Friday, July 24, 2015

மயக்கமடைந்த பீஷ்மரும், பரசுராமரும்! - உத்யோக பர்வம் பகுதி 183

Bhishma and Parasurama swooned! | Udyoga Parva - Section 183 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் இடையில் நடைபெற்ற போரின் வர்ணனை; பரசுராமரின் தாக்குதலில் மயக்கமடைந்த பீஷ்மரை, அவரது தேரோட்டி களத்தைவிட்டு வெளியே கொண்டு சென்றது; களைப்புநீங்கி திரும்பி வந்த பீஷ்மர் தனது கணைகளால் பரசுராமரை மீண்டும் மயங்கிவிழச் செய்தது; அம்பையும் அந்தணர்களும் பரசுரைத் தேற்றியது; மாலை நெருங்கியதும் போரில் இருந்து விலகிய பரசுராமர்...

பரசுராமர் - பீஷ்மர் ( குருசேத்திரத்தில் அம்பையின் பொருட்டு கடும் போர்)
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "போர் நின்றதும், இத்தகு செயல்பாடுகளில் மிகவும் திறன் பெற்ற எனது தேரோட்டி, தன் உடலிலும், குதிரைகளின் உடல்களிலும், எனது உடலிலும் தைக்கப்பட்டிருந்த கணைகளை அகற்றினான். அடுத்த நாள் காலையில், சூரியன் உதித்து, போர் தொடங்கிற்று. (அதற்குச் சற்று முன்னரே) நீராடவும், தரையில் உருளவும் அனுமதிக்கப்பட்டிருந்த எனது குதிரைகள், தாகம் தணிக்கப்பட்டதன் மூலம் பலப்படுத்தப்பட்டிருந்தன.


கவசந்தரித்து, தேரில் நின்றபடி மோதலுக்கு விரைந்து வரும் என்னைக் கண்ட வலிமைமிக்க ராமர் {பரசுராமர்}, தனது தேரை மிகக் கவனத்துடன் தயார் செய்தார். போருக்கான விருப்பத்ததுடன் என்னை நோக்கி வந்த ராமரைக் {பரசுராமரைக்} கண்ட நான், எனது வில்லை ஒரு புறம் வைத்துவிட்டு, எனது தேரில் இருந்து விரைந்து இறங்கினேன். ராமரை {பரசுராமரை} வணங்கியபின், மீண்டும் அதில் ஏறி, ஓ! பாரதா {துரியோதனா}, போரை அவருக்குக் கொடுக்க விரும்பி, ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} முன்னிலையில் அச்சமற்று நின்றேன்.

பிறகு, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அவரை {பரசுராமரை} மூழ்கடித்தேன். பதிலுக்கு அவரும் {பரசுராமரும்} தனது கணை மாரியால் என்னை மறைத்தார். கோபத்தால் நிறைந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, வாயில் நெருப்புச் சுடர்களைக் கொண்ட உண்மையான பாம்புகளைப் போன்றனவும், பெரும் சக்தியுடையப் பல கடுங்கணைகளை என்மீது மீண்டும் ஒருமுறை அடித்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} கணைகள் என்னை அணுகுவதற்கு முன்னரே, நடு வானிலே அவற்றை மீண்டும் மீண்டும் வெட்டினேன். பிறகு, ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, என் மீது தெய்வீக ஆயுதங்களை வீசத் தொடங்கினார். பலமிக்கச் செயல்களைச் செய்ய விரும்பிய நான், ஓ! பலம் நிறைந்த கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அவற்றை எனது கணைகளின் மூலம் முறியடித்தேன். பிறகு ஆகாயம் எங்கும் பேரொலி எழுந்தது.

அந்நேரத்தில் நான், ராமர் {பரசுராமர்} மீது வாயவ்யம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை வீசினேன். ராமர் {பரசுராமர்} குஹ்யகம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். பிறகு நான், உரிய மந்திரங்களுடன் ஆக்னேயம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை அடித்தேன். ஆனால் தலைவன் ராமரோ {பரசுராமரோ}, வருணம் என்று அழைக்கப்பட்ட (தனது) ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். இவ்வழியிலேயே நான், ராமர் {பரசுராமர்} அடிக்கும் தெய்வீக ஆயுதங்களை மட்டுப்படுத்தினேன். அதே போல, எதிரிகளைத் தண்டிப்பவரும், பெரும் சக்தி கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவருமான ராமரும் {பரசுராமரும்}, என்னால் அடிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுப்படுத்தினார்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தணர்களில் சிறந்தவரும் வலிமைமிக்கவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, திடீரென வலது பக்கமாகச் சுழன்று வந்து, என்னை மார்பில் துளைத்தார். இதனால், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, எனது தேர்களில் சிறந்த அந்தத் தேரில் மயங்கிச் சாய்ந்தேன். உணர்விழந்த என்னைக் கண்ட எனது தேரோட்டி, போர்க்களத்தில் இருந்து என்னை விரைந்து வெளியே கொண்டு சென்றான். ராமரின் ஆயுதங்களால் பீடிக்கப்பட்டவனாகவும், துளைக்கப்பட்டவனாகவும், வாடிப் போய் மூர்ச்சையடைந்திருந்த என்னைக் கண்டவர்களும், அகிருதவரணவருடன் கூடிய ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மற்றும் பிறரும், காசியின் இளவரசியும் {அம்பையும்}, ஓ! பாரதா {துரியோதனா}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்க ஆரவாரம் செய்தனர்!

