Wednesday, June 17, 2015

ஜெயம் எனும் வரலாறு! - உத்யோக பர்வம் பகுதி 136

The history called Jaya! | Udyoga Parva - Section 136 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 65) {விதுலோபாக்யானம் - 4}

பதிவின் சுருக்கம் : நண்பர்களின் துணையால் கிட்டும் நன்மையை விதுலை சொல்வது; சஞ்சயன் அறியாத பல பொக்கிஷ அறைகள் உண்டென்றும், அதைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும் விதுலை சொன்னது; தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது துயரில் இருந்து விடுபடுவது; விதுலை சஞ்சயன் உரையாடல் அடங்கிய வரலாற்றைக் கேட்பதனால் உண்டாகும் பலனைக் குந்தி சொன்னது...

தாய் விதுலை - மகன் சஞ்சயன்
அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "ஒரு மன்னன் எந்தவிதமான ஆபத்தில் தோல்வியுற்றாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளக்கூடாது {அதற்கு அஞ்சக்கூடாது}. அச்சத்தால் பாதிக்கப்படும் மன்னனைக் கண்டு, படை, ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் முழு நாடும் அச்சம் அடைந்து, குடிமக்கள் அனைவரும் {கருத்தில்} ஒற்றுமையற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் சென்று எதிரியின் தரப்பை அரவணைப்பார்கள்; பிறரோ எளிதாக மன்னனைக் கைவிட்டுவிடுவார்கள்; ஏற்கனவே {மன்னனிடம்} அவமானத்தை அடைந்த மேலும் பிறர், தாக்குவதற்கே கூட முயல்வார்கள்.


எனினும், நெருக்கமான நண்பர்கள், அவனது தரப்பில் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவனது நன்மையை அவர்கள் விரும்பினாலும், எதையும் செய்ய இயலாமல், கட்டி வைக்கப்பட்டுள்ள கன்றுக்காகக் காத்திருக்கும் மாட்டைப் போல ஆதரவற்ற நிலையில் காத்திருக்கிறார்கள். துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர்களுக்காக வருந்தும் நண்பர்களைப் போல, துயரத்தில் மூழ்கி இருக்கும் தங்கள் தலைவனைக் கண்டு நலன்விரும்பிகளும் வருந்துவார்கள்.

முன்பு நீயும், உன்னால் வழிபடப்பட்ட பல நண்பர்களை கொண்டிருந்தாய். உனது நாட்டுக்காக உனது இதயத்தை உணர்பவர்களும், உனது துன்பங்களைத் தங்கள் துன்பமாகவே எடுத்துக் கொள்பவர்களுமான பல நண்பர்களை நீயும் கொண்டிருக்கிறாய். அந்த நண்பர்களை நீ அச்சுறுத்தாதே. நீ அச்சத்திலிருப்பதைக் கண்டு அவர்கள் உன்னைக் கைவிடும் நிலையை அனுபவிக்காதே.

உனது பலம், ஆண்மை, புரிதல் {புத்தி} ஆகியவற்றைச் சோதிப்பதற்காகவும், உனக்கு உற்சாகமூட்ட விரும்பியும், உனது சக்தியை அதிகரிக்கவுமே நான் இவை அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன். நான் சொன்னது உனக்குப் புரிந்தால், நான் சொன்னது முறையானதாகவும், போதுமானதாகவும் உனக்குத் தோன்றினால், ஓ! சஞ்சயா, உனது பொறுமையைத் திரட்டி, வெற்றிக்காக உனது இடுப்புக் கச்சையை இறுகக் கட்டுவாயாக.

நீ அறியாதவையும், பெரும் எண்ணிக்கையும் கொண்ட, பல கருவூல வீடுகள் {பொக்கிஷ அறைகள்} நமக்குண்டு. அதன் இருப்பை வேறு யாரும் அறியமாட்டார்கள்; நான் மட்டுமே அறிவேன். அவை அனைத்தையும் நான் உனக்கு அளிக்கிறேன்.

