Friday, June 12, 2015

பங்குதர மறுத்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 127

Duryodhana refused to give the share! | Udyoga Parva - Section 127 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –56)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், துரோணர், விதுரர் மற்றும் கிருஷ்ணனின் பேச்சுகளை ஏற்க முடியாத துரியோதனன், கிருஷ்ணனிடம், தன் பக்கம் எந்தத் தவறும் இல்லையென்றும், தன்னால் ஊசிமுனை அளவு இடமும் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனக்கு ஏற்பில்லாத வார்த்தைகள் குருக்களின் சபையில் பேசப்படுவதைக் கேட்ட துரியோதனன், வலிய கரங்களைக் கொண்டவனும், பெரும் புகழ்வாய்ந்தவனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, அனைத்துச் சூழ்நிலைகளையும் சிந்தித்த பிறகு பேசுவதே உனக்குத் தகும். உண்மையில், எக்காரணமும் இன்றி இத்தகு கடுமையான வார்த்தைகள் பேசும் நீ, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னிடம் மட்டுமே குறை கண்டுபிடித்து, எப்போதும் பிருதையின் மகன்களை {குந்தியின் மகன்களான பாண்டவர்களை} உயர்வாக மதிக்கிறாய். ஆனால், (இரு தரப்புகளின்) பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகுதான் நீ என்னைக் கண்டிக்கிறாயா?


உண்மையில், நீ, க்ஷத்திரி {விதுரர்}, மன்னர் {திருதராஷ்டிரர்}, ஆசான் {துரோணர்}, பெரும்பாட்டன் {பிதாமஹரான பீஷ்மர்} ஆகிய அனைவரும் வேறு எந்த ஏகாதிபதியையும் {பாண்டவர்களை} நிந்திக்காமல் என்னை மட்டுமே நிந்திக்கிறீர்கள். எனினும், என்னால் என்னிடம் எந்தச் சிறு குறையையும் காணமுடியவில்லை. இருப்பினும், (முதிய) மன்னன் {திருதராஷ்டிரர்} உட்பட நீங்கள் அனைவரும் என்னை வெறுக்கிறீர்கள். ஓ! எதிரிகளை அடக்குபவனே {கிருஷ்ணா}, ஆழ்ந்து சிந்தித்தபிறகும் கூட, நான் என்னிடம் எந்தப் பெரிய குறையையும் காணவில்லை, அல்லது ஓ! கேசவா {கிருஷ்ணா} மிகச் சிறிய குறையைக்கூட நான் காணவில்லை.

பாண்டவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பகடையாட்டத்தில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்களது நாட்டைச் சகுனி வென்றார். அதைப் {பகடையாட்டத்தைப்} பொறுத்தவரை என்னுடையது என்று என்ன குற்றம் இருக்க முடியும்?

மறுபுறம், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் வென்ற செல்வத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கும்படி நானே கட்டளையிட்டேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, வெல்லப்படமுடியாத பாண்டவர்கள் மீண்டும் ஒருமுறை பகடையில் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் காட்டுக்குப் போக வேண்டி வந்ததில் எங்களுடைய தவறு ஏதும் இருக்க முடியாது.

குற்றம் சுமத்தும் அளவுக்கு எங்களிடம் உள்ள என்ன தவறைக் கண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} எங்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதுகின்றனர்? ஓ! கிருஷ்ணா, (உண்மையில்) பலவீனமாக இருந்தாலும், ஏதோ தாங்கள் பலமானவர்கள் போல, ஏன் பாண்டவர்கள் இவ்வளவு உற்சாகமாக எங்களிடம் சண்டைக்கு முனைகிறார்கள்? நாங்கள் அவர்களுக்கு என்ன {குற்றத்தைச்} செய்தோம்? (அவர்களுக்கு) இழைக்கப்பட்ட எந்தத் தீங்குக்காக, சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள், திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்ல முயல்கிறார்கள்?

