Saturday, June 20, 2015

யுதிஷ்டிரனை நீ எப்படி வெல்வாய்? - உத்யோக பர்வம் பகுதி 139

How will you vanquish Yudhishthira? | Udyoga Parva - Section 139 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –68)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரும், துரோணரும் மாறி மாறிப் பேசியும் சமாதானத்திற்கு உடன்படாத துரியோதனன் தலையைத் தொங்கப்போடுவது; யுதிஷ்டிரனிடம் போரிடுவது தவறு எனப் பீஷ்மர் உரைப்பது; அர்ஜுனனிடம் தான் கொண்ட பாசம், அர்ஜுனனின் ஆற்றல் ஆகியவற்றைத் துரியோதனனிடம் துரோணர் சொல்வது; க்ஷத்திரியக் கடமைகளைத் தான் நோற்க வேண்டி வந்ததை எண்ணி நொந்து கொள்வது; பாண்டவர்களிடம் துரியோதனன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று துரோணர் அவனைத் தூண்டியது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அவர்களால் சொல்லப்பட்ட துரியோதனன், தனது புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் சுருக்கி, உற்சாகமிழந்தவனாக, தலையைத் தொங்கப்போட்டவாறு சரிந்த பார்வையைச் செலுத்தினான். மறுமொழியாக அவன் {துரியோதனன்} எவ்வார்த்தையும் சொல்லவில்லை. அவன் {துரியோதனன்} உற்சாகமிழந்தைக் கண்டவர்களும், மனிதர்களில் காளைகளுமான பீஷ்மரும், துரோணரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மீண்டும் அவனிடம்  {துரியோதனனிடம்} (இந்த வார்த்தைகளால்) பேசினார்கள்.


பீஷ்மர் {துரியோதனனிடம்}, "தனக்கு மூத்தவர்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், பொறாமையற்றவனும், பிரம்மத்தை அறிந்தவனும், உண்மையைப் பேசுபவனுமான யுதிஷ்டிரனிடம் நாம் போரிடுவதைவிடத் துயர் நிறைந்த காரியம் வேறு எதுவும் கிடையாது" என்றார் {பீஷ்மர்}.

துரோணர் {துரியோதனனிடம்}, "என் மகன் அஸ்வத்தாமனைவிட நான் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அதிகப் பாசம் கொண்டிருக்கிறேன். அந்த வானரக்கொடியோனும் {அர்ஜுனனும்} (அஸ்வத்தாமன் கொண்டிருப்பதைவிட) அடக்கமும், என்னிடம் அதிக மரியாதையும் கொண்டிருக்கிறான். ஐயோ, க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதினால், நான் என் மகனை விட அன்பாகக் கருதும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} போரிட வேண்டியுள்ளதே. ஐயோ, க்ஷத்திரியத் தொழிலுக்காக  உலகில் தனக்கு நிகரற்ற அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, எனது அருளால் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையை அடைந்திருக்கிறான்.

தனது நண்பர்களை வெறுப்பவனும், தீய மனநிலை கொண்டவனும், கடவுளை மறுப்பவனும், குறுகிய மனம் படைத்த வஞ்சகனுமான ஒருவன், வேள்வியில் பங்குபெறும் மூடனைப் போல, நீதிமான்களின் வழிபாட்டைப் பெறவே மாட்டான். {என்னதான் ஒரு மூடன் வேள்விகளில் பங்குகொண்டாலும் அவன் மதிப்பபைப் பெறுவதில்லை}. பாவத்தில் இருந்து விலக்கப்பட்டாலும், பாவம் நிறைந்த ஒருவன் பாவச் செயல்களையே செய்வான்; அதே வேளையில் நீதிமானான ஒருவன் பாவத்தால் ஈர்க்கப்பட்டாலும், அவன் நீதியைக் கைவிட மாட்டான். நீ பாண்டவர்களிடம் பொய்மையுடனும், வஞ்சகத்துடனும் நடந்து கொண்டாலும், அவர்கள் {பாண்டவர்கள்} இன்னும் உனக்கு ஏற்புடையதைச் செய்யவே விரும்புகிறார்கள். உன்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தவறுகள் அனைத்தும், உனக்குப் பேரழிவுகளையே கொண்டு வருவனவாக இருக்கின்றன.

