Sunday, July 26, 2015

"நான் வீழ்ந்தேன்!" என்ற பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 188

"I am vanquished" said Parasurama! | Udyoga Parva - Section 188 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைப் போரில் இருந்து விலகுமாறு தேவர்கள் கேட்டும், பீஷ்மர் பிரஸ்வாபனாஸ்திரத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தது; அதைக் கண்ட நாரதர் பீஷ்மரை வந்து தடுத்தது; அந்த எட்டு அந்தணர்களும் பீஷ்மரிடம் ஆயுதத்தை விலக்குமாறு வேண்டியது; பிரஸ்வாபனாஸ்திரத்தைத் திரும்பப் பெற்ற பீஷ்மர், பிரம்மாஸ்திரத்தை எழுப்பியது; தான் வீழ்ந்ததாகப் பரசுராமர் பீஷ்மரிடம் சொன்னாலும், போரைக் கைவிடாதிருந்தது; பரசுராமரின் மூதாதையர் வந்து பரசுராமரைத் தடுத்தது; பின்வாங்காத பரசுராமரை விட்டுப் பீஷ்மரிடம் விலகுமாறு வேண்டிய நாரதரும் பரசுராமரின் மூதாதையரும்; இருவரும் கேட்காததால் போர்க்களத்தின் நடுவில் இருவரையும் தடுத்துக் கொண்டு அவர்கள் நின்றது; பரசுராமர் விலகியது; பரசுராமரை வணங்கிய பீஷ்மர்...

பரசுராமர் (அம்பையினால் பீஷ்மருடன் எற்பட்ட பெரும்போரின்போது)
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "நான் இத்தீர்மானத்தை எடுத்தபோது, ஓ! மன்னா {துரியோதனா}, ஆகாயத்தில் பெரிதான கலவரக்குரல்கள் {கூக்குரல்கள்} எழுந்தன. அவை {அந்தக் குரல்கள்}, "ஓ! குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிரஸ்வாப ஆயுதத்தை {பிரஸ்வாபனாஸ்திரத்தை} ஏவி விடாதே" என்றன. அவற்றைத் தவிர்த்த {அலட்சியம் செய்த} நான், பிருகுவின் வழித்தோன்றலின் {பரசுராமரின்} மீது அதைக் குறி வைத்தேன். நான் அப்படிக் குறி வைத்தபோது, நாரதர் என்னிடம், "ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, இதோ வானத்தில் தேவர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கூட உன்னை இன்று தடுக்கிறார்கள்! பிரஸ்வாப ஆயுதத்தைக் குறி வைக்காதே! ராமர் {பரசுராமர்}, பிரம்மத் தகுதி படைத்த தவசியும், உனது ஆசானும் ஆவார். கௌரவ்யா {பீஷ்மா}, அவரை எப்போதும் {எவ்விதத்திலும்} அவமதிக்காதே" என்றார்.


நாரதர் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, பிரம்மத்தை உச்சரிக்கும் {பிரம்மவாதிகளான} அந்த எட்டு {8} பேரும் வானத்தில் நிற்பதைக் கண்டேன். ஓ! மன்னா {துரியோதனா}, புன்னகைத்தபடியே அவர்கள் என்னிடம் மெதுவாக, "ஓ! பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, நாரதர் சொல்வதை அப்படியே செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {பீஷ்மா}, அதுவே உலகத்துக்கு உயர்ந்த நன்மையுமாகும்" என்றனர். பிறகு, பிரஸ்வாபம் என்று அழைக்கப்பட அந்தப் பெரும் ஆயுதத்தை விலக்கிக் கொண்ட நான், பிரம்மம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை}, அந்த மோதலில் விதிப்படி எழுப்பினேன்.