ஓ! சஞ்சயா, உன் மகிழ்ச்சி மற்றும் துயரங்களில் உனக்கு ஆதரவாக இருப்பவர்களும், ஓ! வீரா {சஞ்சயா}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உனக்கு உண்டு. ஓ! எதிரிகளை வாட்டுபவனே, இது போன்ற கூட்டாளிகள், தனது நன்மையை விரும்பி, தனக்கு ஏற்புடையதைச் செய்யும் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாகத் தங்கள் பங்கை எப்போதும் சரியாகச் செய்வார்கள்" என்றாள் {விதுலை}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "அற்புதமான வார்த்தைகளும், அறிவும் நிரம்பிய தனது தாயின் {தாய் விதுலையின்} பேச்சைக் கேட்டதும், அந்த இளவரசன் சஞ்சயன், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனாக இல்லாவிடினும், அவனது இதயத்தில் இருந்த துயரம் உடனே விலகியது. அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "என் எதிர்கால நலனை கவனிக்கும் உன்னை எனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் நான், நிச்சயம் எனது தந்தைவழி நாட்டை மீட்பேன், அல்லது அந்த முயற்சியில் அழிந்து போவேன். உனது சொற்பொழிவின் போது நான் கிட்டத்தட்ட அமைதியாகக் கேட்பவனாகவே இருந்தேன். அக்காரியம் குறித்து நான் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், {அது குறித்து} உன்னை மேலும் விரிவாகப் பேச வைப்பதற்காகவுமே அப்போதைக்கப்போது ஒரு வார்த்தையை இடையிடையில் நான் கேட்டேன் {பேசினேன்}. அமுதத்தைக் குடிப்பவன் போதும் என்று சொல்லாதது போல, உனது வார்த்தைகளும் எனக்குப் போதுமெனத் தோன்றவில்லை. எந்தக் கூட்டாளிகளிடமிருந்தாவது ஆதரவைப் பெற்று, எனது இடைக்கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, எதிரிகளை ஒடுக்கி நான் வெற்றியடைவதைப் பார்" என்றான் {சஞ்சயன்}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தை அம்புகளால் துளைக்கப்பட்ட மகன், பெருமைமிக்க இனத்தைச் சேர்ந்த குதிரையைப் போல எழுந்து, தனது தாய் சுட்டிக்காட்டியவை அனைத்தையும் சாதித்தான்.

சக்தியை மேம்படுத்தி, பலத்தை ஈர்க்கும் இந்த அற்புத வரலாற்றை, எதிரிகளால் பாதிப்படைந்து, துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது மன்னனை, அவனது அமைச்சர் ஒருவர் கேட்கச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. இது வெற்றி விரும்பும் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்.

உண்மையில், இதைக் கேட்கும் ஒருவன், தனது எதிரிகளைக் கலக்கி இந்த முழு உலகையும் விரைவில் அடக்கி விடுவான். இந்த வரலாறு ஒரு பெண் வீரமகனை ஈன்றெடுக்கச் செய்யும். இதைத் திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு பெண், நிச்சயமாக ஒரு வீரனையே ஈன்றெடுப்பாள்.

இதைக் கேட்கும் {இந்த வரலாற்றைக் கேட்கும்} ஒரு க்ஷத்திரியப் பெண், தடுக்கமுடியா ஆற்றல் கொண்டவனாக, கல்வியில் முதன்மையானவனாக, தவத்துறவுகளில் முதன்மையானவனாக, தயாளத்தில் முதன்மையானவனாக, தவத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பவனாக, பிரம்ம அழகுடன் சுடர்விடுபவனாக, எண்ணற்ற நன்மைகள் கொண்டவனாக, பிரகாசத்தில் ஒளிர்பவனாக, பெரும் பலம் கொண்டவனாக, அருளப்பட்டவனாக, (போரில்) தாங்கிக்கொள்ளப்பட முடியாதவனாக, எப்போதும் வெல்பவனாக, ஒற்றப்பற்றவனாக, தீயவர்களைத் தண்டிப்பவனாக, அறம் பயில்வோர் அனைவரையும் பாதுகாப்பவனாக ஒரு மகனை ஈன்றெடுப்பாள்" என்றாள் {குந்தி}".