Wednesday, June 17, 2015

எதிரியின் எதிரிகளை ஒன்று சேர்! - உத்யோக பர்வம் பகுதி 135

Unite your enemy's foes! | Udyoga Parva - Section 135 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 64) {விதுலோபாக்யானம் - 3}

பதிவின் சுருக்கம் : சஞ்சயன் தன் தாய் விதுலையிடம்,  மகனென்றும் பாராமல் தன்னிடம் இப்படிப் பேசுவது முறையா என வருந்துவது; இழிநிலையை அடையும் மகனைப் பாசத்தால் கண்டிக்காமல் இருத்தல், அந்தப் பாசத்துக்கே இழுக்கு என விதுலை சொன்னது; வெற்றியடையும் வழிமுறைகள் தெரிந்தால் தனக்குச் சொல்லுமாறு சஞ்சயன் விதுலையிடம் கேட்டது; எதிரியை வெல்லும் வழிமுறைகளை விதுலை சொன்னது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் விதுலையிடம்}, "ஓ! இரக்கமற்றவளும், கோபம் நிறைந்தவளுமான தாயே, ஓ! உலகியல் வீரத்தை உயர்வாக நினைப்பவளே, உனது இதயம் உருக்காலாகி {இரும்பாலாகி} வடிவம் பெற்றது என்பது உறுதி. க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ; அதன் காரணமாகத்தானே என்னை அந்நியனைப் போலக் கருதி, என்னை நீ போரிடத் தூண்டுகிறாய். அதன்காரணமாகத் தானே உனது ஒரே மகனான என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பேசுகிறாய். உனது மகனான என்னைக் காணாமல், என்னிடம் இருந்து நீ பிரிந்துவிட்டால், இந்த முழு உலகத்தாலும் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்கள் அனைத்தாலும், மகிழ்ச்சிக்கான வழிகள் அனைத்தாலும் இந்த வாழ்வில் உனக்கு என்னதான் பயன் இருக்கும்?" என்று கேட்டான் {சஞ்சயன்}.


அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, அறிவுடையோர், தாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் அறம் மற்றும் பொருள் ஆகியவற்றின் காரணமாகவே செய்கின்றனர். அறம் மற்றும் பொருள் ஆகியவற்றை மட்டுமே கண்டு, ஓ! சஞ்சயா நான் உன்னைப் போரிடத் தூண்டுகிறேன். உனது ஆற்றலை வெளிப்படுத்தத் தக்க தருணம் வந்துவிட்டது. இத்தகு நேரத்தில் நீ செயல்படவில்லையெனில், மக்களால் அவமதிக்கப்பட்டு, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையே நீ செய்பவனாவாய்.

ஓ! சஞ்சயா, புகழ்க்கேட்டால் கறைபடப்போகும் உன்னிடம் (பாசத்தால்) நான் எதையும் சொல்லவில்லையென்றால், பிறகு அந்தப் பாசம், பெண்கழுதை தன் குட்டியிடம் கொண்டதைப் போல மதிப்பற்றத்தாகவும், காரணமற்றதாகவும் ஆகும். அறிவுடையோரால் அங்கீகரிக்கப்படாததும், மூடர்களால் பின்பற்றப்படுவதுமான பாதையில் நீ நடக்காதே. இங்கே {மனிதர்களிடம்} இருக்கும் அறியாமை பெரியதாக இருக்கிறது. உலகின் எண்ணற்ற உயிரினங்கள் அதையே {அறியாமையையே} புகலிடமாகக் கொண்டிருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், நீ அறிவுடையோரின் நடத்தையைப் பின்பற்றினால், எனது அன்புக்குரியவனாக இருப்பாய். உண்மையில், அறம் மற்றும் பொருளை அறிந்து, கடவுளை மேலானவனாகக் கொண்டு, மனித உழைப்பை நம்பியவனாக, நல்லோரின் நடத்தையை பின்பற்றுபவனாக நீ இருந்தால், அதன் காரணமாகவே நீ எனது அன்புக்குரியவனாவாய்; மற்ற எந்த வழிகளிலும் அப்படி ஆக மாட்டாய். எவன் நன்கு அறிவுறுத்தப்பட்ட பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்கிறானோ அவனே உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். மறுபுறம், எவன் முயற்சியற்ற, அடக்கமில்லாத, தீய மனம் கொண்ட மகனைக் கண்டு மகிழ்கிறானோ, அவன் ஒரு மகனால் எது அடையப்பட வேண்டும் என்று விரும்புவானோ, அந்த நோக்கத்தை அடையமாட்டான். சரியானதை எப்போதும் செய்யாமல், கண்டிக்கத்தக்கதையே எப்போதும் செய்பவன் இங்கேயும், இதன் பிறகும் {மறு உலகிலும்} இன்பத்தை அடைவதில்லை.

