Celestial Vision obtained by Sanjaya! | Bhishma-Parva-Section-002 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 2)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனிடம் தனிமையில் பேசிய வியாசர்; போரைக் காண திருதராஷ்டிரனுக்குப் பார்வையளிப்பதாகச் சொன்ன வியாசர்; பார்வையை மறுத்த திருதராஷ்டிரன்; வியாசர் சஞ்சயனுக்கு ஞானப்பார்வையை அருள்வது; வியாசர் தான் காணும் தீய சகுனங்களைக் குறித்துச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வர இருக்கும் கடும்போருக்காகக் கிழக்கிலும், மேற்கிலும் (நின்று கொண்டு) இருந்த அந்தப் படைகளிரண்டைக் கண்டவரும், நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை {கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களை} அறிந்தவரும், பாரதர்களின் பாட்டனும், வேதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனும், புனிதமுனியுமான வியாசர், தன் கண்களுக்கு முன்பு நடப்பதைக் காண்பது போலவே அனைத்தையும் கண்டு, தனிமையில் சென்று, தனது மகன்களின் தீய கொள்கைகளை நினைத்து மன உளைச்சல் அடைந்தவனும், துன்பத்துக்கு ஆளானவனுமான விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது மகன்களும், பிற ஏகாதிபதிகளும் தங்கள் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் [1]. போருக்காக அணிதிரண்டிருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, அவர்களது நேரம் வந்துவிட்டதால், அவர்கள் அனைவரும் அழிந்தே போவார்கள். காலத்தால் கொண்டுவரப்படும் மாற்றங்களை மனதில் தாங்கும் நீ, துக்கத்தில் உனது இதயத்தைச் செலுத்தாதே. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரில் (போரிடும்) அவர்களை நீ காண விரும்பினால், ஓ! மகனே {திருதராஷ்டிரா}, நான் உனக்குப் பார்வையை அருள்வேன் {கொடுப்பேன்}. போரைக் காண்பாயாக!" என்றார்.
[1] மாறாக, "அவர்களது காலம் முடிந்துவிட்டது" என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் கங்குலி.
திருதராஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {வியாசரே}, எனது சொந்தங்களின் படுகொலையைக் காண நான் விரும்பவில்லை. எனினும், நான், உமது ஆற்றலின் மூலம், இந்தப் போரை நுணுக்கமாகக் கேட்க வேண்டும்" என்று சொன்னான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவன் {திருதராஷ்டிரன்} போரைக் காண விரும்பாமல், கேட்க விரும்பியதால், வரங்களின் தலைவனான வியாசர், சஞ்சயனுக்கு ஒரு வரத்தை அளித்தார். (அவர் திருதராஷ்டிரனிடம்), "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இந்தச் சஞ்சயன் போரை உனக்கு விவரிப்பான். இந்தப் போர் முழுவதிலும் இவனது கண்களைத் தாண்டி எதுவும் இருக்காது. {இந்தப் போரில் நடைபெறும் எதுவும் இவனது கண்களுக்குத் தப்பாது}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தெய்வீகப் பார்வையை அடைந்த சஞ்சயன், போரை உனக்கு விவரிப்பான். அவன் {சஞ்சயன்} அனைத்தையும் அறிவான். வெளிப்படையாகவோ, மறைவாகவோ, பகலிலோ, இரவிலோ நடக்கும் எதையும், ஏன் மனதால் நினைக்கப்படும் அனைத்தையும்கூட இந்தச் சஞ்சயன் அறிவான்.
