The great defect of Aswatthaman! | Udyoga Parva - Section 168 | Mahabharata In Tamil
(ரதாதிரதசங்கியான பர்வம் – 3)
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தாய்மாமன் சகுனி, துரோணரின் மகன் அஸ்வத்தாமன், க்ஷத்திரியர்கள் அனைவரின் ஆசான் துரோணர், பிருஹத்பலன், கர்ணனின் மகன் விருஷசேனன், ஜலசந்தன், பாஹ்லீகர், சத்யவான், ராட்சசத் தலைவன் அலம்புசன், பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன் பகதத்தன் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்தும், அவரவரின் தன்மைகள் குறித்தும் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, இந்த உனது தாய்மாமன் சகுனி, ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். அவன் {சகுனி}, பாண்டுவின் மகன்களிடம் (தற்போதைய) பகைமைகளுடன் (அதை வெடிக்கச் செய்யும் வகையில்) போரிடுவான். இதில் ஐயமில்லை. போருக்கு விரையும் அவனது {சகுனியின்} துருப்புகள் தடுக்கமுடியாதனவாகும். பல்வேறு விதமான ஆயுதங்களை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் அவை {அந்தத் துருப்புகள்}, வேகத்தில் காற்றுக்கு இணையானவை ஆகும்.
வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), வில்லாளிகள் அனைவரையும் விஞ்சியிருக்கிறான். போர்முறைகள் அனைத்தையும், கலங்கடிக்கமுடியாத ஆயுதங்களையும் அறிந்து வைத்திருக்கும் இவன் ஒரு மகாரதனாவான். காண்டீவதாரியை {அர்ஜுனனைப்} போன்றே, இந்த வீரனின் வில்லில் இருந்து அடிக்கப்படும் இவனது {அஸ்வத்தாமனின்} கணைகள், ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு தொடர்ந்து நேர்கோட்டில் சரமாகச் செல்லும். இந்த மகாரதன் {அஸ்வத்தாமன்} விரும்பினால், மூன்று உலகங்களையும் அழித்துவிடுவான். தனது ஆசிரமத்தில் தவத்தில் ஈடுபட்ட இவன் {அஸ்வத்தாமன்}, தனது கடுமையையும், ஆற்றலையும் அதிகரித்திருக்கிறான். பெரும் புத்திக்கூர்மை கொண்ட இவன் {அஸ்வத்தாமன்}, (பரிசாக அளிக்கப்பட்ட அனைத்து) தெய்வீக ஆயுதங்களின் மூலம் துரோணரின் ஆதரவைப் பெற்றிருக்கிறான்.
எனினும், இவனை {அஸ்வத்தாமனை} ரதன் என்றோ, மகாரதன் என்றோ நான் கருதாதபடிக்கு, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இவனிடம் ஒரு பெரும் குறை இருக்கிறது. வாழ்க்கையை மிகவும் விரும்புவதால், இந்த மறுபிறப்பாள மனிதன் {வேதியனான அஸ்வத்தாமன்} வாழ்க்கையை {உயிர் வாழ} {ஆயுளை} மிகவும் விரும்புகிறவனாக இருக்கிறான். இரு படை வீரர்களுக்கு மத்தியிலும், இவனுக்கு ஈடாகக் கருதுவதற்கு ஒருவனும் இல்லை. தனித்தேரில் இருந்தாலும், இவன், தேவர்களின் படையையே நிர்மூலமாக்கவல்லவனாவான். பலம்வாய்ந்த உடற்கட்டுக் கொண்ட இவன், தனது வில் நாணை {வலது கரத்தால் இழுத்து} தனது இடது கரத்தின் கையுறையில் அடித்து {அதனால் உண்டாகும் ஒலியால்} மலைகளையே பிளந்துவிட வல்லவனாவான்.
எண்ணிலடங்கா பண்புகளைக் கொண்டவனும், பயங்கரப் பிராகாசத்தைக் கொண்டவனும், {எதிரிகளை} அடிப்பவனுமான இவன் {அஸ்வத்தாமன்}, கையில் கதாயுதம் தரித்து, யமனாலும் தாங்க முடியாத படி (போர்க்களத்தில்) உலவுவான். யுகமுடிவின் போது ஏற்படும் நெருப்பைப் போன்ற கோபமும், சிங்கம் போன்ற பிடரியும், பெரும் காந்தியும் கொண்ட இந்த அஸ்வத்தாமன், பாரதர்களுக்கு இடையிலான இந்தப் போரில் உள்ள நீரு பூத்த நெருப்பை அணைப்பான். {யுத்தத்தின் மிச்சத்தை முடிப்பான்}.
