Monday, June 22, 2015

"ரகசியமாயிருக்கட்டும்!" என்ற கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 141

"Keep the secret" said Karna! | Udyoga Parva - Section 141 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –70)

பதிவின் சுருக்கம் : குந்தியின் மகனே தான் என்பதைத் தான் அறிந்திருப்பதாகக் கர்ணன் சொல்வது; எனினும் அதிரதனும், ராதையுமே தனது தாய் தந்தையர் என்று கர்ணன் சொல்வது; கர்ணன் தனது அண்ணன் என்பதை யுதிஷ்டிரன் அறிந்தால், அவன் நிச்சயம் நாட்டை ஏற்கமாட்டான், எனவே கிருஷ்ணனுக்கும் தனக்கும் இடையில் நடந்த அந்த உரையாடல் ரகசியமாகவே இருக்கட்டும் என்று கர்ணன் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொள்வது; நாட்டை ஆளும் தகுதி யுதிஷ்டிரனுக்கு உண்டு என்று கர்ணன் சொன்னது; நடக்கப் போகும் போர் ஓர் ஆயுத வேள்வி என்று சொல்வது; அதில் ஒவ்வொருவரும் ஏற்கும் நிலைகளைக் கர்ணன் கிருஷ்ணனிடம் பட்டியலிடுவது; க்ஷத்திரியர்கள் இழிவான மரணத்தை அடையாமல் குருக்ஷேத்திரம் எனும் புனிதமான இடத்தில் போரில் ஈடுபட்டு, ஆயுதங்களால் கொல்லப்பட்டு, நிலையான சொர்க்கத்தை அடையட்டும் என்றும், அதற்காக போரில் அர்ஜுனனை  தன் எதிரில் கிருஷ்ணன் கொண்டு வரவேண்டும் என்று கர்ணன் சொன்னது...

கர்ணன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என்னிடம் நீ கொண்ட அன்பு, பாசம் மற்றும் நட்பின் அடிப்படையிலும், எனக்கு நன்மை செய்யும் உனது விருப்பத்தின் விளைவாலுமே இவ்வார்த்தைகளை நீ சொன்னாய் என்பதில் {எள்ளளவும் எனக்கு} ஐயமில்லை. நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் {ஏற்கனவே} நான் அறிவேன். தார்மீக அடிப்படையிலும், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையிலும், ஓ! கிருஷ்ணா, நீ நினைப்பது போலவே நான் பாண்டுவின் மகனே. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாய் {குந்தி} கன்னிகையாக இருந்த போது, சூரியனுடன் ஏற்பட்ட தனது தொடர்பினால், தன் கருவில் என்னைச் சுமந்தாள். சூரியனின் கட்டளையின் பேரிலேயே நான் பிறந்ததும் அவள் {குந்தி} என்னைக் கைவிட்டாள். ஓ! கிருஷ்ணா, இப்படியே நான் இவ்வுலகுக்கு வந்தேன். எனவே, தார்மீக அடிப்படையில் நான் பாண்டுவின் மகனே.


எனினும், எனது நல்வாழ்வை நினைக்காமல் குந்தி என்னைக் கைவிட்டுவிட்டாள். சூதரான அதிரதர் என்னைக் கண்டதுமே தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். என் மீது கொண்ட பாசத்தால், அந்த நாளிலேயே ராதையின் முலைகள் பாலால் நிரம்பின. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவள் {ராதை} எனது சிறுநீரையும் மலத்தையும் சுத்தம் செய்தாள். கடமைகளை அறிந்தவர்களும், எப்போதும் சாத்திரங்களைக் கேட்பதில் ஈடுபடுபவர்களுமான நாம் எப்படி அவளது பிண்டத்தை இழக்கச் செய்யலாம்? அதே போலத்தான் சூத வர்கத்தைச் சேர்ந்த அதிரதரும் என்னைத் தனது மகனாகவே கருதுகிறார். நானும் பாசத்தால், அவரையே {அதிரதரையே எனது} தந்தையாக எப்போதும் கருதுகிறேன்.

ஓ! மாதவா, அந்த அதிரதர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் குழந்தையாக இருந்த போது, ஒரு தந்தையின் பாசத்தோடு, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி குழந்தைக்கான சடங்குகளை {ஜாதகர்மம்} அனைத்தையும் எனக்குச் செய்வித்தார். அதே அதிரதர்தான், அந்தணர்களைக் கொண்டு எனக்கு வசுசேணன் {வஸுஷேணன்} என்ற பெயரையும் அளித்தார். நான் இளமையை அடைந்தபோது, அவரது தேர்வுகளின்படியே நான் என் மனைவியரை மணந்தேன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களின் {அந்த மங்கையரின்} மூலமே நான் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அடைந்தேன். ஓ! கிருஷ்ணா, எனது இதயமும், பாசமும் மற்றும் அன்புக்கட்டுகள் அனைத்தும் அவர்களிடமே நிலைத்திருக்கிறது. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகிழ்ச்சியாலோ, அச்சத்தாலோ, முழு உலகத்துக்காகவோ, பொற்குவியலுக்காகவோ அந்தக் கட்டுகளை {பந்தங்களை} அழிக்கும் துணிவு எனக்கு ஏற்படாது.

