The curse on Sthuna! | Udyoga Parva - Section 195 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 22)
பதிவின் சுருக்கம் : சிகண்டினிக்கு அந்த யக்ஷன் ஒரு நிபந்தனையின் பேரில் தனது ஆண் தன்மையைக் கொடுப்பது; சிகண்டி மகிழ்ச்சியுடன் தனது நகரத்திற்குத் திரும்புவது; சிகண்டியைப் பரிசோதித்த ஹிரண்யவர்மன் மகிழ்ந்து, தனது மகளைக் கண்டித்து விட்டுச் சென்றது; ஸ்தூணனின் மாளிக்கைக்குக் குபேரன் வந்தது; பெண்தன்மையை அடைந்த ஸ்தூணனைக் குறித்துக் குபேரன் அறிவது; அந்தப் பெண்மை அப்படியே நிலைத்துப் போகட்டும் எனக் குபேரன் ஸ்தூணனைச் சபித்தது; ஹிரண்யவர்மன் சென்றதும் ஸ்தூணனிடம் திரும்பிய சிகண்டி; நடந்தவற்றைச் சொன்ன ஸ்தூணன், சிகண்டியை வாழ்த்தி அனுப்பியது; இந்தக் கதையைத் துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர், அந்த அம்பையே சிகண்டி என்றும், பெண்ணைத் தான் கொல்வதில்லை என்றும் சொன்னது; பீஷ்மரின் நடத்தை சரியானதே என்று துரியோதனன் நினைத்தது...
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிகண்டினியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், விதியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன்}, தனது மனதில் ஆலோசித்த பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்னான்; உண்மையில், அஃது அப்படியே விதிக்கப்பட்டது. மேலும், ஓ! கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் நான் செய்வேன்! எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக! மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள்! ஓ! இளவரசி {சிகண்டினியே}, நான் உனது பெண்தன்மையைச் சுமப்பேன்! உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக! நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன்!" என்றான் {யக்ஷன் ஸ்தூணாகர்ணன்}.
இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டினி அவனிடம் {அந்த யக்ஷனிடம்}, "ஓ! அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவியே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக! பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய்!" என்றாள் {சிகண்டினி}.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "(ஒருவருக்கொருவர்) இப்படிச் சொல்லிக் கொண்ட இருவரும், ஓ! மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சால குலத்தின் அந்தச் சிகண்டினி ஆண்தன்மையை அடைந்ததும், தனது நகருக்குள் பெருமகிழ்ச்சியோடு நுழைந்து, தனது தந்தையை {துருபதனை} அணுகினான். நடந்தது அனைத்தையும் அவன் {சிகண்டி} துருபதனிடம் தெரிவித்தான். இஃது அனைத்தையும் கேட்ட துருபதன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தனது மனைவியோடு சேர்ந்த அந்த மன்னன் {துருபதன்}, மஹேஸ்வரனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.
பிறகு அவன் {துருபதன்}, ஓ! மன்னா {துரியோதனா}, தசார்ணக ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்} "இந்த எனது பிள்ளை ஆடவனே. இஃது உன்னால் நம்பப்படட்டும்" என்று சொல்லி தூதர்களை அனுப்பினான். அதேவேளையில், சோகம் மற்றும் துக்கத்தால் நிறைந்திருந்த தசார்ணகர்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, திடீரெனப் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதனை அணுகினான். காம்பில்யத்தை அடைந்த அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான ஒருவரை முறையாகக் கௌரவித்து, தனது தூதராக அனுப்பினான்.
அவன் {ஹிரண்யவர்மன்} அந்தத் தூதரிடம், "ஓ! தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, "ஓ! தீய புரிதல் கொண்டவனே {தீய புத்தி கொண்டவனே}, உனது மகளாக இருக்கும் ஒருத்திக்கு எனது மகளை மனைவியாகத் தேர்ந்தெடுத்த நீ, அந்த வஞ்சகச் செயலுக்கான கனியை இன்று அறுவடை செய்வாய் என்பதில் ஐயமில்லை" என்று சொல்வீராக" என்று சொன்னான் {ஹிரண்யவர்மன் > அந்தணத் தூதரிடம்}.
இப்படிச் சொல்லப்பட்டவரும், அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பப்பட்டவருமான அந்த அந்தணர், தசார்ணகத் தூதுவராகத் துருபதனின் நகரத்திற்குப் புறப்பட்டார். அந்த நகரத்தை {காம்பில்யத்தை} அடைந்த அந்தப் புரோகிதர், துருபதனின் முன்னிலைக்குச் சென்றார். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} சிகண்டியோடு சேர்ந்து, அந்தத் தூதருக்கு, ஒரு பசுவையும், தேனையும் அளித்தான். எனினும், அவ்வழிபாட்டை ஏற்காத அந்த அந்தணர், பொற்கவசம் பூண்டவனான தசார்ணகர்களின் துணிவுமிக்க ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} தன் மூலம் சொல்லியனுப்பிய வார்த்தைகளை அவனிடம் {துருபதனிடம்} சொன்னார்.
