The omens and visions beheld by Karna! | Udyoga Parva - Section 143 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –72)
பதிவின் சுருக்கம் : கர்ணன் தான் கண்ட கனவுகளையும் சகுனங்களையும் கிருஷ்ணனிடம் சொன்னது; அவை பாண்டவர்களுக்கு வெற்றியையும், கௌரவர்களுக்கும் தோல்வியையும் முன்னறிவிப்பதாகச் சொன்னது; அந்தச் சூழலில் இருந்த கோள்களின் நிலைகளைக் கர்ணன் வர்ணிப்பது; அபசகுனங்களின் தோற்றங்களைத் தான் கண்டவாறே கர்ணன் உரைப்பது ...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த மங்கலகரமான, நன்மையான வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மதுசூதனனான கிருஷ்ணனை வழிபட்டு, "(அனைத்தையும்) அறிந்தும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ ஏன் என்னை இன்னும் ஏமாற்ற முயல்கிறாய்? தற்போது பூமி முழுமைக்கும் அழிவேற்படப்போகிறது. சகுனி, {கர்ணனாகிய} நான், துச்சாசனன், திருதராஷ்டிரர் மகனான மன்னன் துரியோதனன் ஆகியோர் அதற்கான காரணங்களாக இருப்போம்.
ஓ! கிருஷ்ணா, இரத்தப்புழுதியால் உலகை நனைக்கப் போவதாக, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் தற்போது நடக்க இருக்கும் போர் பெரியதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. துரியோதனனின் வழிநடத்தலைப் பின்தொடரும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்கள் எனும் நெருப்பால் எரிக்கப்பட்டு, யமனின் வசிப்பிடத்தை அடைவார்கள். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பல்வேறுவிதமான பயங்கரக் காட்சிகள் தெரிகின்றன. பல கொடூரமான அத்தாட்சிகளும், கடுமையான தொந்தரவுகளும் கூடக் காணப்படுகின்றன.
(பார்வையாளர்களின்) மயிரைச் சிலிர்க்கச் செய்யும் இந்தச் சகுனங்கள் அனைத்தும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தோல்வியையும், யுதிஷ்டிரனின் வெற்றியையுமே குறிக்கின்றன.
பெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. {கோள்கணியத்தின் படி இந்த அமைப்பு, மன்னர்களுக்குள் பெரும் போர் மூளும் என்பதை முன்னறிவிக்கும் அமைப்பாகும்
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. {ஆயுதம் தாங்குபவர்களுக்கு அழிவை உண்டாக்கும் அமைப்பு இது.}
ஓ! கிருஷ்ணா, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, மஹாபத் {செவ்வாய்} என்ற கோள் சித்திரை நட்சத்திரத்தைப் பீடிப்பதால், குறிப்பாகக் குருக்களைப் பயங்கரப் பேரிடர் அணுகுகிறது என்பதில் ஐயமில்லை. {மன்னர்களுக்கு பயத்தை உண்டாக்கும் அமைப்பு இது}.
சந்திர வட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
ராகுவும் சூரியனை அணுகுகிறான். {இந்த அமைப்பைக் கர்த்தரி யோகம் என்று குறிப்பிடுவார்கள். சூரிய குல, சந்திரகுல மன்னர்களின் அழிவை இது முன்னறிவிக்கிறது}.
வானில் இருந்து உரத்த ஒலியுடனும், நடுங்கும் அசைவுடனும் எரிகற்கள் விழுகின்றன.
