Sunday, June 14, 2015

அண்டப்பெருவடிவம் - விஸ்வரூபம்! - உத்யோக பர்வம் பகுதி 131

The universal form! | Udyoga Parva - Section 131 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –60)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் தன்னுள் அண்டசராசரங்களின் காட்சியை வெளிப்படுத்தியது; கிருஷ்ணன் வெளிப்படுத்திய அண்டப்பெருவடிவைக் கண்டவர்கள் அனைவரும் அஞ்சித் தங்கள் கண்களை மூடிக்கொள்வது; அண்டத்தில் உள்ள அனைத்தும் கிருஷ்ணனின் வடிவத்தில் தெரிந்தது; அந்த வடிவத்தைப் பீஷ்மர், துரோணர் விதுரர், சஞ்சயன் மற்றும் சில முனிவர்கள் மட்டுமே கண்டது; பிறகு மீண்டும் பழைய உருவத்தை அடைந்த கிருஷ்ணன் சபையை விட்டு வெளியேறி, பாண்டவர் மற்றும் கௌரவர்களின் நிலைகளைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களிடம் அதை உறுதி செய்து, குந்தியின் வீட்டுக்குச் சென்றது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரர் இதைச் சொன்னதும், பகையணிகளைக் கொல்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகன் துரியோதனனிடம், "மாயையால், ஓ! சுயோதனா {துரியோதனா}, நான் தனியன் என்று நீ கருதுகிறாய். அதனால்தான், ஓ! சிறுமதி படைத்தவனே, வன்முறையால் என்னை வீழ்த்தி பிறகு, என்னைச் சிறைபிடிக்க நீ முயல்கிறாய். எனினும், பாண்டவர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள். ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.


இதைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்தான். அப்படி அந்தச் சௌரி {கிருஷ்ணன்} சிரித்த போது, அவனது உடலில் இருந்து, சுடர்மிகும் நெருப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், கட்டைவிரலைவிடச் சிறிய அளவில், மின்னலின் பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற தேவர்கள் வெளிப்பட்டனர். அவனது {கிருஷ்ணனின்} முன்நெற்றியில் பிரம்மனும், மார்பில் ருத்ரனனும் தோன்றினார்கள். அவனது கரங்களில் லோகபாலர்கள் தோன்றினார்கள். அவனது வாயில் {முகத்தில்} இருந்து அக்னி, ஆதித்யர்கள், சத்யஸ்கள், வசுக்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோர், இந்திரன் மற்றும் விஸ்வதேவர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்.

அண்டப் பெருவடிவம் - விஸ்வரூபம்
எண்ணற்ற யக்ஷர்களும், கந்தர்வர்களும், ராட்சர்களும்கூட அதே அளவில் அங்கே வெளிப்பட்டனர். அவனது இரு கரங்களில் இருந்து சங்கர்ஷணனும் {பலராமனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெளிப்பட்டனர். வலது பக்கத்தில் வில்லுடன் அர்ஜுனன் நின்றான். இடது பக்கத்தில் கலப்பையுடன் பலராமன் நின்றான். அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்னே, பீமன், யுதிஷ்டிரன் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் நின்றனர். அவனுக்கு முன்னே அந்தகர்கள், பிரத்யும்னனுடன் கூடிய விருஷ்ணிகள் மற்றும் வலிமை நிறைந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்த மற்ற தலைவர்களும் இருந்தனர்.

{பாஞ்சஜன்யம் என்ற} சங்கு, {சுதர்சனம் எனும்} சக்கரம், {கௌமோதகி எனும்} கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், {ஹாலம் எனும்} கலப்பை, {சக்தி ஆயுதம் எனும்}, நந்தகம் {என்ற வாள்} மற்றும் இன்னும் பிற ஆயுதங்கள் அவனது பல்வேறு கரங்களில் பிரகாசத்துடனும், அடிப்பதற்கு உயர்த்திப் பிடித்த நிலையிலும் இருந்தன. அவனது கண்கள், மூக்கு {நாசி}, காதுகள் மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் புகையுடன் கலந்த தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவனது உடலின் நுண்துளைகளில் {pores} இருந்து சூரியக் கதிர்களைப் போன்ற தீப்பொறிகள் வெளிப்பட்டன.