ஓ! சஞ்சயா, ஒரு க்ஷத்திரியன் போருக்காகவும், வெற்றிக்காகவுமே படைக்கப்பட்டிருக்கிறான். {போரில்} வென்றாலும், அழிந்தாலும் அவன் இந்திரலோகத்தை அடைகிறான். அடிபணியச் செய்து எதிரிகளைக் குறைக்கும் ஒரு க்ஷத்திரியன் அடையும் இன்பம், புனிதமான இந்திரலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் கூட இருக்காது. கோபத்தில் எரிந்து கொண்டிருப்பவனும், பெரும் சக்தி படைத்தவனுமான ஒரு க்ஷத்திரியன், பல முறை தோல்வியுற்றாலும், தனது எதிரிகளை வீழ்த்த விரும்பி அவன் காத்திருக்க வேண்டும். உயிரையும் விடாமல், எதிரிகளையும் கொல்லாமல் இருக்கும் ஒருவனால் எவ்வழியில்தான் மன அமைதியை அடைய முடியும்?

அறிவுடையவன் எவனும், சிறியது எதையும் ஏற்பில்லாதவையாகவே கருதுவான். சிறியது எதையும் ஏற்கும் ஒருவனுக்கு, அந்தச் சிறிய விவகாரமே வலியின் ஊற்றுக்கண்ணாக (முழுமையாக) ஆகும். விரும்பியதை அடையாத ஒருவன் விரைவில் இழிந்தவனாகிறான். உண்மையில், அவன் அனைத்துத் தேவைகளையும் உணர்ந்து கடலுக்குள் நுழையும் கங்கையாகக் காணாமல் போகிறான்" என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "ஓ! தாயே, நீ உனது மகனின் முன்பு, இத்தகு கருத்துகளை வெளியிடக்கூடாது. அமைதியான ஊமை ஒருத்திபோல, அவனது பக்கத்தில் இருந்து, இப்போது அவனுக்குக் கருணை காட்டுவாயாக" என்றான்.

அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "நீ இப்படிச் சொல்வதால் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன். (எனது கடமை என்ன என்று உன்னால்) உந்தப்பட்டதால் தானோ என்னவோ, நான் உன்னை இப்படித் தூண்டுகிறேன். எனவே, (நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய) நான் இன்னும் அதிகமாக உன்னைத் தூண்டுவேன். சைந்தவர்கள் {சிந்துக்கள்} அனைவரும் கொல்லப்பட்டு, முழுமையான வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உன்னைக் கண்ட பிறகே உண்மையில் நான் உன்னை மதிப்பேன்", என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "செல்வம் இல்லாமல், கூட்டாளிகள் இல்லாமல், வெற்றி எப்படி எனதாகும்? மிகப் பரிதாபகரமான எனது நிலையை உணர்ந்தறிந்தே, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையைத் திருப்பிக் கொள்ளும் தீயவன் போல, நாட்டின் மீது கொண்ட எனது ஆசையை நானே திருப்பிக்கொண்டேன். எனவே, ஓ! முதிர்ந்த அறிவு கொண்டவளே, (இவை அனைத்தையும் இது நேர் செய்யும் என) எந்த வழிகளையாவது நீ கண்டால், அது குறித்து முழுமையாகச் சொல்வாயாக என நான் கேட்கிறேன். ஏனெனில், நீ எனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் நான் செய்வேன்" என்றான் {சஞ்சயன்}.

அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே, தோல்வியை எதிர்பார்த்து, நீ உனது ஆன்மாவை அவமதிக்காதே {உன்னையே அவமதித்துக் கொள்ளாதே}. அடையப்படாத பொருட்கள் அடையப்பட்டிருக்கின்றன; அடையப்பட்டனவோ தொலைக்கப்பட்டுள்ளன. கோபத்தாலோ, மூடத்தனத்தாலோ பொருட்களின் சாதனையை முயற்சிக்கக்கூடாது. ஓ! மகனே {சஞ்சயா}, அனைத்து செயல்களிலும் வெற்றியை அடைவது என்பது உறுதியில்லாதது. வெற்றி உறுதியற்றது; சில வேளைகளில் வெல்லலாம், சில வேளைகளில் அது முடியாமல் போகலாம் என்று அறிந்தும் மக்கள் செயல்படுகிறார்கள். எனினும், செயலில் இருந்து விலகும் ஒருவன் வெற்றியை அடைவதே இல்லை. உழைப்பு {முயற்சி} இல்லை என்றால் ஒரே முடிவுதான், அது வெற்றி இல்லை என்பதாகும். எனினும், உழைப்பின் {முயற்சியின்} போது வெற்றியை அடைவது, அல்லது அதை அடையாதது என்ற இரு நிலைகள் எப்போதுமே உண்டு.

