Krishna spoke to Duryodhana! | Udyoga Parva - Section 124 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –53)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் தான் சொல்வதைக் கேட்க மாட்டான் என்றும், அவனுக்குப் புத்தி கூறுமாறும் திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம் கூறியது; கிருஷ்ணன் துரியோதனனுக்குப் போரினால் உண்டாகும் பாதகங்களைக் எடுத்துரைத்தது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் பேண வேண்டும் என்று கிருஷ்ணன் சொன்னது...
திருதராஷ்டிரன் {நாரதரிடம்} சொன்னான், "ஓ! புனிதமானவரே, ஓ! நாரதரே, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது. துல்லியமாக இதுவே எனது விருப்பமுமாகும். ஆனால், ஓ! புனிதமானவரே {நாரதரே}, (அவற்றை முன்னெடுத்துச் செல்ல) என்னிடம் சக்தி இல்லை" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.
இப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும் ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.
இழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ! ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.
கேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ! மனிதர்களில் புலியே, ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய பெரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.
இத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.
ஓ! ஐயா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார்கள். ஓ! ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.
தனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.
நீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பவனுமான பாவிகளின் தோழன், ஓ! பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான்? குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இருந்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.
அவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.
உண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.
மயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையும் இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ! மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல்பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும் நெருப்பு போல வளர்கிறான்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ! ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.
தனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ! பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ! ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ! பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ! பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.
ஓ! ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன?
யாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம்? கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான்? விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா? தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா?
என்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான்? புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா? அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.
ஓ! மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் என்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ! ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்" என்றான் {கிருஷ்ணன்}.