Tuesday, June 09, 2015

துரியோதனனை அறிவுறுத்திய நாரதர்! - உத்யோக பர்வம் பகுதி 123

Narada's instruction to Duryodhana! | Udyoga Parva - Section 123 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –52)

பதிவின் சுருக்கம் : சொர்க்கத்தில் வரவேற்கப்படும் யயாதி; பிரம்மனிடம் தனது சந்தேகத்துக்கான விளக்கத்தைப் பெற்ற யயாதி; யயாதி மற்றும் காலவரின் கதையினூடே நாரதர் துரியோதனனுக்கு உரைத்த நீதி...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தங்கள் வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம்பெற்ற அந்த நீதிமிக்க மன்னர்களால் சொர்க்கத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டவனும், தனது மகளின் {மாதவியின்} மகன்களைக் {தௌஹித்ரர்களைக்} கொண்டவனுமான யயாதி, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தேவலோகத்தை அடைந்தான். தனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம் நித்திய உலகை அடைந்த யயாதி, தனது சொந்த செயல்களால் அலங்கரிக்கப்பட்டு, மணமிக்க இனிய தென்றலால் அரவணைக்கப்பட்ட நறுமணமிக்க மலர்மாரியில் குளித்துப் பெரும் அழகுடன் ஒளிர்ந்தான்.


துந்துபி ஒலிகளுடன் சொர்க்கத்தில் உற்சாகமாக வரவேற்கப்பட்ட அவன் {யயாதி}, பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அசுர இனங்களைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல்களின் மூலம் உற்சாகமூட்டப்பட்டான். தெய்வீக முனிகளும், அரச முனிகளும், சாரணர்களும் அவனை {யயாதியைத்} துதிக்கத் தொடங்கினர். தேவர்கள் அவனுக்கு {யயாதிக்கு} அற்புதமான ஆர்கியாவைக் கொடுத்து, பிற வெகுமதிகளையும் கொடுத்து அவனை {யயாதியை} மகிழ்ச்சியடையச் செய்தனர்.

சொர்க்கத்தில் தனது நிலையையும், இதய அமைதியையும் மீண்டும் அடைந்து, கவலையில் இருந்து விடுபட்ட அவனிடம் {யயாதியிடம்}, பெருந்தகப்பன் {பிரம்மன்}, "உனது பூலோகச் செயல்களால் நீ {அறத்தின் பலனான} புண்ணியத்தை முழுமையான அளவு ஈட்டிவிட்டாய். சொர்க்கத்தில் உண்டான உனது செயலைப் போலவே, (நீ வென்ற) இந்தப் பகுதி நித்தியமானது. எனினும், ஓ! அரசமுனியே {யயாதியே}, உனது உடைமைகள் அனைத்தையும் உன் வீண் தற்பெருமையால் அழித்துக் கொண்டு, உன்னை யாரும் அடையாளம் காணாத வண்ணம் சொர்க்கவாசிகள் அனைவரின் இதயத்தையும் இருளில் மூழ்கச் செய்துவிட்டாய். நீ அடையாளம் காணப்படாததாலேயே {இங்கிருந்து} வீசப்பட்டாய்! உனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய {தௌஹித்ரர்களுடைய} அன்பு மற்றும் பாசத்தால் மீண்டும் காக்கப்பட்டு, இங்கே மீண்டும் வந்தடைந்து, உனது செயல்களால் நீ ஏற்கனவே வென்றிருந்த மாற்றமில்லாத, நித்தியமான, புனிதமான, அற்புதமான, நிலையான, அழிவற்ற பகுதியை அடைந்துவிட்டாய்", என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட யயாதி {பிரம்மனிடம்}, "ஓ புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதை விலக்குவதே உமக்குத் தகும். ஓ! அனைத்துலகங்களின் பெரும்பாட்டனே {பிரம்மனே}, இதை நான் வேறு எவரிடமும் கேட்க முடியாது. நான் ஆயிரக்கணக்கான வருடங்களாக எனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், எனது கொடைகளாலும் வெல்லப்பட்டதுமான எனது தகுதி பெரிதாகவே இருந்தது. அவ்வளவு பெரிய தகுதி {புண்ணியம்), எப்படி இவ்வளவு விரைவாகத் தீர்ந்து போய் நான் வீசப்பட்டேன்? ஓ! புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்காக உண்டாக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் நித்தியமானவை என்பதை நீ அறிவாய். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {பிரம்மாவே}, அந்த எனது பகுதிகள் அனைத்தும் ஏன் அழிக்கப்பட்டன?" என்று கேட்டான் {யயாதி}.

