Friday, July 24, 2015

பீஷ்மரால் நினைவிழந்த பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 182

Bhishma caused Parasurama to lose his sense! | Udyoga Parva - Section 182 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 9)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் பரசுராமரைத் தேரில் நின்று போரிடுமாறு சொல்வது; பரசுராமர் தேருக்கான உவமையைச் சொல்லி பீஷ்மரைப் போருக்கு அழைப்பது; பரசுராமர் பீஷ்மரைத் தாக்கத் தொடங்கியது; பரசுராமர் தேரில் நிற்பதைப் போன்ற தோற்றத்தைப் பீஷ்மர் காண்பது; பரசுராமர் பீஷ்மரை மேலும் அடிப்பது; தேரில் இருந்து இறங்கிச் சென்ற பீஷ்மர் பரசுராமரை வணங்குவது; பரசுராமர் மகிழ்வது; மீண்டும் போர் தொடங்குவது; மீண்டும் பரசுராமரே பீஷ்மரை முதலில் தாக்குவது; பீஷ்மர் பரசுராமரை நிந்தித்தபடி போரிடத் தொடங்குவது; பீஷ்மரின் கணைகளால் பரசுராமர் இரத்தத்தில் நனைந்து, உதிரம் பெருகி நினைவற்றுப் போனது; தான் செய்த செயலுக்காகப் பீஷ்மர் வருந்துவது; சூரியன் மறைந்து அன்றைய நாள் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, போருக்கு நிலைபெற்றிருந்த ராமரிடம் {பரசுராமரிடம்} நான் புன்னகையுடன், "தேரில் இருக்கும் நான், பூமியில் நின்று கொண்டிருக்கும் உம்மோடு போரிட விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, ஓ! ராமரே {பரசுராமரே}, உண்மையில், நீர் என்னோடு போரிட விரும்பினால், ஓ! வீரரே {பரசுராமரே} ஒரு தேரில் ஏறுவீராக; உமது உடலில் கவசத்தைத் தரிப்பீராக" என்றேன். ராமரும் {பரசுராமரும்}, அந்தப் போர்க்களத்தில் புன்னகையுடன் என்னிடம், "ஓ! பீஷ்மா, இந்தப் பூமியே எனது தேர், குதிரைகளைப் போன்ற வேதங்களே என்னைச் சுமக்கும் விலங்குகளுமாகும்! காற்றே எனது தேரோட்டி, (காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய) வேத தாய்மார்களே எனது கவசமுமாவர். இவர்களால் நன்கு மறைக்கப்பட்டே {பாதுகாக்கப்பட்டே}, ஓ! குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, நான் இந்தப் போரில் போரிடுவேன்" என்றார் {பரசுராமர்}.


இதைச் சொன்னவரும், கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவருமான ராமர் {பரசுராமர்}, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அனைத்துப் புறங்களிலும் என்னை அடர்த்தியான கணைகளால் நிரப்பினார் {தாக்கினார்}. பிறகு நான், அனைத்து வகை அற்புத ஆயுதங்களும் நிரம்பிய தேரில், அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} நிற்பதைக் கண்டேன். அவரது அந்தத் தேர் மிக அழகானதாகவும், அற்புதமான தோற்றத்தைக் கொண்டதாகவும் இருந்தது. அவரது சுயவிருப்பத்தின் விளைவாக, அழகிய ஒரு நகரத்தைப் போல அஃது உண்டாக்கப்பட்டிருந்தது. தெய்வீகக் குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. மேலும் தேவைக்குண்டான அனைத்து காப்புகளாலும் அது நன்கு பாதுகாக்கபட்டிருந்தது. முழுவதும் தங்க ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கடினமான தோல்களால் மூடப்பட்டிருந்த அது, சூரியன் மற்றும் சந்திரனின் இலச்சனைகளைத் தன்னில் கொண்டிருந்தது. வில், அம்பறாத்தூணி ஆகிவற்றைத் தரித்துக் கொண்டிருந்த ராமர் {பரசுராமர்}, தனது விரல்களுக்குத் தோல் கையுறைகளை அணிந்திருந்தார்.

