Galava accepted Madhavi as daughter | Udyoga Parva - Section 115 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –44)
பதிவின் சுருக்கம் : காலவர் கேட்ட குதிரைகளைக் கொடுக்க இயலாத யயாதி, தனது மகளை காலவரிடம் கொடுப்பது; யயாதி தனது மகள் மாதவியைத் திருமணம் செய்து கொடுப்பதால் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு காலவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொன்னது; காலவர் மாதவியை ஏற்றுக் கொள்வது; கருடன் தனது நண்பன் காலவன் தன் நோக்கத்தை அடைய ஒரு வழி கிடைத்த மனநிறைவுடன் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பியது; மாதவியை மணமுடித்துக் கொடுத்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்ள அயோத்யா மன்னன் ஹர்யஸ்வனிடம் காலவர் சென்றது...
நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "உண்மை நிறைந்த அற்புத வார்த்தைகளைக் கொண்டு சுபர்ணனால் {கருடனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனும், தானமளிப்பவர்களில் முதன்மையானவனும், காசி நாட்டவர் அனைவரிலும் தயாளமான ஆட்சியாளனுமான தலைவன் யயாதி, தன் மனதில் அவ்வார்த்தைகளைச் சுழற்றி, தன்னிடம் கேட்கப்பட்ட யாசகத்தால் கிடைக்கும் பெருமையையும், (காலவரின்) தவத்தகுதியையும் கருதிப் பார்த்து, சூரிய குல மன்னர்கள் அனைவரையும் கடந்து, குறிப்பாகத் தன்னிடம் இந்த இருவரும் {கருடனும் காலவரும்} வந்ததை நோக்கில் கொண்டு, "இன்றைய எனது வாழ்வு அருளப்பட்டதே. உண்மையில், நான் பிறந்த குலமும் இன்று அருளப்பட்டதாகியது. ஓ! பாவமற்ற தார்க்ஷியா {கருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ! நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்துவிட்டது. எனினும், ஓ! விண்ணதிகாரியே {கருடா}, நீ இங்கே வந்த நோக்கம் கனியற்றதாகச் {பலனற்றுப் போகச்} செய்ய என்னால் இயலாது. மேலும் இந்த மறுபிறப்பாள முனிவரின் {பிராமண முனிவர் காலவரின்} நம்பிக்கைகளையும் நான் வீணாக்க விரும்பவில்லை.
எனவே, அவரது நோக்கம் எதனால் நிறைவேறுமோ, அதை {குதிரையை} நான் கொடுப்பேன். இரந்து கேட்டு வரும் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினால், அவர் {தானமளிக்க வேண்டியவரின்} குலத்தையே எரித்துவிடக் கூடும். ஓ! வினதையின் மகனே {கருடா}, "கொடு" என்று கேட்டு வருபவரின் நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிட்டு, "என்னிடம் ஏதும் இல்லை" என்று சொல்வதை விட வேறு பெரிய பாவச்செயல் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. {உலகில் ஆசையை நாசம் செய்வதான "கொடு" மற்றும் "இல்லை" என்ற வார்த்தைகளைக் காட்டிலும் மிகப் பாவமானது வேறு எதுவும் இல்லை}. தனது நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்து, தன் நோக்கமும் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்த ஒரு மனிதர், தனக்கு நன்மை செய்யத்தவறிய ஒருவனுடைய மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அழித்துவிடக்கூடும்.
எனவே, ஓ! காலவரே, நான்கு குடும்பங்களைத் தழைக்க வைக்கவல்ல [1] இந்த எனது மகளை {மாதவியைப்} பெற்றுக் கொள்ளும். அழகில் இவள் {மாதவி} தேவர்களுக்கு நிகரானவளாவாள். இவளிடம் நற்குணங்களால் ஆன திறன்கள் அனைத்தும் உள்ளன. உண்மையில், இவளது அழகுக்காகவே, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் {தாங்கள் மணமுடித்துக்கொள்ள} (என்னிடம்) இவளைக் கேட்கின்றனர். ஒரு காது கருப்பாக உள்ள எண்ணூறு குதிரைகளைக்கூட விடும், பூமியில் உள்ள மன்னர்கள் தங்கள் முழு நாடுகளையும் இவளுக்கு வரதட்சணையாக கொடுப்பார்கள். எனவே, மாதவி என்ற பெயர் கொண்ட எனது இந்த மகளை நீர் பெற்றுக் கொள்வீராக. நான், எனது மகள் மூலமாகப் பெறப்படும் மகனைக் {தௌஹித்ரர் = மகளின் மகன்} கொண்டவனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றான் {யயாதி}.
[1] நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும். நான்கு பிள்ளைகளைப் பெற்று, நான்கு வம்சங்களைப் பெறுவாள் இந்த மாதவி என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
அந்த மகளைப் {யயாதியின் மகளாகிய மாதவியைத் தன் மகளாகப்} பெற்றுக் கொண்ட காலவர், "நான் மீண்டும் உம்மைக் காண்பேன்" என்று சொல்லியபடி கருடனுடன் சென்றுவிட்டார். அவர்கள் {காலவரும் கருடனும்} அந்த மங்கையை {மாதவியை} தங்களுடன் அழைத்துச் சென்றனர். முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த {பறவையினத்தைச் சேர்ந்த} காலவரின் நண்பன் {கருடன்}, அவரிடம் {காலவரிடம்}, "இறுதியாக குதிரைகளை அடைவதற்கான வழி கிடைத்தது" என்று சொன்னான். இதைச் சொன்ன கருடன், பிறகு, காலவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டான். அந்தப் பறவைகளின் இளவரசன் {கருடன்} சென்ற பிறகு, தன்னுடன் அந்த மங்கையை {மாதவியை} அழைத்துச் சென்ற அவர் {காலவர்}, அந்த மங்கைக்கான (தகுந்த) வரதட்சணையைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனிடம் செல்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.
பெரும் சக்தி கொண்டவனும், நால்வகை அணிகளுடன் கூடியபெரும் படையைக் கொண்டவனும், கருவூலம் நிரம்பியவனும், அபரிமிதமான தானியங்களைக் கொண்டவனும், தனது குடிகளால் அன்புடன் விரும்பப்படுபவனும், அந்தணர்களால் விரும்பப்படுபவனும், அயோத்யா நகரத்தை ஆள்பவனுமான இக்ஷவாகு குலத்தின் ஹர்யஸ்வனிடம் [2] செல்ல அவர் முதலில் நினைத்தார். வாரிசை அடையும் விருப்பத்துடன் இருந்த அவன் {ஹர்யஸ்வன்}, அற்புதமான தவங்களில் ஈடுபட்டு, சமாதானத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வந்தான்.
[2] ஹர்யஸ்வன் என்றால் பச்சைக் குதிரைகளை உடையவன் என்று பொருள்.
பிறகு அந்த அந்தணரான காலவர், ஹர்யஸ்வனிடம் சென்று, "ஓ! மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ! ஹர்யஸ்வா, எனக்கு வரதட்சணையைக் கொடுத்துவிட்டு, இவளை {மாதவியை} உனது மனைவியாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. நீ என்ன வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் [3] என்பதை நான் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பாயாக" என்றார் {காலவர்}.
[3] மணமகளின் பெற்றோருக்கு, மணமகன் வரதட்சணை கொடுப்பதை "சுல்கம்" என்று சொல்வார்கள்.