Sunday, July 26, 2015

கனவில் தோன்றிய எட்டு பிராமணர்கள்! - உத்யோக பர்வம் பகுதி 186

The eight Brahmanas who appeared in dream | Udyoga Parva - Section 186 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : நெடுநாட்களாகியும் தன்னால் பரசுராமரை வீழ்த்த முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டு படுத்துறங்கிய பீஷ்மரின் கனவில் அந்த எட்டுப் பிராமணர்கள் வந்தது; பிரஸ்வாபம், சம்போதனம் ஆகிய ஆயுதங்களைக் குறித்துப் பீஷ்மருக்கு அவர்கள் நினைவூட்டியது; அவ்வாயுதத்தால் பரசுராமர் வீழ்வாரேயன்றி மாளமாட்டார் என்று அந்த அந்தணர்கள் உறுதி கூறி மறைந்தது...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இரவின்போது, அந்தணர்கள், முனிவர்கள், தேவர்கள், இரவில் நடமாடும் அனைத்து உயிரினங்கள் {பூதங்கள்} மற்றும் பூமியின் அனைத்து மன்னர்கள் ஆகியோரை வணங்கியபின், எனது படுக்கையில் என்னைக் கிடத்திக் கொண்ட நான், எனது அறையில் தனிமையில் பின்வருமாறு சிந்தித்தேன். "பயங்கர விளைவுகளைக் கொடுக்கவல்லதும், எனக்கும், ஜமதக்னிக்கும் {பரசுராமருக்கும்} இடையில் நடைபெறுவதுமான இந்தப் போர் நெடுநாட்களாக நீடிக்கிறது. எனினும், வலிமையும் சக்தியும் கொண்ட ராமரை {பரசுராமரை} போர்க்களத்தில் என்னால் வீழ்த்த இயலவில்லை. உண்மையில், வலிமைமிக்க அந்தணரும், பெரும் ஆற்றலும் கொண்டவருமான ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} நான் வீழ்த்தவல்லவனெனில், இவ்விரவில், தேவர்கள் அன்புடன் எனக்குத் தங்களைக் காட்டிக் கொள்ளட்டும் {தரிசனம் அளிக்கட்டும்}" என்று சிந்தித்தேன்.


கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த நான், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அவ்விரவில் வலப்பக்கமாகப் படுத்து உறங்கிய போது, காலையின் நெருக்கத்தில் {அதிகாலையில்}, அந்தணர்களில் முதன்மையானோரும், தேரில் இருந்து விழுந்த என்னைத் தூக்கிப் பிடித்து எனக்கு ஆறுதல் அளித்தவர்களான அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, கனவில் தங்களை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டு "அஞ்சாதே" என்றனர். மேலும் அவர்கள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {துரியோதனா}, அவற்றை நான் திரும்பச் சொல்கிறேன்; கேட்பாயாக.

அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, "ஓ! கங்கையின் மகனே {பீஷ்மா} எழுவாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை! நாங்கள் உன்னைக் காப்போம், ஏனெனில் நீ எங்கள் சொந்த உடலே ஆவாய்! ஜமதக்னியின் மகனான ராமரால் {பரசுராமரால்}, போரில் உன்னை வீழ்த்த இயலாது! ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மா}, போரில் நீயே ராமரை {பரசுராமரை} வெல்வாய்! ஓ பாரதா {பீஷ்மா}, விருப்பத்திற்குரியதும், பிரஸ்வாபம் என்று அழைக்கப்படுவதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுக்குச் {பிரம்மாவுக்குச்} சொந்தமானதும், தெய்வீகக் கைவினைஞனால் {விஸ்வகர்மாவால்} காய்ச்சி வடிக்கப்பட்டதுமான இந்த ஆயுதம் உனது நினைவுக்கு வரும். ஏனெனில், முந்தைய வாழ்வில் {முற்பிறவியில்} நீ இதை அறிந்திருந்தாய். ராமரோ {பரசுராமரோ}, பூமியில் உள்ள எவருமோ இதை அறிந்ததில்லை. எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அதை நினைவுகூர்ந்து, பலத்துடன் பயன்படுத்துவாயாக!

ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பாவமற்றவனே {பீஷ்மா}, அது {பிரஸ்வாப ஆயுதம்} தானாகவே உன்னிடம் வரும். அதைக் கொண்டு, ஓ! கௌரவா {பீஷ்மா}, வலிமையுத் சக்தியும் கொண்ட அனைவரையும் நீ தடுக்க இயன்றவனாவாய். ஓ! மன்னா {பீஷ்மா}, அந்த ஆயுதத்தால் ராமர் {பரசுராமர்} முற்றிலுமாகக் கொல்லப்படமாட்டார். எனவே, ஓ! மதிப்புகளை அளிப்பவனே {பீஷ்மா}, அதைப் பயன்படுத்துவதால் நீ எந்தப் பாவத்தையும் அடையமாட்டாய்! இந்த உனது ஆயுதத்தின் {பிரஸ்வாபத்தின்} சக்தியால் பீடிக்கப்படும் அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} உறக்கத்தில் வீழ்வார்.

இப்படி அவரை {பரசுராமரை} வீழ்த்தும் நீ, ஓ! பீஷ்மா, சம்போதனம் என்று அழைக்கப்படும் விருப்பத்திற்குரிய ஆயுதத்தால் போரில் மீண்டும் அவரை எழுப்புவாய். ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, காலையில் தேரில் நிலைத்து நின்று நாங்கள் சொன்னதைச் செய்வாயாக! உறக்கத்தையும், மரணத்தையும் நாங்கள் சமமாகவே மதிக்கிறோம். ஓ! மன்னா, ராமர் {பரசுராமர்} நிச்சயம் இறக்கமாட்டார்! எனவே, பிரஸ்வாபம் என்ற இந்த ஆயுதத்தை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து அதைப் பயன்படுத்துவாயாக!" என்றனர். ஓ! மன்னா {துரியோதனா} இதைச் சொன்னவர்களும், எண்ணிக்கையில் எட்டாக {8} இருந்தவர்களும், ஒருவரை ஒருவர் ஒத்திருந்தவர்களும், பிரகாசமிக்க உடல்களைக் கொண்டவர்களுமான அந்த அந்தணர்களில் முதன்மையானோர் அனைவரும் எனது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்" என்றார் {பீஷ்மர்}.