{கீழ்வருவன கங்குலியில் இல்லாதவை : அவன் ஆயிரம் கால்களும், ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் கொண்டவனாக ஆனான். அப்போது, நாகலோகம் அவனது காலுக்கடியில் காணப்பட்டது. சந்திரனும் சூரியனும் கண்களாக, கோள்களும் [கிரகங்களும்] மற்ற அனைத்தும் அவனுடைய மாட்சிமை பொருந்திய உடலாகவும் இருந்தன. ஆறுகளும், கடல்களும் அவனுடைய வேர்வையாக இருந்தன. மலைகள் அனைத்தும் அவனுடைய எலும்புகளாக இருந்தன. மரங்கள் அவனுடைய உடல் மயிர்களாயின. இரவும் பகலும் அவனது இமைக்கொட்டுகள் ஆயின. சரஸ்வதி தேவி அவனது நாவில் இருந்தாள். என்று வேறு ஒரு பதிப்பில் காணக்கிடைக்கிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}

அந்த உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} பயங்கர வடிவத்தைக் {அண்டப்பெருவடிவைக்} கண்டு, துரோணர், பீஷ்மர், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட விதுரன்,  பெரும் நற்பேறுடைய சஞ்சயன் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்கள் ஆகியோரைத் தவிர, (மற்ற) மன்னர்கள் அனைவரும் அச்சம் கொண்ட இதயத்தோடு தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் அந்தத் தெய்வீக ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவர்களுக்கு தெய்வீகப் பார்வையை அளித்திருந்திருந்தான்.  

{துரோணர், பீஷ்மர், விதுரன், சஞ்சயன் மற்றும் முனிவர்கள் மட்டும் தங்கள் சொந்தக் கண்களுடன் அந்த அண்டப்பெருவடிவைக் கண்டனர். அந்தச் சக்தியற்ற மற்றவர்கள் கிருஷ்ணன் அளித்த ஞானக் கண்களால் அதைக் கண்டனர் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்.}.

{கீழ்வருவன கங்குலியில் இல்லாதவை : அவன் தெய்வீகப் பார்வை கொண்ட கண்களைத் திருதராஷ்டிரனுக்கு அளித்தான். அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன் அற்புதமான அந்த வடிவத்தைக் கண்டான். பிறகு தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், மஹோரகர்கள், பெரும்பேறு பெற்ற முனிவர்கள், லோகபாலர்கள், ஆகியோர் அந்தத் தலைவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் தலையால் வணங்கி பணிவுடன் நின்று துதித்தார்கள்.

அவர்கள் "ஓ! தலைவா, கோபத்தை அடக்கும்; அடக்கிவிடும். தேவர்களும், மனிதர்களும் கூடிய இந்தப் பூமி முழுமையாக அழியும் முன்னர் உம்மால் வெளிப்படுத்தப்பட்டபடி உம்முள் இருக்கும் இந்த வடிவத்தை அடக்கிவிடும். படைப்பவனும் நீயே; அழிப்பவனும் நீயே; காப்பவனும் நீயே. அண்டசராசரங்களில் வியாபித்திருப்பவனும் நீயே. ஓ! வலிய தோள்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அரசர்களிடம் இருப்பது என்ன? அவர்களது வீரம் என்ன? ஆற்றல் என்ன? அவர்களுக்காக இந்தத் தெய்வீக வடிவத்தை வெளிப்படுத்தினாயே" என்றார்கள். என்று வேறு பதிப்பில் காணப்படுகிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}

அந்த உயர்ந்த அற்புதக் காட்சியை (குருக்களின்) அந்தச் சபையில் கண்டு, (வானத்தில்) தேவ துந்துபிகள் முழங்கின, (அவன் {கிருஷ்ணன்} மீது) பூமாரி பொழிந்தது.

{கீழ் வருவன கங்குலியில் இல்லாதவை : அப்போது திருதராஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அழிவற்ற இதயத் தாமரையில் வசிப்பவனே {புண்டரீகாக்ஷனே}! யாதவர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, உலகம் அனைத்துக்கும் இதமானவன் நீயே. அருள்செய்வாய் நீயே {எனவே, அருள்செய்வாயாக}. ஓ! தலைவா, மீண்டும் எனது கண்கள் குருடாகட்டும். உன்னைப் பார்த்த கண்களால் மற்றவரைக் காண நான் விரும்பவில்லை" என்றான்.

அப்போது வலிமைமிக்கத் தோள்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம், "ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமது கண்கள் இரண்டும் இனி காணாது" என்றான். ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில், அதற்கு முன்னர் {கிருஷ்ணனின்} அண்டப் பெருவடிவை {விஸ்வரூபத்தைக்} காண விரும்பிய திருதராஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கண்களை அடைந்தது அதிசயமே. கண்களைப் பெற்ற திருதராஷ்டிரனைக் கண்டு ஆச்சரியமுற்ற மன்னர்கள், முனிவர்களுடன் கூடி அந்த மதுசூதனனைத் {கிருஷ்ணனைத்} துதித்தனர். என்று வேறு பதிப்புச் சொல்கிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}.

பூமி முழுதும் நடுங்கியது. கடல்கள் கலங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூமியில் வசிப்போர் பெரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்}, தெய்வீகமானதும், உயர்ந்த அற்புதம் நிறைந்ததும், மிகவும் மாறுபட்டதுமான தனது மங்கல வடிவத்தை {விஸ்வரூபக் காட்சியை} விலக்கிக் கொண்டான்.

