The rebuke of Vidula! | Udyoga Parva - Section 133 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –62) {விதுலோபாக்யானம் - 1}
பதிவின் சுருக்கம் : விதுலை தனது மகனுக்கு உரைத்த நீதிகளை யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு குந்தி கிருஷ்ணனிடம் சொல்வது; போரில் தோற்று வெறுப்புற்றுக் கிடந்த தன் மகனைச் சோம்பல் நிலையில் இருந்து தூண்டுவதற்காக விதுலை உரைத்த நீதிகள் ...
குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, இது தொடர்பாகப் பழங்காலத்தில் விதுலைக்கும் அவளது மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் சொல்லப்படுகிறது. இதில் இருந்து சேகரிக்கப்படும் எதையும், அல்லது அதைவிடப் பயன்தரத்தக்க வேறு எதையும் நீ யுதிஷ்டிரனுக்குச் சொல்வதே தகும்.
உயர்ந்த குடியில் பிறந்தவளும், பெரும் முன்னறிதிறன் கொண்டவளுமான பெண் ஒருத்தி விதுலை என்ற பெயரில் இருந்தாள். புகழ்பெற்ற அவள், சிறிது கோபம் நிறைந்தவளாகவும், குறுக்கு மனம் கொண்டவளாகவும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவளாகவும் இருந்தாள். நன்கு கல்வி பெற்றிருந்த அவள் {விதுலை} பூமியின் மன்னர்கள் அனைவராலும் அறியப்பட்டவளாக இருந்தாள். பெரும் கல்வியறிவு பெற்ற அவள், பல்வேறு விசாரணைகளை அறிந்தவளாகவும், உரைகளைக் கேட்டவளாகவும் இருந்தாள்.
இளவரசியான விதுலை, சிந்துக்களின் {சிந்து நாட்டு} மன்னனிடம் தோற்று, துயரத்தினால் சோர்வடைந்த இதயத்துடனும் படுத்துக் கிடந்த தனது சொந்த மகனைக் கண்டித்துக் கொண்டிருந்தாள். அவள் {விதுலை தன்மகனிடம்}, "ஓ! எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனே, நீ எனது மகன் இல்லை. நீ எனக்கும், உனது தந்தைக்கும் பிறக்கவில்லை! நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்? கோபமே இல்லாத உன்னை ஆண்மகனாக எண்ண முடியாது. உனது அம்சங்கள் உன்னை ஓர் அலி எனக் காட்டிக் கொடுக்கின்றன. நீ வாழும் காலம் வரை நீ துயரத்திலேயே மூழ்கப் போகிறாயா?
நீ உனது சொந்த நலனை விரும்புகிறாய் எனில், பாரத்தை (உன் விவகாரங்களை உன்தோளில்) சுமப்பாயாக. உனது ஆன்மாவை அவமதிக்காதே. அற்ப காரியங்களால் மனநிறைவு கொள்ளாதே. உனது நலனில் உனது இதயத்தை நிறுத்து. அஞ்சாதே. உனது அச்சங்களைக் கைவிடு. ஓ! பேடியே, எழுவாயாக. உனது தோல்விக்குப் பிறகு, எதிரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்து, நண்பர்களைத் துயரில் ஆழ்த்தி, மானம் அனைத்தையும் இழந்து இப்படிப் படுத்துக் கிடக்காதே.
சிறு ஓடைகள், சிறு அளவு நீரில் மட்டுமே நிரம்பிவிடுகின்றன. எலியின் உள்ளங்கைகள் சிறு அளவிலேயே நிரம்பிவிடுகின்றன. ஒரு கோழை சிறியவற்றை அடைந்ததுமே விரைவில் மனநிறைவு அடைந்துவிடுகிறான். நாயைப் போலப் பரிதாபமாக இறப்பதைவிட, ஒரு பாம்பின் விஷப்பல்லைப் பறித்து அழிந்து போகலாம். உன் உயிரையே பணயம் வைத்தாவது உனது ஆற்றலை வெளிப்படுத்து.
வானில் அச்சமற்று உலவும் பருந்தைப் போல, நீயும் அச்சமற்று உலவு அல்லது உனது ஆற்றலை வெளிப்படுத்து, அல்லது ஒரு சந்தர்ப்பத்திற்காக அமைதியாக எதிரியைக் கவனித்துவா. இடியால் தாக்ககுண்டவன் போலவோ, இறந்தவன் போலவோ ஏன் இப்படிக் கிடக்கிறாய்? எழுவாய் ஓ! கோழையே, எதிரியால் வீழ்த்தப்பட்ட பிறகு உறங்காதே. இப்படிப் பரிதாபமாக அனைவரின் பார்வையில் இருந்தும் மறைந்து போகாதே. உனது செயல்களால் உன்னை அறியப்படுத்துவாயாக {புகழடைவாயாக}.