ஆயுதங்கள் இவனை வெட்டாது. உழைப்பு இவனைக் களைப்படையச் செய்யாது. இந்தக் கவல்கணன் மகன் {சஞ்சயன்}, அந்தப் போரில் இருந்து உயிருடன் வெளிவருவான். என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரா}, இந்தக் குருக்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் புகழையும் நான் பரப்புவேன் {மஹாபாரதம் பாடுவேன்}. வருந்தாதே. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரா}, இது விதி. துயருக்கு வழிகொடுப்பது உனக்குத் தகாது. இது தவிர்க்க இயலாததாகும். வெற்றியைப் பொறுத்தவரை, நீதி எங்கிருக்கிறதோ, அங்கேயே அஃது இருக்கும். {அறமிருக்குமிடம் வெற்றியுண்டாகும்}", என்றார் {வியாசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர்ந்த அருளைக் கொண்டவரும், குருக்களின் புனிதப்பாட்டனுமான அவர் {வியாசர்}, இதைச் சொன்ன பிறகு, மேலும் ஒரு முறை திருதராஷ்டிரனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இந்தப் போரில் நடக்கும் படுகொலை பெரிதாக இருக்கும். பயங்கரத்தின் அறிகுறியாக (எண்ணற்ற) {தீய} சகுனங்களை நான் இங்கே காண்கிறேன்.
பருந்துகள் {சியேனங்கள்}, கழுகுகள் {கிருத்திரங்கள்}, காகங்கள், நாரைகள் {கங்கங்கள்} [2] ஆகியவை கொக்குகளுடன் சேர்ந்து மரங்களின் மேல் இறங்கி {கொடிக்கம்ப நுனிகளில் விழுந்து}, கூட்டங்கூட்டமாகச் சேருகின்றன. போருக்கான சாத்தியக்கூறுகளினால் மகிழ்ந்திருக்கும் அவை, தங்கள் முன்னிலையில் இருப்பதைக் (களத்தைக்) {எதிர்பார்ப்புடன்} கீழே பார்க்கின்றன. ஊனுண்ணும் விலங்குகள், யானைகள் மற்றும் குதிரைகளின் இறைச்சியை உண்ணப் போகின்றன. உக்கிரமான நாரைகள் {Herons}, பயங்கரத்தை முன்னறிவிக்கும்படி, இரக்கமற்ற வகையில் கதறி, மையப் பகுதியில் சுற்றியபடி தென்பகுதியை நோக்கிச் செல்கின்றன [3]. சந்திப் பொழுதுகள் இரண்டுக்கும் முன்னரும், பின்னரும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, சூரியன், உதிக்கும்போதும், மறையும்போதும், தலையற்ற உடல்களால் {கபந்தங்களால்} அவன் {சூரியன்} மறைக்கப்படுகிறான். மின்னலால் சக்தியூட்டப்பட்டவையும், கதாயுதம் போன்றவையும், வெள்ளை மற்றும் சிவந்த கைகளுடனும் {ஓரங்களுடனும்}, கறுத்த கழுத்துடனும் {இடைவெளியுடனும்} மூவண்ணங்களைக் கொண்டவையுமான மேகங்கள், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் சூரியனைச் சூழ்ந்திருக்கின்றன.
[2] மேற்கண்ட வரியில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சியேனம், கிருத்திரம், கங்கம் ஆகியன கழுகுகளின் வகைகளாகும். மேற்கண்ட பத்தியில் {} என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள பறவைகளின் பெயர்கள் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவை வேறு பதிப்புகளில் கண்டவையாகும்.[3] வேறு பதிப்புகளில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன. அவ்வரிகள், "பயங்கரங்களும், பயத்தைத் தெரிவிப்பவைகளுமான கழுகுகள், நடுப்பகலில், தெற்கை நோக்கி நான்கு பக்கங்களிலும், "கடா! கடா!" என்று ஒலியிட்டபடி கூச்சலிடுகின்றன" என்று இருக்கிறது. இந்தக் கழுகுக்குப் பதில் கங்குலி Heron என்று சொல்லி நாரையை இங்கே குறிப்பிடுகிறார்.
சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒளிவீசிக் கொண்டிப்பதை நான் கண்டேன். மாலையிலும் கூட அவற்றின் அம்சங்களில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. நான் இவற்றை நாள் முழுவதும், ஏன் இரவு முழுவதும்கூடக் காண்கிறேன். இவை அனைத்தும் அச்சத்தையே முன்னறிவிக்கின்றன. கார்த்திகை (மாதத்தில்}, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் {பௌர்ணமியில்} கூட, சந்திரன் தனது பொலிவை இழந்து போய், காண முடியாதவன் ஆனான். அல்லது தாமரையின் நிறத்தைக் கொண்டிருந்த ஆகாயத்தில், அவன் {சந்திரன்} நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். பெரும் வீரம் கொண்டவர்களும், கதாயுதங்களைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான பூமியின் வீரத் தலைவர்கள், மன்னர்கள், இளவரசர்கள் ஆகிய பலர், கொல்லப்பட்டு, பூமியில் கிடந்து உறங்கப் போகிறார்கள் [4]. இரவு நேரங்களில், சண்டையிட்டுக் கொள்ளும் பன்றிகள் மற்றும் பூனைகளின் உக்கிரக் கூக்குரல்களைத் தினமும் நான் வானத்தில் கேட்கிறேன்.
