Sunday, July 19, 2015

"சிகண்டியைக் கொல்லேன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 173

"I will not slay Sikhandin!" said Bhishma! | Udyoga Parva - Section 173 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ரோசமானான், குந்திபோஜன், கடோத்கசன் ஆகியோர் பாண்டவர்களின் படையில் இருக்கும் படிநிலையையும், அவர்களின் தகுதிகளையும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பிற மன்னர்களின் ஒன்று பட்ட சக்தியைக் குறித்துச் சொன்னது; சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவன் என்பதால் அவனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்னது; பிற மன்னர்களைக் கொல்லும் அதே வேளையில் தன்னால் பாண்டவர்களையும் கொல்ல முடியாது என்று பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் மற்றுமொரு மகாரதனாக ரோசமானன் இருக்கிறான். அவன் {ரோசமானன்}, ஓ! பாரதா {துரியோதனா}, இரண்டாவது தேவனைப் போலப் பகை வீரர்களுக்கு எதிரான போரில் களமாடுவான்.

எதிரிகளை அடக்குபவனும், வலிமைமிக்க வில்லாளியும், பெரும் பலம் கொண்டவனும், பீமனசேனனின் தாய்மாமனுமான [1] குந்திபோஜன் எனது மதிப்பீட்டின் படி ஓர் அதிரதனாவான். வலிமைமிக்கவனும், வீரனுமான இந்த வில்லாளி {குந்திபோஜன்}, போரில் உயர்ந்த திறம்படைத்தவனும் அதை முழுவதும் அறிந்தவனுமாவான். போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அவன் {குந்திபோஜன்}, மிகவும் திறமை வாய்ந்தவன் என்று என்னால் கருதப்படுகிறான். தானவர்களுக்கு எதிராகப் போரிடும் இரண்டாவது இந்திரனைப் போல, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அவன் {குந்திபோஜன்} போரிடுவான். அவனுக்குச் சொந்தமான புகழ்பெற்ற போர்வீரர்கள் அனைவரும் போரில் திறம்பெற்றவர்களாவர். பாண்டவர்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு ஏற்புடையதையும், அவர்களுக்கு நன்மையானவற்றையும் செய்யும் அந்த வீரன் {குந்திபோஜன்}, தனது தங்கையின் {குந்தியின்} மகன்களுக்காக {பாண்டவர்களுக்காக} இயல்புக்கு மிக்க {அசாதாரண} செயல்களைச் செய்வான்.


[1] குந்தியைப் பெற்ற தந்தையான சூரசேனனின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகன்தான் இந்தக் குந்திபோஜன். குந்திபோஜனுக்கு வாரிசில்லாததால், சூரசேனன் தனக்குப் பிறந்த முதல் குழந்தையான பிருதையைக் {குந்தியைக்} குந்திபோஜனுக்குக் கொடுத்தான். அது முதல் அந்தப் பிருதை குந்தி என்று அழைக்கப்பட்டாள். உறவுமுறையில் பிருதைக்குத் தமையனான குந்திபோஜன், அவளை எடுத்து வளர்த்ததால்தான் அவளுக்கு வளர்ப்புத் தந்தையானான். எனவேதான், இங்குப் பீஷ்மர் அவனைப் பீமனுக்குத் தாய்மாமன் என்று உண்மையான உறவுமுறையால் குறிப்பிடுகிறார்.

பீமனுக்கும், ஹிடிம்பைக்கும் பிறந்தவனும், மாய சக்திகள் பல கொண்டவனுமான அந்த ராட்சச இளவரசன் (கடோத்கசன்), எனது மதிப்பீட்டின்படி தேர்ப்பிரிவு தலைவர்களின் தலைவர்களில் {அதிரதர்களில்} ஒருவனாவான். போரில் விருப்பம் கொண்டவனும், மாய சக்திகளைக் கொண்டவனுமான அவன் {கடோத்கசன்}, ஓ! ஐயா, போரில் ஆர்வத்தோடு போரிடுவான். அவனது ஆலோசகர்களும், அவனைச் சார்ந்திருப்பவர்களுமான ராட்சச வீரர்களும் அவனுக்குக் கீழிருந்த போரிடுவார்கள்.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான இவர்களும், பல மாகாணங்களின் {நாடுகளின்} ஆட்சியாளர்களும், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காகக்} கூடியிருக்கிறார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, இவர்களே உயர் ஆன்ம பாண்டவர்களின் ரதர்கள், அதிரதர்கள் மற்றும் அரை ரதர்களில் முக்கியமானவர்கள். பெரும் இந்திரனைப் {மகேந்திரனைப்} போன்றவனும், கிரீடம் தரித்தவனுமான அந்த வீரனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் யுதிஷ்டிரனின் பயங்கரப் படையை இவர்களே போரில் வழிநடத்தப் போகிறார்கள்.