எந்தக் கடும் செயலின் விளைவாலோ, (அவர்களது) வார்த்தைகளாலோ (அதற்கு அஞ்சியோ), அறிவை இழந்து அச்சத்தால் அவர்களை வணங்கமாட்டோம். பாண்டுவின் மகன்களை விட்டுவிடு, நாங்கள் இந்திரனையேகூட (அப்படி) வணங்கமாட்டோம். ஓ! கிருஷ்ணா, ஓ எதிரிகளைக் கொல்பவனே, போரில் எங்களை வெல்லத் தலைப்படுபவனும், க்ஷத்திரிய அறங்களைக் கடைப்பிடிப்பவனுமான எந்த ஒரு மனிதனையும் நான் காணவில்லை.

பாண்டவர்களை விட்டுவிடு, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பீஷ்மர், கிருபர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகியோரை தேவர்களாலும் கூடப் போரில் வீழ்த்த முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, போரில் ஆயுதங்களால் வெட்டும் நாங்கள், எங்கள் வகைக்குரிய நடைமுறைகளை நோற்கிறோம் என்றால், எங்கள் முடிவு வரும்போது, அதுவும் எங்களைச் சொர்க்கத்திற்கே வழிநடத்திச் செல்லும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் எங்களைக் கிடத்திக் கொள்ள வேண்டும் என்ற இதுவும் க்ஷத்திரியர்களான எங்களின் உயர்ந்த கடமையே ஆகும்.

எங்கள் எதிரிகளுக்குத் தலைவணங்காத எங்களுக்கு, போரில் அம்புப்படுக்கையே கிடைக்குமென்றாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்கள் அதற்காக வருந்த மாட்டோம். உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரிய நடைமுறைகளை உறுதி செய்யும் எவன், தனது உயிரைக் காத்துக்கொள்ள மட்டும் விரும்பி, அச்சத்தால் எதிரியிடம் தலைவணங்குவான்? "(க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை), ஒருவன் எப்போதும் நிமிர்ந்திருக்க வேண்டும், {யாரையும்} எப்போதும் வணங்கக் கூடாது, ஏனெனில் உழைப்பு மட்டுமே ஆண்மையாகும்; வளைவதைவிட, ஒருவன் கணுக்களில் உடைந்தேவிடலாம்" {கணுவில் முறிந்தாலும் முறியலாம். இவ்வுலகில் ஒருவனிடமும் வணங்கக்கூடாது} என்ற மாதங்கருடைய வார்த்தைகளை, தங்கள் சுய நன்மையை விரும்பும் க்ஷத்திரியர்கள் மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருவன் {க்ஷத்திரியன்} வேறு யாரையும் கருதிப் பாராமல் {வணங்காமல்}, பக்திக்காக அந்தணர்களை மட்டுமே வணங்க வேண்டும். (அந்தணர்கள் தவிர்த்த பிறரிடம்) ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் மாதங்கரின் சொல்படியே செயல்பட வேண்டும். இதுவே க்ஷத்திரியர்களின் கடமையாகும்; இதுவே எனது கருத்துமாகும்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, முன்பு அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என் தந்தை {திருதராஷ்டிரர்} அளித்த நாட்டின் பங்கை, நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களால் {பாண்டவர்களால்} திரும்பப் பெறவே முடியாது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மன்னர் திருதராஷ்டிரர் வாழும் வரை, நாங்கள் மற்றும் அவர்கள் ஆகிய இருதரப்பும் ஆயுதங்களை உறையிலிட்டு விட்டு, ஓ! மாதவா {கிருஷ்ணா} அவரைச் சார்ந்தே வாழ வேண்டும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் சிறுவனாகவும், பிறரைச் சார்ந்தவனாகவும் இருந்த போது, அறியாமையாலோ, அச்சத்தாலோ கொடுக்கப்பட்டதும், மீண்டும் கொடுக்கப்பட முடியாததுமான நாட்டை, ஓ! விருஷ்ணி குலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே {கிருஷ்ணா}, பாண்டவர்களால் மீண்டும் அடைய முடியாது.

தற்போது, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, நான் வாழும்வரை, எங்கள் நிலத்தில் ஒரு கூர்மையான ஊசியின் முனையால் மூடப்படும் பகுதியைக்கூடப் பாண்டவர்களுக்கு எங்களால் வழங்க முடியாது" என்றான் {துரியோதனன்}".