யானைகள் பயங்கரமாக அலறுகின்றன, அதேவேளையில், ஓ! மாதவா {கிருஷ்ணா}, குதிரைகள், உணவிலோ, பானத்திலோ எந்த மகிழ்ச்சியும் கொள்ளாமல் கண்ணீரைச் சிந்துகின்றன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்த அத்தாட்சிகள் தோன்றும்போது, பெரும் படுகொலைகளை அது ஏற்படுத்தும் என்றும், பயங்கரப் பேரிடர் {நம்மை} அணுகும் என்றும் சொல்கிறார்கள்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, குதிரைகளிலும், யானைகளிலும், துரியோதனனின் படையில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் உள்ள படைவீரர்களிலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் உண்ணும் உணவு மிகச் சிறு அளவே இருப்பினும், அவர்கள் கழிக்கும் மலம் அதிகமாக இருக்கிறது. இது குறைபாட்டின் அறிகுறி என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
பாண்டவர்களின் யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், ஓ! கிருஷ்ணா, உற்சாகமாக இருக்கின்றன. பிற விலங்குகள் அனைத்தும் அவர்களை {பாண்டவர்களை} வலமாகச் சுற்றுகின்றன. இஃது அவர்களது வெற்றிக்கான அறிகுறியாகும். அதே விலங்கு, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனின் படையை இடது பக்கமாகக் கடக்கிறது. அதே வேளையில் (அவர்களின் தலைகளுக்கு மேலே} உருவமற்ற குரல்களும் கேட்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே.
மயில்கள், அன்னங்கள், நாரைகள், சாதகங்கள், ஜீவஜிவங்கள், வகங்களின் பெரிய கூட்டமும், மங்கலமான பறவைகள் அனைத்தும் பாண்டவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. அதே வேளையில், கழுகுகள், கங்கங்கள், பருந்துகள், ராட்சசர்கள், ஓநாய்கள், வண்டுகள் ஆகியன கூட்டம் கூட்டமாகக் கௌரவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் உள்ள பேரிகைகள் ஒலிகளை வெளியிடவில்லை. அதே வேளையில் பாண்டவர்களுக்கு உடையன {பேரிகைகள்} அடிக்கப்படாமலேயே ஒலியை வெளியிடுகின்றன. துரியோதனனின் முகாம்களுக்கு மத்தியில் இருக்கும் கிணறுகள் பெரும் காளைகளைப் போலப் பெரிய கர்ஜனைகளை வெளியிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.
ஓ! மாதவா, துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் இறைச்சியையும், குருதியையும் மழையாகப் பொழிகின்றனர். {துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் தசைமாரியும், உதிரமாரியும் பொழிகின்றனர்}. உயரமான சுவர்கள் {மதில்கள்}, ஆழமான அகழிகள், அழகான கட்டட முகப்புகள் ஆகியன (குருக்களின் முகாமுக்கு மேலே) திடீரென வானத்தில் தோன்றுகின்றன. சூரிய வட்டைச் சுற்றி ஒரு கருவளையம் தோன்றுகிறது. சூரிய எழுகை {சூரியோதயம்} மற்றும் சூரிய மறைவு {சூரியாஸ்தமனம்} ஆகிய சந்திப் பொழுதுகள் இரண்டும் பெரும் பயங்கரங்களைக் குறிக்கின்றன. கொடூரமான முறையில் குள்ளநரிகள் ஊளையிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.
ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் மட்டுமே கொண்ட பல்வேறு பறவைகள் பயங்கரமாகக் கதறுகின்றன. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். கருப்பு சிறகுகளும், சிவந்த கால்களும் கொண்ட கடுமை நிறைந்த பறவைகள் குருக்களின் முகாமுக்கு மேல் இரவு விழும் நேரங்களில் {மாலை நேரத்தில் இருட்டும் வேளையில்} பறக்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். துரியோதனனின் படை வீரர்கள் முதலில் அந்தணர்களிடம் வெறுப்பைக் காட்டுகிறார்கள், பிறகு தங்கள் ஆசான்களிடமும், பிறகும் தங்களிடம் பாசம் கொண்ட அனைத்து சேவகர்களிடமும் வெறுப்பைக் காட்டுகிறார்கள். (துரியோதனனின் முகாமில் இருந்து பார்க்கையில்), ஓ! மதுசூதனா {கிருஷ்ணா} அடிவானத்தின் கிழக்குத் திசை சிவப்பாகவும், தெற்கு ஆயுதங்களின் {கத்தியின்} நிறத்திலும், மேற்கு பூமியின் நிறத்திலும், {வடக்கு சங்கு போன்ற நிறத்திலும்} தோன்றுகின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா} துரியோதனனின் முகாமைச் சுற்றிலும் உள்ள திசைகள் பற்றி எரிவதைப் போலத் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் இந்த அனைத்து அத்தாட்சிகளும், பெரும் ஆபத்துக்கே அறிகுறியாகும்.
ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, ஆயிரம் தூண்கால் தாங்கப்படும் அரண்மனையில், யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் ஏறுவதைக் கனவினில் கண்டேன். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் வெண்கிரீடங்கள் {வெள்ளைத் தலைப்பாகைகள்} மற்றும் வெள்ளாடைகளுடன் தோன்றினர். அவர்கள் அனைவரும் வெள்ளை இருக்கையில் அமர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. அதே கனவின் மத்தியில் ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரத்தம் நிறம் பூசிய பூமியை ஆயுதங்களால் சூழ்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உன்னையும் நான் கண்டேன்.
அதே வேளையில், அளக்கமுடியா சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எலும்புகளின் குவியல் ஒன்றின் மீது ஏறி, தங்கக் கோப்பையில் நெய் பாயசத்தை உண்டு கொண்டிருந்தான். மேலும், நீ கொடுக்கும் பூமியை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனையும் நான் கண்டேன். அவன் {யுதிஷ்டிரன்} பூமியை ஆள்வது நிச்சயம் என்பதன் அறிகுறியே இஃது.
மனிதர்களில் புலியும், கடும் செயல்கள் புரிபவனுமான விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் பூமியை விழுங்கிவிடுபவன் போல மலை உச்சியில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். கடும்போரில் அவன் {பீமன்} எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவான் என்பதன் வெளிப்படையான அறிகுறியே இஃது. ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, நீதி எங்கிருக்கிறதோ அங்கேயே வெற்றி இருக்கும் என்பதை நான் அறிவேன்.
ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, காண்டீவந்தாங்கியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெள்ளையானையின் முதுகில் உன்னுடன் அமர்ந்து கொண்டு பெரும் அழகுடன் பிரகாசிப்பதை நான் கண்டேன். ஓ! கிருஷ்ணா, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும் போரில் அவன் {அர்ஜுனன்} கொல்வான் என்பதில் எனக்கு ஐயமில்லை.
வெள்ளை தோள்வளையங்கள், வெள்ளை மார்புக் கவசங்கள் [1], வெண்மாலைகள், வெள்ளாடைகள் ஆகியவற்றில் அலங்கரிக்கப்பட்டிருக்கும், நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் பலமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நான் கண்டேன். மனிதர்களில் புலிகளான அவர்கள் மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் அற்புத வாகனங்களில் {பல்லக்குகளில்} அமர்ந்திருந்தனர். அந்த மூவரின் தலை மேலும் குடைகள் பிடிக்கப்பட்டிருப்பபதையும் நான் கண்டேன்.
[1] மூலத்தில் இது "கண்டதரா" என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. அது "கண்டபூரகம்" என்ற பெயருடையது என்றும், தலை முதல் தோள்வரையில் தொங்கும்படி போர்வீரர்கள் அதை அணிந்து கொள்வார்கள் என்றும், அது கழுத்தை மறைக்கும் என்றும் சொல்கிறார்கள். கழுத்தைப் பாதுகாக்கும் வகையில் மார்பில் அணியப்படும் ஒரு கவசமாகவும் இஃது இருக்கலாம்.
திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படைவீரர்களுக்கு மத்தியில் மூவர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, வெண்கிரீடங்களுடன் {வெள்ளை தலைக்கவசம் அல்லது தலைப்பாகையாக} இருந்ததை நான் கண்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்த மூவர் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சத்வத குலத்தில் கிருதவர்மன் என்பதை அறிந்து கொள்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா}, பிற மன்னர்கள் அனைவரும் இரத்தச் சிவப்பான கிரீடங்களை {தலைப்பாகைகளை} அணிந்திருந்தனர்.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பலமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர், துரோணர் ஆகியோர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} ஒட்டகங்களாலும், என்னாலும், திருதராஷ்டிரர் மகனாலும் {துரியோதனனாலும்} இழுக்கப்பட்டு, வாகனத்தில் ஏறி அகஸ்தியரால் ஆளப்படும் திசைக்குப் போவதைக் கண்டேன். நாங்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்திற்கு விரைவில் செல்வோம் என்பதன் அறிகுறியே இஃது. நானும் மற்ற பிற மன்னர்களும், உண்மையில் கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் காண்டீவ நெருப்புக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை" என்றான் {கர்ணன்}.