நடுநிலையையோ, தாழ்ந்த நிலையையோ, தாழ்மையிலும் தாழ்ந்த நிலையையோ அடையாதே. (நன்கு ஊட்டப்பட்ட நெருப்பு போல) சுடர்விட்டு எரிவாயாக {பிரகாசிப்பாயாக}. திந்துக மரத்திலான கொள்ளையைப் போல, ஒருக்கணமாவது சுடர்விடுவாயாக. நெல் உமியின் சுடர்களற்ற நெருப்பு போல {உமிக்காந்தல் போல} ஆசையால் எப்போதும் புகையாதே. எப்போதும் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒருக்கணம் சுடர்விடுவதே சிறந்தது.
மிகக் கடுமையானவனாகவோ, மிக மென்மையானவனோக ஓர் அரச குலத்தில் எந்த மகனும் பிறக்காதிருக்கட்டும். போர்க்களத்திற்குச் சென்று, ஒரு மனிதனால் அடையத்தக்க பெரும் சாதனைகள் அனைத்தையும் அடையும் ஒரு வீர மனிதன் க்ஷத்திரிய வகைக்கான கடமைகளுக்குத் தான் பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட ஒருவன் தன்னைத் தானே அவமதித்துக் கொள்வதில்லை. அவன் தனது நோக்கத்தை அடைகிறானோ இல்லையோ, புத்தியுள்ள எவனும் துக்கத்தில் ஈடுபடமாட்டான்.
மறுபுறம், அப்படிப்பட்ட ஒருவன், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை, தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் சாதிப்பான். எனவே, ஓ! மகனே, உனது வீரத்தை வெளிப்படுத்தி, அல்லது தவிர்க்க முடியாத முடிவை அடைவாயாக. உண்மையில் உனது வகைக்கான கடமைகளை அலட்சியம் செய்து நீ ஏன் உயிர்வாழ வேண்டும்? ஓ! பேடியே, உனது அறச்சடங்குகள் அனைத்தும், உனது சாதனைகள் அனைத்தும் போய்விட்டன. உனது இன்பங்களுக்கான வேர்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. அதன் பிறகு நீ ஏன் வாழ்கிறாய்?
ஒருவன் வீழ்ந்து மூழ்க வேண்டிய நிலைவந்தால், அவன் எதிரியின் இடுப்பைப் [1] பற்றிக் கொள்ள வேண்டும். (அதன்பிறகு எதிரியுடன் சேர்ந்து விழ வேண்டும்). ஒருவனது வேர்களே வெட்டப்பட்டுவிட்டாலும், அவன் துயரத்திற்கு ஆளாகக் கூடாது. உயர்ந்த சாதிக் குதிரைகள், பெரும் பாரங்களை இழுக்கவும் சுமக்கவும் தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றின் நடத்தையை நினைவுகூர்ந்து, உனது மானம் மற்றும் பலம் அனைத்தையும் திரட்டுவாயாக. எதில் ஆண்மை அடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வாயாக. உன் விளைவாக மூழ்கியிருக்கும் உனது குலத்தை உனது உழைப்பால் {முயற்சியால்} உயர்த்துவாயாக.
[1] கணுக்கால்களில் பிடிக்க வேண்டும் என்று வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.
மனிதர்களின் விவாதப் பொருளாக ஒரு பெரும் சாதனையையும் செய்யாதவன் மக்கள் தொகையை மட்டுமே அதிகரிக்கிறான். அவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. ஈகை, தவம், உண்மை {சத்தியம்}, கல்வி, செல்வமீட்டல் ஆகியவற்றால் புகழை அடையாதவன், தனது தாய் வெளியிட்ட மலம் மட்டுமே ஆவான். மறுபுறம், கல்வி, தவம், செல்வம், வீரம், செயல்கள் ஆகியவற்றில் பிறரை விஞ்சி நிற்கும் ஒருவனே (உண்மையில்) ஆணாவான் {ஆண்மையுள்ளவன் ஆவான்}. கோழைக்கு மட்டுமே தகுந்ததும், சோம்பல் நிறைந்ததும், இழிந்ததும், புகழற்றதும், மோசமானதுமான பிச்சையெடுக்கும் தொழிலைத் தேர்ந்தெடுப்பது உனக்குத் தகாது.
எவனைக் கண்டால் எதிரிகள் மகிழ்வார்களோ, எவனை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்களோ, எவன் இருக்கைகளும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறானோ, அற்ப பொருட்களை அடைந்து எவன் மனநிறைவு கொள்கிறானோ, எவன் எதுவுமில்லாதிருக்கிறானோ, எவன் வீரமற்று இழிந்தவனாக இருக்கிறானோ அந்தப் பலவீனமான மனிதனை நண்பனாக அடைவதில் நண்பர்கள் எப்போதும் எந்த மகிழ்ச்சியையும் அடைவதில்லை. ஐயோ, நமது நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டு, அனைத்துவகையான இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழந்து, ஆதாரங்களை இழந்திருக்கும் நாம், வாழ்வாதாரம் இன்மையால் அழிய வேண்டியிருக்குமே.
