Tuesday, June 16, 2015

"உழைப்பே ஆண்மை" என்ற விதுலை! - உத்யோக பர்வம் பகுதி 134

"Exertion is Manliness" said Vidula! | Udyoga Parva - Section 134 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 63) {விதுலோபாக்யானம் - 2}

பதிவின் சுருக்கம் : விதுலை தன் மகன் தனது வார்த்தைகளக் கேட்கவில்லையே என  வருந்தியது; ஒரு க்ஷத்திரியன் எப்போது திருடனாகக் கருதப்படுகிறான்? அந்தணர் ஒருவர் தன் மகன் குறித்து முன்னறிவித்தது; சம்பரன் சொன்ன நிலை; தான் இருந்த உன்னத நிலை; எந்த நிலைகளை விட மரணமே மேல்? எதைக் கைவிட்டால் எதிரிகளை வெல்லலாம்? இந்திரன் அடைந்த நிலை; எவனை எதிரிகள் வணங்குவார்கள்? கோழைகளால் ஏற்படும் நிலை? க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறுகள்; உழைப்பே ஆண்மை என்பன போன்றவற்றைத் தன் மகனுக்கு விதுலை சொன்னது...

விதுலை {தன் மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "இத்தகு துயரில் விழுந்து உனது ஆண்மையைக் கைவிட நீ விரும்புகிறாயெனில், தாழ்ந்தோரும், இழிந்தோரும் நடக்கும் பாதையில் நீ மிக விரைவில் நடப்பாய். உயிரின் மீது கொண்ட ஆசையால் தனது பலத்திலும், ஆற்றலிலும் சிறந்ததைப் பயன்படுத்தித் தனது சக்தியை வெளிப்படுத்தாத ஒரு க்ஷத்திரியன் திருடனாகக் கருதப்படுகிறான். ஐயோ, பயன் நிறைந்ததும், சரியானதும், காரணங்கள் கொண்டதுமான எனது வார்த்தைகள், சாகப் போகும் மனிதனுக்கு மருந்தைப் போல, உன்னில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லையே.


சிந்துக்களின் மன்னன் பல தொண்டர்களைக் கொண்டிருக்கிறான், என்பது உண்மையே! எனினும் அவர்கள் {அத்தொண்டர்கள்} அனைவரும் மகிழ்ச்சியை அடையாமல் தள்ளப்பட்டார்கள். {சிந்து மன்னனிடம் அவர்கள் அதனால் பகைமை கொண்டார்கள்}. பலவீனத்தாலும், முறையான வழிகளை அறியாததாலும், (தங்கள் முயற்சிகளால் விடுபடாத) அவர்கள் தனது தலைவனின் {சிந்துமன்னனின் அழிவிற்காக} துயருக்காகக் காத்திருக்கிறார்கள். பிறரைப் (அவனது {சிந்து மன்னனின்} வெளிப்படையான எதிரிகளைப்} பொறுத்தவரை, நீ உனது ஆற்றலை வெளிப்படுத்துவதை அவர்கள் கண்டால் தங்கள் உடைமைகளுடன் அவர்கள் உன்னைச் சேர்வார்கள். அவர்களுடன் சேர்ந்து, மலைகளையும், காடுகளையும் தஞ்சமாக அடைந்து, நீ எதிரியை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாயாக. ஏனெனில், அவனும் நோய் மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவன் அல்ல.

உனது பெயரால் நீ சஞ்சயனாவாய் {வெற்றியாளனாவாய்}. எனினும், அதற்கான குறிப்புகள் எதையும் நான் உன்னிடத்தில் காணவில்லை. உனது பெயருக்கு உண்மையுள்ளவனாக இருப்பாயாக. {உண்மையில்} எனது மகனாவாயாக. ஓ! உனது பெயர் பொய்யாகாதிருக்கட்டும். சிறுவனாக இருக்கும் உன்னைக் கண்டவரும், பெரும் முன்னறிதிறனும், ஞானமும் கொண்டவருமான அந்தணர் ஒருவர், "பெரும் துயரில் விழும் இவன், மீண்டும் பெரும் புகழை வெல்வான்" என்று சொன்னார். அவரது வார்த்தைகளை நினைவுகூரும் நான், உனது வெற்றியை நம்புகிறேன். அதன் காரணமாகவே, ஓ! மகனே {சஞ்சயா}, நான் உன்னிடம் இப்படிச் சொல்கிறேன். மேலும் மேலும் நான் உன்னிடம் அப்படியே சொல்வேன்.

கொள்கை வழிகளின்படி {நீதியின்படி} தனது நோக்கங்கள் கனியும் {பலிக்கும்} தருணத்தைத் தொடரும் {எதிர்நோக்கியிருக்கும்} ஒரு மனிதன், தனது நோக்கங்களுக்காக தன்னுடன் உழைக்கும் மக்களைப் பெற்றிருந்தால், அவன் வெற்றி அடைவது எப்போதும் நிச்சயமே. ஓ! சஞ்சயா, ஓ! கல்விமானே, போரில் இருந்து உன்னை விலக்கிக் கொள்ளாமல், 'நான் அடைந்திருப்பது வெற்றியோ, தோல்வியோ, நான் பின்வாங்க மாட்டேன்' என்ற தீர்மானத்துடன் போரிடுவாயாக.