அவர் {அந்தணத் தூதர் துருபதனிடம்}, "ஓ! தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன்! உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, "நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்த வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ! அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள்!" என்றான் {துருபதன்}.
பிறகு மன்னன் துருபதன், வேதங்களைக் கற்ற அந்தணர் ஒருவரைத் தனது தூதராக ஏற்படுத்தி, உயர் ஆன்ம ஹிரண்யவர்மனிடம் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர், தசார்ணக ஆட்சியாளனான மன்னன் ஹிரண்யவர்மனிடம் சென்று, அவனிடம், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, "இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும்! யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது!" என்று {துருபதனின் வார்த்தைகளைத் தூதனாகச் சென்ற அந்த அந்தணர்} சொன்னார்.
துருபதனின் வார்த்தைகளைக் கேட்ட தசார்ணகர்க்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, பிறகு, சோகத்தால் நிறைந்து, சிகண்டி ஆணா? பெண்ணா? என்பதை உறுதி செய்யும்பொருட்டு, பெரும் அழகு படைத்த இளம் மங்கையர் பலரை அவனிடம் அனுப்பி வைத்தான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பி வைக்கப்பட்ட அந்த மங்கையரும், (உண்மையை) உறுதி செய்து கொண்டு, ஆண் பாலினத்தோரில் வலிமைமிக்கவன் சிகண்டி என்று தசார்ணகர்களின் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.
அந்தச் சான்றைக் கேட்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்}, பெருமகிழ்ச்சியால் நிறைந்து, தனது சம்பந்தியான துருபதனிடம் சென்று, சில நாட்களை அவனுடன் {துருபதனுடன்} மகிழ்ச்சியாகக் கழித்தான். {சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான்}. மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} சிகண்டிக்கு அபரிமிதமான செல்வத்தையும், பல யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அளித்தான். (அங்கே தங்கியிருந்த காலம் வரை) துருபதனால் வழிபடப்பட்ட அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, தனது மகளைக் கண்டித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டான். கோபம் தணிந்தவனும், தசார்ணகர்களின் ஆட்சியாளனுமான மன்னன் ஹிரண்யவர்மன், மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றதும், சிகண்டி மிகவும் மகிழத் தொடங்கினான்.
இதற்கிடையில், (பாலினப் பரிமாற்றம் நடந்த) சில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களின் தோள்களில் எப்போதும் சுமக்கப்படும் குபேரன், (பூமியின் ஊடான) தனது பயணத்தின் போது, ஸ்தூணனின் வசிப்பிடத்திற்கு வந்தான். {ஸ்தூணனின்} அந்த மாளிகைக்கு மேலே (ஆகாயத்தில்) நின்ற அந்தப் பொக்கிஷப் பாதுகாவலன் {குபேரன்}, அழகிய மலர்மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், நறுமணமிக்கப் புற்களின் வேர்களாலும், பல இனிய நறுமணத் தைலங்களாலும் மணமூட்டப்பட்டிருந்த யக்ஷன் ஸ்தூணனின் அற்புத வீட்டைக் கண்டான்.
அங்கே தூப நறுமணங்களும் மற்றும் கவிகைகளும் நிறைந்திருந்தன. கொடிகள் மற்றும் கொடிச்சீலைகளோடு கூடிய அது {அந்த மாளிகை} மிக அழகாக இருந்தது. அனைத்து வகை உணவுப்பொருட்கள் மற்றும் பானத்தால் அது நிறைந்திருந்தது. ரத்தினம் மற்றும் தங்கத்தாலான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு விதமான மலர்களின் நறுமணத்தால் தூபம் போடப்பட்டதும், நீர் தெளித்து நன்கு கூட்டப்பட்டதுமான அந்த யக்ஷனின் {ஸ்தூணனின்} அழகிய வீட்டைக் கண்ட அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த யக்ஷர்களிடம், "அளவிடமுடியா ஆற்றல் கொண்டோரே, ஸ்தூணனின் இந்த மாளிகை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளதே! எனினும், அந்தத் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை? எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும்! இதுவே எனது நோக்கமாக இருக்கிறது!" என்றான் {குபேரன்}.
அவனது {குபேரனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த யக்ஷர்கள் {குபேரனிடம்}, "ஓ! மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள்! ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான்! எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை! இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {குபேரரே}, அந்த ஸ்தூணன் உம்மிடம் வரவில்லை! இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக!" என்றனர் {யக்ஷர்கள்}.
