Friday, July 31, 2015

படைப்பிரிவுகளை மாற்றி அமைத்த யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 199

Yudhishthira changed his divisions order! | Udyoga Parva - Section 199 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனும் தனது படையை மூன்றாகப் பிரித்து அனுப்பியது; பாண்டவப் படை அணிவகுத்து சென்ற காட்சியின் வர்ணனை; இடையில் யுதிஷ்டிரன், கௌரவப் படையைக் குழப்புவதற்காகத் தனது படைப்பிரிவுகளின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது; அந்தப் படையில் இருந்த சில படைக்கலன்களின் எண்ணிக்கையும் அவை பற்றிய குறிப்பும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துரியோதனனைப் போலவே, குந்தி மற்றும் தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, திருஷ்டத்யும்னனின் தலைமையிலான தனது வீரப் போராளிகள் புறப்படக் கட்டளையிட்டான். மேலும், எதிரிகளைக் கொல்பவனும், ஆற்றலில் உறுதியானவனும், சேதிகள், காசிகள் மற்றும் கரூஷர்களின் படைத்தளபதியும், தலைவனுமான திருஷ்டக்கேதுவையும், விராடன், துருபதன், யுயுதானன், சிகண்டி, வலிமைமிக்க வில்லாளிகளும், பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரையும் புறப்பட உத்தரவிட்டான். அந்த வீரமிக்கப் போராளிகள், அழகிய கவசங்களைப் பூட்டிக் கொண்டு, தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் வேள்விப்பீடத்தின் நெருப்பைப் போன்று சுடர்விடும் தங்கத்தாலான காது குண்டலங்களை அணிந்திருந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்க வில்லாளிகள் ஆகாயத்தில் இருக்கும் கோள்களைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.


மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தனது வீரர்கள் அனைவரையும் முறையாக மதித்த பிறகு, அவர்களை அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தொண்டர்கள் மற்றும் சிற்ப வேலைகளால் பிழைப்பவர்கள் ஆகியோர் அடங்கிய துருப்புகளைக் கொண்ட உயர் ஆன்ம மன்னர்களுக்கு அற்புத உணவு வசதிகளையும் மன்னன் யுதிஷ்டிரன் வழங்கினான். அபிமன்யு, பிருஹந்தன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரை திருஷ்டத்யும்னன் தலைமையில் முதலில் அணிவகுத்துச் செல்லும்படி அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கட்டளையிட்டான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பாண்டுவின் மகன்களான பீமன், மற்றும் தனஞ்சனைத் {அர்ஜுனனைத்} தனது படையின் இரண்டாவது பிரிவில் அனுப்பி வைத்தான்.

தங்கள் குதிரைகள், யானைகள் ஆகியவற்றைப் பூட்டி, போர்க்கருவிகளைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்த மனிதர்களாலும், உற்சாகமிகுந்திருந்த போராளிகளின் மகிழ்ச்சியான ஒலியாலும் ஏற்பட்ட ஆரவாரம் சொர்க்கத்தையே எட்டியது {விண்ணை முட்டியது}. அனைத்திலும் இறுதியாக, விராடன், துருபதன் மற்றும் பிற ஏகாதிபதிகளுடன் (அவர்களைத் தன் பக்கத்தில் கொண்டு) மன்னனே {யுதிஷ்டிரனே} அணிவகுத்துச் சென்றான்.

இதுவரை ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததும், திருஷ்டத்யும்னனால் உத்தரவிடப்பட்டதும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான அந்தப் படை, இப்போது நடந்த அணிவகுப்பின் போது அதன் வரிசைகள் விரிவடைந்ததால், (மூர்க்கமான) கங்கையின் ஊற்று போலக் காணப்பட்டது.

பிறகு, தனது அறிவை நம்பியிருக்கும் புத்திமானான யுதிஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்களைக் குழப்புவதற்காக, தனது படைப்பிரிவுகளை வேறு வகையில் மாற்றி அமைத்தான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரௌபதியின் (ஐந்து) மகன்கள், அபிமன்யு, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் மற்றும் பிரபத்திரகர்கள் அனைவரையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், இரண்டாயிரம் {2000} யானைகளையும், பத்தாயிரம் {10000} காலாட்படை வீரர்களையும், ஐநூறு {500} தேர்களையும் கொண்ட தனது படையின் முதல் பிரிவை பீமசேனனின் கட்டளைக்குக் கீழ் அமர்த்தினான்.

