Bhishma and Parasurama battled with words! | Udyoga Parva - Section 181 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 8)
பதிவின் சுருக்கம் : பரசுராமர் தனது நாட்டுக்குள் வந்திருப்பதை அறிந்த பீஷ்மர் அவரை வரவேற்கச் சென்றது; பரசுராமர் அவரிடம் அம்பை குறித்த காரியத்தைப் பேசுவது; பீஷ்மர் நடந்ததைச் சொன்னது; அம்பையை ஏற்கும்படி பீஷ்மரிடம் பரசுராமர் சொன்னது; தன்னால் ஏற்க இயலாது என்றும் அதற்கான காரணத்தையும் பீஷ்மர் பரசுராமரிடம் சொன்னது; சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மரைப் போருக்கு அழைப்பபது; பீஷ்மர் பரசுராமரைத் தணிக்க முயல்வது; தணியாத பரசுராமரைக் கண்ட பீஷ்மர் அவரது சவாலை ஏற்பதாகச் சொல்வது; பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் ஏற்படப்போகும் மோதலை அறிந்த கங்கை இருவரையும் தணிக்க முயல்வது; பீஷ்மரும் பரசுராமரும் போருக்குத் தயாராவது ...
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அங்கேயே தங்கியிருந்தவரும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, ஓ! மன்னா {துரியோதனா}, மூன்றாம் நாளில் எனக்குச் செய்தி அனுப்பினார். {அந்தச் செய்தியில் அவர்}, "நான் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்வாயாக" என்று சொல்லியிருந்தார். பெரும் வலிமைமிக்கவரான ராமர் {பரசுராமர்} எங்கள் நாட்டின் எல்லைக்குள் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சக்தியின் கடலான அந்த ஆசானிடம் {பரசுராமரிடம்} விரைந்து சென்றேன். ஓ! மன்னா {துரியோதனா}, எனது அணிவகுப்பின் முன்னணியில் ஒரு பசுவை நிறுத்தியபடியும், பல அந்தணர்கள் மற்றும் (எங்கள் குடும்ப) புரோகிதர்கள், சிறப்பு நிகழ்ச்சிகளின் போது எங்களால் ஈடுபடுத்தப்படுபவர்களும், தேவர்களைப் போன்ற பிரகாசமிக்கவர்களுமான இன்னும் பிறர் ஆகியோருடன் நான் அவரிடம் {பரசுராமரிடம்} சென்றேன். அவரது முன்னிலையில் நான் வந்து சேர்ந்ததும், பெரும் ஆற்றலுடைய அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, நான் காணிக்கையாக அளித்த வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.
ராமர் {பரசுராமர் பீஷ்மரிடம்}, "ஆசையை விட்ட நீ, ஓ! பீஷ்மா, காசி மன்னனின் மகளை {அம்பையை}, அவளது சுயம்வரத்தின்போது, என்ன மனோவுணர்ச்சியுடன் அபகரித்து, பின்பு அதன் தொடர்ச்சியாக அவளுக்கு விடைகொடுத்து அனுப்பினாய்? உன்னால் இந்தப் புகழ்பெற்ற மங்கை {அம்பை} அறத்தில் இருந்து வழுவியிருக்கிறாள்! உனது கரங்களின் தொடுகையால் களங்கமுற்ற இவளை {அம்பையை}, இனி எவன் திருமணம் செய்து கொள்வான்? ஓ! பாரதா {பீஷ்மா}, நீ இவளைக் கடத்தியதால், சால்வன் இவளை நிராகரித்துவிட்டான். எனவே, ஓ! பாரதா {பீஷ்மா}, எனது உத்தரவின் பேரில், நீயே இவளைப் பெற்றுக் கொள்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மா}, இந்த மன்னனின் மகள் {அம்பை}, தனது பாலினத்திற்குரிய கடமைகளால் நிரப்பப்படட்டும்! ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே {பீஷ்மா}, இவளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானம் முறையாகாது" என்றார் {பரசுராமர்}.