குருக்களில் மூத்தவரும் {பீஷ்மரும்}, நானும், விதுரனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உன்னிடம் பேசினோம். எது நன்மை என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. "என்னிடம் பெரிய படை இருக்கிறது" என்ற நம்பிக்கையில், சுறா மீன்களும், முதலைகளும், மகரங்களும் நிறைந்த கடலை, கங்கையின் நீரூற்று துளைப்பதைப் போல, வீரர்கள் நிறைந்த பாண்டவப் படையை நீ துளைக்க விரும்புகிறாய். மற்றொருவன் களைந்து போட்ட மாலைகளையோ, ஆடைகளையோ போன்ற யுதிஷ்டிரனின் செழிப்பை அடைந்த நீ, அதை உனதாகவே கருதுகிறாய். பிருதை {குந்தி} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆயுதம் தாங்கிய தனது தம்பிகள் சூழ திரௌபதியுடன் காட்டிலேயே தங்கிவிட்டாலும்கூட, நாட்டைக் கொண்ட எவனால் அவனை {யுதிஷ்டிரனை} வீழ்த்த முடியும்? யக்ஷர்கள் யாருடைய உத்தரவின் பேரில் பணியாட்களைப் போல அவனுக்கு {யுதிஷ்டிரனுகு} பணி செய்து கிடக்கிறார்களோ, அந்த ஐலவிலன் {குபேரன்} முன்னிலையிலேயே கூட நீதிமானான யுதிஷ்டிரன் பிரகாசத்தால் ஒளிர்ந்தான். குபேரனின் வசிப்பிடத்திற்கு முன்னேறி, அங்குச் செல்வத்தை அடைந்த பாண்டவர்கள், பரந்திருக்கும் உனது நாட்டைத் தாக்கி, அரசுரிமையை வெல்லவே இப்போது விரும்புகிறார்கள்.

{பீஷ்மர், துரோணர் ஆகிய} (எங்கள் இருவரைப் பொறுத்தவரை), நாங்கள் தானங்களைச் செய்திருக்கிறோம்; நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றியிருக்கிறோம், (சாத்திரங்களைக்) கற்றிருக்கிறோம், செல்வத்தால் அந்தணர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறோம். எங்களது (எங்களுக்கு ஒதுக்கப்பட்ட) வாழ்வுக் காலம் முடியப்போகிறது. எங்கள் வேலை முடிந்துவிட்டது என்பதை அறிவாயாக. (எனினும், உன்னைப் பொறுத்தவரை), இன்பம், நாடு, நண்பர்கள், செல்வம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பாண்டவர்களிடம் நீ போருக்கு முனைந்தால், நீ அடையும் துன்பம் பெரியதாக இருக்கும். உண்மை நிறைந்த பேச்சுடன், கடும் நோன்புகளுக்கும், தவங்களுக்கும் தன்னை அர்ப்பணித்து, பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வெற்றிக்காகத் திரௌபதி வேண்டி {பூஜை செய்து} கொண்டிருக்கும்போது, உன்னால் அவனை {யுதிஷ்டிரனை} எப்படி வெல்ல முடியும்? ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தனது ஆலோசகனாகவும், ஆயுதங்களைத் தாங்குவோரில் முதன்மையான தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனது தம்பியாகவும் கொண்டிருகும் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்? இவ்வளவு நிறைய அந்தணர்களைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டவனும், புத்திக்கூர்மை கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், கடும் தவங்களைக் கொண்டவனுமான பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்?

துன்பக்கடலில் மூழ்கப்போகும் தனது நண்பனைக் கண்டு, செழிப்பை விரும்பும் நண்பன் ஒருவன் என்ன சொல்ல வேண்டுமோ, அதையே நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். போருக்கான அவசியமே இல்லை. குருக்களின் செழிப்பிற்காகவாவது நீ அந்த வீரர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானம் கொள்வாயாக. உனது மகன்கள், ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் இந்தப் படையுடன் நீ தோல்வியை அடையாதே" என்றார் துரோணர்."