பார்கவரின் {பரசுராமரின்} உயிர் நண்பரும், வேதங்களை நன்கு அறிந்தவருமான அகிருதவரணர், அந்த வீரரின் {பரசுராமரின்} தேரோட்டியுடைய கடமைகளைச் செய்து கொண்டிருந்தார். மேலும் அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்} என்னை மீண்டும் மீண்டும் போருக்கு அழைத்து, "வா, வந்து எனது இதயத்தை மகிழ்ச்சியூட்டு" என்றார். வெல்லப்பட முடியாதவரும், [1]க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், சூரியனைப் போலப் பிரகாசமாக உதித்தவரும், (தன் பங்குக்குத்) தனியாகப் போரிட விரும்பியவருமான ராமரை {பரசுராமரை} எனது எதிரியாக அடைந்த நான் அவருடன் தனியாகவே போரிட்டேன். மூன்று கணைமாரிகளைப் பொழிந்து எனது குதிரைகளை அவர் {பரசுராமர்} துன்புறுத்திய பிறகு, நான் எனது தேரில் இருந்து இறங்கி, எனது வில்லை ஒரு புறமாக வைத்துவிட்டு, கால்நடையாக {காலால் நடந்து} அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {பரசுராமரிடம்} சென்றேன். அவர் {பரசுராமர்} அருகில் சென்று, அந்த அந்தணர்களில் சிறந்தவரை மரியாதையுடன் வழிபட்டேன். முறையாக அவரை {பரசுராமரை} வணங்கிய நான், இந்தச் சிறந்த வார்த்தைகளை அவரிடம் சொன்னேன். நான் {பீஷ்மனாகிய நான் பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, நீர் எனக்கு நிகரானவராவோ, என்னைவிட மேன்மையானவராகவோ இருந்தாலும், எனது நல்ல ஆசானான உம்மிடம், இந்தப் போரில் நான் போரிடப் போகிறேன்! ஓ! தலைவா {பரசுராமரே}, நான் வெற்றி பெற எனக்கு ஆசி கூறும்" என்று கேட்டேன்.

இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர் பீஷ்மனாகிய என்னிடம்}, "ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, செழிப்பில் விருப்பமுடைய ஒருவன் இப்படித்தான் செயல்பட வேண்டும்! ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, தன்னைவிட மேன்மையான போர் வீரர்களோடு போரிடுபவர்கள், இந்தக் கடமையைச் செய்தே ஆகவேண்டும். ஓ! மன்னா {பீஷ்மா}, நீ இப்படி என்னை அணுகவில்லையெனில், நான் உன்னைச் சபித்திருப்பேன். உனது பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு, கவனமாகப் போரிடுவாயாக. போ. எனினும், ஓ! குரு குலத்தோனே {பீஷ்மா}, உன்னை வீழ்த்த நானே இங்கு நிற்பதால், நீ வெற்றி பெற என்னால் ஆசி கூற முடியாது. போ, உனது நடத்தையால் நான் மகிழ்ந்தேன்" என்றார் {பரசுராமர்}.

அவரை {பரசுராமரை} வணங்கிய நான், விரைந்து திரும்பி, எனது தேரில் ஏறிக் கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எனது சங்கை மீண்டும் ஒருமுறை ஊதினேன். ஓ! பாரதா {துரியோதனா}, அதன் பிறகு அவருக்கும் {பரசுராமருக்கும்} எனக்குமான மோதல் நடைபெற்றது. மேலும் அஃது, ஓ! மன்னா {துரியோதனா}, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய எங்களுக்கிடையில் பல நாட்கள் போர் நீடித்தது. அந்தப் போரில், கழுகின் இறகுகளைக் கொண்ட தொள்ளாயிரத்து {960} அறுபது நேரான கணைகளால், முதலில் ராமரே {பரசுராமரே} என்னை அடித்தார். அந்தக் கணை மழையால், ஓ! மன்னா {துரியோதனா}, எனது நான்கு குதிரைகளும், எனது தேரோட்டியும் முழுமையாக மறைக்கப்பட்டனர்! கவசம் தரித்திருந்த நான் இவையாவற்றையும் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தப் போரில் அமைதியாக நின்றேன்.

தேவர்களையும், குறிப்பாக அந்தணர்களையும் வணங்கிய நான், போரில் நிலைத்திருந்த ராமரிடம் {பரசுராமரிடம்} புன்னகையுடன், "நீர் எனக்குச் சிறு மதிப்பையும் காட்டவில்லையெனினும், நான் உமது ஆசிரியத்தன்மைக்கு முழுமையான மரியாதையைச் செலுத்திவிட்டேன். ஓ! அந்தணரே, அறம் ஈட்டப்பட மேற்கொள்ள வேண்டிய வேறு பிற மங்கலக் கடமைகளையும் கேளும். உமது உடலில் இருக்கும் வேதங்களையும், உம்மில் இருக்கும் பிரம்மத்தின் உயர்நிலையையும், கடுந்தவங்களால் நீர் ஈட்டிய தவத்தகுதிகளையும் நான் அடிக்கமாட்டேன். எனினும், ஓ! ராமரே {பரசுராமரே}, நீர் ஏற்றிருக்கும் க்ஷத்திரியத் தன்மையை அடிப்பேன். ஒரு பிராமணன் ஆயுதங்களை எடுக்கும்போது, அவன் க்ஷத்திரியனாகிவிடுகிறான். எனது வில்லின் வலுவையும், எனது கரங்களின் சக்தியையும் இப்போதும் பாரும். ஒரு கூரிய கணையைக் கொண்டு உமது வில்லை நான் விரைந்து வெட்டுவேன்" என்றேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இதைச் சொன்ன நான், அகன்ற தலையுடைய கூரிய கணையை {அர்த்தச் சந்திர பாணத்தை} அவர் {பரசுராமர்} மேல் செலுத்தினேன். இப்படியே அதைக் கொண்டு, அவரது வில்லின் நுனியை அறுத்து, அந்த வில்லைக் கீழே விழச் செய்தேன். பிறகு, அந்த ஜமதக்னியின் {பரசுராமரின்} தேர் மீது, கழுகின் இறகைக் கொண்டவையும், நேரானவையுமான நூறு {100} கணைகளை அடித்தேன். ராமரின் {பரசுராமரின்} உடலினூடாகத் துளைத்துக் கொண்டு காற்றால் சுமந்து செல்லப்பட்ட அவை {அந்தக் கணைகள்}, ஆகாயத்தில் சென்ற போது (தங்கள் வாய்களில் இருந்து) இரத்ததைக் கக்குவதாகவும், உண்மையான பாம்புகளைப் போலவும் தெரிந்தன.

