Praswapa weapon came to the mind of Bhishma | Udyoga Parva - Section 187 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 14)
பதிவின் சுருக்கம் : அந்த நாளும், அதற்கு முந்தைய நாளும் தான் கண்ட காட்சிகளால் கோபம் அடைந்த பரசுராமர் வஜ்ரம் போன்ற கடினமான வேலாயுதம் ஒன்றைப் பீஷ்மர் மேல் வீசியது; அவ்வாயுதத்தால் தாக்குண்ட பீஷ்மரின் உடலில் இரத்தம் பெருகியது; பீஷ்மரால் அடிக்கப்பட்ட கணையால் மார்பில் காயம்பட்ட பரசுராமர் நடுங்கத் தொடங்கியது; அகிருதவரணரால் தேற்றப்பட்ட பரசுராமர் பிரம்மாஸ்த்திரத்தை ஏவியது; பீஷ்மரும் பிரம்மாஸ்திரத்தையே ஏவியது; முழு ஆகாயமும் தீப்பற்றி எரிந்தது; அந்த நேரத்தில் பீஷ்மருக்கு பிரஸ்வாபாஸ்திரமும், அதை எழுப்பும் மந்திரமும் நினைவுக்கு வந்தது...
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும் எழுந்த நான், ஓ! பாரதா {துரியோதனா}, எனது கனவைக் குறித்து நினைத்து பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன். பிறகு, ஓ! பாரதா {துரியோதனா}, எனக்கும், அவருக்கும் {பரசுராமருக்கும்} இடையிலான மோதல் ஆரம்பித்தது. ஒரு போராக அது கடுமையானதாகவும், ஒப்பற்றதாகவும், அனைத்து உயிர்களுக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. பார்கவர் {பரசுராமர்} என் மீது பொழிந்த கணைமாரியை, என் கணைமாரி கொண்டு நான் கலங்கடித்தேன். அந்த நாளும், அதற்கு முந்தைய நாளும் தான் கண்டதை நினைத்துக் கோபம் நிரம்பிய ராமர் {பரசுராமர்}, என் மீது இந்திரனின் வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், யமனின் கதாயுதத்தைப் போன்று பிரகாசமிக்கதுமான வேலாயுதம் ஒன்றை என் மீது வீசினார்.
சுடர்மிகும் தழலைக் கொண்ட நெருப்பு போலவும், அந்தப் போர்க்களத்தின் அனைத்து திசைகளையும் குடித்துவிடுவது {விழுங்கிவிடுவது} போலவும், அது {அந்த வேல்} என்னை நோக்கி வந்தது. பிறகு, ஓ! குருக்களில் புலியே, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே {துரியோதனா}, வானத்தில் செல்லும் மின்னலின் நெருப்பைப் போன்ற அது {அந்த வேல்}, எனது தோளில் விழுந்தது. ராமரால் {பரசுராமரால்}, இப்படிக் காயம்பட்ட எனக்கு, ஓ! சிவந்த கண்களை உடையவனே {துரியோதனா}, (மழைக்குப் பிறகு) மலையில் இருந்து வரும் சிவந்த மணலோடையைப் போல, எனது {என் உடலில் இருந்து} இரத்தம் அதிகமாக வெளிவரத் தொடங்கியது.
பெருங்கோபத்தால் நிறைந்த நான், பாம்பின் விஷத்தைப் போன்று அபாயகரமான ஒரு கொடிய கணையை ஜமதக்னியின் மகன் {பரசுராமரின்} மீது ஏவினேன். அதனால் நெற்றியில் அடிக்கப்பட்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வீரர் {பரசுராமர்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அதன் பிறகு, சிகரம் கொண்ட மலையைப் போல அழகாகத் தோன்றினார். பெரும் கோபம் கொண்ட அந்த வீரர் {பரசுராமர்}, தனது நிலையை மாற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் வில்லின் நாணை இழுத்து, அனைத்தையும் அழிக்கும் மரணத்தைப் {காலனைப்} போன்றதும், எதிரிகள் அனைவரையும் வாட்டவல்லதுமான ஒரு பயங்கரக் கணைக்கு என்னை இலக்காக்கினார். (காற்றின் ஊடாக) பாம்பைப் போலச் சீறிக்கொண்டு வந்த அந்தக் கடுங்கணை என் மார்பில் விழுந்தது.