(அந்தக் கன்னிகையின் {அம்பையின்} நிமித்தமாகத்) துயரில் மூழ்கியிருந்த அவரைக் {பரசுராமரைக்} கண்ட நான், அவரிடம், "ஓ! அந்தணரே, எக்காரணம் கொண்டும், என்னால் இந்தப் பெண்ணை {அம்பையை} எனது தம்பிக்கு {விசித்திரவீரியனுக்கு} அளிக்க முடியாது. ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, "நான் சால்வனுடையவள்" என்று என்னிடமே இவள் சொன்னாள். என்னால் அனுமதிக்கப்பட்ட பிறகே இவள் {அம்பை} சால்வனின் நகரத்திற்குச் சென்றாள். என்னைப் பொறுத்தவரை, நான், அச்சத்தாலோ, கருணையாலோ, செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலோ, காமத்தாலோ க்ஷத்திரியப் பயிற்சிகளைக் கைவிடமாட்டேன் என்பது எனது உறுதியான நோன்பாகும்" என்றேன்.
இந்த எனது வார்த்தைகளைக் கேட்ட ராமர், கோபத்தில் விழிகளை உருட்டியபடி என்னிடம், "ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மா}, எனது வார்த்தைகளின்படி நீ நடந்து கொள்ளவில்லையெனில், இன்றே உன்னையும் உன்னோடு கூடிய உனது ஆலோசகர்களையும் கொன்றுவிடுவேன்" என்றார். உண்மையில், கோபத்தில் விழிகள் உருள, பெருஞ்சினத்துடன் ராமர் {பரசுராமர்} இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் என்னிடம் சொன்னார். எனினும் நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவரை {பரசுராமரை} இனிய சொற்களால் வேண்டிக் கொண்டேன். ஆனால் என்னதான் என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அவர் {பரசுராமர்} குளிர்வடையவில்லை. அந்த அந்தணர்களில் சிறந்தவரிடம் {பரசுராமரிடம்} தலை வணங்கிய நான், அவர் {பரசுராமர்} என்னிடம் போரிட வேண்டுவதற்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.
நான் {பரசுராமரிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, நான் சிறுவனாக இருந்த போது, நால்வகை ஆயுதங்களையும் எனக்கு நீர் கற்பித்தீர் [1]. எனவே, ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, நான் உமது சீடனாவேன்" என்றேன். பிறகு ராமர் {பரசுராமர்}, கோபத்தில் சிவந்த கண்களுடன், "ஓ! பீஷ்மா, நீ என்னை உனது ஆசானாக அறிகிறாய். எனினும், ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகக் கூட இந்தக் காசி ஆட்சியாளின் மகளை ஏற்க மறுக்கிறாய். ஓ! குருக்களை இன்புறச் செய்பவனே {பீஷ்மா}, இவ்வழியில் நீ செயல்படாவிட்டால் நான் மனநிறைவு கொள்ள மாட்டேன்! ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, இந்தக் கன்னிகையைப் பெற்றுக் கொண்டு, உனது குலத்தைக் காத்துக் கொள்வாயாக! உன்னால் கடத்தப்பட்டதால், இவளுக்கு {அம்பைக்குக்} கணவன் அமையவில்லை" என்றார் {பரசுராமர்}.
[1] ஆயுத அறிவியல் (தனுர்வேதம்), ஆயுதங்களை முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என நால்வகைப்படுத்துகிறது. ஒரு முக்தா ஆயுதம் என்பது, ஒரு சக்கரத்தைப் போலக் கைகளில் இருந்து வீசி எறியப்படுவதாகும். ஒர் அமுக்தம் என்பது, ஒரு வாளைப் போலக் கைகளில் இருந்து வீசி எறியப்படாததாகும். ஒரு முக்தாமுக்தம் என்பது, ஒரு கதாயுதத்தைப் போல, சில வேளைகளில் வீசி எறியப்படுவதும், சில வேளைகளில் வீசி எறியப்படாததுமாகும். ஒரு யந்திரமுக்தம் என்பது, ஓர் அம்பைப் போன்றோ, ஓரு பந்தைப் போன்றோ, ஓர் இயந்திரத்தில் இருந்து அடிக்கப்படுவதாகும். முக்த ஆயுதங்கள் அனைத்தும் அஸ்திரங்களாகும். அதே வேளையில் அமுக்தங்கள் அனைத்தும் சஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. என்கிறார் கங்குலி.
