Monday, June 15, 2015

கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 132

Kunti spoke to Krishna! | Udyoga Parva - Section 132 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –61)

பதிவின் சுருக்கம் : குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.


துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

குந்தி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, "ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.

இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், "எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான். 

மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).

கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.

உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.

என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.

தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ},  எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.

(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்; 
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்; 
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.

நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.

நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம்  இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.