"தினம் தினம் தனது உணவுக்காக ஒருவன் ஆவலாக இருக்கும் நிலையைவிடப் பரிதாபகரமான நிலை வேறு எதுவும் இல்லை" என்று சம்பரன் சொல்லியிருக்கிறான். ஒருத்தியின் கணவனும், மகன்களும் இறந்ததைவிட, அது போன்று இருப்பதே {உணவை எதிர்பார்த்து இருப்பதே} பெரும் துன்பமான நிலை எனச் சொல்லப்படுகிறது. ஏழ்மை என்று அழைக்கப்படும் நிலை மரணத்தின் வடிவமே ஆகும்.

என்னைப் பொறுத்தவரை, நான், உயர்ந்த ஒரு குலத்தில் பிறந்து, மற்றொரு உயர்ந்த குலத்தில் குடியேறியவள் ஆவேன். அனைத்து மங்கலப் பொருட்களையும் அடைந்து, எனது கணவனால் வழிபடப்பட்டு இருந்த எனது சக்தி அனைவர் மீதும் பரவியிருந்தது. நண்பர்களுக்கு மத்தியில் இருந்த என்னை, விலையுயர்ந்த மாலைகளோடும், ஆபரணங்களோடும், சுத்தமான உடலோடும், அற்புதமான ஆடைகளோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்தான் எப்போதும் நமது நண்பர்கள் கண்டிருக்கிறார்கள். (உணவில்லாமல்) நானும், உனது மனைவியும் பலவீனமாவதைக் காணும் நீ, ஓ! சஞ்சயா, உயிருடன் வாழ விரும்பமாட்டாய்.

நம்மிடம் பணி செய்த பணியாட்கள் அனைவரும், நமது ஆசான்களும், நமது இயல்பான {சாதாரண} மற்றும் இயல்புக்குமிக்க {அசாதாரண} புரோகிதர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்மைவிட்டுச் செல்வதைக் காணும் உனக்கு வாழ்வதனால் என்ன பயன் ஏற்படும்? முன்பு போலவே மெச்சத்தகுந்த, புகழ்மிக்க உனது சாதனைகளில் நீ ஈடுபடுவதை இப்போது நான் காணவில்லை எனும் போது, எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

அந்தணர் ஒருவருக்கு, "ஒன்றுமில்லை" என்று நான் சொல்ல வேண்டியிருந்தால், எனது இதயமே வெடித்துவிடும். இதற்கு முன் எனது கணவர் எந்த அந்தணருக்கும், "இல்லை" என்று சொன்னதே இல்லை. நாமே பிறரின் புகலிடம், நாம் என்றும் பிறரிடம் தஞ்சமடைந்ததில்லை. இப்படியிருக்கையில், அடுத்தவரைச் சார்ந்து எனது வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு இருந்தால், நிச்சயம் எனது உயிரை நான் விட்டுவிடுவேன். கடக்க முடியாத கடலைக் கடக்கும் வழிகளாக எங்களுக்கு நீ இருப்பாயாக. படகுகள் இல்லாத நிலையில், நீயே எங்களது படகாவாய். இடமில்லாத போது, நீயே எங்களுக்கு இடமாவாயாக. மாண்டு போன எங்களை மீட்டெடுப்பாயாக.

நீ உயிர் மீது கொண்டிருக்கும் ஆசையை விட்டாயானால், உனது எதிரிகள் அனைவரிடமும் போட்டியிடத் தகுந்தவனாவாய். ஆனால், அலிகளுக்குத் தகுந்த வாழ்முறையை நீ நோற்பாயானால், ஆன்மா நொந்து, துயர் நிறைந்த இதயத்துடன் அப்படி வாழ்வதைக் காட்டிலும், நீ உனது உயிரைத் தியாகம் செய்வதே சிறந்ததாகும். ஒரே எதிரியைக் கொன்றால் கூட ஒரு வீரமிக்க மனிதன் புகழை வெல்கிறான். விருத்திரனைக் கொன்ற இந்திரன் பெரும் இந்திரனாகி {மஹேந்திரன் ஆகி}, தேவர்களின் அரசுரிமையையும், சோமச்சாற்று குவளையையும் {மாஹேந்திரம் என்கிற சோமக்கிரகத்தையும்}, உலகங்கள் அனைத்தின் தலைமையையும் அடைந்தான். போர்க்களத்தில் தனது பெயரைச் சொல்லி, உருக்குக் கவசங்கள் அணிந்த தனது எதிரிகளை அறைகூவி அழைத்து, பகையணி வீரர்களில் முதன்மையானவர்களைக் கொன்றும் அடித்தும், நல்ல போரினால் எப்போது ஒரு வீரன் பரந்து விரிந்த புகழை அடைகிறானோ, அப்போது அவனது எதிரிகள் வலியை உணர்ந்து அவனை வணங்குவார்கள் {அடிபணிவார்கள்}.