பகை நகரங்களை அடக்கும் அந்த ராமரிடம் {பரசுராமரிடம்} நான், "ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமணரே - பரசுராமரே}, இது நடக்காது. ஓ! ஜமதக்னியின் மகனே {பரசுராமரே}, உமது உழைப்பு வீணே. ஓ! புனிதமானவரே {பரசுராமரே} ஒரு காலத்தில் நீர் எனது ஆசானாக இருந்ததை நினைவுகூர்ந்தே, உம்மை மனநிறைவு கொள்ளச் செய்ய நான் மன்றாடுகிறேன்! இந்தக் கன்னிகையைப் {அம்பையைப்} பொறுத்தவரை, இவளை நான் முன்பே நிராகரித்துவிட்டேன். பெண்களின் குறைகள் {தோஷம்} பெரும் தீமைகளைத் தரவல்லவை என்பதை அறிந்த எவன், மற்றொருவனிடம் தனது இதயத்தை வைத்திருப்பவளும், (அக்காரியத்தில்) கடும் நஞ்சு கொண்ட பாம்பைப் போன்றவளுமான ஒருத்தியைத் தனது இல்லத்தில் ஏற்பான்?
ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே {பரசுராமரே}, வாசவனிடத்தில் {இந்திரனிடத்தில்} கொண்ட அச்சத்தால் கூட, நான் எனது கடமையைக் கைவிடமாட்டேன். என்னிடம் கருணையோடிரும், அல்லது நீர் முறையாக நினைப்பதை தாமதமில்லாமல் எனக்குச் செய்வீராக. ஓ! தூய ஆன்மா கொண்டவரே {பரசுராமரே}, ஓ! தலைவா, ஓ! பெரும் புத்திக்கூர்மை கொண்டவரே, உயர்ஆன்ம மருத்தனால் பாடப்பட்ட இந்தச் சுலோகம் நம்மால் புராணங்களில் கேட்கப்படுகிறது. அது {அந்தச் சுலோகம்} "மாயையால் நிரம்பியவரும், சரி, தவறு ஆகியவற்றின் அறிவில்லாதவரும், தீய பாதையில் நடப்பவருமான ஓர் ஆசானின் கட்டளையை ஒருவன் துறப்பதற்கு விதி அனுமதிக்கிறது" என்று சொல்கிறது {அந்தச் சுலோகம்}.
நீரோ எனது ஆசானாயிருக்கிறீர், இதன் காரணமாகக் கொண்ட அன்பின் நிமித்தமாகவே நான் உம்மைப் பெரிதும் மதிக்கிறேன். எனினும், நீர் ஆசானின் கடமையை அறியவில்லை. இதன் காரணமாகவே நான் உம்முடன் போரிடப் போகிறேன். நான் போரில் எந்த ஆசானையும் கொல்ல மாட்டேன். அதிலும் குறிப்பாக அந்தணரைக் கொல்லமாட்டேன், அதிலும் மிகக் குறிப்பாக, தவத்தகுதி கொண்ட ஒருவரைக் கொல்லவே மாட்டேன். இதற்காகவே நான் உம்மை மன்னிக்கிறேன். ஓடுவதற்கு முயலாமல், க்ஷத்திரியனைப் போல ஆயுதம் ஏந்தி, கோபத்துடன் போரிடும் ஒரு பிரமாணனைக் கொல்வது குற்றமாகாது என்பது சாத்திரங்களில் திரட்டப்பட்டிருக்கும் நன்கறியப்பட்ட உண்மையாகும்.
க்ஷத்திரியப் பயிற்சிகளில் நிலைபெற்றிருக்கும் நான் ஒரு க்ஷத்திரியனாவேன். தகுதியுடைய ஒருவனிடம் சரியாக நடந்து கொள்ளும் ஒருவன் எந்தப் பாவத்தையோ, எந்தத் தீங்கையோ செய்வதில்லை. காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைகளை நன்கறிந்தவனும், பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் தாக்கமுடைய காரியங்களை அறிந்தவனுமான ஒருவன், {அவை} ஏதாவதொன்றில் ஐயங்கொண்டால், எந்த வகைத் தயக்கமுமின்றி அறத்தை அடைவதற்குத் தன்னை அவன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதுவே அவனுக்கு உயர்ந்த நன்மையைக் கொடுக்கும்.
