Thursday, June 18, 2015

கண்ணன் தேரில் கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 137

Karna on the chariot of Krishna! | Udyoga Parva - Section 137 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –66)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன், திரௌபதி, மாத்ரியின் மகன்கள் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டிய  செய்தியை அவள் கிருஷ்ணனிடம் சொல்லியனுப்பியது; கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்ட கிருஷ்ணன் அவனோடு நெடுநேரம் வாதிட்டது; கர்ணனை வழியனுப்பிய கிருஷ்ணன், விரைந்து உபப்லாவ்யத்தை அடைந்தது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்வாயாக, "நீ பிறந்த போது, பிரசவ அறையில் மங்கையர் சூழ நான் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சிகரமான தெய்வீகக் குரல், "ஓ! குந்தி, இந்த உனது மகன் ஆயிரம் கண் படைத்த தேவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனாவான். கூடியிருக்கும் குருக்கள் அனைவரையும் இவன் {அர்ஜுனன்} போரில் வீழ்த்துவான். பீமனின் துணை கொண்டு, இவன் முழு உலகையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே தொடும். வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்ட இவன் {அர்ஜுனன்} போரில் குருக்களைக் கொன்று, தொலைந்து போன தனது தந்தை {பாண்டு} வழி நாட்டை மீட்பான். பெரும் செழிப்புடைய இவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் கூடி, மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்",என்றது.


ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பீபத்சு {அர்ஜுனன்} எப்படி உண்மையில் {சத்தியத்தில்} நிலையானவன் என்பதையும், எப்படித் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதையும் நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அந்தத் (தெய்வீகக்) குரல் சொன்னது போலவே ஆகட்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீதி என்ற ஒன்று உண்டென்றால், அந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். நீயொருவனாகவே அவை அனைத்தையும் சாதிப்பாய். அந்தக் குரல் சொன்ன எதையும் நான் சந்தேகிக்கவில்லை. அனைத்துக்கும் மேன்மையான நீதியை நான் வணங்குகிறேன். நீதியே அனைத்து உயிர்களையும் தாங்குகிறது. நீ இவ்வார்த்தைகளையே தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொல்வாயாக.

மேலும், எப்போதும் உழைக்க {முயற்சி செய்யத்} தயாராக இருக்கும் விருகோதரனிடம் {பீமனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் ஒரு மகனைப் பெறும் காரணத்திற்கான நேரம் வந்துவிட்டது! பகை இருக்கும்போது, எப்போதும், மனிதர்களில் முதன்மையானவர்கள் உற்சாகமற்றுப் போவதில்லை", என்று சொல்வாயாக. பீமனின் மனநிலையை நீ அறிவாய். எதிரிகளைக் கலங்கடிப்படிப்பவனான அவன் {பீமன்}, தனது எதிரிகளை அழிக்கும் வரை எப்போதும் தணியமாட்டான் {ஓயமாட்டான்}.

பிறகு நீ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, பெரும் புகழ்கொண்டவளும், உயர் ஆன்ம பாண்டுவின் மருமகளும், மங்கலகரமானவளுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! உயர்ந்த அருள் கொண்டவளே, ஓ! உன்னதமான பெற்றோரைக் கொண்டவளே, ஓ! பெரும்புகழ் கொண்டவளே, எனது மகன்களிடம் எப்போதும் நீ நடந்து கொள்ளும் இனிமையான விதம், உண்மையில் உனக்குத் தகுந்ததே", என்று சொல்வாயாக.

மேலும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தங்களை எப்போதும் அர்ப்பணித்திருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்}, "உயிரைவிட, வீரத்தினால் பெறப்படும் இன்பங்களைப் பெரிதாக விரும்புங்கள். வீரத்தினால் வெல்லப்பட்ட பொருட்கள், க்ஷத்திரிய நடைமுறைகளின் படி வாழும் ஒருவனின் இதயத்துக்கு எப்போதும் இனிமையானவையாக இருக்கும். அனைத்து வகை அறங்களையும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்கள் கண் முன்பாகவே பாஞ்சால இளவரசி {திரௌபதி} கொடூரமான, தவறான அடைமொழிகளால் அழைக்கப்பட்டாள். அந்த அவமானத்தை எவனால் மன்னிக்கமுடியும்?", என்று சொல்வாயாக.