கோழைகளோ தங்கள் சொந்த நடத்தையின் விளைவால் ஆதரவற்றவர்களாகி, திறன்மிக்கவர்களும், வீரர்களும், உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடுபவர்களுமாக இருப்பவர்களகுக்குத் தனது ஆசைப் பொருட்கள் அத்தனையும் தாரைவார்ப்பார்கள். நாடுகள் பெரும் அழிவை அடைந்தாலோ, உயிரே போய்விடக் கூடிய சூழ்நிலை இருந்தாலோ கூட, உன்னதமானவர்கள், தங்கள் அருகே இருக்கும் எதிரிகளைக் கொல்லாமல் ஓடிப் போவதில்லை. அரசுரிமை என்பது சொர்க்கத்தின் வாயிலோ, அமிர்தமோதான். இவற்றில் ஒன்றாக அதைக் {அரசுரிமையைக்} கருதி, நீ அறியாத அதையே மனதில் கொண்டு, எதிரிகளுக்கு மத்தியில் எரியும் கொள்ளியென விழுவாயாக.

ஓ! மன்னா {சஞ்சயா}, போரில் உனது எதிரிகளைக் கொல்வாயாக. உனது {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை நோற்பாயாக. ஓ! எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனே {சஞ்சயா}, உற்சாகமிழந்தவனாக நான் உன்னைக் காணாதிருப்பேனாக. துயர் நிறைந்த நம்மவர்களால் சூழப்பட்டு, எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து, துயரத்தில் நிற்கும் உன்னை நான் காணாதிருப்பேனாக. ஓ! மகனே {சஞ்சயா}, செல்வத்தை அடைந்து, சௌவீரர்களின் மகள்களின் துணையோடு உன்னை நீ மகிழ்வித்துக் கொள்வாயாக. இதயத்தின் பலவீனத்தால் நீ சைந்தவர்களின் {சிந்துக்களின்} மகள்களால் ஆளப்படும் நிலையில் இருக்காதே.

`அழகிய மேனியும், கல்வியும், நற்குடி பிறப்பும், உலகம் பரந்த புகழும் கொண்ட உன்னைப் போன்ற இளைஞன் ஒருவன், சுமையைத் தாங்க வேண்டிய விஷயத்தில், அடங்காமல் இருக்கும் காளையைப் போலத் தகாத நிலையை அடைவது மரணத்துக்கு இணையானது’ என்றே நான் நினைக்கிறேன். பிறரைப் புகழ்ந்தோ, அவர்களுக்குப் பின் (பணிவாக) நடந்தோ செல்லும் உன்னைக் காணும் எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

ஓ...! இன்னொருவனுக்குப் பின்னால் நடந்து செல்லும் ஒருவன் நமது குலத்தில் பிறந்ததே இல்லையே. ஓ! மகனே {சஞ்சயா}, அடுத்தவனை நம்பி வாழும் வாழ்வு உனக்குத் தகாது. முன்னோர்களாலும், முன்னோர்களுக்கு முன்னோர்களாலும், அவர்களுக்குப் பின்வந்தவர்களாலும், அப்படிப் பின்வந்தவர்களுக்கும் பின் வந்தவர்களாலும் சொல்லப்பட்ட க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறு என்ன என்பதை நான் அறிவேன். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான அது படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} விதிக்கப்பட்டதாகும். இவ்வுலகில் எந்த உயர்ந்த குலத்திலாவது க்ஷத்திரியனாகப் பிறந்து, அந்த வகையின் கடமைகளின் அறிவை அடைந்த ஒருவன், பயத்தாலோ, வாழ்வாதாரத்திற்காகவோ பூமியில் உள்ள எவனுக்கும் தலைவணங்க மாட்டான்.

உழைப்பே {முயற்சியே} ஆண்மை என்பதால், ஒருவன் வீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; தலைவணங்கி நிற்கக்கூடாது. யாருக்கும் வளைந்து போவதைக் காட்டிலும் ஒருவன் கணுக்களில் உடைந்து போகலாம். உயர் ஆன்ம க்ஷத்திரியன் ஒருவன், எப்போதும் ஒரு மதங்கொண்ட யானை போல நடக்க வேண்டும். ஓ! சஞ்சயா, அறத்தின் நிமித்தமாக அந்தணர்களை மட்டுமே ஒருவன் வணங்க வேண்டும். தீமை செய்வோர் அனைவரையும் அழித்து, அனைத்துப் பிற வகைகளையும் அவன் ஆள வேண்டும். கூட்டாளிகளைக் கொண்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, தான் வாழும் வரை ஒருவன் அப்படியே இருக்க வேண்டும்" என்றாள் {விதுலை}.