Yayati ascended to Heaven ! | Udyoga Parva - Section 122 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –51)
பதிவின் சுருக்கம் : மாதவியின் மகன்களான வசுமனஸ், பிரதர்த்தனன், சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக தங்கள் புண்ணியங்களை யயாதிக்கு அளிப்பது; அவர்களது புண்ணியங்களைப் பெற்றுக் கொண்ட யயாதி சொர்க்கத்திற்கு உயர்வது...
நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மனிதர்களில் காளையான அந்த மன்னன் யயாதி அந்த அறம்சார்ந்த மனிதர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பூமியின் பரப்பைத் தொட வேண்டிய அவசியமே இல்லாமல் மீண்டும் சொர்க்கத்திற்கு எழுந்தான். அவன் {யயாதி} தனது தேவ உருவை மீண்டும் அடைந்து, கவலைகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக விடுபட்டான். தெய்வீக மாலைகள், அங்கிகள், தெய்வீக ஆபரணங்கள் ஆகியவை பூட்டப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கள் தெளிக்கப்பட்டு, தெய்வீகப் பண்புகள் நிறைந்து, பூமியைத் தனது காலால் தொட வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மீண்டும் எழுந்தான்.
அதே வேளையில், ஈகைகுணத்துக்காக உலகத்தில் கொண்டாடப்படும் வசுமனஸ், உரத்த குரலில், அந்த மன்னனிடம் {யயாதியிடம்} முதலில் பேசினான். அவன் {வசுமனஸ் யயாதியிடம்}, "அனைத்து வகை மனிதர்களிடமும் பழியற்ற வகையில் நடந்து கொண்டு, நான் வென்ற தகுதியை {புண்ணியத்தை} உமக்குத் தருகிறேன். ஓ! மன்னா {யயாதியே}, அது முழுமையாக உமதே ஆகட்டும். ஈகை மற்றும் மன்னிக்கும் குணம் {பொறுமை} ஆகியவற்றால் ஒருவன் அடையும் தகுதி {புண்ணியம்}, நான் செய்த வேள்விகளின் விளைவாக நான் அடைந்த தகுதி ஆகியவை அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {வசுமனஸ்}.
அதன் பிறகு, க்ஷத்திரியர்களில் காளையான பிரதர்த்தனன் {யயாதியிடம்}, "போரைப் போலவே அறத்திற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன், ஒரு க்ஷத்திரியனானதன் விளைவால், வீரனாக நான் அடைந்த புகழ் (உண்மையில் நான் எதற்காக அறியப்படுகிறேனோ அந்தப் புகழ்) அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {பிரதர்த்தனன்}.
அதன் பிறகு, உசீநரனின் புத்திசாலி மகனான சிபி, இனிய வார்த்தைகளில் {யயாதியிடம்}, "கேலிக்காகக் குழந்தைகளிடமோ பெண்களிடமோ, ஆபத்திலோ, துயரிலோ, பகடையிலோ நான் பொய் பேசியதே இல்லை. நான் தியாகம் செய்யாத அந்த உண்மையை {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. ஓ! மன்னா {யயாதியே}, என்னால், ஆசைக்குகந்த, இன்பத்துக்குகந்த பொருட்கள் அனைத்தையும் கைவிட முடியும். எனது நாட்டையே ஏன் உயிரையும் கூடக் கைவிட முடியும், ஆனால் உண்மையை {சத்தியத்தை} ஒருபோதும் கைவிடேன். அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. எந்த உண்மையைக் கொண்டு தர்மனையும் {தர்மதேவனையும்}, எந்த உண்மையைக் கொண்டு அக்னியையும், எந்த உண்மையைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்} நான் மன நிறைவு கொள்ளச் செய்தேனோ, அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக", என்றான் {மன்னன் சிபி சக்கரவர்த்தி}.
இறுதியாக, குசிகரின் மகன் {விஸ்வாமித்ரர்} மற்றும் மாதவியின் மகனும், அரச முனியுமான அஷ்டகன், பல நூறு வேள்விகளைச் செய்த நகுஷனின் மகன் யயாதியிடம், "ஓ! தலைவா, புண்டரீகம், கோசவம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை நான் நூற்றுக் கணக்கில் செய்திருக்கிறேன். அந்தத் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் நீர் எடுத்துக் கொள்ளும். வேள்விகள் செய்வதற்காக நான் செல்வம், ரத்தினங்கள், ஆடைகள் ஆகிய எதையும் விட்டு வைத்ததில்லை. அந்த உண்மையைக் {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றான் {விஸ்வாமித்திரர் மகன் அஷ்டகன்}.
பூமியை விட்டு அகன்ற அந்த மன்னன் {யயாதி}, தனது மகளின் {மாதவியின்} மகன்கள் ஒருவர் பின் ஒருவராக இவ்வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல மேலும் மேலும் சொர்க்கத்தை நோக்கி உயரத் தொடங்கினான்.
இப்படியே சொர்க்கத்தில் இருந்து வீசப்பட்ட யயாதியை, தங்கள் நற்செயல்கள் மூலம் அந்த மன்னர்கள் விரைவாகக் காத்தனர். இப்படியே நான்கு அரச மரபுகளில் பிறந்தவர்களும், {யயாதியின்} மகளின் மகன்களும் {மகள் வழிப் பேரன்களும்}, தங்கள் குலத்தைப் பெருக்குபவர்களுமான அந்த மன்னர்கள் தங்கள் அறங்கள், வேள்விகள், கொடைகள் மூலமாகத் தங்கள் தாய்வழி பாட்டனை {யயாதியை} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்த்தினார்கள். அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒருமித்தபடி, "அரசப் பண்புகள் மற்றும் அனைத்து அறங்களையும் கொண்ட நாங்கள், ஓ! மன்னா {யயாதி}, உமது மகளின் {மாதவியின்} மகன்களாவோம் {தௌஹித்ரர்களாவோம் - மகள்வழிப் பேரன்களாவோம்}. (எங்கள் நற்செயல்களின் புண்ணியத்தால்) நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றனர்.