Kingdoms without king in Sakadwipa! | Bhishma-Parva-Section-011 | Mahabharata In Tamil
(பூமி பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : ஜம்பூத்வீபத்தைத் தவிர்த்து வேறு கண்டங்களையும் விளக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; சாகத்வீபம் இருக்கும் பகுதியைக் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும், அங்கிருக்கும் மக்கள் குறித்தும், அவர்களது தொழில்களைக் குறித்தும், மன்னரற்ற அரசு முறை குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது ...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, ஜம்பூகண்டத்தைக் குறித்து நீ எனக்கு முறையாக விளக்கிச் சொன்னாய். ஓ! சஞ்சயா, ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயனே}, கடல், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலித்வீபம், கிரௌஞ்சத்வீபம் ஆகியவற்றின் பரப்பளவை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மேலும் ராகு, சோமன் {சந்திரன்}, சூரியன் ஆகியவற்றையும் எதையும் விட்டுவிடாமல் எனக்குச் சொல்வாயாக" {என்றான் திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமியெங்கும் பரந்திருக்கும் பல தீவுகள் இருக்கின்றன. எனினும், நான் உமக்கு ஏழு தீவுகளை மட்டும் மற்றும் சந்திரன், சூரியன் மற்றும் கோள் (ராகு) ஆகியவற்றையும் விளக்குவேன்
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜம்பூ மலை, பதினெட்டாயிரத்து அறுநூறு {18,600} யோஜனைகள் பரந்திருக்கிறது. உப்புக் கடலின் பரப்போ அதை விட இருமடங்காகச் {37,200 யோஜனைகளாகச்} சொல்லப்படுகிறது. அந்தக் கடல் பல நாடுகளால் நிரம்பியும், மணிகளாலும், பவளங்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது. அது தவிரவும், அது பல்வேறு வகை உலோகங்களால், பல நிறங்களில் காட்சியளிக்கும், பல மலைகளும் அதில் நிறைந்திருக்கிறது. சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரால் நெருக்கமாகச் சூழப்பட்டிருக்கும் அந்தக் கடல் வட்ட வடிவில் இருக்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்து உமக்குச் சொல்லப் போகிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, அதை உமக்கு நான் முறையாக விளக்கிச் சொல்வதைக் கேட்பீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தீவு, ஜம்பூத்வீபத்தைவிட இருமடங்கு பரப்புடையதாகும். கடலும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அதைவிட இரண்டு மடங்குடையதாகும். உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சாகத்வீபம் அனைத்துப் புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் நாடுகளில் நீதி நிறைந்திருக்கிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் இறப்பதில்லை. {அப்படியிருக்கும்போது}, அங்கே பஞ்சம் எப்படி ஏற்படும்? அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் பொறுமையையும் பெரும் சக்தியையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தைச் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது தவிர நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?" {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ எனக்கு அளித்துவிட்டாய். ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே, நீ இப்போது அனைத்தையும் உண்மையில் விபரமாகக் கூறுவாயாக" என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "அந்தத் தீவில் {சாகத்வீபத் தீவில்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் சரங்கங்களைக் கொண்டவையுமாக ஏழு மலைகள் இருக்கின்றன. அந்தத் தீவில் பல ஆறுகளும் இருக்கின்றன. அவற்றின் பெயர்களை நான் சொல்லும்போது கேட்பீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் அனைத்தும் அற்புதமாவையாகவும், இனிமை நிறைந்தவையுமாக இருக்கின்றன. அந்த மலைகளில் முதன்மையாக மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அது தேவர்கள், முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடமாக இருக்கிறது. அடுத்ததாகக் கிழக்கு நோக்கிப் படர்ந்திருக்கும் மலயம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது அங்கேதான் மேகங்கள் உற்பத்தியாகி, அங்கிருந்துதான் அனைத்துப் புறங்களுக்கும் செல்கின்றன.