திருதராஷ்டிரர் குலத்துத் துரியோதனனிடம் நான் கொண்ட தொடர்பின் விளைவால், ஓ! கிருஷ்ணா, ஒரு முள்ளும் என் பக்கத்தில் இல்லாமல் ஆட்சியுரிமையைப் பதிமூன்று {13} வருடங்களாக அனுபவித்தேன். நான் பல வேள்விகளைச் செய்தேன். அவற்றில், சூத இனத்தோர் தொடர்பானவற்றையே எப்போதும் செய்தேன். {நான் சூதர்களோடு பல வேள்விகளைச் செய்தேன். குலச்சடங்குகளையும், திருமணங்களையும் சூதர்களோடே நான் செய்து கொண்டேன்}. ஓ! கிருஷ்ணா, என்னை அடைந்த துரியோதனன், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களுடன் பகையுணர்வு தூண்டப்பட்டு, ஆயுத மோதலுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறான்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, {வரப்போகும்} போரில் இதற்காகவே, ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனின் பெரும் எதிரியாகவும், அவனுக்கு எதிராகத் தனிப்போர் தொடுத்து முன்னேறுபவனாகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். மரணத்திற்கு ஆஞ்சியோ, {பாண்டுவின் மகன்கள் என்ற} இரத்தப்பற்றுக்கு {இரத்த பந்தங்களுக்கு} மயங்கியோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் புத்திசாலி மகனுக்கு {துரியோதனனுக்கு} எதிராகப் பொய்மையுடன் {வஞ்சகமாக} நடக்க நான் துணிய மாட்டேன். ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அர்ஜுனனோடு தனிக்குத்தனி மோதலில் நான் ஈடுபடவில்லை என்றால், அஃது எனக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} புகழைத் தராது {புகழ்க்கேட்டையே தரும்}.

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவையனைத்தையும் நீ எனது நன்மைக்காகவே என்னிடம் இப்படிச் சொல்கிறாய் என்பதில் எனக்கு ஐயமில்லை. உனக்குக் கீழ்ப்படியும் பாண்டவர்களும், நீ சொல்வதையே செய்வார்கள் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. எனினும், தற்போது நமக்குள் நடக்கும் இந்த உரையாடலை, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ மறைக்க வேண்டும். ஓ யாதவர்கள் அனைவரையும் மகிழச் செய்பவனே {கிருஷ்ணா}, நமது நலன் அதில் அடங்கியிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

நன்கு அடக்கப்பட்ட புலன்களும், அறம்சார்ந்த ஆன்மாவும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், குந்தியின் முதல் மகன் {அவனது அண்ணன்} நான் தான் என்பதை அறிந்தால், நாட்டை ஒருபோதும் அவன் ஏற்கமாட்டான். மேலும், ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, பரந்திருப்பதும், விரிவடைவதுமான இந்தப் பேரரசு எனதானால் {என்னுடையதானால்}, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {கிருஷ்ணா}, நிச்சயம் நான் அதைத் துரியோதனனிடம்தான் கொடுப்பேன். {எனவே}, அறம்சார்ந்த யுதிஷ்டிரனே நிலையான மன்னனாக ஆவானாக.

எவன் ரிஷிகேசனை {கிருஷ்ணனை} வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறானோ, எவன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள் ஆகியோரைப் போர்வீரர்களாகக் கொண்டிருக்கிறானோ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனே {யுதிஷ்டிரனே} இந்த முழு உலகத்தையும் ஆளத் தகுந்தவன்.

பாஞ்சாலர்களின் இளவரசன் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, உத்தமௌஜஸ், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சோமக இளவரசனான யுதாமன்யு, சேதி நாட்டு ஆட்சியாளனான சேகிதானன், வெல்லப்படமுடியாத சிகண்டி, இந்திரகோபப் பூச்சிகளின் நிறம் கொண்டோரான கேகய சகோதரர்கள், வானவில்லின் நிறத்திலான குதிரைகளைக் கொண்டவனும், பீமசேனனின் மாமனும், உயர் ஆன்மா கொண்டவனுமான குந்திபோஜன், பெரும் தேர்வீரனான சேனஜித், விராடனின் மகனான சங்கன் மற்றும் {கிருஷ்ணனாகிய} நீ ஆகியோர் அடங்கிய கூட்டம் (யுதிஷ்டிரனால் கூட்டப்பட்டிருக்கும் இந்தக் கூட்டம்}, ஓ! கிருஷ்ணா, க்ஷத்திரியர்களிலேயே பெரிய கூட்டமாகும்.