வயதானாலும், பெரும் சக்தியுடன் இருக்கும் இவனி்ன் {அஸ்வத்தாமனின்} தந்தை (துரோணர்), இன்னும் கூடப் பல இளைஞர்களை விட மேன்மையானவராகவே இருக்கிறார். போரில் அவர் பெருஞ்செயல்களைச் சாதிப்பார். இதில் எனக்கு ஐயமில்லை. (போர்க்களத்தில்) அசையாமல் இருக்கும் அவர் {துரோணர்}, யுதிஷ்டிரனின் துருப்புகளை எரிப்பார்.
நெருப்பு உற்பத்தியாகும் உலர்ந்த புல் மற்றும் விறகின் பங்கைப் பாண்டவப் படை ஆற்றுகையில், இவரது {துரோணருடைய} ஆயுதங்களின் செயலூக்கம் காற்றாக வீசி அதில் (வலிமைமிக்கப் பெரிய) நெருப்பை உண்டாக்கி விடும். மனிதர்களில் காளையான இவர் {துரோணர்}, தேர்வீரர்கள் கூட்டத்தின் தலைவராவார். இந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} உனது நன்மைக்காகக் கடுஞ்செயல்களைச் சாதிப்பார். அரசபரம்பரையில் வந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் குருவான இந்த மரியாதைக்குரிய ஆசான் {துரோணர்}, சிருஞ்சயர்களை {பாஞ்சாலர்களை} நிர்மூலமாக்குவார்.
எனினும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவரது அன்புக்குரியவனாவான். எனவே, தன்னால் கொண்டாடப்படுவதும், தனக்கு உயர்ந்த தகுதியைத் தருவதுமான ஆசிரியச் சேவையை நினைவு கூரும் இந்த வலிமைமிக்க வில்லாளி {துரோணர்}, எந்தத் தொல்லையுமில்லாமல் பெரும் செயல்களைச் சாதிக்கவல்ல பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்ல இயலாதவராக இருக்கிறார். ஓ! வீரா {துரியோதனா}, பார்த்தனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா சாதனைகளுக்காகத் துரோணர் எப்போதும் தற்பெருமை கொள்கிறார். உண்மையில் இந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனது மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} தான் கொண்டுள்ளதைவிட அதிகப் பாசத்துடன் அவனை {அர்ஜுனனைக்} காண்கிறார்.
பெரும் ஆற்றலையுடைய இவர் {துரோணர்}, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்தாலும், தனித்தேரில் நின்று, தனது தெய்வீக ஆயுதங்களின் மூலம் போரில் அவர்களைத் தோற்கடிப்பார். மன்னர்களில் புலியான அவர் {துரோணர்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உனது மகாரதர்களில் ஒருவராவார். பகையணி வீரர்களின் தேர்ப்படையை உடைக்கவல்ல இவர் {துரோணர்}, எனது கருத்தின் படி, உனது தேர்வீரர்களில் முதன்மையானவர்களில் ஒருவராவார். தனது சொந்தப் படையின் தலைமையில் நின்று, எதிரியின் படையணிகளைத் துன்புறுத்தும் இவர் {துரோணர்}, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரித்துவிடுவார்.
உண்மையான புகழைக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் அவன் {பிருஹத்பலன்} மரணத்தைப் போலவே உலவுவான். ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, பல்வேறுவிதமான கவசங்களையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் தரித்திருக்கும் இவனது {பிருஹத்பலனின்} துருப்புகள், தங்களை எதிர்க்கும் வீரர்கள் அனைவரையும் கொன்றபடி போர்க்களத்தில் உலவிக்கொண்டிருக்கும்.
கர்ணனின் மகனான விருஷசேனன் முதன்மையான உனது தேர்வீரர்களில் ஒருவனும், மகாரதனுமாவான். வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் {விருஷசேனன்}, உனது எதிரியின் துருப்புகளை எரித்துவிடுவான்.