அடுத்ததாக, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, ஜலதாரம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது. அங்கிருந்துதான் இந்திரன் சிறந்த தரத்தில் இருக்கும் நீரைத் தினமும் எடுக்கிறான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்த நீரில் இருந்துதான் நாம் மழைக்காலங்களில் மழையைப் பெறுகிறோம். அடுத்ததாக ரைவதகம் என்று அழைக்கப்படும் உயர்ந்த மலை இருக்கிறது. அதற்கு {அந்த மலைக்கு} மேலே ஆகாயத்தில் ரேவதி என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம் நிலையாக இருக்கிறது. இந்த ஏற்பாடு பெரும்பாட்டனாலேயே {பிரம்மனாலேயே} ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்கு வடக்கில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சியாமம் என்று அழைக்கப்படும் பெரும் மலை இருக்கிறது. புதியாய் எழுந்த மேகங்களைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட அது மிக உயரமானதாகவும், அழகு நிரம்பியதாகவும், பிரகாசமான உடலைக் கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மலைகளின் நிறம் கருமையாகஇருப்பதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் கரிய நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நீ சொன்னதிலிருந்து, ஓ! சஞ்சயா, எனது மனதில் ஒரு பெரிய ஐயம் எழுகிறது. ஓ! சூதனின் {கவல்கணனின்} மகனே {சஞ்சயா}, அங்கே இருக்கும் மக்கள் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்?" என்று கேட்டான்.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, வெண்ணிறமும், கரிய நிறமும் கொண்ட மனிதர்களும், வெள்ளை மற்றும் கருப்பைக் கலவையாகக் கொண்ட இனங்களைச் சார்ந்தவர்களும் அனைத்துத் தீவுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் மக்கள் அனைவருமே கருப்பாக இருப்பதால் அந்த மலையும் கருமலை {சியாம மலை} என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துர்க்கசைலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது.
அதன் பிறகு கேசரி என்று அழைக்கப்படும் மலை வருகிறது. அந்த மலையில் இருந்து வீசும் தென்றல் (நறுமண) வாசனையைச் சுமந்து வருகிறது. அந்த ஒவ்வொரு மலையின் அளவும், உடனடியாக அதற்கு முன் சொன்ன மலையைப் போன்று இரு மடங்கு கொண்டதாகும். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, அறிவுடையோரால் அந்தத் தீவில் ஏழு வர்ஷங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மேருவின் வர்ஷம் மஹாகாசம் {1} என்று அழைக்கப்படுகிறது;
நீர் தரும் (மலயம்) குமுதோத்ரம் {2} என்று அழைக்கப்படுகிறது.
ஜலதாரத்தின் வர்ஷம் சுகுமாரம் {3} என்று அழைக்கப்படுகிறது;
அதே வேளையில் ரைவதகத்தினுடையது கௌமாரம் {4} என்று அழைக்கப்படுகிறது;
சியாமத்தினுடையது மணிகாஞ்சனம் {5} என்று அழைக்கப்படுகிறது.
கேசரத்தின் வர்ஷம் மௌதாகி {6} என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த மலைக்கு அடுத்து உள்ளது மகாபூமன் {மஹாபௌமம்} {7} என்று அழைக்கப்படுகிறது.
மேருவின் வர்ஷம் மஹாகாசம் {1} என்று அழைக்கப்படுகிறது;
நீர் தரும் (மலயம்) குமுதோத்ரம் {2} என்று அழைக்கப்படுகிறது.
ஜலதாரத்தின் வர்ஷம் சுகுமாரம் {3} என்று அழைக்கப்படுகிறது;
அதே வேளையில் ரைவதகத்தினுடையது கௌமாரம் {4} என்று அழைக்கப்படுகிறது;
சியாமத்தினுடையது மணிகாஞ்சனம் {5} என்று அழைக்கப்படுகிறது.
கேசரத்தின் வர்ஷம் மௌதாகி {6} என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த மலைக்கு அடுத்து உள்ளது மகாபூமன் {மஹாபௌமம்} {7} என்று அழைக்கப்படுகிறது.
அந்தத் தீவின் மத்தியில் சாகம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. அதன் உயரமும் அகலமும், ஜம்பூத்வீபத்தில் உள்ள நாவல் {ஜம்பூ} மரத்தின் அளவுக்கு இணையானதாக இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் அந்த மரத்தை எப்போதும் துதிக்கின்றனர். சிவனை வழிபடும் பல இனிமையான மாகாணங்கள் அந்தத் தீவில் இருக்கின்றன. அங்கே சித்தர்கள், சாரணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் எப்போதும் செல்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டரே}, அங்கே இருக்கும் மக்கள் அறம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் நால்வகையினரும் தங்கள் தங்களுக்குரிய தொழில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். திருட்டுக்கான சந்தர்ப்பம் அங்கே ஏதும் காணப்படாது. முதுமை, மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, நீண்ட வாழ்நாளுடன் இருக்கும் அந்த மக்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலத்தில் வளரும் ஆறுகளைப் போல வளர்கிறார்கள்.