பெருங்கடுப்புடன் இருந்த ராமர் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் சிங்கமே {துரியோதனா}, பிரஸ்வாபாயுதம் திரும்பப் பெறப்பட்டதைக் கண்டு திடீரென, "இழிந்தவன் நான், ஓ! பீஷ்மா! நான் வீழ்த்தப்பட்டேன்" என்று உரத்துக் கூறினார். பிறகு அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தனது மதிப்பிற்குரிய தந்தையையும், தனது தந்தையரின் தந்தையரையும் {மூதாதையரையும்} தன் முன்னிலையில் கண்டார். அவரை {பரசுராமரைச்} சூழ்ந்து நின்ற அவர்கள், அவரிடம் {பரசுராமரிடம்} இந்த ஆறுதல் வார்த்தைகளைப் பேசினார்கள். அவர்கள், "ஓ! ஐயா {பரசுராமா}, பீஷ்மனிடமோ, குறிப்பாக வேறு எந்த க்ஷத்திரியனிடமோ போரில் ஈடுபடும் துடுக்குத்தனமான இது போன்ற தகாத துணிச்சலை மீண்டும் எப்போதும் வெளிக்காட்டாதிருப்பாயாக. ஓ! பிருகு குலத் தோன்றலே {பரசுராமா}, போரிடுவது க்ஷத்திரியனின் கடமையாகும்! (வேத) கல்வியும், நோன்புகளில் பயிற்சியுமே அந்தணர்களுக்கு உயர்ந்த செல்வமாகும்! இதற்கு முன்பு, ஆயுதங்களை எடுக்கும்படி எங்களால் உனக்குச் சொல்லப்பட்டது ஒரு காரியத்தின் நிமித்தமாக மட்டுமே. அந்தக் கொடூரமான, செயற்கரிய சாதனையை நீ செய்துவிட்டாய். பீஷ்மனுடனான இந்தப் போரே உனது கடைசிப் போராகட்டும். ஏனெனில், போதுமென்ற அளவுக்கு நீ ஏற்கனவே போர் செய்துவிட்டாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பரசுராமா}, போரை விட்டுவிடு. நீ அருளப்பட்டிருப்பாயாக! இதுவே நீ வில்லை எடுக்கும் கடைசித் தருணமாக இருக்கட்டும்! ஓ! யாராலும் வெல்லப்பட முடியாதவனே {பரசுராமா}, வில்லை ஒரு புறமாகத் தூக்கியெறிந்துவிட்டு, ஓ! பிருகு குலத்தோனே {பரசுராமா}, தவத்துறவுகளைப் பயில்வாயாக!

சந்தனுவின் மகனான பீஷ்மன், தேவர்கள் அனைவராலும் தடுக்கப்படுவதைப் பார்! அவர்கள் அவனிடம் {பீஷ்மனிடம்} "இந்தப் போரில் இருந்து விலகுவாயாக! உனது ஆசானான ராமரிடம் {பரசுராமரிடம்} நீ போரிடாதே! ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, போரில் ராமரை {பரசுராமரை} வீழ்த்துவது உனக்கு முறையாகாது. ஓ! கங்கையின் மைந்தா {பீஷ்மா}, இந்த அந்தணருக்கு, போர்க்களத்தில் அனைத்து மரியாதைகளைச் செய்வாயாக! உன்னைப் பொறுத்தவரை நாங்கள் உனக்கு மூத்தவர்களானதால், உன்னைத் தடுக்கிறோம்!" என்கின்றனர். பீஷ்மனோ, வசுக்களில் முதன்மையானோரில் ஒருவனாவான். ஓ! மகனே {பரசுராமா}, நீ இன்னும் உயிரோடு இருப்பது நற்பேறாலேயே! கங்கையிடம் பிறந்த சந்தனுவின் மகனும், கொண்டாடப்படும் வசுவுமான அவனை உன்னால் எப்படி வீழ்த்த முடியும்? எனவே, ஓ! பார்கவா {பரசுராமா}, {போரில் இருந்து} விலகுவாயாக! பாண்டவர்களில் முதன்மையானவனும், இந்திரனின் வலிமைமிக்க மகனுமான அர்ஜுனனே பீஷ்மனைக் கொல்பவனாகச் சுயம்புவால் விதிக்கப்பட்டிருக்கிறான்" என்றனர்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "தனது மூதாதையரால் இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "என்னால் போரை விட முடியாது. இதுவே நான் மனப்பூர்வமாக நோற்றுவரும் நோன்பாகும். இதற்கு முன்பு, போரைக் கைவிட்டு நான் களத்தை விட்டு அகன்றதில்லை. பாட்டன்களே, நீங்கள் விரும்பினால், கங்கையின் மகனைப் {பீஷ்மனைப்} போரில் இருந்து விலகச் செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரை, எவ்வகையிலும், என்னால் போரை விட முடியாது" என்றார் {பரசுராமர்}. அவரது வார்த்தைகளைக் கேட்டவர்களும், ரிசீகரைத் தலைமையாகக் கொண்டவர்களுமான அந்தத் தவசிகள், நாரதரின் துணையோடு என்னிடம் வந்து, "ஓ! ஐயா, போரில் இருந்து விலகுவாயாக! அந்தணர்களில் முதன்மையானவனை {பரசுராமனை} மதிப்பாயாக!" என்றனர். க்ஷத்திரிய அறநெறியின் நிமித்தமாக நான் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "போரில் இருந்து புறமுதுகிட்டு திரும்புவதில்லை என்பதும், கணைகளால் முதுகில் காயம்படேன் என்பதும் இவ்வுலகில் நான் ஏற்கனவே நோற்றிருக்கும் நோன்பாகும். சலனத்தாலோ, துன்பத்தாலோ, அச்சத்தாலோ, செல்வத்தின் நிமித்தமாகவோ என்னால் எனது நித்திய கடமையைக் கைவிடமுடியாது! இதுவே எனது நிலையான தீர்மானமாகும்" என்றேன்.

