The assertion of Bhishma and Drona! | Udyoga Parva - Section 138 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –67)
பதிவின் சுருக்கம் : குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மரும், துரோணரும் துரியோதனனிடம் சமாதானத்தை ஏற்கும்படி சொல்வது; குந்தியின் சொல்லுக்கும், கிருஷ்ணனுக்கு ஏற்புடையவைக்கும் பாண்டவர்கள் கீழ்ப்படிவார்கள் என்றும், அது போலத் துரியோதனனும், அவனது தந்தை திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அவனது நலன்விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொன்னது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரம், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, "ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, கிருஷ்ணனின் முன்னிலையில் சொல்லப்பட்டவையும், பயனுள்ளவையும், அற்புதமானவையும், அறத்திற்கு இசைவானவையும், கடுமையானவையுமான குந்தியின் வார்த்தைகளைக் கேட்டாயா? அவளது {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அதன்படியே செயல்படுவார்கள், அதிலும் குறிப்பாகக் கிருஷ்ணனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகளின்படியே செயல்படுவார்கள்.
ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் பங்கான நாடு (அவர்களுக்குக்) கொடுக்கப்படாமல், அவர்கள் நிச்சயம் தணியமாட்டார்கள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நீ நிறைய வலிகளைக் கொடுத்துவிட்டாய். திரௌபதியும் சபையில் வைத்து உன்னால் துன்புற்றாள். எனினும், உண்மையின் {சத்தியத்தின்} கட்டுகளுக்கு அவர்கள் {பாண்டவர்கள்} கட்டுப்பட்டிருந்தார்கள். இதன்காரணமாகவே அவர்களால் {பாண்டவர்களால்} அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது.
அனைத்து ஆயுதங்களிலும் திறன் படைத்த அர்ஜுனனையும், உறுதியான தீர்மானம் கொண்ட பீமனையும், காண்டீவத்தையும், (வற்றாத) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அர்ஜுனனின்) தேரையும், (குரங்கு உருவம் பொறிக்கப்பட்ட) கொடியையும், பெரும் வலிமை மற்றும் சக்தி படைத்த நகுலன் மற்றும் சகாதேவனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} தனது கூட்டாளிகளாகக் கொண்ட யுதிஷ்டிரன் (உன்னை) மன்னிக்கமாட்டான்.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, விராடநகரத்தில் நடந்த போரில், புத்திக்கூர்மையுள்ள அர்ஜுனன் நம் அனைவரையும் முன்பே வீழ்த்தியதை நீ உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். உண்மையில் அந்த வானரக் கொடியோன் {அநுமன் கொடிகொண்ட வீரன் அர்ஜுனன்} பயங்கரச் செயல்களைச் செய்யும் நிவாதகவசர்கள் எனும் தானவர்களை, தனது கடும் ஆயுதங்களால் போரில் எரித்தான். கால்நடைகளை எண்ணும் சந்தர்ப்பத்தில் {கோஷ யாத்திரையில்}, கந்தர்வர்களால் {நீ} கைப்பற்றப்பட்ட போது, இந்தக் கர்ணனையும், உனது ஆலோசகர்கள் அனைவரையும், கவசம் தரித்து உனது தேரில் இருந்த உன்னையும் கந்தர்வர்களின் பிடியில் இருந்து விடுவித்தவன் அந்த அர்ஜுனனே. {அவன் நம்மைவிடப் பலவான் என்பதற்கு} அதுவே போதுமான சாட்சியாகும். எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது சகோதரர்கள் அனைவருடன் கூடி பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக. அழிவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து இந்த முழு உலகத்தையும் காப்பாயாக.
அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், உன்னிடம் பாசம் கொண்டவனும், இனிய பேச்சு மற்றும் கல்வியைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் உனது அண்ணனாவான். உனது பாவம் நிறைந்த நோக்கங்களைக் கைவிட்டு, அந்த மனிதர்களில் புலியிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒற்றுமையாகச் சேர்வாயாக. கைகளில் வில்லற்று, கோபத்தால் புருவம் சுருங்காமல், மகிழ்ச்சியாக இருக்கும் உன்னை அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கண்டால், {நிச்சயம் யுதிஷ்டிரன் பகையை மறந்துவிடுவான்}, அதுவே நமது குலத்திற்கான நன்மையாகும். உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவருடன் கூடி நீ அவனை {யுதிஷ்டிரனைச்} சகோதரப்பாசத்தோடு தழுவுவாயாக.
ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, முன்பு போலவே நீ அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} மதிப்பாயாக. குந்தியின் மகனும், பீமனின் அண்ணனுமான யுதிஷ்டிரன், வணங்கிச் செல்லும் உன்னைப் பாசத்தால் ஆரத் தழுவட்டும். அடிப்பவர்களில் முதன்மையானவனும், சிங்கம் போன்ற தோள், நீண்ட உருண்ட தொடைகள் மற்றும் வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமன் உன்னைத் ஆரத்தழுவிக் கொள்ளட்டும். குந்தியின் மகனும், பார்த்தன் என்றும் அழைக்கப்படுபவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனும், சுருட்டை முடி மற்றும் சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} உன்னை மரியாதையாக வணங்கட்டும். மனிதர்களில் புலிகளும், இப்பூமியில் ஒப்பற்ற அழகுடையவர்களுமான அசுவினி இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} பாசத்துடன் உனக்குச் சேவை செய்து, உன்னை அவர்களது ஆசானாக மதிக்கட்டும்.
{இதனால்} தாசார்ஹ குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீரை வடிக்கட்டும். உனது செருக்கையைக் கைவிட்டு, உனது சகோதரர்களுடன் ஒன்றுபடுவாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா} போருக்கான எந்தத் தேவையும் இல்லை. உனது நண்பர்கள் எடுத்துச் சொல்பவற்றைக் கேட்பாயாக. வரப்போகும் போரினால் க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவு ஏற்படப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
நட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ! வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளை முன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில் மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. சுடர்விடும் எரிகற்கள் உனது படையைத் துன்புறுத்துகின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, நமது விலங்குகள் உற்சாகமற்றவையாகவும், அழுபவையாகவும் தெரிகின்றன. உனது துருப்புகளைக் கழுகுகள் வட்டமிடுகின்றன. நகரமோ, அரண்மனையோ முன்பு போலத் தோற்றமளிக்கவில்லை. அச்சுறுத்தும்வகையில் ஊளையிடும் ஓநாய்கள், காட்டு நெருப்புக்கு மத்தியில் நாலாபுறமும் ஓடுகின்றன.
உனது தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி} மற்றும் உனது நலன்விரும்பிகளான நாங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, போரும், அமைதியும் உனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, உனது நண்பர்களின் வார்த்தைகளின்படி நீ செயல்படாவிடில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் உனது படை அல்லலுறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். வலிமைமிக்கப் பீமனாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் எழுப்பப்படும் பயங்கர ஒலிகளைப் போரில் கேட்கும் நீ, எங்களது இந்த வார்த்தைகளை நினைவு கூர்வாய். நாங்கள் சொல்வது உனக்கு ஏற்புடையதாகத் தோன்றாவிடில், நாங்கள் சொல்வது போலத்தான் உண்மையில் நடக்கும்" என்றனர் {பீஷ்மரும் துரோணரும்}.