[4] இறக்கப் போகிறார்கள் என்பது இங்கே பொருள்.
தேவர்கள் மற்றும் தேவியரின் உருவங்கள் {பிரதிமைகள்} சில நேரங்களில் சிரிக்கின்றன; சில நேரங்களில் நடுங்குகின்றன; சில நேரங்களில் தங்கள் வாயில் இரத்தம் கக்குகின்றன; சில நேரங்களில் வேர்க்கின்றன; சில நேரங்களில் விழுந்து விடுகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அடிக்கப்படாமலேயே பேரிகைகள் முழங்குகின்றன, (இழுவை) விலங்குகள் பூட்டப்படாமலேயே க்ஷத்திரியர்களின் பெருந்தேர்கள் நகர்கின்றன. குயில்கள் {கோகிலங்கள்}, மரங்கொத்திகள் {சதபத்ரங்கள்}, காடைகள், நீர்க்கோழிகள் {பாஸங்கள்}, கிளிகள், காகங்கள் {சாரசப்பறவைகள்}, மயில்கள் ஆகியன பயங்கரக் கூச்சலிடுகின்றன. ஆயுதங்கள் தரித்தவர்களும், கவசம் அணிந்தவர்களுமான குதிரைப்படை வீரர்கள் இங்கேயும் அங்கேயுமாகக் கடுமையாகக் கத்துகின்றனர் [5]. சூரிய உதயத்தின் போது, நூற்றுக்கணக்கான பூச்சிகளின் {சல்பங்களின்} கூட்டங்கள் காணப்படுகின்றன.
[5] இதே வரி, வேறு பதிப்பில், "பிருங்கிரிடிகள் என்று அழைக்கப்படும் கறுத்த விட்டில் பூச்சிகள் உலோகங்களை மூக்கினால் கொத்திக் கொண்டு குதிரைகளின் முதுகில் அமர்ந்து கத்துகின்றன" என்று இருக்கிறது. தொடர்ந்து வரும் அடுத்த வரியால், இதுவே சரியாகவும் படுகிறது.
இரு சந்திப் பொழுதுகளிலும், வானத்தின் திக்குகள் பற்றி எரிவன போலத் தெரிகின்றன. மேலும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, மேகங்கள் புழுதியையும், இறைச்சியையும் பொழிகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவளும், நீதிமான்களால் மெச்சப்படுபவளுமான அருந்ததி {நட்சத்திரம்}, இதோ, (தனது தலைவனான) வசிஷ்டரைத் தனக்குப் பின்னால் கொண்டிருக்கிறாள் {வசிஷ்டரை முந்திச் செல்கிறாள்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சனிக் கோளும் {கிரகமும்}, ரோகிணியைப் பீடித்தபடி தோன்றுகிறது {ரோகிணி நட்சத்திரத்தைப் பீடித்தபடி சனி தோன்றுகிறான்}. நிலவில் இருக்கும் மானின் அடையாளம் {களங்கம்}, தனது வழக்கமான நிலையை விட்டு மாறுபட்டிருக்கிறது. {இவற்றால்}, ஒரு பெரிய பயங்கரம் சுட்டிக் காட்டப்படுகிறது. வானம் மேகமற்றிருந்தாலும், அங்கே ஒரு பயங்கர முழக்கம் கேட்கிறது. விலங்குகள் அனைத்தும் அழுகின்றன, அவற்றின் கண்ணீரும் வேகமாக விழுகிறது" என்றார் {வியாசர்}."
ஆங்கிலத்தில் | In English |