உணர்வை மீண்டும் அடைந்த நான், எனது தேரோட்டியிடம், "ராமர் {பரசுராமர்} எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக! எனது வலிகள் என்னை விட்டு அகன்று விட்டன. நான் போருக்குத் தயாராக இருக்கிறேன்" என்றேன். இப்படிச் சொல்லப்பட்ட எனது தேரோட்டி, (சமவெளியில்) ஆடிக்கொண்டு செல்வன போன்ற எனது மிக அழகான குதிரைகளின் உதவியால், காற்றின் வேகத்தில் என்னை ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்டு சென்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, கோபத்தில் நிறைந்த நான், அவரது {பரசுராமரது} கோபத்தை வீழ்த்தும் விருப்பத்தில், கணைமாரியில் அவரை மூழ்கடித்தேன். ஆனால், எனது ஒவ்வொரு கணைக்கும் மூன்று அம்புகளை அடித்த ராமர் {பரசுராமர்}, நேராகச் செல்லக்கூடிய எனது கணைகள் அவரை அடையும் முன்பே, நடுவானிலேயே அவற்றைத் துண்டு துண்டாக அறுத்தார்.

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது நல்ல கணைகள் ராமரின் கணைகளால் இரண்டாக அறுக்கப்படுவதைக் கண்ட ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஜமதக்னியின் மகனான ராமரை {பரசுராமரைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நான், தன் தலையில் மரணத்தையே {காலனே} அமர வைத்திருக்கும் ஓர் அழகிய கணையால் அவரை {பரசுராமரை} அடித்தேன். அதனால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அதன் வேகத்திற்குப் பலியான ராமர் {பரசுராமர்}, மயக்கத்தில் விழுந்து, தரையில் சாய்ந்தார். அப்படி ராமர் {பரசுராமர்} தரையில் விழுந்த போது, "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் ஆச்சரிய ஒலிகள் கேட்டன. ஓ! பாரதா {துரியோதனா}, ஆகாயத்தில் இருந்து சூரியன் விழுந்துவிட்டதைக் கண்டதைப் போல, இந்த முழு அண்டமும் குழப்பத்தாலும், அச்சத்தாலும் நிறைந்தன.

பிறகு காசியின் இளவரசியோடு {அம்பையோடு} இருந்த தவசிகள் அனைவரும்,  ஓ! குருகுலத்தின் மகனே {துரியோதனா}, ராமரை {பரசுராமரை} நோக்கி அமைதியுடனும், பெருந்துயரத்துடனும் சென்றனர். அவரை {பரசுராமரை} வாரி அணைத்துக் கொண்ட அவர்கள், ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் கரங்களின் மென்மையான தொடுதலாலும், நீரைச் சொரிந்து குளிரூட்டியும், வெற்றி குறித்த உறுதிகளைச் சொல்லியும், அவருக்கு ஆறுதல் அளிக்கத் தொடங்கினர். இப்படி ஆறுதலளிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, எழுந்திருந்து, தனது வில்லில் கணையைப் பொருத்திக் கொண்டே நடுங்கும் குரலில் என்னிடம், "ஓ! பீஷ்மா, நில்! நீ ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டாய்!" என்று சொன்னார். அவரால் செலுத்தப்பட்ட அந்தக் கணை, அந்தக் கடும் மோதலில் எனது இடது புறத்தைத் துளைத்தது. அதனால் தாக்கப்பட்ட நான், புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல நடுங்கத் தொடங்கினேன்.

அந்தப் பயங்கர மோதலில் எனது குதிரைகளைக் கொன்று, பெரும் நிதானத்துடன் போரிட்ட ராமர் {பரசுராமர்}, குறிப்பிடத்தகுந்த கரவேகத்துடன் அடிக்கப்பட்ட சிறகு படைத்த கணைகளின் கூட்டத்தால் என்னை மூழ்கடித்தார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ராமரின் {பரசுராமரின்} கணை மழையைத் தடுக்கும்பொருட்டு, பெரும் கரவேகத்துடன் நானும் கணைகளை அடிக்கத் தொடங்கினேன்.

பிறகு என்னாலும், ராமரால் {பரசுராமராலும்} அடிக்கப்பட்ட கணைகள் ஆகாயத்தையே மூடியபடி (கீழே விழாமல்) அங்கேயே தங்கின. அந்தக் கணைகளின் மேகத்தில் மறைந்த சூரியனால் அதனூடாகத் தனது கதிர்களைச் செலுத்த முடியவில்லை. அந்த மேகங்களால் தடுக்கப்பட்ட காற்றும், அவற்றைக் கடந்து செல்லும் திறனற்றதாக இருந்தது. காற்றின் அசைவும், சூரியனின் கதிர்களும் தடுக்கப்பட்டதாலும், கணைகளின் ஒன்றோடொன்றான மோதலாலும் ஆகாயத்தில் நெருப்பு உண்டானது. தங்களால் உண்டாக்கப்பட்ட நெருப்பின் விளைவாக எரிந்த அந்தக் கணைகள் அனைத்தும், சாம்பலாகப் பூமியில் விழுந்தன.

பிறகு, கோபத்தால் நிறைந்த ராமர் {பரசுராமர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, நூறாயிரக் கணக்கான {லட்சக்கணக்கான}, கோடிக்கணக்கான கணைகளால் என்னை மறைத்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போன்ற எனது கணைகால், ராமரின் {பரசுராமரின்} கணைகளைத் துண்டுகளாக அறுத்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்புகளைப் போல அவற்றைப் பூமியில் விழச் செய்தேன். இப்படியே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அந்த மோதல் நடைபெற்றது. எனினும், மாலையின் நிழல் வந்ததும், எனது ஆசான் {பரசுராமர்} போரில் இருந்து விலகினார்" என்றார் {பீஷ்மர்}.