பூமியின் மன்னர்கள் அனைவர் மத்தியிலும் கொண்டாடப்படும் இந்தச் சுடர்மிகும் நாடு ஏற்கனவே (யுதிஷ்டிரனால்) வெல்லப்பட்டுவிட்டது. {வரப்போகும் போரில் யுதிஷ்டிரனே நிச்சயம் வெல்வான்}.

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகனால் {துரியோதனனால்}, ஆயுதங்களாலான பெரும் வேள்வி {சஸ்திரயாகம்} கொண்டாடப்பட இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீயே அந்த வேள்விக்கு உபதரஷ்டிரியாகப் போகிறாய். ஓ! கிருஷ்ணா, அவ்வேள்வியில் உனது பணி அத்யர்யுவின் பணியாக இருக்கும். வானரக் கொடி கொண்டவனும், கவசம் தரித்தவனுமான பீபத்சு {அர்ஜுனன்} ஹோத்ரியாவான். {அர்ஜுனனின் வில்லான} காண்டீவம் வேள்விக் கரண்டியாக இருக்கும். வீரர்களின் வீரமே அதில் (எரிக்கப்படப்போகும்) தெளிந்த நெய்யாக {ஹவிஸாக} இருக்கும். ஐந்திரம், பாசுபதம், பிராம்மம், ஸ்தூணாகர்ணம் ஆகிய ஆயுதங்கள், ஓ! மாதவா {கிருஷ்ணா}, (அந்த வேள்வியில்) அர்ஜுனனால் மந்திரங்களாகப் பயன்படுத்தப்படும். தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} நிகரானவனோ, ஆற்றலில் அவனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  மேம்பட்டவனோ ஆன சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, {அவ்வேள்வியில்} உரைக்கப்படப்போகும் முக்கிய வேத மந்திரமாவான்.

யானைப் படைகளை அழிப்பவனும், போரில் கொடூரமாகக் கர்ஜிப்பவனும், மனிதர்களில் புலியும், அதீத பலமுடையவனுமான பீமன், இவ்வேள்வியில் உத்கத்ரியும், பிரஸ்தோத்ரியுமாவான். யபம் {ஜபம்} மற்றும் ஹோமத்தில் எப்போதும் ஈடுபடுபவனும், நல்லான்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரனே அவ்வேள்வியில் பிரம்மனாக இருப்பான். சங்குகள், முரசுகள், பேரிகைகள், {போர் வீரர்களின்} சிம்மகர்ஜனைகள் ஆகிய விண்ணை எட்டும் ஒலிகள், உண்ண அழைக்கும் அழைப்பொலிகளாக இருக்கும். மாத்ரியின் இருமகன்களும், பெரும் புகழ் மற்றும் வீரத்தைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும் வேள்வி விலங்குகளைக் கொல்பவர்களாக இருப்பார்கள். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பல்வேறு நிறங்களிலான கொடிக்கம்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேர்களின் வரிசை, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த வேள்வியில் (விலங்குகளைக் கட்டும்) கம்பங்களாக {யூபங்காக} இருக்கும்.

முட்கள் பொருந்திய கணைகள் {காணிகள்}, நாளீகங்கள், நீண்ட தடிகள் {நாராசங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} ஆகியன (சோமச் சாற்றைப் பகிர்ந்தளிக்கும்) கரண்டிகளாகச் செயல்படும் {உபப்ரம்மணங்கள், சமசாத்வர்யுக்களும் ஆகும்}. தோமரங்கள் சோமப் பாத்திரங்களாகும், விற்கள் பவித்திரங்களாகும். வாட்கள் கபாலங்களாகும், (கொல்லப்பட்ட வீரர்களின்} தலைகள் புரோடாசங்கள் ஆகும். ஓ! கிருஷ்ணா, இவ்வேள்வியில், வீரர்களின் குருதியே தெளிந்த நெய்யாகும் {ஹவிஸ் ஆகும்}.

வேல்களும் {சக்திகளும்}, பளபளக்கும் கதாயுதங்களும், (வேள்வி நெருப்பைத் தூண்டச் செய்யும்) தீக்கிளறிகளாகவும் {பரிதிகளாகவும்}, (விறகு கீழே விழாதிருக்கச் செய்யும்) முலைக்கம்புகளாகவும் {இதமங்களாகவும்} செயல்படும். துரோணர் மற்றும் சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரின் சீடர்கள் (உதவி செய்யும் புரோகிதர்களாக) சதஸ்யர்களாக இருப்பார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, (பிற) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், துரோணர், மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரால் அடிக்கப்படும் கணைகள் சோமத்தைப் பகிர்ந்தளிக்கும் கரண்டிகளாகச் செயல்படும்.

