Friday, July 17, 2015

அர்ஜுனன் குறித்துப் பீஷ்மரின் மதிப்பீடு! - உத்யோக பர்வம் பகுதி 170

Arjuna in the judgement of Bhisma! | Udyoga Parva - Section 170 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் நகுல சகாதேவர்களின் வீரத்தைக் குறித்துப் பீஷ்மர் துரியோதனிடம் சொன்னது; மொத்தமாகப் பாண்டவர்கள் அனைவரும் மனித சக்திக்ககு அப்பாற்பட்டவர்கள் என்று சொன்னது; ராஜசூய வேள்வியின் போது துரியோதனன் கண்ணெதிரிலேயே நிகழ்ந்தவற்றை நினைவுப்படுத்திச் சொன்னது; அர்ஜுனனின் வீரத்தையும், அவனது தகுதிகளையும், அவனுக்கு இணையான வீரன் இந்த உலகத்திலேயே எவனும் இல்லை என்றும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பாண்டவர்கள் மற்றும் அர்ஜுனனின் வீரத்தை நினைத்துப் பார்த்த கௌரவத் தரப்பு மன்னர்கள் உற்சாகமிழந்ததாக வைசம்பாயனர் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, உனது ரதர்களும், அதிரதர்களும், பாதி ரதர்களும் யார் என்பதைக் குறித்து இப்போது நான் சொன்னேன். பாண்டவர்களில் ரதர்கள் மற்றும் அதிரதர்களின் கணக்கை இப்போது கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் படையில் உள்ள ரதர்களின் கணக்கில் ஏதாவது ஆவலை நீ உணர்ந்தால், இந்த ஏகாதிபதிகளுடன் சேர்ந்து கேட்பாயாக.


பாண்டு மற்றும் குந்தியின் மகனான மன்னனே {யுதிஷ்டிரனே} ஒரு பலமிக்க ரதனாவான். ஓ! ஐயா {துரியோதனா}, சுடர்மிகும் நெருப்பைப் போல அவன் போர்க்களத்தில் உலவுவான்; ஓ! மன்னா {துரியோதனா}, பீமசேனன் எட்டு {8} ரதர்களுக்கு இணையாகக் கருதப்படுகிறான். கதாயுத மோதலிலோ, கணைகளின் மோதலிலோ அவனுக்கு {பீமனுக்கு} இணையாக எவனும் இல்லை. பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், செருக்கு நிறைந்தவனுமான அவன் {பீமன்}, ஆற்றலில் மனிதசக்திக்கு ஆப்பாற்பட்டவனாவான். மனிதர்களில் காளையரான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் ரதர்களாவர். அழகில் அசுவினி இரட்டையர்களைப் போன்ற அவர்கள், பெரும் சக்தியை உடையவர்களாக இருக்கிறார்கள்.
தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் இருக்கும் அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, தங்கள் பாடுகளை நினைவுக்கூர்ந்து, பல இந்திரர்களைப் போலப் போர்க்களத்தில் உலவுவார்கள் என்பதில் ஐயமில்லை. உயர் ஆன்மா கொண்ட அவர்கள் அனைவரும் உடற்கட்டில் உயரமாகச் சால மரத்தண்டுகளைப் போல இருக்கிறார்கள். உடற்கட்டில் பிற மனிதர்களைவிட அரை முழம் உயரமாக இருக்கும் பாண்டுவின் மகன்கள் அனைவரும், சிங்கம் போன்ற வீரத்தையும், பெரும் பலத்தையும் கொண்டவர்களாவர். ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் அனைவரும் பிரம்மச்சரிய நோன்புகளையும், பிற தவத்துறவுகளையும் பயின்றவராவர்.

அடக்கமுடையவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்}, உண்மையான புலியின் கடும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேகத்தில், அடிப்பதில், (எதிரிகளை) நசுக்குவதில், அவர்கள் அனைவரும், {சாதாரண} மனிதனைவிட மேலானவர்களாக இருக்கிறார்கள். உலகளாவிய கைப்பற்றல் இயக்கத்தின் போது, அவர் அனைவரும் பெரும் மன்னர்களை வீழ்த்தினார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அவர்களுடைய ஆயுதங்கள், கதைகள், கணைகள் ஆகியவற்றை வேறு எந்த மனிதனாலும் தரிக்கமுடியாது. உண்மையில், ஓ! கௌரவா {துரியோதனா}, அவர்களது வில்லில் நாணேற்றவோ, அவர்களது கதாயுதங்களை உயர்த்தவோ, அவர்களது கணைகளைப் போரில் அடிக்கவோ வேறு எந்த மனிதனாலும் முடியாது.