நீரோ சந்தேகத்திற்குரிய உரிமை கொண்ட பொருளின் காரியத்தில் இணைந்து நீதியில்லாமல் செயல்படுவதால், நிச்சயம் உம்முடன் நான் ஒரு பெரும்போரில் போரிடுவேன். எனது கரங்களின் பலத்தையும், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட எனது ஆற்றலையும் காண்பீராக. அத்தகு சூழ்நிலைகளின் பார்வையில், நிச்சயம் நான், ஓ! பிருகுவின் மகனே {பரசுராமரே}, என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே - பரசுராமரே}, குருக்ஷேத்திரக் களத்தில் நாம் உம்முடன் போரிடுவேன். ஓ! பெரும் பிரகாசமுடைய ராமரே {பரசுராமரே}, நீர் கேட்பது போலவே தனிப்போரில் ஈடுபட உம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும். குருக்ஷேத்திரக்களத்திற்கு வந்து நிலைபெற்றுப் பெரும்போரில் எனது கணைகளால் துன்புற்று, எனது ஆயுதங்களால் தூய்மையடைந்து, (உமது தவங்களின் பயனால்) உம்மால் வெல்லப்பட்ட உலகங்களை அடைவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களையும், தவத்தைச் செல்வமாகவும் கொண்டவரே {பரசுராமரே}, போரில் மிக விருப்பமுடைய உம்முடன் அங்கே {குருக்ஷேத்திரத்தில்} போரிட நான் அணுகுவேன்.
பழங்காலத்தில், ஓ! ராமரே {பரசுராமரே} (இறந்து போன) உமது மூதாதையரை (க்ஷத்திரிய இரத்தம் எனும் நீர்க்காணிக்கையால்) எங்குத் தணித்தீரோ, அங்கேயே {குருக்ஷேத்திரத்திலேயே}, ஓ! பிருகுவின் மகனே {பரசுராமரே}, உம்மால் கொல்லப்பட்ட க்ஷத்திரியரை நான் தணிப்பேன். ஓ! ராமரே {பரசுராமரே}, தாமதமில்லாமல் அங்கே {குருக்ஷேத்திரத்திற்கு} வாரும். ஓ! வெல்லப்பட மிகக் கடினமானவரே {பரசுராமரே}, அந்தணர்கள் பேசி வரும் உமது பழம்பெருமையை நான் போக்குவேன். நீண்ட நெடும் வருடங்களாக, ஓ! ராமரே {பரசுராமரே}, "தனியாகவே, நான் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தினேன்" என்று உம்மால் பெருமையடிக்கப்படுகிறது. அந்தத் தற்புகழ்ச்சியில் உம்மை ஈடுபட வைக்க எது உதவியது என்பதை இப்போது கேளும். அக்காலங்களில் எந்தப் பீஷ்மனும் பிறக்கவில்லை, அல்லது பீஷ்மனைப் போன்ற எந்த க்ஷத்திரியனும் பிறக்கவில்லை. வீரமிக்க க்ஷத்திரியர்கள் தங்கள் பிறப்பை உண்மையில் பின்னரே அடைந்தார்கள். உம்மைப் பொறுத்தவரை, வைக்கோல் குவியலை மட்டுமே நீர் எரித்தீர். போரில் உமது செருக்கை எளிதாகத் தணிக்கும் ஒருவன் {அப்போது பிறக்கவில்லை;} இப்போது பிறந்துவிட்டான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, அவன் வேறு எவனும் அல்ல, பகை நகரங்களை அடக்குபவனான அவன் பீஷ்மனே ஆவான். ஓ! ராமரே {பரசுராமரே}, போரில் உள்ள உமது செருக்கை நான் தணிப்பேன் என்பதில் எந்த ஐயமுமில்லை" என்றேன்.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "எனது வார்த்தைகளைக் கேட்ட ராமர் {பரசுராமர்} சிரித்த படியே என்னிடம், "ஓ! பீஷ்மா, நீ என்னோடு போரிட விரும்புவது நற்பேறே ஆகும். ஓ! குரு குலத்தோனே {பீஷ்மா}, இப்போதே நான் உன்னுடன் குருக்ஷேத்திரத்திற்கு வருகிறேன். நீ சொன்னதை நான் செய்கிறேன். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அங்கே வா. ஓ! பீஷ்மா, எனது கணைகளால் துளைக்கப்பட்டு, தரையில் செத்து கிடந்து, கழுகுகளுக்கும், காக்கைகளுக்கும், பிற ஊனுண்ணி பறவைகளுக்கும் உணவாகப் போகும் உன்னை உனது தாயான ஜானவி {கங்காதேவி} காணட்டும். சித்தர்கள் மற்றும் சாரணர்களால் வழிபடப்படுபவளும், பகீரதனின் அருளப்பட்ட மகளும், நதி வடிவம் கொண்டவளும், தீயவனான உன்னைப் பெற்றவளுமான அந்தத் தேவி {கங்கா தேவி}, இத்தகு காட்சியை என்னதான் காணத் தகாதவள் என்றாலும், என்னால் கொல்லப்பட்டு, தரையில் பரிதாபநிலையில் கிடக்கும் உன்னைக் கண்டு இன்று அழப்போகிறாள்.
