Friday, July 17, 2015

"இந்தக் கிழவனைக் கைவிடு!" என்ற கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 169

"Abandon this superannuated man!" said Karna! | Udyoga Parva - Section 169 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கர்ணனை இகழ்ந்து கூறுவது; கர்ணன் பாதி ரதனே என்று பீஷ்மர் சொல்வது; கர்ணன் பீஷ்மரை நிந்திப்பது; பீஷ்மரைக் கைவிடும்படி கர்ணன் துரியோதனனிடம் சொல்வது; பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை தான் போரிடுவத்தில்லை என்று கர்ணன் சொல்வது; பீஷ்மர் மீண்டும் கர்ணனை நிந்திப்பது; பீஷ்மரைச் சமாதானப்படுத்திய துரியோதனன், பாண்டவப் படையின் பலம் மற்றும் பலவீனங்களைச் சொல்லுமாறு கேட்டது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "அசலன், விருஷன் {விருஷகன்} ஆகிய இரு சகோதரர்களும் ரதர்கள் ஆவர். (போரில்) வெல்லப்பட முடியாதவர்களான அவர்கள் உனது எதிரிகளைக் கொல்வார்கள். பெரும் பலம் கொண்டோரான அந்த மனிதர்களில் புலிகள், அந்தக் கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், கோபத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இளமையும் அழகும் பொருந்திய அவர்கள் பெரும் பலத்தை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

எப்போதும் உனக்கு அன்பு நண்பனாய் இருப்பவனும், போரில் தனது திறன் குறித்து எப்போதும் தற்புகழ்ச்சி பேசுபவனும், எப்போதும் உன்னைத் தூண்டி விடுபவனும், ஓ! மன்னா {துரியோதனா}, கேவலமாகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனும், சூரியனின் மகனுமான இந்தக் கர்ணன்; உனது ஆலோசகனும், வழிகாட்டியும், நண்பனும், மதிகெட்ட வீணனுமான இந்தக் கர்ணன் ரதனோ, அதிரதனோ கிடையாது.


அறிவுகெட்ட இவன் {கர்ணன்}, தனது இயற்கைக் கவசத்தை இழந்தான். எப்போதும் அன்பாக இருக்கும் இவன், தனது தெய்வீகக் காது குண்டலங்களையும் இழந்தான். (ஆயுதங்களில் {ஆயுதப் பயிற்சியில்} தனது ஆசானான) ராமரின் {பரசுராமரின்} சாபத்தின் விளைவாகவும், (மற்றொரு சந்தர்ப்பத்தில் இவனைச் சபித்த) அந்தணருடைய வார்த்தைகளின் விளைவாகவும், போருக்கான தனது துணைப்பொருட்களை {போர்வீரனின் ஆயுதம், உடை தவிர்த்த மற்ற துணைச் சாதனங்களை} இழந்ததன் விளைவாகவும், எனது மதிப்பீட்டின் படி இவன் {இந்தக் கர்ணன்} பாதி ரதனே {அர்த்த ரதனே} ஆவான். (போரில்) பல்குனனை {அர்ஜுனனை} அணுகினால், நிச்சயம் இவன் {கர்ணன்} உயிரோடு தப்பமாட்டான்" என்றார் {பீஷ்மர்}.


இதைக் கேட்டவரும், ஆயுதங்கள் தரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர் {பீஷ்மரிடம்}, "நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது. அது பொய்யில்லை. இவன் {கர்ணன்} ஒவ்வொரு போரின் ஆரம்பத்திலும் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறான்; எனினும், ஒவ்வொரு செயலிலிருந்தும் இவன் பின்வாங்குவதையே {நம்மால்} பார்க்க முடிகிறது. (பருவம் கடந்து) அன்பாகவும், மூடத்தனமாகவும் இவன் இருக்கும் காரணத்தால் என் மதிப்பீட்டின் படி, கர்ணன் பாதி ரதனே {அர்த்த ரதனே}" என்றார் {துரோணர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் தனது விழிகளை விரித்து, கூரிய முட்கள் போன்ற வார்த்தைகளால் பீஷ்மரைத் துன்பறுத்தினான். அவன் {கர்ணன்} கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நான் அப்பாவியாக இருப்பினும் என் மீது நீர் கொண்ட வெறுப்பின் காரணமாகவும், உமது விருப்பத்தின்படியும், வார்த்தைக் கணைகளால் அடிக்கடி இப்படி என்னைச் சிதைக்கிறீர். எனினும், இவையாவையும் நான் துரியோதனனுக்காகவே பொறுக்கிறேன். என்னை வெறும் பாதி ரதனாகக் குறிப்பிடும் நீர், ஏதோ நான் கோழையாக இருந்ததைப் போல மதிப்பற்றவனாக என்னைக் கருதுகிறீர்.

நான் சொல்வதில் ஐயமென்ன? ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இந்த அண்டம் முழுமைக்கும், அதிலும் குறிப்பாகக் குருக்கள் அனைவருக்கும் நீர் ஓர் எதிரி எனச் சொல்வதில் நான் பொய்யுரைக்கவில்லை. எனினும், மன்னன் {துரியோதனன்} இதை அறியவில்லை. சமமான வீரம் கொண்டு, சமமானவர்களாக இருக்கும் இந்த மன்னர்களின் ஆற்றலைக் குறைக்கவும், இவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தவும், {இவர்களின்} சிறப்புகளில் வெறுப்பைக் கொண்டுள்ள நீர் முயல்வது போல வேறு எவன் முயல்வான்?

ஓ! கௌரவரே {பீஷ்மரே}, வயதோ, {தோல்} சுருக்கங்களோ, செல்வமோ, நண்பர்களைக் கொண்டிருப்பதோ, ஒரு க்ஷத்திரியன் மகாரதன் ஆவதற்குப் போதிய தகுதியாக அமையாது. மந்திரங்களின் மேன்மையால் அந்தணர்களும், செல்வத்தால் வைசியர்களும், வயதால் சூத்திரர்களும் அடையும் முக்கியத்துவத்தைப் {மேன்மையைப்} போல, ஒரு க்ஷத்திரியன் தனது பலத்தால் முக்கியத்துவத்தை {மேன்மையை} அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஆசை, பொறாமை, அறியாமையுடன் செயல்படுவது ஆகியவற்றின் தாக்கத்தால், உமது சொந்த சபலத்தின் படி {உம்மிஷ்டப்படி}, ரதர்கள் மற்றும் அதிரதர்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்.

நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, முறையாக மதிப்பிடுவாயாக! உனக்கு அநியாயத்தை மட்டுமே செய்பவரான இந்தத் தீய பீஷ்மர் உன்னால் கைவிடப்படட்டும். ஒருமுறை பிரிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, உனது முக்கியப் படையை {வேண்டுமானால்} இத்தகு சந்தர்ப்பங்களில், பெரும் சிரமத்தோடு ஒருங்கிணைத்து விடலாம்; ஆனால் பல்வேறு மாகாணங்களில் {நாடுகளில்} இருந்து கூடியிருக்கும் ஒரு படையை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, உனது வீரர்களின் இதயங்களில் (வெற்றி குறித்த) சந்தேகம் ஏற்கனவே முளைத்துவிட்டது. இந்தப் பீஷ்மர், நம் முன்னிலையிலேயே நமது சக்தியை பலவீனமாக்குகிறார். ரதர்களின் தகுதியை உறுதி செய்யும் பணி எங்கே? சிறுமதி படைத்த இந்தப் பீஷ்மர் எங்கே?

பாண்டவர்களின் படையை நான் மட்டுமே தாக்குப்பிடிப்பேன். குறி தப்பாத கணைகளைக் கொண்ட என்னிடம் நெருங்கும் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், புலியிடம் நெருங்கிய எருதுகளைப் போல நாலா பக்கமும் சிதறி ஓடுவார்கள். ஓ..!, போரும், ஆயுதம் தாங்கிய மோதலில் எதிர்ப்பும், நல்ல ஆலோசனைகளும், நன்கு வெளிப்படுத்தப்படும் வார்த்தைகளும் எங்கே? கிழவரும், தீய ஆன்மா கொண்டவரும், விதிக்குப் பலியாவதற்கு அவ்விதியாலேயே தூண்டப்பட்டவருமான பீஷ்மர் எங்கே? இவர் தனியராக முழு அண்டத்திற்கும் சவால்விடுகிறார். தவறான பார்வை கொண்ட இவர் {பீஷ்மர்}, வேறு எவனையும் ஆண்மையுள்ளவனாகக் கருதவில்லை.

முதிர்ந்தவர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் கற்பிப்பது உண்மையே. எனினும், அது மிக முதிர்ந்தவர்களைக் குறிக்காது; ஏனெனில், அவர்கள் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். தனியனாக, பாண்டவர்களின் படையை நான் நிர்மூலமாக்குவேன். எனினும், அத்தகு சாதனையின் புகழ் பீஷ்மரையே அடையும். ஏனெனில், ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, இந்தப் பீஷ்மரைத் தானே நீ உனது படைகளின் தலைவராக நியமித்திருக்கிறாய். புகழ் எப்போதும் தலைவர்களையே சாரும்; அவருக்குக் கீழ் போரிடுபவரை அது சார்வதில்லை. எனவே, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} உயிரோடு இருக்கும் வரை நான் போரிடமாட்டேன். ஆயினும், இந்தப் பீஷ்மர் கீழே கிடத்தப்பட்ட பிறகு, ஒன்றிணைந்து வரும் எதிரியின் மகாரதர்கள் அனைவரிடமும் நான் போரிடுவேன்" என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, "(பாண்டவர்களுடன்) துரியோதனனின் போர் குறித்த காரியத்தில், பரந்த கடலைப் போன்ற இந்தச் சுமையை நான் ஏற்கப்போகிறேன். இதைப் பல வருடங்களாக நான் நினைத்து வந்தேன். அந்தப் பயங்கர மோதலுக்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. என்னால் நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது. இதன் காரணமாகவே, சூதனின் மகனே {கர்ணா}, நீ வாழ்கிறாய். இல்லையென்றால், கிழவனாக நான் இருந்தாலும், வயதால் இளையவனாகவே நீ இருந்தாலும், போருக்கான உனது விருப்பத்தை அடக்கி, உயிரின் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை நான் நசுக்கியிருப்பேன்.

(உனது ஆசானான) ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, தனது பெரும் ஆயுதங்களை அடித்த போது, சிறு வலியைக் கூட அவற்றால் என்னிடம் ஏற்படுத்த முடியவில்லை. எனவே {அப்படியிருக்கும்போது}, உன்னால் எனக்கு என்ன செய்துவிட முடியும்? நல்லோர் எவரும், தற்புகழ்ச்சியை அங்கீகரிப்பதில்லை. உனது குலத்தில் புகழற்ற இழிந்தவனே {கர்ணா}, சினமுற்று இருப்பதாலேயே நான் {பின்வரும்} இந்தச் சிறு தற்புகழ்ச்சியைச் செய்கிறேன் என்று அறிவாயாக. *காசியின் ஆட்சியாளனுடைய மகள்களின் சுயம்வரத்தின் போது, தனித்தேரில் சென்று, அங்குக் கூடியிருந்த உலகக்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தி, அந்த மங்கையரைக் கடத்தினேன். போர்க்களத்தில் எண்ணிலடங்கா மன்னர்களும், அவர்களது வீரர்கள் விரைந்து வருகையில், தனியனாகவே நான் அவர்களைத் தடுத்தேன். கலவரத்தின் உருவமான உன்னை அடைந்ததாலேயே, குருக்களைத் தாக்க இந்தப் பேரிடர் தயாராக இருக்கிறது. நமது எதிரிகளைக் கொல்ல முயற்சி செய்வாயாக. நீ எப்போதும் சவால்விடுவாயே, அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} ஆண்மையோடு போரிடுவாயாக. ஓ! தீய புரிதல் கொண்டவனே {கெட்டபுத்தி உடையவனே}, அந்த மோதலில் இருந்து உயிருடன் நீ வெளி வருவதைக் காண நான் விரும்புகிறேன்!" என்றார் {பீஷ்மர்}.

பிறகு மன்னன் துரியோதனன், பெரும் ஆற்றல் கொண்ட பீஷ்மரிடம், "ஓ !கங்கையின் மைந்தரே, என் மீது உமது கண்களைச் செலுத்தும். கையருகில் நெருங்கி வரும் காரியம் பெரியது! நான் அதிகப் பயனடைவது எப்படி என்று ஊக்கத்துடன் சிந்திப்பீராக. நீங்கள் இருவரும் எனக்கும் பெரும் சேவையைச் செய்வீர்கள்! எதிரியிடம் உள்ள தேர்வீரர்களில் சிறந்தவர்களையும், அவர்களில் அதிரதர்களையும், தேர்ப்பிரிவின் தலைவர்களையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! கௌரவரே {பீஷ்மரே}, இந்த இரவு விடியும்போது நமது பெரும்போர் நடைபெறும் என்பதால், எனது எதிரிகளின் பலம் மற்றும் பலவீனங்களையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.

 *காசியின் ஆட்சியாளனுடைய மகள்களின் சுயம்வரத்தின் போது,