Thursday, July 30, 2015

கௌரவப் படையின் தயாரிப்பு! - உத்யோக பர்வம் பகுதி 198

The preparation of Kaurava Army! | Udyoga Parva - Section 198 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 25)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தனது படையை மூன்றாகப் பிரித்து அனுப்பியது; மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பாசறைக்குச் சென்றது; பாசறைகளில் துரியோதனன் செய்து வைத்த ஏற்பாடுகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அடுத்த {நாள் காலையில், மேகமற்ற வானத்தின் அடியில், திருதராஷ்டிரன் மகனான துரியோதனனால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு எதிராகப் புறப்பட்டனர். நீராடலின் மூலம் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அவர்கள் அனைவரும் மாலைகள் தரித்து, வெள்ளுடை உடுத்தியிருந்தனர். நெருப்பில் {அக்னியில்} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தி {நெய்விட்டு ஹோமம் செய்து}, தங்களுக்கு அந்தணர்களின் ஆசிகளைக் கிடைக்கச் செய்து, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள், (அவரவர்) கொடிகளை உயர்த்தினர். அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், பெரும் வீரம் கொண்டவர்களாகவும், அற்புத நோன்புகளை நோற்றவர்களாகவும் இருந்தனர். (பிற மக்களின்) விருப்பங்களை அளிப்பவர்களான அவர்கள் அனைவரும் போரில் திறம்பெற்றவர்களாகவும் இருந்தனர். பெரும் பலத்துடன் கூடிய அவர்கள், ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை கொண்டு, போரில் மிக உயர்ந்த பகுதிகளை வெற்றிக் கொள்ள {சொர்க்கத்தையடைய} விரும்பி ஒன்றுபட்ட நோக்கத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.


அவந்தியைச் சேர்ந்த விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரும், கேகயர்களும், பாஹ்லீகர்களும், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தலைமையில் முதலில் புறப்பட்டுச் சென்றனர். பிறகு அஸ்வத்தாமன், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, சிந்து நாட்டு ஜெயத்ரதன், தெற்கு மற்றும் மேற்குத்திசை நாடுகள் மற்றும் மலைப்பகுதிகள் ஆகியவற்றின் மன்னர்கள், காந்தாரர்களின் ஆட்சியாளனான சகுனி, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளின் தலைவர்கள் அனைவரும், சகர்கள், கிராதர்கள், யவனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் தங்களுக்குரிய பிரிவுகளில் தங்கள் மகாரதர்களைத் தலைமையாகக் கொண்டு அடுத்ததாகப் புறப்பட்டார்கள். இந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் இரண்டாவது பிரிவில் அணிவகுத்துச் சென்றனர்.

பிறகு, தனது துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் திரிகார்த்தர்களின் ஆட்சியாளன், தனது தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், சலன், பூரிஸ்ரவஸ், சல்லியன், கோசலர்களின் ஆட்சியாளனான பிருஹத்ரதன் ஆகியோர் புறப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் திருதராஷ்டிரர் மகன்களைத் தலைமையாகக் கொண்டு அணிவகுத்துச் சென்றனர். பெரும் வலிமையைக் கொண்ட இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரும், முறையான வகையில் ஒன்று சேர்ந்து, கவசம் தரித்து, குருக்ஷேத்திரத்தின் மறு மூலையில் {மேற்கில்} தங்கள் நிலையை அடைந்தார்கள்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, துரியோதனன் தனது முகாமை இரண்டாவது {மற்றுமொரு} ஹஸ்தினாபுரத்தைப் போலத் தெரியுமளவுக்கு அலங்கரித்திருந்தான். உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்களுக்கு மத்தியில் புத்திசாலியாக இருந்தவர்களால் கூட அந்த முகாமை தங்கள் நகரத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது சொந்த பாசறையைப் போலவே அணுக முடியாததாக (தனது படையின்) (பிற) மன்னர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பாசறைகளை ஏற்படுத்த செய்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, படைகள் தங்குவதற்கான அந்தக் கூடாரங்கள், அந்தப் போர்க்களத்தில் ஐந்து {5} முழு யோஜனைகள் பரப்பில் நன்றாக நிறுவப்பட்டது. வசதிகள் நிறைந்த அந்த ஆயிரக்கணக்கான கூடாரங்களுக்குள், பூமியின் ஆட்சியாளர் தங்கள் வீரம் மற்றும் பலத்திற்குத் {தாங்கள் கொண்ட படையின் எண்ணிக்கைக்குத்} தகுந்த படி நுழைந்தார்கள்.

காலாட்படை, யானைகள், குதிரைகள் மற்றும் தங்கள் தொடர்களுடன் கூடிய அந்த உயர் ஆன்ம மன்னர்கள் அனைவருக்கும் அற்புத வசதிகளை {பொருட்களை} வழங்கப்படும்படி மன்னன் துரியோதனன் கட்டளையிட்டான். சிற்பத்தால் பிழைப்பவர்கள் மற்றும் தனது காரியத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் பாணர்கள் {புலவர்கள் [அ] சூதர்கள்}, பாடகர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} மற்றும் வியாபாரிகள், வர்த்தகர்கள், வேசியர், ஒற்றர்கள், மற்றும் போரை சாட்சியாகக் காண {பார்வையாளராக} வந்த மக்கள் ஆகிய அனைவரையும் அந்தக் குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்} விதிப்படி உபசரித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.


அடுத்த வரும் 199ஆம் பகுதியுடன் உத்யோக பர்வம் நிறைவடைகிறது.