வேகத்தில், இலக்கை அடிப்பதில், உண்பதில், புழுதியில் விளையாடுவதில் என அவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே உங்கள் அனைவரையும் வீழ்த்தினார்கள். கடுமையும் பலமும் கொண்ட அவர்கள், இந்தப் படையுடன் மோதும்போது, போரில் அதை நிர்மூலமாக்குவார்கள். எனவே, அவர்களுடன் ஒரு மோதல் விரும்பத்தக்கது அல்ல. அவர்களில் ஒவ்வொரும் தனியாகவே பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் ஆவர். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, ராஜசூய வேள்வியின் போது உனது கண்களுக்கு எதிராகவே அது நடந்தது. திரௌபதியின் பாடுகளையும், பகடையாட்டத்தின் போது பேசப்பட்ட கடுமொழிகளையும் நினைவு கூரும் அவர்கள் {பாண்டவர்கள்}, பல ருத்ரர்களைப் போலப் போர்களத்தில் உலவுவார்கள்.

நாராயணனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டிருக்கும், கண்கள் சிவந்த குடகேசனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இரு படைகளிலும் அவனுக்கு இணையாகக் கருதும்படி துணிச்சல் மிக்க வீரன் எவனும் கிடையாது. மனிதர்களை விட்டுவிடு, தேவர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களில் இதுவரை பிறந்தவர்களிளோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிலோ அவனைப் போன்ற தேர்வீரன் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை.

ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, குரங்குக் கருவி {ஹனுமன் உருவம்} தாங்கிய கொடி பொருத்திய தேரைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன் கொண்டிருக்கிறான்}; அந்தத் தேரைச் செலுத்துபவனோ வாசுதேவனாவான் {கிருஷ்ணனாவான்}. அதில் இருந்து போரிடும் வீரன் தனஞ்சயனாவான் {அர்ஜுனனாவான்}; அவனது வில்லோ காண்டீவமாகும்; காற்றைப் போன்ற வேகமாகக் குதிரைகளை அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கிறான்; தெய்வீக வடிவமைப்பிலான அவனது கவசம் துளைக்கமுடியாததாகும்; அவனது அம்பறாதூணிகள் இரண்டும் வற்றாதனவாக இருக்கின்றன.; பெரும் இந்திரன், ருத்ரன், குபேரன், யமன், வருணன் ஆகியோரிடம் இருந்து தனது ஆயுதங்களை அவன் பெற்றிருக்கிறான்; அவனது தேரில் பயங்கரத் தோற்றம் கொண்ட கதாயுதங்களும், தங்களுக்கிடையே வஜ்ரத்தையும் கொண்டுள்ள பிற பெரும் ஆயுதங்களும் இருக்கின்றன.

ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான தானவர்களை, தனித்தேரில் நின்று கொன்ற அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையாகக்கருத வேறு எந்தத் தேர்வீரன் இருக்கிறான்? பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான அந்த ஆயுதம் தாங்கிய வீர்ன் {அர்ஜுனன்}, தனது படையைக் காத்துக் கொண்டே, உனது துருப்புகளை நிச்சயம் அழித்துவிடுவான். ஓ! பெரும் மன்னா, கணைமாரியை {அம்பு மழையைச்} சிதறடிக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக முன்னேறத்தக்கவர்கள், {பீஷ்மனான} நானும், ஆசானும் {துரோணரும்} மட்டுமே; மூன்றாவதாக வேறு எந்தத் தேர்வீரனும் கிடையாது. மழைக்காலத்தில் காற்றால் உந்தப்பட்ட மேகங்களைப் போலக் கணைமாரியைப் பொழியும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனக்கு அடுத்தவனாகக் கொண்டு போரில் நுழைகிறான்! அவனோ {அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்டு, பாண்டு மகன்களின் நன்கறியப்பட்ட வீரத்தை நடுங்கும் இதயத்துடன் நினைவுப்படுத்திக் கொண்டு, அதைத் தங்கள் கண்கள் முன்பாகவே கண்டதுபோல நினைத்துப் பார்த்த அந்த மன்னர்களின் சந்தனக்குழம்பு பூசப்பட்ட, தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் கரங்கள், பலம் இழந்து தொங்குவது போலத் தோன்றிற்று".


{அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.
மேலும் விவரங்களுக்கு:
13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது 
யுதிஷ்டிரனுக்கு வயது   :89 
பீமனுக்கு வயது         :88 
அர்ஜுனனுக்கு வயது    :87 
நகுல சகாதேவர்களுகு   :86 
துரியோதனனுக்கு வயது :88 
கர்ணனுக்கு வயது       :105 
கிருஷ்ணனுக்கு வயது   :87