ஓ! பீஷ்மா, வா. ஓ! செருக்குடையவனே, எப்போதும் போரை விரும்பும் என்னைப் பின்தொடர்வாயாக. ஓ! குருகுலத்தோனே {பீஷ்மா}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உனது தேர்களையும், போருக்கான உனது பிற கருவிகள் அனைத்தையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வா" என்றார் {பரசுராமர்}. பகை நகரங்களை அடக்குபவரான ராமர் {பரசுராமர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட நான், என் சிரம் தாழ்த்தி அவரை {பரசுராமரை} வணங்கி, அவரிடம், "அப்படியே ஆகட்டும்" என்றேன்.
இவையனைத்தையும் சொன்ன ராமர் {பரசுராமர்}, போரை விரும்பி குருக்ஷேத்திரத்திற்குச் சென்றுவிட்டார். நான் நமது நகரத்திற்குள் நுழைந்து, சத்தியவதியிடம் அனைத்தையும் சொன்னேன். பிறகு (எனது வெற்றிக்கான) தணிவுச் சடங்குகளைச் செய்து, எனது தாயால் ஆசி கூறப்பட்டு, அந்தணர்களை எனக்கு நல்லாசி கூறச் செய்து, வெள்ளியில் செய்யப்பட்ட எனது அழகிய தேரில் நான் ஏறினேன். ஓ! மங்கா புகழ் கொண்டவனே {துரியோதனா}, அத்தேரில் வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்டன. அந்தத் தேரின் ஒவ்வொரு பகுதியும் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிதாக இருந்த அது {அந்தத் தேர்}, அனைத்துப் புறங்களிலும் புலித் தோலால் மூடப்பட்டு இருந்தது. பல பெரும் ஆயுதங்களும், தேவையானவை அனைத்தும் நிரப்பப்பட்டதாகவும் அது {அந்தத் தேர்} இருந்தது. நற்குடியில் பிறந்தவனும் ,துணிச்சல் மிக்கவனும், குதிரைகளின் நுட்பங்களை நன்கு அறிந்தவனும், போரில் கவனமாக இருப்பவனும், தனது கலையில் நன்கு பழகியவனும், பல போர்களைக் கண்டவனுமான ஒரு தேரோட்டியால் அது {அந்தத் தேர்} செலுத்தப்பட்டது. வெண்ணிற கவசம் தரித்திருந்த நான், கையில் ஒரு வில்லைக் கொண்டிருந்தேன். நான் எடுத்துக் கொண்ட வில் வெள்ளை நிறத்தில் இருந்தது.
இப்படித் தயரான நான், ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா} புறப்பட்டேன். வெண்ணிறத்தில் இருந்த ஒரு குடை எனது தலைக்கு மேலே எப்போதும் பிடிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னா {துரியோதனா}, வெண்ணிறத்தில் இருந்த சாமரங்களால் நான் எப்போதும் வீசப்பட்டேன். வெள்ளுடை, வெண்கிரீடம் ஆகியவை போக, என்னை அலங்கரித்திருந்தவை அனைத்தும் வெண்ணிறத்திலேயே இருந்தன. எனது வெற்றியை விரும்பிய பிராமணர்களால் நான் (துதி பாடல்களைக் கொண்டு) துதிக்கப்பட்டேன். பிறகு யானையின் பெயரால் அழைக்கப்படும் அந்த நகரத்திலிருந்து {ஹஸ்தினாபுரத்தில் இருந்து) புறப்பட்ட நான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா} போர் நடைபெறப் போகும் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினேன். காற்றின் வேகமோ, மனதின் வேகமோ கொண்ட அந்தக் குதிரைகள், எனது தேரோட்டியால் செலுத்தப்பட்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் என்னை அந்தப் பெரும் மோதலுக்குச் சுமந்து சென்றன.
போருக்கான ஆவலுடன் குருக்ஷேத்திரக் களத்திற்கு வந்த நானும், ராமரும் {பரசுராமரும்} ஒருவருக்கொருவர் எங்கள் ஆற்றலைக் காட்ட விரும்பினோம். பெரும் தவசியான ராமரின் {பரசுராமரின்} பார்வையில் வந்த நான், எனது அற்புத சங்கை எடுத்து உரக்க ஊதினேன். ஓ! மன்னா {துரியோதனா}, பல அந்தணர்களும், காட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட பல தவசிகளும், இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அந்தப் பெரும் போரைக் காண அங்கே நின்று கொண்டிருந்தனர். பல தெய்வீக மலர் மாலைகளும், பல்வேறு விதங்களிலான தெய்வீக இசையும், மேகம் போன்ற பல வாகனங்களும் அங்குக் காணக்கிடைத்தன. ராமருடன் {பரசுராமருடன்} வந்திருந்த அந்தத் தவசிகள் அனைவரும், போரின் பார்வையாளர்களாக இருக்க விரும்பி, அந்தக் களத்தைச் சுற்றி நின்று கொண்டனர்.