இப்படித் தாக்கப்பட்ட நான், இரத்தத்தில் நனைந்து, பூமியில் விழுந்தேன். சுயநினைவை மீண்டும் அடைந்த நான், வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்கப் பயங்கரக் கணையொன்றை ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} மீது ஏவினேன். அந்தக் கணை, அந்தணர்களில் முதன்மையான அவரது {பரசுராமரின்} மார்பில் விழுந்தது. இதனால் உணர்வை இழந்த ராமர் {பரசுராமர்}, பெரிதும் நடுங்கத் தொடங்கினார். பிறகு, அந்தப் பெருந்துறவியின் {பரசுராமரின்} நண்பரும், மறுபிறப்பாளருமான அகிருதவரணர், அவரை {பரசுராமரை} அணைத்துக் கொண்டு பல்வேறு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி அவரைத் தணித்தார்.
இப்படித் தைரியமூட்டப்பட்டவரும், உயர் நோன்புகளைக் கொண்டவருமான ராமர் {பரசுராமர்}, பிறகு, கோபத்தாலும், பழிவாங்கும் உணர்வாலும் நிறைந்தார். பெரும் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அவர் அழைத்தார். அதைக் கலங்கடிப்பதற்காக நானும் அதே அற்புத ஆயுதத்தைப் {பிரம்மாயுதத்தையே} பயன்படுத்தினேன். ஒன்றின் மேல் ஒன்று மோதிக் கொண்ட அந்த ஆயுதங்கள் இரண்டும் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி, யுகத்தின் முடிவில் என்ன நடக்கும் என்பதைக் காட்டின. என்னையோ, ராமரையோ {பரசுராமரையோ} அடைய முடியாத அந்த ஆயுதங்கள் இரண்டும், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடுவானில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன.
பின்னர், முழு ஆகாயமும், தீக்கிரையானது போலத் தோன்றியது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உயிரினங்கள் அனைத்தும் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாயின. அந்த ஆயுதங்களின் சக்தியால் பீடிக்கப்பட்ட, முனிவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் பெரிதும் துன்புற்றனர். பிறகு, மலைகள், கடல்கள் மற்றும் மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள். உயிரினங்கள் அனைத்தும் அந்த ஆயுதங்களின் சக்தியால் சுடப்பட்டுப் பெரிதும் துன்புற்றன. ஆகாயம் பற்றி எரிந்தது. ஓ! மன்னா {துரியோதனா}, அடிவானத்தின் பத்து புள்ளிகளும் {திக்குகளும்} புகையால் நிரம்பின. எனவே, ஆகாயத்தில் திரியும் உயிரினங்களால் ஆகாயத்திலேயே தங்க முடியவில்லை.
இவை யாவற்றினாலும், தேவர்கள், அசுரர்கள், ராட்சர்களுடன் கூடிய உலகம் முழுமையும் துன்பத்தில் கூக்குரலிட ஆரம்பித்த போது, "இதுவே நேரம்" என நினைத்த நான், ஓ! பாரதா {துரியோதனா}, (எனது கனவில் எனக்குத் தோன்றிய) அந்தப் பிரம்மத்தை உரைப்பவர்களின் {அந்த எட்டு 8 பிராமணர்களின்} உத்தரவின் பேரில் பிரஸ்வாப ஆயுதத்தை விரைந்து அடிக்க விரும்பினேன். அந்த அற்புத ஆயுதத்தை அழைக்கும் மந்திரமும் திடீரென எனது மனதில் தோன்றிற்று" என்றார் {பீஷ்மர்}.