சாத்யகி அத்யர்யுவின் தலைமை உதவியாளனாகத் {பிரதிபிரஸ்தாதாவாகத்} தனது கடமைகளைச் செய்வான். இவ்வேள்வியில், திருதராஷ்டிரரின் மகனே {துரியோதனனே} அதைச் செய்பவனாக {தீக்ஷிதனாக} நிறுவப்படுவான். அவ்வேளையில் இந்தப் பரந்த படையே அவனது மனைவியாக {பத்தினியாக} இருக்கும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, வேள்வியின் இரவு நேரச் சடங்குகள் தொடங்கும்போது {அதிராத்திரத்தில்}, பெரும் பலமிக்கவனான கடோத்கசன், அதில் (அர்ப்பணிக்கப்படும்) பலிகளைக் கொல்பவனாவான் {சாமித்திரத்தைச் செய்வான்}. மந்திரங்களால் கொண்டாடப்படும் சடங்குகளின் வாயான வேள்வி நெருப்பில் இருந்து உயிருடன் உதித்தவனான பலமிக்கத் திருஷ்டத்யும்னன், ஓ! கிருஷ்ணா, அந்த வேள்வியின் கொடையாக {தக்ஷிணையாக} இருப்பான்.

ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} மனநிறைவுக்காக, பாண்டுவின் மகன்களிடம், தீய நடத்தையுடன் நடந்து கொண்டு, பேசிய கடுஞ்சொற்களுக்காக, குற்றவுணர்ச்சியால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனால் நான் கொல்லப்படுவதை நீ காணும்போது, இந்த வேள்வியின் புனசித்தி {வேள்வியின் பின் செய்யப்படும் சயனம்} ஆரம்பிக்கும்.

எப்போது பாண்டுவின் (இரண்டாம்) மகன் {பீமன்} உரத்து கர்ஜிப்பவனான துச்சாசனனின் குருதியைக் குடிப்பானோ, அப்போது இவ்வேள்வியின் சோமம் பருகும் நேரம் அமையும்.

எப்போது பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவரும் (திருஷ்டத்யும்னனும், சிகண்டியும்), துரோணரையும், பீஷ்மரையும் வீழ்த்துவார்களோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்போது இவ்வேள்வியின் இடைவேளை {அவசாநம்} உண்டாகும்.

எப்போது பலமிக்கப் பீமசேனன் துரியோதனனைக் கொல்வானோ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அப்போதே இவ்வேள்வி முடியும்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, எப்போது திருதராஷ்டிரரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் மனைவிமார், தங்கள் கணவர்களையும், மகன்களையும் இழந்து, பாதுகாவலர்கள் அற்றவர்களாக, நாய்களும், கழுகுகளும், ஊணுண்ணும் பறவைகளும் {சாகுருவிகளும்} மொய்க்கும் போர்க்களத்தில் ஒன்றாகக்கூடி காந்தாரிக்கு மத்தியில் அழுது புலம்புவார்களோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்போது இவ்வேள்வியின் இறுதி நீராடல் {அவபிருதம்} நடைபெறும்.

ஓ! க்ஷத்திரிய குலத்தின் காளையே {கிருஷ்ணா}, கல்வியாலும், வயதாலும் முதிர்ந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாக இழிவாக அழிவடைய வேண்டாம் என நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா} மூவுலகின் அனைத்து இடங்களிலும் மிகவும் புனிதமான குருக்ஷேத்திரம் என்ற இடத்தில், க்ஷத்திரியர்களின் இந்த விரிந்த கூட்டம், ஆயுதங்களின் மூலம் அழிவடையட்டும். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, உனது மனத்தில் இருப்பவற்றை இந்த இடத்தில் நீ சாதித்தால், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய குலம் முழுமையும் சொர்க்கத்தை அடையும்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மலைகளும், நதிகளும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் இந்தச் சாதனைகளின் புகழ் நீடிக்கும். பாரதர்களின் பெரும்போர் {மஹாபாரதப் போர் - The great war of Bharatas} என்று இதை அந்தணர்கள் உரைப்பார்கள். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, போர்களில் க்ஷத்திரியர்கள் அடையும் புகழ் என்ற செல்வமே அவர்களுக்குச் சொந்தமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, நமது இந்த உரையாடலை எப்போதும் கமுக்கமாக வைத்துக் கொண்டு, ஓ! கேசவா {கிருஷ்ணா}, போரில் குந்தி மகனை {அர்ஜுனனை} என் முன்னிலைக்கு அழைத்துவா" என்றான் {கர்ணன்}.