Monday, August 03, 2015

போர் உடன்படிக்கைகள்! - பீஷ்ம பர்வம் பகுதி -001

War Covenants! | Bhishma Parva - Section 001 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களும், பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தில் கூடியது; தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரத  என்ற இதிகாசம்}  சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "குருக்கள் {கௌரவர்கள்}, பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த உயர் ஆன்ம மன்னர்கள் ஆகிய அந்த வீரர்கள் எப்படிப் போரிட்டனர்?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, சொன்னார் "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, குருக்கள், பாண்டவர்கள், சோமகர்கள் ஆகிய அந்த வீரர்கள், புனிதவெளியான [1] குருக்ஷேத்திரத்தில் எப்படிப் போரிட்டார்கள் என்பதைக் கேட்பாயாக. சோமகர்களுடன் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைந்த பெரும் பலம் படைத்த பாண்டவர்கள், கௌரவர்களுக்கு எதிரான வெற்றியை விரும்பி முன்னேறினர். வேதங்களின் கல்வியில் சாதித்த (அவர்கள் {பாண்டவர்கள்}) அனைவரும் போரில் பெருமகிழ்ச்சியை அடைந்தனர். போரில் வெற்றியை எதிர்பார்த்து, தங்கள் துருப்புகளுடன் (அவர்கள் {பாண்டவர்கள்}) அந்தப் போரை எதிர் கொண்டனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையை அணுகியவர்களும் போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்த வீரர்கள், தங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு, (அந்த வெளியில் {களத்தின்}) மேற்குப் பகுதியில் தங்கள் துருப்புகளை நிறுத்தினர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் சமந்தபஞ்சகம் {குருஷேத்திரம்} என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் அப்பால், ஆயிரக்கணக்கான கூடாரங்களை விதிப்படி அமைத்தான்.

[1] தபஸ்-க்ஷேத்திரம் = இந்தப் பகை வீடுகளுக்கு {கௌரவ மற்றும் பாண்டவர்களுக்கு) பொதுவான மூதாதையான குரு என்பவன் இங்கே தனது தவத்துறவுகளை மேற்கொண்டான். அந்தக் குருவின் காலத்தில் இருந்து, இங்கே பல தவசிகள் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டனர். எனவே இது குருக்ஷேத்திரம் என்றும் தபக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுவதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

(வீட்டில்) குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமே விட்டுவிட்டு, குதிரைகள் மற்றும் மனிதர்களும் இன்றி, தேர்கள் மற்றும் யானைகளும் இன்றி இருந்த முழுப் பூமியும் வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சூரியன் தனது கதிர்களை வடிக்கும் [2] ஜம்பூத்வீபப் பகுதி முழுவதிலும் இருந்து படைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள், ஆறுகள், மலைகள், வனங்கள் ஆகியவற்றில் பல யோஜனைகளுக்குப் பரந்த பகுதியில் அனைத்து இனங்களைச் [3] சார்ந்த மனிதர்களும் கூடினர். மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தங்கள் விலங்குகளோடு சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அற்புத உணவையும், பிற இன்பநுகர் பொருட்களையும் வழங்கினான். மேலும் யுதிஷ்டிரன், அவர்களுக்குப் பல்வேறு நோட்ட மொழிகளை {அடையாளச் சொற்களை} நிர்ணயித்தான். அவற்றைச் சொல்லும் ஒருவன், பாண்டவர்களைச் சேர்ந்தவன் என்பதை அறிவதற்காக இதைச் செய்தான். அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, போர் நடைபெறும் நேரத்தில் அவர்களை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அனைவருக்கும் பதக்கங்களையும், பெயர்களையும் தீர்மானித்தான்.

[2] "வெப்பத்தைக் கொடுக்கும்" என்பதே உண்மை பொருள் என்கிறார் கங்குலி.

[3] மூலத்தில் இந்த இடத்தில் "வர்ணம்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அது சாதிகளைக் குறிப்பதல்ல, இனங்களையே குறிக்கும் என்கிறார் கங்குலி.

பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனின்} கொடிநுனியைக் கண்டவனும், தனது தலைக்கு மேலே வெண்குடையைக் கொண்டவனும், ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இருப்பவனும், தனது நூறு தம்பிகளால் சூழப்பட்டவனுமான உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, (தனது தரப்பில் உள்ள) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எதிராகத் தனது துருப்புகளை அணிவகுத்தான். போரில் மகிழ்ச்சி கொள்ளும் பாஞ்சாலர்கள் துரியோதனனைக் கண்டதும், மகிழ்ச்சியால் நிறைந்து, உரத்த ஒலியைத் தரும் தங்கள் சங்குகளை ஊதினர், இனிய ஒலி தரும் பேரிகைகளையும் முழங்கினர்.