கிருஷ்ணன் {கர்ணனிடம்}, "எனது வார்த்தைகள் உனது இதயத்துக்கு ஏற்பில்லாமல் போகும் போது, உலகத்தின் அழிவு சமீபத்தில் இருக்கிறது என்பது உண்மையே. ஓ! ஐயா, அனைத்து உயிரினங்களின் அழிவும் வரும்போது, சரியானதைப் போன்று தெரியும் தவறு உனது இதயத்தை விட்டு அகலாது" என்றான் {கிருஷ்ணன்}.
கர்ணன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, வீர க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவைத் தரும் இந்தப் பெரும் போரில் இருந்து நாம் உயிருடன் வெளிவந்தால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நாம் மீண்டும் இங்கே சந்திப்போம். இல்லையெனில், ஓ! கிருஷ்ணா, நாம் நிச்சயம் சொர்க்கத்தில் சந்திக்கலாம். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, அங்கேதான் {சொர்க்ககத்தில் தான்} நாம் சந்திப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது" என்றான் {கர்ணன்}."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "இவ்வார்த்தைகளைப் பேசிய கர்ணன், மாதவனைத் {கிருஷ்ணனை} தனது மார்போடு தழுவி கொண்டான். பிறகு கேசவனால் {கிருஷ்ணனால்} விடைகொடுக்கப்பட்ட அவன் தேரில் இருந்து இறங்கினான். பெரிதும் மனம் தளர்ந்த கர்ணன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது தேரில் நம்மை மீண்டும் வந்தடைந்தான்" என்றான்."
உத்யோக பர்வம் பகுதி 140 முதல் இந்தப் பகுதியான பகுதி 143 வரை சஞ்சயன், திருதராஷ்டிரனுக்கு, கர்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் குறித்துப் பேசுகிறான். கிருஷ்ணன் தூது வந்து உபப்லாவ்யம் திரும்பும் இந்த சமயத்தில் சஞ்சயனுக்கு ஞானப்பார்வையெல்லாம் கிடையாது. பிறகு எப்படி தான் கண்டது போலவே அவ்வுரையாடலைச் சொல்லமுடியும்? அப்படியே சொல்லியிருந்தாலும், கர்ணனும் பாண்டவன்தான் என்பதைத் துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரன் மூலம் அறிந்திருக்க மாட்டானா?
இந்தப் பகுதியானது ஆதிபர்வத்தின் தொடக்கத்தில் சூதரான சௌதி
நைமிசாரண்யத்தில் கூடியிருக்கும் ”முனிவர்களிடத்தில் மகாபாரதம் சொல்லவா?” என்னும் பகுதியில் {ஆதிபர்வத்தில் பகுதி 1ஆ வில்} திருதராஷ்டிரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலை முன் கூட்டியே எடுத்துரைப்பது போன்ற ஒரு பகுதியாக எடுத்துக் கொள்வோம்.
ஆதிபர்வத்தில் பகுதி 1ஆ - வில் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்லும் தொடர்ச்சியே இந்த உத்யோக பர்வ பகுதிகளில் {140 முதல் 143 வரை} வருகின்றன என நான் நினைக்கிறேன். போரெல்லாம் முடிந்த பிறகு திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் பேசுவது போல அமைந்திருக்கும் அந்த ஆதிபர்வப் பகுதி. அது போலவே இந்த உத்யோக பர்வ பகுதிகளும் {140 முதல் 143 வரை} போருக்குப் பின் வருவன என நான் நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------