அவர்கள் {பாண்டவர்கள்} நாட்டை இழந்தது எனக்குத் துயரை அளிக்கவில்லை. பகடையில் அவர்கள் அடைந்த தோல்வி எனக்குத் துயரை அளிக்கவில்லை. ஆனால், உன்னதமானவளும், அழகானவளுமான திரௌபதி சபைக்கு மத்தியில் அழுதுகொண்டிருந்த போது, அந்தக் கொடூரமான, அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததே எனக்குப் பெரும் துயரை அளித்தது. ஐயோ, க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை எப்போதும் அர்ப்பணித்துக் கொண்டவளும், மிக அழகானவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இத்தகு பலம் நிறைந்த பாதுகாவலர்களை மணந்திருந்தாலும், அச்சந்தர்ப்பத்தில் எந்தப் பாதுகாவலனையும் அவள் {திரௌபதி} காணவில்லை.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, மனிதர்களில் புலியும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம், திரௌபதி சுட்டிக் காட்டும் பாதையில் எப்போதும் அவன் நடக்க வேண்டும் என்று சொல்வாயாக. கேசவா {கிருஷ்ணா}, அனைத்தையும் அழிக்கும் யமன்களும், கடுமையான இணையுமான பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர், தேவர்களையே கூட அனைத்து உயிரினங்களின் வழியில் செல்ல வைக்க இயன்றவர்கள் {தேவர்களைப் பரகதி அடையச் செய்வார்கள்} என்பதை நீ நன்கு அறிவாய். (அப்படிப்பட்ட அவர்களுக்கு மனைவியான) கிருஷ்ணை சபையில் இழுத்துவரப்பட்டது அவர்களை அவமதித்ததாகாதா?

ஓ! கேசவா {கிருஷ்ணா}, குருகுலத்தின் வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், பீமனிடம் துச்சாசனன் பேசிய கொடூரமான, கடுமையான வார்த்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்துவாயாக. (என் பெயரால்) பாண்டவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} நலன்களை விசாரிப்பாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் நன்றாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்வாயாக. மங்கலகரமான உனது வழியில் சென்று, நீ எனது மகன்களைக் காப்பாயாக", என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வணங்கி வலம் வந்தவனும் வலிய கரங்களைக் கொண்டவனும், சிங்கத்தின் கம்பீரமான நடைக்கு ஒப்பான நடையைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பிருதையின் {குந்தியின்} இல்லத்தில் இருந்து வெளிப்பட்டான். பிறகு அவன் {கிருஷ்ணன்}, (தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களான) பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட குருக்களின் தலைவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி, கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்டு, சாத்யகியுடன் (குருக்களின் நகரை) விட்டுச் சென்றான்.

அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, அவனுடன் {கிருஷ்ணனுடன்} தொடர்புடைய அற்புதமான ஆச்சரியமான சம்பவத்தைக் குறித்து, ஒன்றாகக் கூடியிருந்த குருக்கள் பேசத் தொடங்கினர். அவர்கள், "அறியாமையில் மூழ்கியிருக்கும் முழு உலகமும் மரணவலையில் சிக்கியிருக்கிறது" என்றனர். மேலும் அவர்கள், "துரியோதனனின் மூடத்தனத்தால், இவை அனைத்தும் அழிவுக்குள்ளாகப் போகின்றன" என்றும் சொன்னார்கள்.

(குரு) நகரத்தில் இருந்து வெளியேறியவனும், முன்னேறியவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், நீண்ட நேரம் கர்ணனுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான். யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனான அவன் {கிருஷ்ணன்}, பிறகு கர்ணனுக்கு விடைகொடுத்து, தனது குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினான். தாருகனால் செலுத்தப்பட்ட அந்த மனோவேகம் கொண்ட குதிரைகள், வானத்தைக் குடித்துவிடுவதைப் போலச் சென்றன. நெடும் வழியை விரைவாகக் கடக்கும் வேகமான பருந்தைப் போல, சாரங்கம் தாங்குபவனை {கிருஷ்ணனைத்} தாங்கிக் கொண்டு, அவை {அந்தக் குதிரைகள்} உபப்லாவ்யத்தை மிக விரைவில் அடைந்தன.