சரியாக இந்த நேரத்தில், ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்துயிரின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எனது தெய்வீகத் தாய் {கங்காதேவி}, தனது சொந்த உருவத்துடன் என் முன் தோன்றி, "நீ செய்ய முயலும் இது {காரியம்} என்ன? ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} சென்று, ஓ! குருகுலத்தோனே {பீஷ்மா, பரசுராமரிடம்}, "உமது சீடனான பீஷ்மனுடன் போரிடாதீர்" என்று மீண்டும் மீண்டும் நான் வேண்டிக் கொள்வேன். ஓ! மகனே {பீஷ்மா}, க்ஷத்திரியனாக இருந்து கொண்டு, அந்தணரான ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} போரிடுவதில் உனது இதயத்தைச் செலுத்தாதே" என்றாள். உண்மையில், அவள் {கங்காதேவி} என்னை இப்படியே கண்டித்தாள். மேலும் அவள் {கங்காதேவி}, "ஓ! மகனே {பீஷ்மா}, மகாதேவருக்கு {சிவனுக்கு} இணையான ஆற்றல் படைத்த ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரிய குலத்தை அழிப்பவராவார்! அதை நீ அறியாததாலேயே, நீ அவருடன் போரிட விரும்புகிறாய்" என்றாள் {கங்காதேவி}.
அவளால் இப்படிச் சொல்லப்பட்ட நான் அந்தத் தேவியை {கங்காதேவியை} மரியாதையாக வணங்கி, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, கூப்பிய கரங்களுடன் அவளிடம் {கங்காதேவியிடம்}, (காசி மகளின் {அம்பையின்}) சுயம்வரத்தால் நேர்ந்த அனைத்தையும் உரைத்தேன். ஓ! மன்னா {துரியோதனா}, நான் அவளிடம், (போரில் இருந்து விலக) ராமரை {பரசுராமரை} எப்படியெல்லாம் வேண்டினேன் என்பது அனைத்தையும் சொன்னேன். மேலும் நான் அவளிடம் காசியின் (மூத்த) மகளின் {அம்பையின்} கடந்த காலச் செயல்களின் வரலாற்றையும் சொன்னேன். பிறகு, எனது தாயான அந்தப் பெரும் நதியானவள் {கங்காதேவி}, ராமரிடம் {பரசுராமரிடம்} சென்று, அந்தப் பிருகு குல முனிவரிடம் எனக்காக வேண்டினாள். அவள் {கங்காதேவி} அவரிடம் {பரசுராமரிடம்}, "உமது சீடனான பீஷ்மனிடம் போரிடதீர்!" என்று சொன்னாள். எனினும், இப்படி வேண்டிக்கொண்டிருந்த அவளிடம் {கங்காதேவியிடம்}, ராமர் {பரசுராமர்}, "போ. சென்று பீஷ்மனை விலகச் செய்! அவன் எனது விருப்பதைச் செய்ய மறுக்கிறான். இதற்காகவே நான் அவனுக்கு அறைகூவல் விடுத்தேன்" என்றார் {பரசுராமர்}." {என்றார் பீஷ்மர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ராமரால் {பரசுராமரால்} இப்படிச் சொல்லப்பட்ட கங்கை {கங்கா தேவி}, தனது மகன் மீது கொண்ட பாசத்தால் பீஷ்மரிடம் திரும்பி வந்தாள். ஆனால், கோபத்தில் விழி உருள நின்ற பீஷ்மர், அவளது {கங்காதேவியின்} வேண்டுதலைச் செய்ய மறுத்தார். சரியாக அதே நேரத்தில், பலமிக்கத் தவசியும், பிருகு குலத்தில் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்}, பீஷ்மரின் பார்வையில் தோன்றினார். பிறகு, அந்த இரு பிறப்பாளர்களில் சிறந்தவர் {பிராமணரான பரசுராமர்}, அவரை {பீஷ்மரை} போருக்கு அழைத்து அறைகூவினார்".