அந்தத் துருப்புகள் இப்படி மகிழ்ச்சியடைவதைக் கண்ட பாண்டுவின் மகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் சக்தி கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இதயத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஒரே தேரில் அமர்ந்திருந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, தங்கள் தெய்வீகச் சங்குகளை முழங்கினர். அந்த இருவருக்கும் சொந்தமான பெரியதின் {Gigantea} {சங்கான பாஞ்சஜன்யத்தின்} முழக்கத்தையும், பெருக்கத்தின் {Theodotes} {சங்கான தேவதத்தத்தின்} உரத்த வெடிப்பையும் கேட்ட எதிராளிகள் மலம் மற்றும் சிறுநீரைக் {மலஜலத்தைக்} கழித்தனர். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டு அச்சத்தால் நிறையும் பிற விலங்குகளைப் போல, அந்த உரத்த வெடிப்புகளைக் கேட்ட படையும் அப்படியே அச்சத்தால் நிறைந்தன. அச்சம்நிறைந்த புழுதியெழுந்ததால் ஏதும் காணப்படவில்லை, ஏனெனில் திடீரெனச் சூரியனும் அவற்றால் மூடப்பட்டதால், அது {சூரியன்} மறைந்ததைப் {அஸ்தமித்ததைப்} போலத் தெரிந்தது. கருநிற மேகம் ஒன்று சுற்றிலும் இருந்த அந்தத் துருப்புகளின் மேல் இறைச்சியையும் இரத்தத்தையும் பொழிந்தது. இவையாவும் இயல்புக்கு மிக்கதாகத் தெரிந்தது.

மண்ணோடு சேர்ந்த பருக்கைக் கற்களைச் சுமந்து, அங்கே எழுந்த காற்றானது நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் போராளிகளை துன்புறுத்தியது. (இவை அனைத்தையும் விட) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} மகிழ்ச்சி நிறைந்து போரைச் சந்திக்க நின்ற அந்தப் படைகள் இரண்டும், கலங்கிய கடல்கள் இரண்டைப் போலக் குருக்ஷேத்திரக் களத்தில் நின்றன. உண்மையில், அந்த இருபடைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, யுகத்தின் முடிவின் போது ஏற்படும் இரண்டு கடல்களின் மோதலைப் போல இருந்தது. கௌரவர்களால் மொய்க்கப்பட்ட அந்தப் பெரும் படையின் விளைவாக (வீட்டில்) சிறுவரும் முதியவரும் மட்டுமே இருந்ததால் முழுப் பூமியும் வெறுமையாக இருந்தது.

பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குருக்களும், பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சில உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான மோதல்கள் சம்பந்தமாக விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர்.

  1. சமமான சூழல் கொண்டவர்கள் {சமமானவர்களே} தங்களுக்குள் மோதிக் கொண்டு நன்கு போரிட வேண்டும்.  
  2. நன்கு போராடிய பிறகு, (துன்பத்தைக் கண்டு அஞ்சாமல்) போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போரிட்டு முடிந்த பிறகு, நமக்குள் அன்பு உண்டாக வேண்டும்}. 
  3. சொற்போட்டிகளில் ஈடுபடுபவர்களுடன் சொற்களாலேயே போரிட வேண்டும். [4]  
  4. படையணியை விட்டு விலகியவர்கள் கொல்லப்படக் கூடாது. 
  5. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும்; யானையின் கழுத்தில் இருப்பவன், அதே போன்ற போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும்; ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்; ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே சந்திக்க வேண்டும். 
  6. உடற்தகுதி, விருப்பம், துணிவு, பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டு அடிக்க வேண்டும். எவனும், தயாராக இல்லாதவனையோ [5], பீதியால் தாக்குண்டவனையோ அடிக்கக் கூடாது.
  7. வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்றுவிட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் எப்போதும் அடிக்கப்படக்கூடாது.  
  8. தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகைகள் அடிப்பவர்கள் மற்றும் சங்கை முழக்குபவர்கள் ஆகியோர் ஒருபோதும் அடிக்கப்படக்கூடாது. 

[4] தனியாக விடப்பட்டவன் கொல்லப்படக்கூடாது.

[5] உண்மையில், "நம்பிக்கைக்கு உரித்தான" என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி. அஃதாவது இப்போது தாக்கமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தயாரில்லாமல் இருக்கும் ஒருவனை அடிக்கக்கூடாது என்பதே இங்குப் பொருள்.

 {மேற்கண்ட} இந்த உடன்படிக்கைகளைச் செய்து கொண்ட குருக்கள், பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர். (இப்படித் தங்கள் படைகளுடன்) நிலை நின்ற அந்த மனிதர்களில் காளைகள், அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், தங்கள் படைகளுடன் சேர்ந்து, இதயத்தில் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது" என்றார் {வைசம்பாயனர்}.


ஆங்கிலத்தில் | In English