மாய சக்திகள் கொண்டவர்களும், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் எரிந்து கொண்டிருப்பவர்களுமான (இப்படிப்பட்ட) இவர்களுடனே நான் வெற்றியையோ மரணத்தையோ எதிர்பார்த்து போரிட வேண்டியிருக்கும். மாலை வேளையில் தெரியும் சூரியனையும் சந்திரனையும் போன்றவர்களும், (முறையே) காண்டீவம் மற்றும் சக்கரம் தரித்தவர்களும், முதன்மையான தேர்வீரகளில் இருவருமான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை எதிர்த்து நான் முன்னேறுவேன். முறையாகத் தங்கள் துருப்புகளின் தலைமையில் இருப்பவர்களான (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) அந்த யுதிஷ்ரனின் தேர்வீரர்களிடமும் போர்க்களத்தில் நான் மோதுவேன். ஓ! கௌரவர்களின் தலைவா {துரியோதனா}, அவரவரின் படிநிலைப்படி ரதர்கள் மற்றும் அதிரதர்கள் ஆகியோரையும், உனக்கும் அவர்களுக்கும் சொந்தமான அரை ரதர்களையும் {அர்த்த ரதர்களையும்} தீர்மானித்து நான் உனக்குச் சொன்னேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அங்கே இருக்கக்கூடிய பூமியின் பிற மன்னர்களில் யார் மீதெல்லாம் என் கண்கள் விழுகின்றனவோ, ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவர்களைத் தாக்குப்பிடிப்பேன்.

ஆனால், வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, உயர்த்திய ஆயுதங்களுடன் பாஞ்சலர்களின் இளவரசனான சிகண்டி என்னை நோக்கி விரைந்து வருவதை நான் கண்டாலும், அவனை அடிக்கவோ, கொல்லவோ மாட்டேன்.

எனது தந்தைக்கும் {மன்னன் சந்தனுக்கும்} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நான், எனது உடைமையாக இருந்த நாட்டைக் கைவிட்டு, பிரம்மச்சரிய நோன்பை ஏற்று எப்படி வாழ்ந்தேன் என்பதை உலகம் அறியும். பிறகு, கௌரவர்களின் அரசாட்சியில் சித்திராங்கதனை நிறுவிய அதே வேளையில் குழந்தையாக இருந்த விசித்திரவீரியனை இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} ஆக்கினேன்.

பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் தேவனைப் போல ஒரு சூளுரையைக் குறிப்பிட்டுவிட்டு, பெண் ஒருத்தியையோ, முன்பு பெண்ணாக இருந்த ஒருவனையோ நான் கொல்ல மாட்டேன். ஓ! மன்னா {துரியோதனா}, முன்பு, சிகண்டி பெண்ணாக இருந்தவன் என்பதை நீ ஏற்கனவே அறிந்திருப்பாய். மகளாகப் பிறந்த அவள் பிற்பாடு ஆண் பாலினத்திற்கு மாறினாள். ஓ! பாரதா {துரியோதனா}, நான் அவனுக்கு {சிகண்டிக்கு} எதிராகப் போரிடமாட்டேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, என்னோடு போரில் மோதும் அனைத்து பிற மன்னர்களையும் நான் நிச்சயம் அடிப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் குந்தியின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கொல்ல இயலாது" என்றார் {பீஷ்மர்}.

தாதிரதசங்கியான பர்வம் முற்றிற்று