Yayati with his daughters sons ! | Udyoga Parva - Section 121 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –50)
பதிவின் சுருக்கம் : தேவ தூதன் ஒருவன் யயாதியை சொர்க்கத்தில் இருந்து தள்ளவிட வருவது; கீழே விழுந்த யயாதி தங்கள் மகள் வழி பேரர்களுக்கு மத்தியில் விழுவது; பேரர்களும், மகளும், காலவரும் தங்கள் புண்ணியங்களை யயாதிக்குக் கொடுக்க முன் வந்தது ...
நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, தனது இருக்கையில் இருந்து தள்ளப்பட்டு, அச்சத்தால் இதயம் நடுங்கி, வருத்தத்தால் எரிந்து, தனது மாலைகளின் ஒளி மங்கி, அறிவு மறைக்கப்பட்டு, மணிமுடியும் {கிரீடமும்} தோள்வளைகளும் நழுவி, தலைச்சுற்றலுடன், ஆபரணங்களும் அங்கிகளும் இழந்து, அங்கங்கள் அனைத்தும் தளர்ந்து, அடையாளம் காணமுடியாதபடி மாறினான் யயாதி. சில நேரங்களில் மற்ற சொர்க்கவாசிகளைக் காணாது, விரக்தியில் நிரம்பி, புத்தி சூன்யமாகிப் போன மன்னன் யயாதி, பூமியை நோக்கித் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தான்.
அந்த மன்னன் {யயாதி} விழுவதற்கு முன்னர், அவன் தனக்குள், "நான் ஊக்கப்படுத்திய எந்த மங்கலமற்ற, பாவம் நிறைந்த எண்ணத்தின் விளைவாக, இப்படி என் இடத்தில் இருந்து நான் வீசி எறியப்படுகிறேன்?" என்று நினைத்தான். அங்கே இருந்த மன்னர்கள், சித்தர்கள் மற்றும் அப்சரஸ்கள் அனைவரும் யயாதி தனது நிலையை இழந்து கீழே விழுவதைக் கண்டு சிரித்தனர். ஓ! மன்னா {துரியோதனா}, விரைவில், தகுதி இழந்தவர்களை வீசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தேவர்கள் மன்னனின் {இந்திரனின்} கட்டளையின் பேரில் அங்கே வந்தான்.
அங்கே வந்த அவன் யயாதியிடம், "செருக்கால் அதீதமாகப் போதையுண்டிருக்கும் உன்னால் அலட்சியம் செய்யப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்த உனது செருக்கின் விளைவால், சொர்க்கத்தில் இனியும் உனக்கு இடமில்லை. ஓ! மன்னனின் மகனே {நகுஷனின் மகனே யயாதி}, இங்கே வசிக்க நீ தகுந்தவனில்லை. நீ இங்கே அங்கீகரிக்கப்பட்டவன் இல்லை. போய்க் கீழே விழுவாயாக" என்றான். தேவ தூதன் இப்படிச் சொன்னதும், அந்த நகுஷனின் மகன் மூன்று முறை மீண்டும் மீண்டும், "விழுந்தால், நீதிமான்கள் மத்தியில் நான் விழக்கடவேன்" என்று கேட்டுக் கொண்டான். இதைச் சொன்னவனும், தங்கள் செயல்களால் உயர்ந்த பகுதிகளை வென்ற மனிதர்களில் முதன்மையானவனுமான அவன் {யயாதி}, எந்தக் குறிப்பிட்ட பகுதியில் விழுவது என்பது குறித்து நினைக்கத் தொடங்கினான்.
அதே வேளையில், வலிமைமிக்க நான்கு மன்னர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், உசீநரனின் மகனான சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் நைமிஷ வனத்தில் கூடியிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான்., தேவர்கள் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்யும் வகையில், வாஜபேயம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி ஒன்றைச் செய்வதில் அந்த ஏகாதிபதிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகை சொர்க்கத்தின் வாயில்களையே எட்டின. அப்படி எழுந்த புகையானது, பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் ஒரு நதியைப் போலத் தெரிந்தது. மேலும் அது வானத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கும் புனித ஓடையான கங்கையைப் போல இருந்தது. அந்தப் புகையை நுகர்ந்தபடி, அதை வழிகாட்டியாகக் கொண்டு, அண்டத்தின் தலைவனான அந்த யயாதி, பூமிக்கு இறங்கி வந்தான். பெரும் அழகு படைத்தவர்களும், வேள்வி செய்வோரில் முதன்மையானவர்களும், உண்மையில் தனது சொந்த உறவினர்களும், நான்கு திசைகளில் லோகபாலகர்கள் போல இருந்தவர்களும், நான்கு பெரும் வேள்வி நெருப்புகள் போல இருந்தவர்களுமான ஆட்சியாளர்களில் சிம்மங்கள் போன்ற அந்த நால்வருக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான். தனது தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் இழந்ததன் விளைவாக அந்த அரசமுனியான யயாதி அவர்களுக்கு மத்தியில் இப்படியே விழுந்தான்.