இரத்தத்தில் நனைந்தபடியும், உடலில் இருந்து இரத்தம் வெளியேறியபடியும் இருந்த ராமர் {பரசுராமர்}, ஓ! மன்னா {துரியோதனா}, தன் மார்பில் நீர் {உருகிய} உலோகங்களாக {liquid Metals} உருளும் ஓடைகளுடன் கூடிய சுமேரு மலையைப் போலவோ, வசந்தகாலத்தின் வருகையால், சிவந்த பூங்கொத்துகளால் மறைக்கப்பட்டிருக்கும் அசோக மரத்தைப் போலவோ, ஓ! மன்னா {துரியோதனா}, பூக்களை ஆடையாகத் தரித்த கின்சுக {பலாச} மரத்தைப் போலவோ விளங்கினார். மற்றொரு வில்லை எடுத்த ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, தங்கச் சிறகுகள் படைத்த மிகக் கூரிய எண்ணற்ற கணைகளை என் மீது மழையாகப் பொழிந்தார். மூர்க்கமான வேகம் கொண்டவையும், பாம்பையோ, நெருப்பையோ, நஞ்சையோ போன்றவையான அந்தக் கடுங்கணைகள், அனைத்துப் புறங்களில் இருந்தும் வெளிப்பட்டு, எனது முக்கிய உறுப்புகளைத் துளைத்து என்னை நடுங்கச் செய்தன. எனது பொறுமையனைத்தையும் திரட்டி, அந்த மோதலுக்குப் பதில் சொன்ன நான், கோபத்தால் நிறைந்து, அந்த ராமரை {பரசுராமரை} நூறு {100} கணைகளால் துளைத்தேன்.

நெருப்பு, அல்லது சூரியன், அல்லது கடும்நஞ்சு கொண்ட பாம்புகளின் தோற்றத்தைக் கொண்ட அந்தச் சுடர்மிகும் நூறு {100} கணைகளால் துன்புறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்} தனது உணர்வுகளை இழந்தவரைப் போலத் தோன்றினார். ஓ! பாரதா {துரியோதனா}, (அக்காட்சியைக் கண்டு) பரிதாபத்தால் நிறைந்த நான், எனது சுய விருப்பத்தின் படி {அடிப்பதை} நிறுத்தினேன். "போருக்கு ஐயோ, க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ" என்ற நான், ஓ! மன்னா {துரியோதனா}, துயரில் மூழ்கி, மீண்டும் மீண்டும், "ஐயோ, க்ஷத்திரியப் பயிற்சிகளை நோற்கும் என்னால் எத்தகு பெரும் பாவம் இழைக்கப்பட்டுவிட்டது. எனது ஆசானும், அறம் சார்ந்த ஆன்மா கொண்டவருமான ஓர் அந்தணரைத் துன்புறுத்திவிட்டேனே" என்றேன். அதன்பிறகு, ஓ! பாரதா, ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} அடிப்பதை நான் நிறுத்தினேன். அவ்வேளையில், தனது கதிர்களால் பூமியைச் சுட்டுவந்த ஆயிரங்கதிர் பேரொளியோன் {சூரியன்}, மேற்கில் இருந்த தனது மாளிகைக்கு நாளின் முடிவில் சென்றான். எங்களுக்குள் நடந்த போரும் நின்றது" என்றார் {பீஷ்மர்}.


[1]க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், சூரியனைப் போலப் பிரகாசமாக உதித்தவரும், (தன் பங்குக்குத்) தனியாகப் போரிட விரும்பியவருமான ராமரை {பரசுராமரை} ...
மேலும் விவரங்களுக்கு:
ஜமதக்னி பிறப்பு - வனபர்வம் பகுதி 115
தாயின் சிரம் கொய்த பரசுராமர் - வனபர்வம் பகுதி 116
யுதிஷ்டிரனுக்குக் காட்சியளித்த பரசுராமர் - வனபர்வம் பகுதி 117