Sunday, June 07, 2015

யயாதியை மறந்த தேவர்கள்! - உத்யோக பர்வம் பகுதி 120

Celestials forgot Yayati ! | Udyoga Parva - Section 120 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –49)

பதிவின் சுருக்கம் : யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வாழ்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.


அந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

பல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்த, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகளை ஈட்டினாள்.

(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.

வலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், "சீ, சீச்சீ" என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், "யார் இவன்? எந்த மன்னனின் மகன் இவன்? இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான்? எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான்? தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான்? இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான்? இவனை அறிந்தவர் யார்?" என்ற கேள்விகளைக் கேட்டனர்.

அந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, "இவனை நாங்கள் அறியோம்" என்றே சொன்னார்கள். அவர்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்" என்றார் {நாரதர்}.