பெரும் சக்தியை உடைய ஜலசந்தன், ஓ! மன்னா {துரியோதனா}, முதன்மையான உனது ரதர்களில் ஒருவனாவான். மது குலத்தில் பிறந்தவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான இவன் {ஜலசந்தன்}, போரில் தனது உயிரைவிடத் தயாராக இருக்கிறான். போரில் திறம்பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான இந்த வீரன் {ஜலசந்தன்}, தனக்கு எதிரே உள்ள எதிரியின் படையணிகளைச் சிதறடித்து, தேரில் இருந்தோ, யானையின் முதுகில் இருந்தோ போரிடுவான். இந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜலசந்தன்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது கருத்தின் படி ஒரு ரதனாவான். கடும் போரில், இவன் {ஜலசந்தன்}, தனது துருப்புகள் அனைத்துடனும் கூடி உன் நிமித்தமாகத் தனது உயிரையே விடச் சித்தமாக இருக்கிறான். பெரும் ஆற்றலைக் கொண்டும், அனைத்து போர்முறைகளை அறிந்தும் இருக்கும் இவன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் உனது எதிரிகளுடன் அச்சமற்றுப் போரிடுவான்.
எப்போதும் போரில் புறமுதுகிடாதவரும், வீரரும், யமனைப் போன்றவருமான பாஹ்லீகர், ஓ! மன்னா {துரியோதனா}, எனது கருத்தின்படி, ஓர் அதிரதராவார். மோதலுக்கு விரையும் அவர் எப்போதும் திரும்புவதில்லை. உண்மையில், வாயுத் தேவனைப் போல அவர் {பாஹ்லீகர்} பகைவீரர்களைக் கொல்வார்.
பகையணியின் தேர்ப்படையை நிர்மூலமாக்குபவனும், போரில் அற்புதச் செயல்களைச் செய்யும் தேர்வீரனும், உனது படைகளின் தளபதியுமான சத்யவான், ஓ! மன்னா {துரியோதனா}, ஒரு மகாரதனாவான். போரை நோக்கமாகக் கொண்ட இவன் {சத்யவான்}, எப்போதும் துயரடைவதே இல்லை. தனது தேரின் குறுக்கே வரும் வீரர்களைக் குழப்பி அவர்கள் மீது இவன் விழுவான். பகைவர்களின் மீது எப்போதும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மனிதர்களில் சிறந்தவன் {சத்யவான்}, ஒரு நல்ல க்ஷத்திரியன் அடையத்தக்க அனைத்தையும் உனக்காகச் சாதிப்பான்.
கொடுஞ்செயல்கள் புரிபவனான ராட்சசர்கள் தலைவன் அலம்புசன் ஒரு மகாரதனாவான். (பாண்டவர்களுடனான) தனது பகைமைகளை நினைவு கூரும் அவன், எதிரிக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்துவான். ராட்சச வீரர்கள் அனைவரிலும் இவனே ரதர்களில் சிறந்தவனாவான். மாய சக்திகளைக் கொண்டவனும், பகைமையில் உறுதியுடன் இருப்பவனுமான இவன் {அலம்புசன்} போர்க்களத்தில் கடுமையுடன் உலவுவான்.
பிராக்ஜோதிஷ {நாட்டின்} ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான பகதத்தன், யானையின் அங்குசம் ஏந்தியவர்களில் முதன்மையானவனும், தேரில் இருந்து போரிடுவதில் திறம்பெற்றவனும் ஆவான். இவனுக்கும் {பகதத்தனுக்கும்}, காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நெடுநாட்கள் போர் நடந்தது. ஒருவரை வெல்ல மற்றொருவர் விரும்பினர். பிறகு, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, இந்திரனைத் தனது நண்பனாகக் கருதிய பகதத்தன், (இந்திரனின் மகனான) அந்த உயர் ஆன்ம பாண்டவனிடம் {அர்ஜுனனிடம்} நட்பு கொண்டான். யானையின் கழுத்தில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற இந்த மன்னன் {பகதத்தன்}, தேவர்களுக்கு மத்தியில் ஐராவதத்தில் இருந்து போரிடும் வாசவனைப் {இந்திரனைப்} போலப் போர்க்களத்தில் போரிடுவான்" என்றார் {பீஷ்மர்}.