Wednesday, July 29, 2015

சிகண்டினியும்! ஸ்தூணாகர்ணனும்! - உத்யோக பர்வம் பகுதி 194

Sikhandini and Sthunakarna! | Udyoga Parva - Section 194 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : தனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தனது மகளை மகன் என்று சொன்னதாக ராணி  துருபதனிடம் பலர் முன்னிலையில் சொன்னது; ராணியின் சொல்லால் குற்றமற்ற தான் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் முறையானது என்று மந்திரிகளிடம் சொன்ன துருபதன், அவர்கள் மூலம் தனது நகரைக் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; துருபதனும் அவனது ராணியும் தேவர்களைத் துதித்தது; தன் தாய் தந்தையரின் நிலையை எண்ணிப் பார்த்த சிகண்டினி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி அடர்ந்த காட்டினுள் புகுந்தது; அங்கிருந்த ஒரு மாளிகையில் பல நாட்களாக உணவின்றிக் கிடந்த சிகண்டினி; அந்தக் காட்டைக் காத்து வந்த யக்ஷன் ஸ்தூணன், சிகண்டினியிடம் மனம் இரங்கி, உதவி செய்வதாக உறுதியளித்தது; சிகண்டினி அந்த யக்ஷனிடம் தனக்கு நேர்ந்தது அத்தனையும் சொன்னது...

சிகண்டினி - ஸ்தூணாகர்ணன் ( Sikhandini and Sthunakarna )
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "பிறகு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி குறித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, "பிள்ளையற்றிருந்த நான், ஓ! பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன்! என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ! மன்னர்களில் காளையே {துருபதரே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ! மன்னா {துருபதரே}, நீர் அவளுக்குத் தசார்ணகர்கள் மன்னின் மகளையும் மணமுடித்து வைத்தீர். நானும் (பெரும்) தேவனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்து அச்செயலை அங்கீகரித்தேன். உண்மையில், "மகளாய்ப் {பெண்ணாய்ப்} பிறந்த இவள் மகனாக {ஆணாக} மாறுவாள்" என்ற சிவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தே, அதை நான் தடுக்காமல் இருந்தேன்.


இவை அனைத்தையும் கேட்டவனும், யக்ஞசேனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான துருபதன், இந்த உண்மைகள் அனைத்தையும் தனது ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்} தெரிவித்தான். மேலும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, (தனது நாட்டின் மீது படையெடுக்கப்பட்டால்) தனது குடிமக்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். அவனே {துருபதனே} தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்து இருந்தாலும், தான் செய்த கூட்டு {சம்பந்தம்} முறையானதே என்று வெளிப்படுத்தும் வகையில் [1], தனது திட்டங்களைச் சிதறாத உறுதியுடன் தீர்மானிக்கத் தொடங்கினான்.

[1] தனக்கு உண்மை தெரியாதெனவும், மகனில்லாத தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டே தான் அவ்விதம் செய்ததாகவும் வெளிப்படுத்தினான்.

மன்னன் துருபதனின் நகரம் {காம்பில்யம்}, ஓ! பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும். எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள், அதை மிகக் கவனமாகப் பாதுகாத்து, (தற்காப்பு வேலைப்பாடுகளால்) அரணமைத்துக் கொண்டனர். எனினும் தனது ராணியுடன் கூடிய மன்னன் {துருபதன்} பெரிதும் துன்புற்று, தனது சம்பந்தியுடன் போர் ஏற்படாதிருக்கச் செய்வது எப்படி என நினைத்தான். இதையே மனதில் ஆலோசித்த அவன் {துருபதன்}, தேவர்களுக்குத் தனது துதியைச் செலுத்த ஆரம்பித்தான்.

தேவனை நம்பி தனது துதிகளைச் செலுத்தும் அவனை {துருபதனைக்} கண்ட அவனது மதிப்புமிக்க மனைவி, ஓ! மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, "தேவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும்! எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும்? எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக! தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ! தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக! தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ! பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ! மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ! மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்! ஓ! ஏகாதிபதி, நீர் விரும்பும்படி தேவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துவீராக" என்றாள் {துருபதனின் ராணி}.

இப்படியே கணவனும் மனைவியும் துயர் நிறைந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆதரவற்ற அவர்களது மகள் சிகண்டினி வெட்கக்கேட்டால் நிறைந்தாள். பிறகு அவள் {சிகண்டினி}, "என்னால்தான் இவர்கள் இருவரும் துயரில் மூழ்கியிருக்கிறார்கள்!" என்று நினைத்தாள். இப்படி நினைத்த அவள் {சிகண்டினி}, தனது உயிரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்த அவள், வீட்டை விட்டு அகன்று, பெரும் சோகத்தால் நிறைந்து, அடர்ந்த காட்டுக்குள் சென்றாள். ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்படும் பயங்கரமான ஒரு யக்ஷனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தத் தனிமையான காட்டுக்குள் அவள் {சிகண்டினி} சென்றாள். அந்த யக்ஷன் மீது கொண்ட பயத்தால் மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் செல்லவே மாட்டார்கள். அதற்குள் {அந்தக் காட்டிற்குள்} மணற்தூளால் {சுண்ணாம்பு மற்றும் மண்ணால்} பூசப்பட்ட உயர்ந்த சுவர்களும், வாயில்களும் கொண்ட ஒரு மாளிகை இருந்தது. அங்கிருந்து {அந்த மாளிகையில் இருந்து} வறுத்த நெல்லின் {Fried Paddy} {விலாமிச்சையின்} நறுமணத்தைச் சுமந்தபடி புகையும் வந்து கொண்டிருந்தது.

ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மாளிகைக்குள் நுழைந்த துருபதனின் மகளான சிகண்டினி, பல நாட்களாக உணவைத் துறந்து தன்னை வற்ற செய்தாள். அதன் பேரில், ஸ்தூணன் என்று அழைக்கப்பட்டவனும், கருணை கொண்டவனுமான அந்த யக்ஷன், அவளிடம் {சிகண்டினியிடம்} தன்னை வெளிக்காட்டினான். அவளிடம் {சிகண்டினியிடம்} விசாரிக்கும் வகையில், அவன் {அந்த யஷன் ஸ்தூணகர்ணன் சிகண்டினியிடம்}, "இந்த உனது முயற்சியின் நோக்கம் என்ன? அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக!" என்றான். அப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சிகண்டினி}, அவனுக்கு {ஸ்தூணகர்ணனுக்குப்} பதிலளிக்கும் வகையில், "நீ அதைச் சாதிக்க இயன்றவனல்ல. {அது உன்னால் ஆகக்கூடியதல்ல}." என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

எனினும், அந்தக் குஹ்யகன் {யக்ஷன்}, நொடியும் தாமதிக்காமல், மறுமொழி சொல்லும் வகையில், "நான் சாதிப்பேன்! நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ! இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும்! கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன்! சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக!" என்றான். இப்படி உறுதி கூறப்பட்ட சிகண்டினி, ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த யக்ஷர்களின் தலைவனிடம் நடந்தது அத்தனையும் விபரமாகத் தெரிவித்தாள்.

மேலும் அவள் {சிகண்டினி ஸ்தூணகர்ணனிடம்}, "ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக! உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ! பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித்திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ! குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக!" என்றாள் {சிகண்டினி}.