சுடர்மிகும் அழகுடன் இருந்த அவனைக் {யயாதியைக்} கண்ட அந்த மன்னர்கள் அவனிடம் {யயாதியிடம்}, "நீர் யார்? எந்த இனம், நாடு அல்லது நகரத்தைச் சேர்ந்தவர் நீர்? நீர் ஒரு யக்ஷரா? தேவரா? கந்தர்வரா? அல்லது ஒரு ராட்சசரா? உம்மைக் காண மனிதனைப் போல இல்லையே. நீர் கருத்தில் கொண்டுள்ள நோக்கம் என்ன?" என்று கேட்டனர். இப்படிக் கேட்கப்பட்ட யயாதி, "நான் அரச முனியான யயாதி ஆவேன். புண்ணியம் தீர்ந்ததன் விளைவாகச் சொர்க்கத்தில் இருந்து விழுந்தேன். நீதிமான்களுக்கு மத்தியில் நான் விழ விரும்பியதால், உங்களுக்கு மத்தியில் விழுகிறேன்" என்றான் {யயாதி}.
அதற்கு அந்த மன்னர்கள் {யயாதியிடம்}, "ஓ! அனைவரிலும் முதன்மையானவரே, உமது அந்த விருப்பம் நிறைவேறட்டும். எங்கள் அனைவரின் புண்ணியங்களையும், நாங்கள் செய்த வேள்விகள் அனைத்தின் கனிகளையும் நீர் ஏற்றுக் கொள்ளும்" என்றனர். அதற்கு யயாதி, “நான், தானத்தை ஏற்கத் தகுந்த பிராமணன் அல்ல. மறுபுறம், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். பிறர் புண்ணியங்களைக் குறைக்கும் நோக்கம் எனது இதயத்துக்கு இல்லை" என்றான்.
நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த நேரத்தில், {விலங்கினம் போல} நோக்கமற்ற தனது உலவல்களின் போது அங்கே மாதவி வர நேர்ந்தது. அவளை {மாதவியைக்} கண்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, அவளிடம், "நீ இங்கே வந்த நோக்கம் என்ன? உனது எந்தக் கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்? ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவளே, நாங்கள் அனைவரும் உனது மகன்கள் ஆதலால், எங்களுக்குக் கட்டளையிடுவதே உனக்குத் தகும்" என்றனர்.
அவர்களது வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த மாதவி, தனது தந்தையான யயாதியை அணுகி, அவனை மரியாதையாக வணங்கினாள். தவத்துறவுகளில் ஈடுபட்டு வந்த அந்த மங்கை {மாதவி}, தனது மகன்கள் அனைவரின் தலைகளையும் தொட்டபடி, தனது தந்தையிடம் {யயாதியிடம்}, "இவர்கள் அனைவரும் எனது மகன்களானதால், ஓ! மன்னர்களின் மன்னா {யயாதியே}, இவர்கள் உமது மகளின் மகன்களாவர் {தௌஹித்ரர்கள் ஆவார்கள்}. இவர்கள் உமக்கு அந்நியரில்லை. இவர்கள் உம்மைக் காப்பார்கள். இந்த நடைமுறை புதியதல்ல, இதன் தோற்றம் பழங்காலத்திற்குச் சொந்தமானது. ஓ! மன்னா, மானின் நடத்தையைக் கைக்கொண்டு வனத்தில் வாழும் நான் உமது மகளான மாதவி ஆவேன். நானும் புண்ணியம் ஈட்டியிருக்கிறேன். நீர் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளும். ஓ! மன்னா, தங்கள் வாரிசுகளால் ஈட்டப்பட்ட தகுதிகளின் {புண்ணியங்களின்} ஒரு பகுதியை அனுபவிக்க மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளதாலேயே, அவர்கள் தங்கள் மகள்கள் மகனைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஓ! மன்னா, இதுவே உமது வழக்கிலும் (காலவரிடம் நீர் என்னைக் கொடுக்கும்போது) நடந்தது" என்றாள் {மாதவி}.
தங்கள் தாயின் {தாய் மாதவியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, தங்கள் தாய்வழி பாட்டனையும் வணங்கி, அதே வார்த்தைகளைச் சத்தமாக, ஒப்பற்ற வகையில், இனிய குரலில் உரைத்தனர். சொர்க்கத்தில் இருந்து விழுந்த தங்கள் தாய்வழி பாட்டனைக் காக்க அவர்கள் உரைத்த வார்த்தைகள் உலகம் முழுதும் எதிரொலித்தன. அந்நேரத்தில் அங்கே வந்து, காலவரும் யயாதியிடம், "எனது தவத்துறவின் {புண்ணியத்தில்} எட்டில் ஒரு பங்கை ஏற்று, சொர்க்கத்திற்கு நீ உயர்வாயாக" என்றார் {காலவர்}.