Tuesday, June 02, 2015

மீண்டும் கன்னியான மாதவி! - உத்யோக பர்வம் பகுதி 116

Madhavi became a maiden once more! | Udyoga Parva - Section 116 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –45)

பதிவின் சுருக்கம் : ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு  குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, "உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதியாக, சிவந்திருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஹர்யஸ்வன்}.


[1] அழகைக் குறிக்கவோ, மங்கலத்தைக் குறிக்கவோ உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஆறு {6} எவை என்பது பலவாறாகச் சொல்லப்படுகிறது.
உள்ளங்கைகளின் பின்புறம் இரண்டும்{2},பின்தட்டுகள் இரண்டும் {2}, கொங்கைகள் இரண்டும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது. கொங்கைகள் இரண்டும் {2}, இடைகள் இரண்டும் {2}, கண்கள் இரண்டும் {2} தான் அவை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.

மென்மையாக இருக்க வேண்டிய ஏழு {7} அங்கங்கள் என்பன, தோல், மயிர், பற்கள், கைவிரல்கள், கால்விரல்கள், இடை, கழுத்து ஆகியன என்று ஒரே கருத்தாகக் குறிக்கப்படுகிறது. ஆழமாக இருக்க வேண்டிய மூன்று {3} அங்கங்கள் என்பன தொப்புள் {நாபி}, குரல் மற்றும் புத்தி என்று சொல்லப்படுகிறது. சிவந்திருக்க வேண்டிய ஐந்து {5} அங்கங்கள் என்பன உள்ளங்கைகள், கடைக்கண்கள், நாக்கு, உதடுகள், முகம் ஆகியன ஆகும். இந்த ஐந்தும் கூடப் பலவாறாகச் சொல்லப்படுகின்றன என்கிறார் கங்குலி.

கீழ்க்கண்டவை வேறொரு பதிப்பில் கண்ட அங்கலட்சணங்கள் ஆகும். இவை கங்குலியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றன.

பெண்களுக்கான அங்கலட்சணம்: பின்தட்டுகள், நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயர்ந்திருக்க வேண்டும்; விரல்களின் கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் {கங்குலி ஏழு என்கிறார்} மென்மையாக இருக்க வேண்டும். குரல், மனம், நாபி ஆகிய மூன்றும் ஆழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கைகள், உள்ளங்களால்கள், கடைக்கண்கள், நகங்கள் ஆகியன {இந்த அங்கங்கள் ஐந்து என்கிறார் கங்குலி} சிவந்திருக்க வேண்டும்.

ஆண்களின் லட்சணம் என்பது : அங்கங்கள் ஐந்தில் {5} நீளமும், நாலில் {4} குட்டையும், ஐந்தில் {5} மென்மையும், ஆறில் {6} உயர்வும் {உன்னதமும்}, ஏழில் {7} சிவப்பும், மூன்றில் {3} விரிவும், மூன்றில் {3} ஆழமும் {கம்பீரமும்} இருக்க வேண்டும். கன்னம், கண், கை, தொடை, மூக்கு ஆகிய ஐந்தும் {5} நீண்டு இருந்தால் நன்மையை அளிக்கின்றன. லிங்கம் {ஆண்குறி}, பின்தட்டு, கழுத்து, கணுக்கால் ஆகிய நான்கும் {4} குட்டையானால் நன்மையை அளிக்கின்றன. பல், விரல்கணு, கேசம், தோல், விரல் ஆகிய ஐந்தும் {5} மென்மையாக இல்லாவிட்டால் துக்கத்தைத் தரும். மார்பு, கக்ஷம், நகம், நாசி, தோள், பிடரியெலும்பு ஆகிய ஆறும் {6} உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டும். கடைக்கண், பாதம், கை, கன்னம், உதடுகள், நாக்கு, நகம் ஆகிய ஏழும் {7} சிவந்திருந்தால் அனைத்து நன்மைகளையும் அளிக்கும்.

அதற்குக் காலவர், "நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்" என்றார்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், "பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ! காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்" என்றான் {ஹர்யஸ்வன்}.

மன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், "பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ! அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே" என்றாள்.

அந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், "ஓ! ஹர்யஸ்வா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.

சிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், "ஓ! மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது" என்றார்.

ஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். "இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்" என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்" என்றார் {நாரதர்}.