நல்லோருக்கு மத்தியில் கெட்ட நடத்தை கொண்டவனும், உனது குலத்தையும் குடும்பத்தையும் அழிப்பவனுமான உன்னைப் பெற்றதன் மூலம், ஓ! சஞ்சயா, ஒரு மகனின் வடிவத்தால் நான் கலியைப் பெற்றுவிட்டேனே. ஓ! கோபமற்றவனும், உழைப்பற்றவனும் {முயற்சியற்றவனும்}, சக்தியற்றவனும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனுமான உன்னைப் போன்ற ஒரு மகனை எந்தப் பெண்ணும் பெறாதிருக்கட்டும். புகையாதே. உனது வீரத்தை வெளிப்படுத்திச் சுடர்விட்டு எரிவாயாக. உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஒருக்கணமாயிருந்தாலும், குறுகிய காலமே இருந்தாலும், நீ உனது எதிரிகளின் தலையில் சுடர்விட்டு எரிவாயாக.
கோபம் கொள்பவனும், மன்னிக்காதவனுமே ஆண்மகனாவான். மறுபுறம், மன்னிக்கும் தன்மையுடன் கோபமில்லாதவன் ஆணும் அல்லாதவன், பெண்ணும் அல்லாதவனாவான். கருணை, இதயத்தில் மென்மை, முயற்சியின்மை {உழைப்பின்மை}, அச்சம் ஆகியவை செழிப்பை அழிப்பனவாகும். உழைப்பில்லாதவன் பெரியது எதையும் வெல்லமாட்டான். எனவே, ஓ! மகனே {சஞ்சயா}, உனது சொந்த முயற்சியால், தோல்விக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் இவற்றில் இருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்வாயாக. இதயத்தை உருக்காக்கிக் கொண்டு {இரும்பாக்கிக் கொண்டு} உனது சொந்த உடைமைகளை மீட்பாயாக.
(பறம் [பிறன்] param என்கிற} தன் எதிரிக்கு ஈடானதாக இருப்பதால் ஒரு மனிதன் புருஷன் {Purusha} என்று அழைக்கப்படுகிறான். எனவே, பெண்ணைப் போல வாழ்பவனுக்குப் புருஷன் (ஆண்மகன்) என்பது தவறான பெயராகும். சிங்கம் போல நடப்பவனான பெரும் பலமிக்க ஒரு வீர மன்னன் அனைத்துயிரும் போகும் பாதையில் சென்றாலும் {இறந்துவிட்டாலும்}, அவனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடிமக்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக ஆகமாட்டார்கள். தனது சொந்த மகிழ்ச்சியையும், இன்பங்களையும் அலட்சியம் செய்யும் ஒரு மன்னன், தனது நாட்டின் செழிப்புக்கு முயற்சி செய்து, தனது ஆலோசகர்களும், நண்பர்களும் மகிழும் வண்ணம் விரைவில் வெல்கிறான்" என்றாள் {விதுலை}.
{தாயின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "உன்னால் என்னைக் காண முடியவில்லை என்றால், இந்த உலகத்தால் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்களால் என்ன பயன்? அனைத்து வகை இன்பங்களாலும், ஏன் இந்த உயிரினாலும் கூட என்ன பயன்?" என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "இழிந்தோருக்குச் சொந்தமான பகுதிகளை நமது எதிரிகள் அடையட்டும். மரியாதையுடன் கருதப்படும் மனிதர்களால் அடையத்தக்க பகுதிகளை நமது நண்பர்கள் அடையட்டும். பலமற்றோர், {தங்கள் கட்டளைகளை மேற்கொள்ள} சேவகர்கள் மற்றும் பணியாட்கள் அற்றோர், பிறரால் வழங்கப்படும் உணவில் வாழ்வோர் ஆகிய இழிந்த மனிதர்களின் வாழ்வுமுறையை நீ பின்பற்றாதே. மேகங்களை நம்பியிருக்கும் பூமியின் உயிரினங்களைப் போலவோ, இந்திரனை நம்பி இருக்கும் தேவர்களைப் போலவோ, வாழ்வாதாரத்திற்காக அந்தணர்களும் உனது நண்பர்கள் அனைவரும் உன்னை நம்பி இருக்கட்டும்.
ஓ! சஞ்சயா, பழுத்த கனிகள் நிறைந்த மரத்திற்குப் பறவைகள் வருவதைப் போல [2] வாழ்வாதாரத்திற்காக எவனை நம்பி அனைத்துயிரும் இருக்கின்றனவோ அவனது வாழ்வு வீணானது அல்ல. உண்மையில், சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் மகிழ்ச்சி அடையும் தேவர்களைப் போல, எவனது ஆற்றல் மூலம் நண்பர்கள் மகிழ்ச்சியை அடைவார்களோ, அந்த வீர ஆண்மகனின் வாழ்வு பெருமைமிக்கதாகும். தனது சொந்த கரங்களின் ஆற்றலை நம்பி பெருமையுடன் வாழும் ஒரு மனிதன், இவ்வுலகில் புகழை வென்ற நிலையையும், மறுஉலகில் அருள் நிலையையும் அடைகிறான்" என்றாள் {விதுலை}."
[2] இந்த உவமைக்கு மிகச் சரியாகப் பொருந்துகிற ஒரு தமிழ்ச்செய்யுள்
ஆலிலே பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பர் உண்டோ?
- விவேக சிந்தாமணி