பிறகு, நாரதரைத் தலைமையாகக் கொண்ட அந்தத் தவசிகளும், ஓ! மன்னா {துரியோதனா}, எனது தாய் பாகீரதியும் {கங்கையும்}, போர்க்களத்தில் எனக்கு முன்பாகப் {எங்கள் இருவருக்கு நடுவில்} நின்று கொண்டனர். எனினும், நான் முன்பு போலவே, போரிடும் தீர்மானத்துடன் வில் மற்றும் அம்புகளுடன் அமைதியாக நின்றேன். பிறகு அவர்கள் மீண்டும் ஒரு முறை ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அவரிடம், "அந்தணர்களின் இதயம் நெய்யாலானவை {மென்மையானவை}. எனவே, ஓ! பிருகு குலத்தோனே, அமைதியடைவாயாக! ஓ! ராமா, ஓ! ராமா, ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {பரசுராமா}, போரில் இருந்து விலகுவாயாக! பீஷ்மன் உன்னால் கொல்லப்பட இயலாதவன். அதேபோல, ஓ! பார்கவா {பரசுராமா}, நீயும் பீஷ்மனால் கொல்லப்பட இயலாதவன்" என்றார்கள்.

(போரைத்) தடைசெய்யும் வகையில் களத்தில் நின்று கொண்டே இவ்வார்த்தைகளைப் பேசிய பித்ருக்கள், பிருகு குலத்தின் வழித்தோன்றலை {பரசுராமரை}, தனது ஆயுதங்களை ஒரு புறம் வைக்கும்படி செய்தார்கள். சரியாக அதே நேரத்தில், சுடர்மிகும் பிரகாசம் கொண்டவர்களும், ஆகாயத்தில் எழுந்த பிரகாசமான நட்சத்திரங்களைப் போன்றவர்களும், பிரம்மத்தை உச்சரிப்பவர்களுமான அந்த எண்மரைக் {எட்டு (8) பேரைக்} கண்டேன். போருக்காக நின்றிருந்த என்னிடம், பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, உனது ஆசானான ராமரிடம் {பரசுராமரிடம்} செல்வாயாக. உலகங்கள் அனைத்துக்கும் நன்மையானதைச் செய்வாயாக", என்றனர். பிறகு, தனது நலன்விரும்பிகளின் சொற்களை ஏற்று ராமர் {பரசுராமர்} விலகியதைக் கண்ட நான், உலகங்களின் நன்மைக்காக, எனது நலன்விரும்பிகளின் சொற்களை ஏற்றேன். மிகவும் சிதைவுக்குள்ளாயிருந்தாலும் நான் ராமரை {பரசுராமரை} அணுகி அவரை வழிபட்டேன்.

பிறகு அந்தப் பெரும் தவசியான ராமர் {பரசுராமர்}, புன்னகையுடனும், பெரும்பாசத்துடனும் என்னிடம், "பூமியில் உனக்கு இணையான க்ஷத்திரியன் எவனும் கிடையாது! இந்தப் போர் எனக்கு மிகவும் மகிழ்வூட்டியது. ஓ! பீஷ்மா, இப்போது நீ போகலாம்" என்றார். பிறகு எனது முன்னிலையிலேயே அந்தக் கன்னிகையை (காசியின் மகளை) {அம்பையை} அழைத்த பார்கவர் {பரசுராமர்}, அந்த உயர் ஆன்மா கொண்டோர் அனைவரின் மத்தியிலும் கவலை நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னார்" என்றார் {பீஷ்மர்}.