அங்கே இருக்கும் ஆறுகள் அனைத்தும் கங்கையைப் போலவே புனித நீரால் நிரம்பி, பல்வேறு ஊற்றுகளாகச் சுகுமாரி, குமாரி, சீதாசி, கேவேரகை {வேணிகை}, மகாநதி, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே} மணிஜலை, சக்ஷூஸ், வர்த்தனிகை என்று பிரிந்து பாய்கின்றன. அவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவற்றாலும் இன்னும் பிற ஆறுகளாலும் ஆயிரக்கணக்கிலும், நூற்றுக்கணக்கிலும், புனித நீரால் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அவற்றில் இருந்துதான், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, வாசவன் {இந்திரன்} நீரை எடுத்து மழையாகப் பொழிகிறான். அந்த ஆறுகளின் நீளங்களையும் அவற்றின் பெயர்களையும் உரைப்பது இயலாததாகும். அவை அனைத்தும் ஆறுகளில் முதன்மையானவையும், பாவத்தைப் போக்குபவையுமாகும்.
மனிதர்கள் அனைவராலும் கேட்கப்பட்டது போலவே அந்தச் சாகத் தீவில் நான்கு புனிதமான மாகாணங்கள் {நாடுகள்} இருக்கின்றன. அவை, மிருகம் {மங்கம்}, மசகம், மானசம், மந்தகம் என்பனவாகும். மிருகத்தில் {மிருக நாட்டில்}, உள்ளோர் பெரும்பாலும் தங்கள் வகைக்கான தொழில்களில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்தணர்களாக இருக்கின்றனர். அந்தணர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் அறம்சார்ந்த க்ஷத்திரியர்கள் மசகத்தில் {மசக நாட்டில்} இருக்கிறார்கள். மானசத்தில் {மானச நாட்டில்} இருப்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைசிய வகைக் கடமைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய அவர்கள் வீரர்களாகவும் அறம் மற்றும் பொருளுக்குத் தங்களை உறுதியாக அர்ப்பணித்தவர்களாகவும் இருக்கிறார்கள். மதங்கம் {மதங்க நாடு} முழுவதிலும், அறம் சார்ந்த நடத்தை கொண்ட வீரமான சூத்திரர்கள் இருக்கிறார்கள்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த மாகாணங்களில் {நாடுகளில்}, மன்னன், தண்டனை ஆகியவை ஏதுமில்லை. தண்டிக்கத்தகுந்த மனிதர் யாரும் அங்கே இல்லை. கடமையின் விதிகளை அறிந்த அவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர். சாகம் என்று அழைக்கப்படும் தீவைக் குறித்து இவ்வளவே சொல்ல இயலும். பெரும் சக்தி மிக்க அந்தத் தீவைக் குறித்து இந்த அளவே கேட்கப்பட வேண்டும் [1].
[1] "சாகத்வீபம் குறித்த இந்தப் புராண அடிப்படை, ஒரு வேளை, கிழக்கு ஆசியாவிலோ, மாகடலில் {சமுத்திரத்தில்} உள்ள ஆசியாவிலோ (அல்லது மேலும் தள்ளியிருக்கும் கிழக்கு பசிபிக்கிலோ) இருந்த பழமையான இந்தியக் குடியரசுகளைக் குறிப்பதாக இருக்கலாம். மன்னராட்சி முறையும், மன்னரில்லாத அரசு முறையும் தங்கள் பழக்க வழக்கத்தில் இருந்ததே எனும் இந்துக்கள், இந்தக் கடைசி இரு சுலோகங்களின் சரியான விளக்கத்தால் நல்ல தாக்கத்தைப் {உணர்வைப்} பெறுவார்கள்" என்கிறார் கங்குலி. ஒரு வேளை கம்போடியா, இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகள் சாகத்வீபத்தில் இருந்திருக்கலாம்.
ஆங்கிலத்தில் | In English |