The Four Yugas! | Bhishma-Parva-Section-010 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 10)
பதிவின் சுருக்கம் : நான்கு யுகங்களில் தோன்றும் மனிதர்களும், உயிரினங்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, இந்தப் பாரதக் கண்டத்திலும், ஹைமவத வர்ஷத்திலும் {கண்டத்திலும்}, ஹரி வர்ஷத்திலும் வசிப்போரின் வாழ்வின் காலம், பலம், நல்லவை மற்றும் தீயவை, எதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றை எனக்கு விபரமாகச் சொல்வாயாக" என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாரதக்கண்டத்தில் கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்கள் தோன்றுகின்றன. அதில் கிருதமே முதலில் தோன்றும் யுகமாகும். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கிருதத்தின் முடிவில் திரேதம் வருகிறது; திரேதத்தின் முடிவில் துவாபரம் வருகிறது, அனைத்திலும் இறுதியாகக் கலி தோன்றுகிறது.
ஓ! குருக்களில் காளையே, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருத சகாப்தத்தில் வாழ்வின் {ஆயுளின்} அளவு நாலாயிரம் {4000} ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது. திரேதத்தில் அந்தக் காலம் மூவாயிரம் {3000} ஆண்டுகளாகும். தற்போது துவாபரத்தில், மனிதர்கள் இந்தப் பூமியில் இரண்டாயிரம் {2000} வருடங்கள் வாழ்கின்றனர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலியில் {கலியுகத்தில்} வாழ்வின் அளவுக்கு ஒரு நிலையான வரம்பு இருக்காது. கருவில் இருக்கும்போதும், பிறந்த உடனும் கூட மனிதர்கள் இறந்து போவார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருத யுகத்தில் பிறக்கும் மனிதர்கள், பெரும் பலம், பெரும் சக்தி, பெரும் அறிவு ஆகிய பண்புகளையும், அழகிய தன்மைகளையும் மற்றும் செல்வங்களையும் பெற்ற பிள்ளைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஈன்றெடுத்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்}, தவத்தைச் செல்வமாக உடையவர்களும், பெரும் உழைப்பைக் கொடுக்க இயன்றவர்களும், உயர் ஆன்மா, அறம் மற்றும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டவர்களுமான முனிவர்கள் பிறந்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்} பிறந்த க்ஷத்திரியர்களும் ஏற்புடைய குணங்கள், நல்ல திறம்வாய்ந்த உடல்கள், பெரும் சக்தி, வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் சாதனை, போரில் உயர்ந்த திறமை ஆகியவற்றைக் கொண்டவர்களாகவும், பெரும் துணிச்சல் {வீரம்} பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திரேத காலத்தில் சக்கரவர்த்திகளாக இருந்த க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரும் கடலில் இருந்து கடல்வரை {இருக்கும் நிலத்தை} ஆண்டார்கள். திரேதத்தில், நீண்ட வாழ்நாளும், பெரும் வீரமும், போரில் பெரும் திறமையுடன் வில்லை பயன்படுத்துபவர்களும், யாருக்கும் அடிபணியாதவர்களுமான வீர க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துவாபரம் தோன்றும்போது, பெரும் உழைப்பைக் கொடுக்கவல்லவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், ஒருவரை ஒருவர் வெல்ல விரும்புபவர்களுமாக மனிதர்கள் அனைத்து (நான்கு - பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர) வகையிலும் பிறந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துவாபரம் தோன்றும்போது, பெரும் உழைப்பைக் கொடுக்கவல்லவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், ஒருவரை ஒருவர் வெல்ல விரும்புபவர்களுமாக மனிதர்கள் அனைத்து (நான்கு - பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர) வகையிலும் பிறந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கலியில் பிறக்கப்போகும் மனிதர்கள், சக்தி குறைந்தவர்களாகவும், பெரும் கோபம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், உண்மையில்லாதவர்களுமாக {பொய்மை நிறைந்தவர்களுமாக} பிறப்பார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இந்தத் துவாபர யுகத்தில் எஞ்சுவது சிறியதாகவே இருக்கும். {இந்தத் துவாபர யுகத்தில் நற்குணங்கள் அனைத்துக்கும் குறைவுண்டாகும்}. ஹைமவதம் என்று அறியப்படும் வர்ஷம் பாரதக் கண்டத்தைவிட மேன்மையானதாக இருக்கும். அதேவேளையில், ஹரிவர்ஷம், ஹைமவதவர்ஷத்தைவிட அனைத்து குணங்களிலும் மேன்மையானதாக இருக்கும்" என்றான் {சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |