"Abhimanyu is an atirata" said Bhishma! | Udyoga Parva - Section 171 | Mahabharata In Tamil
(ரதாதிரதசங்கியான பர்வம் – 6)
பதிவின் சுருக்கம் : திரௌபதியின் ஐந்து மகன்கள், அபிமன்யு, சாத்யகி, உத்தமௌஜஸ், யுதாமன்யு, விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "திரௌபதியின் ஐந்து மகன்களும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மகாரதர்கள் ஆவார்கள். விராடனின் மகனான உத்தரன், எனது மதிப்பீட்டின்படி முதன்மையான ரதர்களில் ஒருவனாவான்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் ஒருவனாவான் {ஓர் அதிரதனாவான்}. ஆயுதங்களை அடிப்பதில் பெரும் கைவேகம் கொண்டவனும், போர்முறைகள் அத்தனையும் அறிந்தவனுமான அவன் {அபிமன்யு}, பெரும் சக்தி கொண்டவனும், நோன்புகள் நோற்பதில் உறுதியுள்ளவனும் ஆவான். தன் தந்தையின் {அர்ஜுனனின்} பாடுகளை நினைவுகூரும் அவன் தனது ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துவான்.
மது குலத்தின் துணிச்சல்மிக்கச் சாத்யகி, தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் ஒருவனாவான் {ஓர் அதிரதனாவான்}. விருஷ்ணி குலத்தின் வீரர்களுக்கு மத்தியில் முதன்மையானவனான அவன் {சாத்யகி}, பெரும் கோபமுடையவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாவான்.
ஓ! மன்னா {துரியோதனா}, உத்தமௌஜசும் ஓர் அற்புதத் தேர்வீரன் {ரதன்} என்பது என் மதிப்பீடு.
பெரும் ஆற்றல் கொண்ட யுதாமன்யுவும் எனது மதிப்பீட்டின்படி ஓர் அற்புதத் தேர்வீரனாவான் {ரதனாவான்}.
அந்தத் தலைவர்கள் அனைவரும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பல்லாயிரக்கணக்கில் கொண்டுள்ளனர். மேலும் குந்தியின் மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பும் அவர்கள், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போரிடுவார்கள். பாண்டவர்களோடு இணைந்த அவர்கள், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, நெருப்பு அல்லது காற்றைப் போல உனது போர்வீரர்களைச் சவாலுக்கழைத்து உனது படையணிகளை ஊடுருவிச் செல்வார்கள்.
போரில் வெல்லப்பட முடியாதவர்களும், மனிதர்களில் காளையரும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான முதிர்ந்த விராடன் மற்றும் முதிர்ந்த துருபதன் ஆகிய இருவரும் எனது மதிப்பீட்டின்படி மகாரதர்கள் ஆவர். வயதில் முதிர்ந்திருந்தாலும், க்ஷத்திரிய அறங்களை நோற்பதில் அவர்கள் இருவரும் அர்ப்பணிப்புக் கொண்டவர்களே. வீரர்கள் நடக்கும் பாதையில் நடக்கும் அவர்கள் {விராடனும், துருபதனும்} தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்துவார்கள் {என்பது உறுதி}. (பாண்டவர்களுடன்) அவர்கள் கொண்ட உறவுமுறையின் விளைவாகவும், பலமும், ஆற்றலும் கொண்டவர்கள் அவர்கள் என்பதாலும், ஓ! மன்னா {துரியோதனா}, தூய நோன்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அவர்கள், தங்கள் பாசத்தின் பலத்தால் அதிக வலுவை அடைந்திருக்கிறார்கள்.
அந்தக் காரணத்தின் படியே, ஓ! குருகுலத்தின் காளையே, பலம் வாய்ந்த கரங்களைக் கொண்ட அனைவரும் வீரர்களாகவோ, கோழைகளாகவோ ஆகிறார்கள். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, நோக்கத்தின் ஒற்றுமையால் இயக்கப்படுபவர்களும், வலிமைநிறைந்த வில்லாளிகளுமான இந்த மன்னர்கள் இருவரும் {விராடனும், துருபதனும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி உனது துருப்புகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தித் தங்கள் உயிரையே கூட விடுவார்கள். போரில் கடுமையானவர்களும் புகழ்பெற்ற வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான இவர்கள், ஓ! பாரதா {துரியோதனா}, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, தங்கள் அக்ஷௌஹிணிகளின் தலைமையில் இருந்து, தங்கள் உறவுமுறைக்கும், (பாண்டவர்கள்) தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் நீதியைச் செய்யும் வகையில் பெரும் சாதனைகளைச் செய்வார்கள்" என்றார் {பீஷ்மர்}.