Monday, May 11, 2015

துச்சாசனன் மாளிகையே சிறந்தது! - உத்யோக பர்வம் பகுதி 86

Dussasana's abode, is better than Duryodhana's! | Udyoga Parva - Section 86 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –15)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் புறப்பாட்டை விதுரனிடம் சொன்ன திருதராஷ்டிரன், கிருஷ்ணனின் பெருமைகளைச் சொன்னது; ஹஸ்தினாபுரத்திற்கு வரப்போகும் கிருஷ்ணனுக்கு என்னென்ன பொருட்களைப் பரிசாகக் கொடுக்கப் போகிறான் என்பதைத் திருதராஷ்டிரன் விதுரனிடம் சொன்னது; கிருஷ்ணனின் வரவேற்புக்காகத் துச்சாசனனின் மாளிகையைத் தயார் செய்யுமாறு திருதராஷ்டிரன் சொன்னது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், "ஓ! விதுரா, உபப்லாவ்யத்தில் இருந்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டுவிட்டான். அவன் {கிருஷ்ணன்} இப்போது விருகஸ்தலத்தில் தங்கியிருக்கிறான். நாளை இங்கே வருவான். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆஹுகர்களின் தலைவனாவன். அவன் {கிருஷ்ணன்}, சாத்வத குல உறுப்பினர்கள் அனைவரிலும் முதன்மையான நபரும், உயர் ஆன்மா, பெரும் சக்தி மற்றும் பலத்தைக் கொண்டவனுமாவான். உண்மையில், விருஷ்ணிகளின் செழிப்புமிக்க நாட்டுக்கு மாதவனே {கிருஷ்ணனே} காப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறான். அவனே மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற பெரும்பாட்டனாக இருக்கிறான். ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் ருத்திரர்கள் ஆகியோர் ஞானம் கொண்ட பிருஹஸ்பதியைப் புகழ்வதைப் போல, விருஷ்ணி குலத்தவர், புத்திசாலியான கிருஷ்ணனின் அறிவைப் புகழ்கிறார்கள்.


ஓ! அறம்சார்ந்தவனே {விதுரா}, நான் உனது முன்னிலையில், அந்த ஒப்பற்ற தாசார்ஹ குலக் கொழுந்துக்கு {கிருஷ்ணனுக்கு} வழிபாட்டைக் காணிக்கையாக்குவேன். அந்த வழிபாட்டைக் குறித்து நான் சொல்வதைக் கேள். நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்குத்} தங்கத்தாலான பதினாறு {16} தேர்களைக் கொடுப்பேன். ஒரே நிறம் கொண்டவையும், பாஹ்லீக இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையுமான சிறந்த நான்கு குதிரைகளால் அவை ஒவ்வொன்றும் {அந்த ஒவ்வொரு தேரும்} இழுக்கப்படும்.

ஓ! கௌரவா {விதுரா}, எப்போதும் மதநீர் ஒழுகுபவையும், பகைவீரர்களை அடிப்பதற்கேற்ற வகையில், கலப்பையின் தண்டுகளைப் போன்ற பெரிய தந்தங்களைக் கொண்டவையுமான எட்டு {8} யானைகளை நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுப்பேன். அவை ஒவ்வொன்றும் {ஒவ்வொரு யானைக்கும்} எட்டு {8 மனிதப்} பணியாட்கள் இருப்பார்கள். தங்க நிறத்திலான நூறு {100} அழகிய கன்னிப் பெண்களை நான் அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பணியாட்களாகக் கொடுப்பேன். அதே போலப் பல ஆண் பணியாட்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன்.

மலைவாழ் மனிதர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையும், தொடுவதற்கு மென்மையானவையுமான பதினெட்டாயிரம் {18,000} கம்பளிப் போர்வைகளை நான் அவனுக்குக் கொடுப்பேன். சீனத்தில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் {1000} மான் தோல்களையும், கேசவனுக்குத் {கிருஷ்ணனுக்குத்} தகுந்த அந்த வகையான பல பொருட்களையும் நான் அவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பேன். பகலும், இரவும் மின்னும் தூய கதிர்களைக் கொண்ட ரத்தினங்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} மட்டுமே அதற்குத் தகுதியுடையவன் ஆவான்.

சுற்றிலும் ஒரு நாளைக்குப் பதினான்கு {14} யோஜனைகள் செல்லவல்லதும், கோவேறு கழுதைகள் பூட்டியதுமான இந்த எனது தேரையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். அவனைத் தொடர்ந்து வந்துள்ள பணியாட்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான தினப்படி உணவைக் காட்டிலும் எட்டுமடங்கிலானவற்றை நான் அவனது முன்னிலையில் வைப்பேன். துரியோதனனைத் தவிர, எனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, அவரவர் தேர்களில் சென்று அவனை {கிருஷ்ணனை} வரவேற்பார்கள்.

அருள் நிறைந்தவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் {1000} ஆடல் மகளிரும், ஒப்பற்ற கேசவனை {கிருஷ்ணனை} வரவேற்க கால்நடையாகச் செல்வார்கள். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்காக நகரத்தை விட்டுச் செல்லும் அழகிய மங்கையர் முகத்திரை விலக்கி வெளிப்படையாகவே வெளியே செல்வார்கள். மனைவியர் மற்றும் பிள்ளைகளுடன் கூடிய குடிமக்கள் ஒப்பற்ற மதுசூதனனைக் {கிருஷ்ணனைக்} காணச் செல்லும்போது, காலை கதிரவனிடம் தங்கள் கண்களைச் செலுத்துபவர்களைப் போலவே மரியாதையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தட்டும். எனது கட்டளையின் பேரில், சுற்றிலும் உள்ள கவிகைகள் {விதானங்கள்} அனைத்தும், பதக்கங்களாலும், கொடிகளாலும் நிறைக்கப்படட்டும். கேசவன் {கிருஷ்ணன்} வரும் சாலை, நன்கு நீர் தெளிக்கப்பட்டு, புழுதி நீக்கப்படட்டும்.

துரியோதனனுடையதைவிடச் சிறந்ததான துச்சாசனனின் வசிப்பிடம் தூய்மையாக்கப்பட்டு, தாமதமில்லாமல் நன்கு அலங்கரிக்கப்படட்டும். பல அழகிய கட்டடங்களைக் கொண்ட அந்த மாளிகையே, இனிமையானதும், இன்பம் நிறைந்ததும், அனைத்து காலங்களுக்கும் ஏற்ற செல்வங்களை அபரிமிதமாகக் கொண்டதுமாகும். அந்த வசிப்பிடத்தில்தான் எனது மற்றும் துரியோதனனின் செல்வமனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விருஷ்ணி குலத்துக்கொழுந்து {கிருஷ்ணன்} எவை எவற்றுக்குத் தகுதியானவனோ அவை அனைத்தும் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.