும்" என்றான். அவனது {கிருஷ்ணனின்} நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அவனது பணியாட்கள், விரைவாக ஒரு தற்காலிகக் குடிலை அமைத்து, அருமையான உணவையும் பானங்களையும் விரைந்து தயாரித்தனர்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிராமத்தில் வசித்த பிராமணர்களில் உன்னதமானவர்கள், உயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பணிவானவர்கள், வேதங்களின் கூற்றுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் நடத்தையை அமைத்துக் கொண்டவர்கள் ஆகியோர், எதிரிகளைத் தண்டிப்பவர்களில் ஒப்பற்றவனான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அணுகி, தங்கள் அருளாசிகள் மற்றும் மங்கலகரமான பேச்சுகளால் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தினார்கள். அனைவரின் மரியாதைக்கும் தகுதிவாய்ந்த அந்தத் தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்திய பிறகு, செல்வங்கள் நிறைந்த தங்கள் இல்லங்களை, அந்த ஒப்பற்ற மனிதனின் {கிருஷ்ணனின்} ஆளுகைக்குள் வைத்தனர்.
அவர்களிடம் "போதும்" என்று சொன்ன அந்த ஒப்பற்ற கிருஷ்ணன், அவர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப முறையான மரியாதையைச் செலுத்தி, அவரவர் வீடுகளுக்கு அவரவர்களுடன் சென்று, பிறகு அவர்களின் துணையுடனே தனது கூடாரத்திற்குத் திரும்பினான். அந்தணர்கள் அனைவருக்கும் இனிய இறைச்சியை உண்ணக் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து தனது உணவை எடுத்துக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அந்த இரவை மகிழ்ச்சியாக அங்கே கழித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.