பிறகு சாத்யகியை ஒரு புறமும், ஹிருதிகனின் மகனை (கிருதவர்மனை) [1] மறுபுறமும், கரத்தோடு கரங்களாகக் கொண்டு, முனிவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} அங்கிருந்து வெளியேறினான். பிறகு அங்குப் பெரும் ஆரவாரம் ஏற்பட்டபோது, அந்த முனிவர்களும், நாரதரும், பிறரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் செல்ல {அங்கேயே} மறைந்து போனார்கள். மற்றும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக இதுவும் அங்கே நடந்தது.

[1] இங்கே கிருதவர்மன் என்ற இடத்தில் விதுரன் என்று இருக்க வேண்டும். கிருதவர்மனைத்தான் சாத்யகி வாயிலில் காத்திருக்கும்படி சொல்லியிருந்தானே. இதே பதிவிலேயே பின்னர்க் கங்குலி, கிருதவர்மன் தேரோட்டியான தாருகனுடன் காத்திருந்ததாகச் சொல்கிறார். வேறு ஒரு பதிப்பில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் விதுரன் என்றே வருகிறது. கிருதவர்மன் என்று இங்கே கங்குலி தவறாகக் குறிப்பிடுவதாகவே நான் நினைக்கிறேன்.

அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்} சபையை விட்டுச் செல்வதைக் கண்ட கௌரவர்களும், மன்னர்கள் அனைவரும், இந்திரனைப் பின்தொடர்ந்து செல்லும் தேவர்களைப் போல, அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றார்கள். எனினும், அளக்கமுடியா ஆன்மா கொண்ட சௌரி {கிருஷ்ணன்}, தன்னைத் தொடர்ந்து வருவோரைக் குறித்து ஒரு சிந்தனையும் செய்யாமல், புகையுடன் கலந்த சுடர்மிகும் நெருப்பைப் போலச் சபையை விட்டு வெளியேறினான்.

{சபையின்} வாயிலில், கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையாலும், தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதும், மேகங்கள் உருளும் ஒலியைப் போன்ற பெரும் சடசடப்பொலியை எழுப்பும் சக்கரங்களைக் கொண்டதும், வெள்ளைப் புலித் தோல்களால் முழுவதும் மூடப்பட்டதும், தனது {கிருஷ்ணனின்} குதிரைகளான சைவியம் (மற்றும் பிறவற்றால்) பூட்டப்பட்டதுமான தனது {கிருஷ்ணனின்} பெரிய வெண்தேரில், தனது தேரோட்டியான தாருகன் காத்திருப்பதைக் கண்டான். விருஷ்ணிகளுக்குப் பிடித்தமான வீரனும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேரோட்டியுமான கிருதவர்மனும் தனது தேரில் அங்கே தோன்றினான். 

எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரைத் தயார் செய்து புறப்படும்போது, மன்னன் திருதராஷ்டிரன் மீண்டும் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! எதிரிகளை வாட்டுபவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகன்கள் மீது நான் கொண்ட அதிகாரத்தை {சக்தியை} நீ கண்டாய். உண்மையில், இவை அனைத்தையும் நீ உனது கண்களாலேயே கண்டாய். இப்போது நீ அறியாதது எதுவுமில்லை. குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நான் முயன்றதைக் கண்டு, (நான் இருக்கும்) எனது நிலையை அறிந்து, என் மீது நீ எந்தச் சந்தேகமும் கொள்ளாதிருப்பதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் பாண்டவர்கள் மீது எந்தப் பாவம் நிறைந்த உணர்வுகளையும் கொள்ளாதவன். சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, சமாதானத்தை ஏற்படுத்த நான் செய்த அனைத்து முயற்சிகளையும் கௌரவர்களும், பூமியின் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "திருதராஷ்டிரன், துரோணர், பெரும்பாட்டனான {பிதாமஹரான} பீஷ்மர், க்ஷத்ரி, பாஹ்லீகர், கிருபர் ஆகியோரிடம், வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, "குருக்களின் சபையில் நடந்த அனைத்தையும், கல்லாத இழிந்தவனைப் போல, கோபத்தில், தீயவனான துரியோதனன்  எப்படிக் சபையை விட்டு வெளியேறினான் என்பதையும், தான் அதிகாரம் {சக்தி} அற்றவர் என்று மன்னன் திருதராஷ்டிரரே சொல்வதையும் நீங்கள் சாட்சியாகக் கண்டீர்கள். உங்கள் அனைவரின் அனுமதியின் பேரில் நான் இப்போது யுதிஷ்டிரனிடம் திரும்பப் போகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு அவர்களை வணங்கிய மனிதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரில் ஏறிப் புறப்பட்டான். பாரதர்களில் வீரக் காளைகளான பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்}, அஸ்வத்தாமன், விகர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகிய வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். குருக்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவன் {கிருஷ்ணன்}, கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய வெண்தேரில், தன் அத்தையின் (குந்தியின்) வசிப்பிடத்திற்குச் சென்றான்.