அதற்குப் பெரும்பாட்டன் {பிரம்மன் யயாதியிடம்}, "ஆயிரக்கணக்கான வருடங்கள் உனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் உன்னால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், உனது கொடைகளாலும் உன்னால் வெல்லப்பட்டதுமான உனது தகுதி, ஒரே ஒரு குறையால் தீர்ந்து போயிற்று, அதன் காரணமாகவே நீ (இந்தப் பகுதியில் இருந்து) வீசப்பட்டாய். ஓ! மன்னர்களின் மன்னா {யயாதி}, உனது வீண் தற்பெருமையே அந்தக் குறை. அதன் காரணமாகவே நீ சொர்க்கவாசிகளின் கண்டனங்களுக்கு ஆட்பட்டாய்.

ஓ! அரச முனியே {யயாதியே}, தற்பெருமையாலோ, பலத்தின் மீது கொண்ட செருக்காலோ, அற்பத்தனத்தாலோ, வஞ்சனையாலோ, இந்தப் பகுதி நித்தியமானதாகி விடாது. உனக்குத் தாழ்ந்தவர்களையோ, உயர்ந்தவர்களையோ, நடு நிலையில் இருப்பவர்களையோ {உனக்குச் சரிசமமாக இருப்பவர்களையோ} ஒருபோதும் அவமதிக்காதே. தற்பெருமை எனும் நெருப்பால் எரிக்கப்படுபவனை விடப் பெரிய பாவி எவனுமில்லை. இப்படி நீ விழுந்து, மீண்டும் உயர்ந்த இதைக் குறித்து உரையாடுபவர்கள், பெரும் ஆபத்தில் மூழ்கியிருந்தாலும் காக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை" என்றார் {பிரம்மா}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, தற்பெருமையின் விளைவால் விழுந்த யயாதியின் துயரம் இப்படியே இருந்தது. பிடிவாதத்தால் துயரில் விழுந்த காலவரின் துயரும் இப்படியே இருந்தது. தங்கள் சொந்த நன்மையை விரும்புபவர்கள், தங்கள் நன்மையை விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். பிடிவாதத்தை எப்போதும் ஊக்கப்படுத்தக் கூடாது, ஏனெனில் பிடிவாதமே எப்போதும் அழிவின் வேராக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தற்பெருமையையும் கோபத்தையும் கைவிட்டு, பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக.

ஓ! மன்னா {துரியோதனா}, கோபத்தைத் தவிர்ப்பாயாக. கொடுக்கப்படும் தானம், செய்யப்படும் செயல், பயிலப்படும் தவம், நெருப்பில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் ஆகிய இவற்றில் எதுவும் அழிவடைவதோ, குறைவடைவதோ இல்லை. இவற்றைச் செய்பவனைத் தவிர வேறு யாரும் அவற்றின் கனிகளை {பலன்களை} அடைவதும் இல்லை. இந்த மேன்மையான அற்புதமான வரலாற்றைப் புரிந்து கொள்வதில் வெல்பவர்கள், கோபம் மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டு பெரும் கல்வி கற்றவர்களின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், சாத்திரங்கள் மற்றும் பகுத்தறிவின் பல்வேறு குறிப்புகளை அமலாக்குபவர்கள் ஆகியோர் அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றின் அறிவை அடைந்து, முழு உலகத்தின் அரசுரிமையையும் அனுபவிக்கிறார்கள்" என்றார் {நாரதர்}.