Tuesday, June 23, 2015

அமாவாசையில் போர் தொடங்கட்டும்! - உத்யோக பர்வம் பகுதி 142

The battle shall commence on new moon day! | Udyoga Parva - Section 142 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –71)

பதிவின் சுருக்கம் : கர்ணனிடம் கிருஷ்ணன், பாண்டவர்களின் வெற்றி உறுதி என்று சொல்வது; போருக்கான நாளை நிச்சயித்துக் கொண்ட கிருஷ்ணன், அமாவாசை அன்று போர் தொடங்கட்டும் என்று கௌரவர்களிடம் சொல்லுமாறு கர்ணனிடம் சொல்வது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தவாறே அவனிடம் {கர்ணனிடம்}, "ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பு உன்னிடம் தன்னைப் பரிந்துரைத்துக் கொள்ளவில்லையா? {ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பை மறுக்கிறாயா?} ஓ! கர்ணா, என்னால் கொடுக்கப்படும் முழுப் பூமியையும் நீ ஆள விரும்பவில்லையா? எனவே, {நீயே சொல்வதால்} பாண்டவர்களின் வெற்றி உறுதியே. இதில் எந்த ஐயமும் தோன்றவில்லை. கடும் குரங்கைக் கொடியாகக் கொண்டிருக்கும் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வெற்றிக் கொடி ஏற்கனவே நாட்டப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.


இந்திரனின் கொடியைப் போல உயர்ந்து நின்று காட்சியளிக்கும்படி, தெய்வீகக் கைவினைஞனான {தச்சனான} பௌமானன் {விஸ்வகர்மா} அதில் {அக்கொடியில்} தெய்வீக மாயையைப் பயன்படுத்தியிருக்கிறான். வெற்றியைக் குறிக்கும் வகையில் பயங்கர வடிவம் கொண்ட பல்வேறு தெய்வீக உயிரினங்கள் அந்தக் கொடிக்கம்பத்தில் காணப்படுகின்றன. மேல்நோக்கியும், சுற்றிலும் ஒரு யோஜனை அளவு பரந்திருக்கும் அர்ஜுனனின் அழகிய கொடிக்கம்பம், தீ போன்ற பிரகாசத்துடன் {தேரில்} நாட்டப்படுகையில், ஓ! கர்ணா, எப்போதும் அது மலைகளாலோ, மரங்களாலோ தடுக்கப்படுவதில்லை.

வெண்குதிரைகளால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனால் செலுத்தப்படும் தேரில் இருந்து கொண்டு ஐந்திரம், ஆக்னேயம், மருதம் ஆகிய ஆயுதங்களைப் போரில் அர்ஜுனன் பயன்படுத்துவதை எப்போது காண்பாயோ, இடியைப் போன்று விண்ணைத் துளைக்கும் காண்டீவத்தின் நாணொலியை எப்போது நீ கேட்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும் (ஆனால், அதற்குப் பதிலாக உடல் கொண்டு வரும் கலி அங்கிருக்கும்).

யபம் {ஜபம்}, ஹோமம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், வலிமைமிக்கத் தனது படையைத் தானே காப்பவரும், தனது எதிரியின் படையை எரிப்பவரும், ஒப்பற்றவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

மதம் கொண்ட கடும் யானையைப் போல, வலிமைமிக்கப் பெரும் எதிரியைக் கொன்றுவிட்டு, துச்சாசனனின் குருதியைக் குடித்து, ஆடிக் கொண்டிருக்கும் பீமசேனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

மோதலுக்காக மூர்க்கமாக விரைந்து எதிர்த்துவரும் துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர், மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, சிந்து குலத்தின் ஜயத்ரதன் ஆகியோரைத் தடுக்கும் அர்ஜுனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

பகையணித் தேர்களைத் துண்டுதுண்டாக உடைக்கவல்லவர்களும், வீரமிக்கத் தேர்வீரர்களுமான மாத்ரியின் இரு வலிமைமிக்க மகன்கள் {நகுலனும், சகாதேவனும்} மதம் கொண்ட இரு யானைகளைப் போல, திருதராஷ்டிரர் மகன்களின் படையைத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கலங்கடிப்பதை எப்போது நீ போரில் காண்பாயோ, அந்தக் கணமே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர் ஆகியோரிடம் நீ திரும்பிச் சென்றதும், ஓ! கர்ணா, "இந்த மாதம் இனிமையானது. உணவு, நீர் மற்றும் எரிபொருள் {விறகு} ஆகியன இப்போது அபரிமிதமாக இருக்கின்றன. செடிகள் மற்றும் மூலிகைகள் அனைத்தும் இப்போது செழிப்பாக இருக்கின்றன; அனைத்து மரங்களிலும் கனிகள் நிறைந்திருக்கின்றன; பூச்சிகளோ {ஈக்களோ} ஒன்றுமில்லை; சாலைகள் புழுதியற்று இருக்கின்றன; நீரும் இனிமையான சுவை கொண்டதாக இருக்கிறது; பருவநிலை அதிக வெப்பத்துடனோ, அதிகக் குளுமையுடனோ இல்லை. எனவே அதுவும் {பருவ நிலையும்} இனிமையாகவே இருக்கிறது.

{இன்றிலிருந்து} ஏழு நாள் கழித்து வருவது அமாவாசை நாளாகும். அப்போதே போர் ஆரம்பிக்கட்டும். அந்த நாளே இந்திரனின் தலைமை கொண்டதாகச் சொல்லப்படுகிறது" என்று சொல்வாயாக. போரிடுவதற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரிடமும், அவர்களால் பேணிக் காக்கப்படும் ஆசையை நான் முழுமையாகத் தீர்த்துவைப்பேன் என்றும் சொல்வாயாக. உண்மையில் துரியோதனனின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்களின் மூலம் மரணத்தை அடைந்து, அற்புத நிலையை நிச்சயம் அடைவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.