விராடன், ஜெயத்சேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாஞ்சாலத்தின் உயரான்ம இளவரசர்களும், பெரும் ஆற்றல் கொண்டவர்களும், கதாயுதம் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்திருந்த இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரைத் தனது படையின் நடுப்பிரிவில் அவன் {யுதிஷ்டிரன்} நிறுத்தினான். அந்த நடுப்பிரிவிலேயே வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அணிவகுத்து வந்தார்கள். ஆயுதங்களில் உயர்வான சாதனை கொண்டவர்களும், கோபத்தால் எரிபவர்களுமான போராளிகள் அங்கே (நிலைநிறுத்தப்பட்டு) இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் குதிரைகளைச் செலுத்தும் வீரப் போராளிகளும், ஐயாயிரம் {5000} யானைகளும், தேர்க்கூட்டங்களும் சுற்றிலும் இருந்தன.

வீரமிக்கவர்களாகவும், விற்கள், வாட்கள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகவும் அணிவகுத்த ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தத் துருப்புகளின் கடலில், யுதிஷ்டிரன் இருந்த அந்தப் பகுதியில், பூமியின் தலைவர்கள் எண்ணற்றோர் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், காலாட்படை வீரர்களும் இருந்தனர். அங்கே, ஓ! மன்னர்களில் காளையே {ஜனமேஜயா}, தனது பெரும் படையுடன் கூடிய சேகிதானனும், சேதிகளின் தலைவனான மன்னன் திருஷ்டக்கேதுவும் அணிவகுத்து நின்றனர். அங்கேதான் வலிமைமிக்க வில்லாளியும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கப் போராளியுமான சாத்யகி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தேர்களால் சூழப்பட்டு, அவற்றை (போருக்கு) வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.

மனிதர்களில் காளையரான க்ஷத்ரஹனன், க்ஷத்ரதேவன் ஆகியோர் தங்கள் தேர்களில் பின்புறம் அணிவகுத்து வந்து, பின்புறத்தைப் பாதுகாத்து நின்றனர். அங்கே (பின்புறத்தில்) தான் வண்டிகள், கூடங்கள், சீருடைகள், வாகனங்கள் மற்றும் இழுவை விலங்குகளும் இருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன. செல்லாதவர்கள், பெண்கள், இளைத்தவர்கள், பலவீனர்கள் மற்றும் தனது செல்வங்களையும், களஞ்சியங்களையும் சுமந்த விலங்குகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு, தனது யானைப் பிரிவின் துணையுடன் யுதிஷ்டிரன் மெதுவாக அணிவகுத்துச் சென்றான்.

உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனும், போரில் ஒப்பற்றவனுமான சௌசிட்டி, சிரேனிமத், வாசுதேவன், காசி ஆட்சியாளனின் மகன் விபு, இருபதாயிரம் {20,000} தேர்கள், தனது அங்கங்களில் வரிசையாக மணிகளைத் தாங்கிய பத்து கோடி {10,00,00,000} உயர்வகைக் குதிரைகள், நல்ல இனத்தைச் சார்ந்தவையும், மதம் பிளந்தவையும், அசையும் மேகத் திரளைப் போன்றவையும், ஏர்க்காலின் {கலப்பையின்} அளவு நீளம் கொண்ட தந்தங்களைக் கொண்டவையுமான இருபதாயிரம் {20,000} யானைகளும் பின்தொடர அவன் {யுதிஷ்டிரன்} சென்றான். மேலும் இவை அந்த ஏகாதிபதிகளின் பின்பே நடந்து சென்றன. இவை தவிர்த்து, யுதிஷ்டிரன் தனது ஏழு அக்ஷௌஹிணி படையிலும் கொண்டிருந்த யானைகள், மழை பொழியும் மேங்களைப் போன்ற துதிக்கைகளும், வாய்களும் கொண்டவையும், மலைகளைப் போல அசைபவையுமான எழுபதாயிரம் {7,000} எண்ணிக்கையில் அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்பற்றிச் சென்றன.

இப்படியே அந்தப் புத்திமானான குந்தியின் மகனால் {யுதிஷ்டிரனால்}, அந்தப் பயங்கரப் படை வரிசைப்படுத்தப்பட்டது. அந்தப் படையை நம்பியே அவன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரன் மகனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} போரிட்டான். ஏற்கனவே பெயர் சொல்லப்பட்டவர்களைத் தவிர, நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் இருந்த பிற மனிதர்கள், உரக்க ஆரவாரம் செய்தபடி ஆயிரங்களில் எண்ணிக்கையைக் கொண்ட அந்தப் (பாண்டவப் படையின்) பிரிவுகளைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் ஆயிரக்கணக்கான துந்துபிகளை அடித்தபடி, பத்தாயிரக்கணக்கான சங்குகளை ஊதிக் கொண்டு சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.

****************** அம்போபாக்யான உபபர்வம் முற்றிற்று ******************
********* உத்யோக பர்வம் முற்றிற்று *********