The advice of Bhishma and Drona! | Udyoga Parva - Section 126 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –55)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பேசிய பேச்சைக் கேட்டு, அவன் மேல் பரிவு கொண்ட பீஷ்மரும் துரோணரும் மேலும் பேசியது; துரியோதனனுக்கு அறிவுரை கூறிய அவர்கள், பாண்டவர்களோடு ஒற்றுமையாக இருக்கும்படி சொன்னது; போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் சமாதானம் எட்டப்படட்டும் என்று துரியோதனனிடம், பீஷ்மரும் துரோணரும் வேண்டியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பரிவு கொண்ட பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் மீண்டும், "இரண்டு கிருஷ்ணன்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} கவசம் தரிக்காத போதே, காண்டீவம் செயல்படாமல் ஓய்வெடுக்கும்போதே, போர் நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றி எதிரிகளின் பலத்தைத் தௌமியர் எரிக்காத போதே, பணிவைத் தனது ஆபரணமாகக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான யுதிஷ்டிரன் உனது துருப்புகளின் மீது தனது கோபப் பார்வையைச் செலுத்தாதபோதே பகைமை தணிந்து போகட்டும்.
வலிமைமிக்க வில்லாளியும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமசேனன் தனது பிரிவின் நடுவே நிற்காதபோதே பகைமை தணிந்து போகட்டும். கையில் கதாயுதத்துடன், போர்களத்தின் மத்தியில் திரிந்து (பகைப்) பிரிவுகளைப் பீமசேனன் அடிக்காத போதே, பாண்டவர்களுடன் சமாதானம் ஏற்படட்டும். வீரர்களைக் கொல்லும் கதாயுதத்தால், தங்கள் பருவகாலத்தில் பழுத்த பனம்பழங்களைப் போல, யானைகளின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களின் தலைகளைப் போர்க்களத்தில் பீமன் உருளச் செய்யாத போதே பகைமை தணிந்து போகட்டும்.
ஆயுதங்களை நன்கு அறிந்த நகுலனும், சகாதேவனும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும், விராடனும், சிகண்டியும், சிசுபாலனின் மகனும் {திருஷ்டகேதுவும்} கவசம் தரித்து, பெரும் முதலைகள் ஆழ்ந்து போவது போல, உனது படையணிகளுக்குள் ஊடுருவித் தங்கள் கணைகளை மழையாகப் பொழியாத போதே பகைமை தணிந்து போகட்டும்.
கூடியிருக்கும் மன்னர்களின் மென்மையான உடல்களின் மேல் கடும் சிறகுகள் கொண்ட கணைகள் விழாத போதே பகைமை தணிந்து போகட்டும். ஆயுதங்களில் நற்திறன் வாய்ந்தவர்களும், வேகமான கரங்களைக் கொண்டவர்களும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அடிக்க வல்லவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகளால் இரும்பாலும், உருக்காலும் ஆன ஆயுதங்கள் குறிதவறாமல் அடிக்கப்பட்டு, சந்தனமும், நறுமணத் தைலங்களும் பூசப்பட்டவையும், தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான வீரர்களின் மார்பைத் துளைக்காத போதே பகைமை தணிந்து போகட்டும்.
தலைவணங்கும் உன்னை, மன்னர்களில் யானையும், நீதிமானுமான யுதிஷ்டிரன் ஆரத்தழுவி வரவேற்கட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, கொடி {துவஜம்} மற்றும் அங்குசம் ஆகிய குறிகளால் அடையாளம் காணப்படும் உள்ளங்கையைக் கொண்ட தனது வலது கையை உனது தோளில் வைக்கட்டும். நீ அமர்ந்திருக்கும்போது, சிவந்திருப்பதும், ரத்தினங்களால் குறிக்கப்பட்டதும், விரல்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கைகளால் உனது முதுகை அவன் {யுதிஷ்டிரன்} தட்டிக் கொடுக்கட்டும்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஆச்சா {சால} மரத்தைப் போன்ற தோள்களையுடையவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} உன்னை ஆரத்தழுவியபடி சமாதானத்திற்காக உன்னிடம் மென்மையாகப் பேசட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, அர்ஜுனன் மற்றும் இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய மூவராலும் மரியாதையாக வணங்கப்பட்டு, அவர்களது தலையை நீ முகர்ந்து, பாசத்துடன் அவர்களிடம் உரையாடுவாயாக.
உனது வீரச் சகோதரர்களான பாண்டுவின் மகன்களுடன் இணைந்திருக்கும் உன்னைக் கொண்டு இந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தட்டும். உங்கள் நட்பிணைப்பின் செய்தி, இந்த மன்னர்கள் அனைவரின் நகரங்களிலும் பிரகடனம் செய்யப்படட்டும். (உனது இதயத்தில்) சகோதரப் பாசத்துடன் கூடிய உணர்வுகளோடு இந்தப் பூமி உன்னால் ஆளப்படட்டும். (பொறாமை மற்றும் கோபம்) எனும் நோயில் இருந்து உனது இதயம் விடுபடட்டும்" என்றனர்.