ஓ! இளவரசே {சஞ்சயா}, விளைவுகளைப் பொறுத்தவரை அனைத்துச் செயல்களிலும் அவை உறுதியற்றவைதான் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்பவன், வெற்றி மற்றும் செழிப்பு ஆகிய இரண்டையும் தான் அடையும்படி செய்கிறான். அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் ஒருவன், சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, முயற்சியுடன் எழுந்து, ஒவ்வொரு செயலையும் செய்கிறான். ஓ! மகனே {சஞ்சயா}, செயல்களில் ஈடுபடும் {கர்மாவைச் செய்யும்} அறிவுள்ள மன்னன் ஒருவன், தேவர்களையும், அந்தணர்களையும் தன் பக்கத்ததில் வைத்துக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து, விரைவில் வெற்றியை அடைகிறான். கிழக்கை வாரியணைக்கும் சூரியனைப் போல, செழிப்பின் தேவதை அவனை {செயல்படுபவனை} அரவணைப்பாள். {சுற்றிக் கொண்டு சூரியன் மீண்டும் கிழக்கு திசைக்கு வருவதைப் போல, சுற்றிக் கொண்டு லட்சுமி அவனை நோக்கி வருகிறாள்}.

நான் உனக்கு உரைத்த பல்வேறு பரிந்துரைகளுக்கும், வழிகளுக்கும், ஊக்கமூட்டும் உரைகளுக்கும் தகுந்தவனாகவே உன்னை நான் காண்கிறேன். (இப்போது) உனது ஆற்றலை வெளிப்படுத்து. அனைத்து முயற்சிகளையும் செய்து, உனது கருத்தில் கொண்டுள்ள பொருளை வெல்வதே உனக்குத் தகும். (உனது எதிரிகளிடம்) கோபத்தில் இருப்போரையும், பேராசை கொண்டோரையும், (உனது எதிரியால்) பலவீனமாக்கப்பட்டவர்களையும், (உனது எதிரிகளிடம்) பொறாமை கொண்டோரையும், (உனது எதிரிகளால்) அவமதிப்புக்கு உள்ளானவர்களையும், அதீத செருக்கின் காரணமாக (உனது எதிரிகளால்) எப்போதும் அறைகூவி அழைக்கப்படுபவர்களையும், இந்த வகைகளைச் சார்ந்த {எதிரியின் எதிரிகளான} அத்தனை பேரையும் உன் பக்கத்தில் ஒன்றாகச் சேர்ப்பாயாக.

இவ்வழிகளில் நீ மேகங்களைச் சிதறடிக்கும் வகையில், மூர்க்கமாகவும், கடுமையாகவும் எழும் சூறாவளியைப் போன்று, (உனது எதிரியின்) பலமிக்கப் படையை உன்னால் உடைக்க முடியும். அவர்களுக்கு (உனது கூட்டாளிகளாக இருப்போருக்கு), உரிய காலத்திற்கு முன்பே செல்வத்தையும் உணவையும் அளித்து, எப்போதும் அவர்களுக்காகச் செயல்பட்டு, அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாயாக. பிறகு அவர்கள் உனக்கு நன்மையைச் செய்து, உன்னைத் தங்கள் தலையில் {முன்பு} வைப்பார்கள்.

தன் எதிரி உயிரைத் துச்சமாக நினைக்கிறான், என எப்போது உனது எதிரி அறிவானோ, அப்போது அவன் {அந்த எதிரி} தன் அறையிலேயே வாழும் பாம்பைப் போல அவனை {உன்னை} எண்ணி நடுங்குவானல்லவா? ஒருவனைப் பலம் நிறைந்தவனாக அறிந்து கொள்ளும் அவனது எதிரி, அவனை அடக்க முயற்சிக்க மாட்டான். சமரசக் கலைகள், கொடை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை {தன் எதிரியை} நண்பனாக்கவே முயற்சிப்பான். அதுவும் அவன் அடக்கப்பட்டதுக்கு ஒப்பானதே ஆகும்.

சமரசக் கலை மூலம் நிவாரணம் பெறுவதால், ஒருவன் தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவனது செல்வம் அதிகரித்தால், அவன் வழிபடப்பட்டு, தஞ்சமளிப்பவனாக அவனது நண்பர்களால் அவன் வேண்டப்படுவான். ஒருவன் செல்வத்தை இழந்தாலோ, அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, அதைவிட அதிகமாக அவநம்பிக்கையடைந்து, அவர்களால் வெறுக்கப்படும் நிலையும் உண்டாகும். தனது எதிரியிடமே சேர்ந்து நம்பிக்கையுடன் வாழ்பவனால், தனது நாட்டை மீண்டும் மீட்பது முற்றிலும் முடியாததாகும்" என்றாள் {விதுலை}."