Wednesday, July 22, 2015

பீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 180

Parasurama came to Kurukshetra to condemn Bhishma! | Udyoga Parva - Section 180 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் உத்தரவில்லாமல் எவனையும் கொல்வதில்லை என்பது தனது உறுதிமொழி என்றும், வேறு ஏதாவது கேட்கும்படியும் பரசுராமர் அம்பையிடம் சொல்வது; அம்பை மீண்டும் பரசுராமரிடம் பீஷ்மரைக் கொல்லச் சொல்வது; இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த அந்த இருவரைக் கண்ட அகிருதவரணர், பீஷ்மரைக் கண்டித்தால் அவரே அடிபணிந்து விடுவார் என்று பரசுராமரிடம் தெரிவிப்பது; பீஷ்மரைக் காண்பதற்காகப் பரசுராமரும் மற்ற அனைவரும் குருக்ஷேத்திரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது...


பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஓ! தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, "ஓ! காசியின் மகளே, ஓ! அழகிய நிறம் கொண்டவளே, வேதங்களை அறிந்தோருக்காக அன்றி வேறு யாருக்காகவும் நான் ஆயுதம் எடுப்பதில்லை. எனவே, என்னால் வேறு என்ன உனக்குச் செய்ய முடியும் என்று சொல்வாயாக! ஓ! இளவரசி {அம்பையே}, பீஷ்மன், சால்வன் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவர்களாவர். வருந்தாதே, நான் உனது நோக்கத்தை நிறைவேற்றுவேன். எனினும், அந்தணர்களின் உத்தரவின்றி நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். இதுவே எனது நடத்தைவிதியாகும்" என்றார் {பரசுராமர்}.


அம்பை {பரசுராமரிடம்}, "ஓ! புனிதமானவரே, எவ்வழியிலாவது எனது துயர் உம்மால் களையப்பட வேண்டும். எனது அந்தத் துயரத்திற்குக் காரணம் பீஷ்மனாவான். எனவே, ஓ! தலைவா {பரசுராமரே}, அதிகத் தாமதமில்லாமல் அவனை {பீஷ்மனைக்} கொல்வீராக" என்றாள் {அம்பை}.

ராமர் {பரசுராமர் அம்பையிடம்}, "ஓ! காசியின் மகளே, அவ்வார்த்தைகளையே சொல்கிறாய். சொல், எனினும், உனது மதிப்புக்கு தகுதியுடைய வார்த்தைகளைச் சொல். எனது வார்த்தையால் பீஷ்மன், உனது பாதங்களை எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வான்" என்றார் {பரசுராமர்}.

அம்பையோ {பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, அசுரனைப் போலக் கர்ஜிக்கும் பீஷ்மனைப் போரில் கொல்வீராக. உண்மையில், எனக்கு ஏற்புடையதைச் (செய்ய) விரும்பினால், (அவனைப்) போருக்கு அழைத்துக் கொல்வீராக. அதுவும் தவிர, {இங்கு} உமது சூளுரையை உண்மையாக்குவதே உமக்குத் தகும்" என்றாள் {அம்பை}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {துரியோதனா}, ராமரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது! போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், "நான் வீழ்ந்தேன்" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ! வீரரே {பரசுராமரே}, ஓ! தலைவா, உம்மால் சொல்லப்பட்ட வார்த்தைகளும்,  உண்மையாகும். "பிராமணர்களுக்கு எதிரியாக இருப்பவன் பிராமணனாக இருந்தாலும், க்ஷத்திரியனாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் போரில் அவனைக் கொல்வேன்" என்று க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்ட பிறகு நீர் அந்தணர்கள் முன்னிலையில் சூளுரைத்தீர். ஓ! ராமரே {பரசுராமரே}, இதுவே உம்மால் ஏற்கப்பட்ட உறுதியாகும்.

மேலும், நீர் எவ்வளவு காலம் வாழ்வீரோ, அவ்வளவு காலமும், அச்சத்துடன் உம்மிடம் வந்து, உமது பாதுகாப்பு நாடி நிற்போரைக் கைவிடமாட்டீர் என்றும், ஓ! பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ! ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக!" என்றார் {அகிருதவரணர்}.

ராமர் {பரசுராமர் அகிருதவரணரிடம்}, "ஓ! முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ! அந்தணரே, காசியின் மகள் மனதில் கொண்டுள்ள பணி பயங்கரமானதாகும். இந்தக் கன்னிகையை {அம்பையை} என்னுடன் அழைத்துக் கொண்டு பீஷ்மன் இருக்கும் இடத்திற்கு நானே செல்வேன்.

போரில் தான் சாதித்திருப்பதால் செருக்குக் கொண்டு, அந்தப் பீஷ்மன் எனது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், அந்த ஆணவம் பிடித்தவனைக் கொன்றுவிடுவேன். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும். என்னால் அடிக்கப்படும் கணைகள், உடல் கொண்ட உயிரினங்களில் ஒட்டிக் கொண்டிருக்காது (மாறாகத் துளைத்து அவற்றைக் கடந்து செல்லும்). ஏற்கனவே க்ஷத்திரியர்களுடனான எனது மோதலைக் கண்டிருக்கும் நீர் அதை அறிந்தே இருப்பீர்" என்றார் {பரசுராமர்}.

இதைச் சொன்ன ராமர் {பரசுராமர்}, பிரம்மத்தைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்களுடன் {முனிவர்களுடன்} சேர்ந்து, அந்த ஆசிரமத்தில் இருந்து புறப்படத் தீர்மானித்தார். பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்} தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் அந்த இரவை அங்கேயே கழித்து, (அடுத்த நாள் காலையில்) தங்கள் ஹோமச் சடங்குகளையும், வேண்டுதல்களை {மந்திரங்களை} உரைப்பதையும் நிகழ்த்தினர். பிறகு {பீஷ்மனான} எனது உயிரை எடுக்க விரும்பிய அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} புறப்பட்டனர். பிரம்மத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள் மற்றும், அந்தக் கன்னிகை {அம்பை} ஆகியோரின் துணையோடு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, ராமர் {பரசுராமர்} குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். பிருகு குலத்தின் முதன்மையானவரை {பரசுராமரைத்} தலைமையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மத் தவசிகள் அனைவரும், சரஸ்வதி ஓடையின் கரைக்கு வந்து, தங்களை அங்கே நிறுத்திக் கொண்டனர்.