அப்போது, "தேர் {விமானம்} இங்கேயே நிற்கட்டும்! ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும்!" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, "நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்!" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவன் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, செல்வத்தை அளிப்பவனான அவன் {குபேரன்}, "குஹ்யகர்களே, இந்த இழிந்தவனின் பெண் தன்மை, இப்போது இருப்பது போலவே நீடிக்கட்டும்" என்று கோபத்தால் சபித்தான்.
மேலும் அந்த உயர் ஆன்ம யக்ஷர்களின் தலைவன், "யக்ஷர்கள் அனைவரையும் அவமதித்து, சிகண்டினியிடம் இருந்து அவளது பெண் தன்மையைப் பெற்றுக் கொண்டு, உனது சொந்தப் பாலினத்தை {ஆண்தன்மையை} அவளுக்குக் கொடுத்துவிட்டதால், ஓ! பாவம் நிறைந்த செயல்களைக் கொண்டவனே {ஸ்தூணாகர்ணா}, இதற்கு முன் எவனும் செய்யாததை நீ செய்திருப்பதால், இந்த நாள் முதலே, நீ பெண்ணாகவே நீடிப்பாய், அவளும் ஆணாகவே நீடிப்பாள்" என்றான்.
அவனது {குபேரனது} இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷர்கள் அனைவரும், வைஸ்ரவணனை {குபேரனை} மென்மைப்படுத்தத் {அமைதிப்படுத்தத்} தொடங்கி, ஸ்தூணாகர்ணன் சார்பாக மீண்டும் மீண்டும் பேசி, "உமது சாபத்திற்கான எல்லையை {முடிவை} நிர்ணியிப்பீராக!" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், "யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான்! எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும்!" என்றான். இதைச் சொன்னவனும், ஒப்பற்றவனுமான அந்த யக்ஷர்களின் தெய்வீக மன்னன் {குபேரன்}, உரிய வழிபாட்டை அடைந்து, குறுகிய நேர இடைவெளியில் பெரும் தூரத்தைக் கடக்கவல்ல, தனது தொண்டர்கள் அனைவருடனும் புறப்பட்டான். இப்படிச் சபிக்கப்பட்ட ஸ்தூணன் அங்கேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தான்.
நேரம் வந்த போது, சிகண்டி ஒரு நொடியும் காலந்தாழ்த்தாமல் அந்த இரவுலாவியிடம் {யக்ஷன் ஸ்தூணனிடம்} வந்தான். அவனது முன்னிலையை அடைந்த அவன் {சிகண்டி}, "ஓ! புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்" என்றான். ஸ்தூணன், "நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற்ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, "ஓ! மன்னனின் மகனே {சிகண்டி}, நான் வைஸ்ரவணனால் {குபேரனால்} சபிக்கப்பட்டேன். இப்போது சென்று, நீ தேர்ந்தெடுத்த மனிதர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்வாயாக. நீ இங்கே வந்தது மற்றும் புலஸ்தியரின் மகனுடைய {குபேரனின்} வருகை ஆகிய இரண்டும் முன்பே விதிக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். இவை யாவும் தவிர்க்க இயலாவையாகும்" என்றான் {ஸ்தூணன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "யக்ஷனான ஸ்தூணனால் இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதா {துரியோதனா}, பெரும் மகிழ்ச்சியால் நிரம்பி தனது நகரத்திற்கு வந்தான். அவன் {சிகண்டி} பல்வேறு விதமான நறுமணத் தைலங்கள், மலர் மாலைகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களால் மறுபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்}, தேவர்களையும், பெரும் மரங்களையும், நாற்சந்திகளையும் வழிபட்டான்.
பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதன், விருப்பங்களால் வெற்றிமகுடம் சூட்டப்பட்ட தனது மகன் சிகண்டியுடனும், தனது இரத்த உறவினர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துரோணருக்குச் சீடனாக அளித்தான். அந்த இளவரசன் சிகண்டி, உங்கள் அனைவருடன் சேர்ந்து, நால்வகை ஆயுத அறிவியலையும் அடைந்தான். மேலும் (அவனது தம்பியான) பிருஷத குல திருஷ்டத்யும்னனும் {உங்களுக்குப் பிறகு} அதையே {அதே கல்வியை} அடைந்தான்.
உண்மையில், இவை யாவும், ஓ! ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னால் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ! மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, துருபதன் குலத்தில் சிகண்டியாகப் பிறந்தாள். போரிடும் விருப்பத்தால், கையில் வில்லுடன் அவன் {சிகண்டி} என்னை அணுகினால், அவனை நான் ஒருக்கணமும் பார்க்கவோ, அடிக்கவோ மாட்டேன்.
ஓ! மங்காப் புகழ் கொண்டவனே, ஓ! குரு குலத்தின் காளையே {துரியோதனா}, "பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன்!" என்றார் {பீஷ்மர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் துரியோதனன், ஒருக்கணம் சிந்தித்து, பீஷ்மரின் அந்த நடத்தை சரியானதே என்று நினைத்தான்" என்றான் {சஞ்சயன்}.