The vyuha of the Kauravas! | Bhishma-Parva-Section-017 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 5)
பதிவின் சுருக்கம் : போருக்குப் புறப்பட்ட கௌரவப் படையைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "புனிதமான கிருஷ்ண துவைபாயன வியாசர் சொன்னபடியே, அதே முறையிலேயே, பூமியின் மன்னர்கள் ஒன்று திரண்டு அந்த மோதலுக்கு வந்தார்கள்.
போர் ஆரம்பித்த அந்த நாளில் சோமன் பித்ரு லோகத்தை அணுகினான் [1]. வானத்தில் தோன்றிய அந்த ஏழு பெரிய கோள்கள் அனைத்தும் சுடர்விடும் நெருப்பைப் போலத் தோன்றின [2]. சூரியன் உதித்த போது, அஃது இரண்டாகப் பிளவுபட்டதைப் போலத் தோன்றியது. அது தவிர வானத்தில் தோன்றிய அந்த ஒளிக்கோள், தீப்பிழம்புகளாக பற்றி எரிவதாகத் தோன்றியது. ஊனுண்ணிகளான நரிகளும், காகங்களும், விருந்துண்ண இறந்த உடல்களை எதிர்பார்த்து, பற்றி எரிவதாகத் தெரிந்த அனைத்துப் புறங்களில் இருந்தும் கடும் கூச்சலிட்டன.
[1] "Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதே இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.
முதிர்ந்தவரான குருக்களின் பாட்டனும் {பீஷ்மரும்}, பரத்வாஜரின் மகனும் {துரோணரும்}, தினமும் காலையில் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, குவிந்த மனத்துடன், "பாண்டு மகன்களுக்கு வெற்றி" என்று சொல்லினர். அதே வேளையில் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்காகவே உமது நிமித்தமாகப் போரிட்டனர்.
ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவரான உமது தந்தை தேவவிரதர் {உமது பெரியப்பா பீஷ்மர்}, மன்னர்கள் அனைவரையும் அழைத்து (அவர்களிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். "க்ஷத்திரியர்களே, நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழையவே இந்தப் பெருங்கதவு திறந்திருக்கிறது. இதன் வழியாக நீங்கள் சக்ரன் {இந்திரன்}, மற்றும் பிரம்மனின் உலகங்களுக்குச் செல்வீராக. பழங்காலத்தின் முனிவர்கள் உங்களுக்கு இந்த நிலைத்த பாதையைக் காட்டியிருக்கின்றனர். மனதில் கவனத்துடன் போரில் ஈடுபட்டு, உங்களை நீங்களே கௌரவப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற செய்கைகளாலேயே நாபாகன், யயாதி, மாந்தாதா, நகுஷன், நிருகன் ஆகியோர் உயர்ந்த உலகத்தை அடைந்தனர். வீட்டில் நோயால் இறப்பது ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவமாகும். போரில் தனது மரணத்தைச் சந்திப்பதே அவனது {க்ஷத்திரியனது} நிலைத்த கடமையாகும்" என்றார் {பீஷ்மர்}.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவர்களும், தங்கள் தேர்களில் அழகாகத் தோன்றியவர்களுமான அந்த மன்னர்கள், தங்களுக்குரிய படைப்பிரிவுகளின் தலைமைக்கு முன்னேறிச் சென்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் மட்டுமே, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் பீஷ்மரின் நிமித்தமாக அந்தப் போரில் தனது ஆயுதங்களைத் தள்ளி வைத்தான். கர்ணன் இல்லாமல், உமது மகன்களும், மன்னர்கள் அனைவரும், அடிவானத்தின் பத்துப்புள்ளிகளையும் தங்கள் சிங்க முழக்கத்தால் எதிரொலிக்கச் செய்தபடி உமது பக்கத்தில் {படையில்} முன்னேறிச் சென்றனர். வெண்குடைகளாலும், கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும், யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களாலும் அவர்களது படைப்பிரிவுகள் பிரகாசமாக ஒளிர்ந்தன.
பேரிகைகள், கணவங்கள் {சிறு முரசு}, துந்துபிகள் ஆகியவற்றின் ஒலிகளாலும், தேர் சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் பூமி நடுங்கியது. கைவளைகள், தோள்வளைகள், (தங்கத்தின் பல வண்ண வேறுபாடுகளுடன் கூடிய) விற்கள் ஆகியவற்றைத் தரித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நெருப்பு மலைகளைப் போலப் பிரகாசித்தனர். ஐந்து நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட பெரும் பனைமரக் கொடிமரத்துடன் {பனைமரக் கொடியைக் கொண்ட கொடிக்கம்பத்துடன்} கூடிய குருக்களின் படைத்தலைவர் பீஷ்மர், சூரியனைப் போலவே பிரகாசித்தார்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் இருந்த, அரச பிறவிகளான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், ஓ! மன்னா, சந்தனுவின் மகன் {பீஷ்மரின்} கட்டளைக்கிணங்கி தங்கள் நிலைகளை ஏற்றனர்.
கோவாசனர்களின் நாட்டு (மன்னன்) சைப்பியன், ஏகாதிபதிகள் அனைவரின் துணையோடு, அரச பயன்பாட்டுக்குத் தகுந்ததும், முதுகில் கொடியைக் கொண்டதுமான அரச யானையின் மீது அமர்ந்து சென்றான்.
தாமரையின் நிறத்தைக் கொண்ட அஸ்வத்தாமன், ஒவ்வொரு அவசரத்திற்கும் தயாராக வெளியே சென்று, சிங்க வால் பொறிக்கப்பட்ட தனது கொடிக்கம்பத்துடன் {அல்லது கொடியுடன்}, அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டான்.
சுருதாயுதன், சித்திரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சல்லியன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகிய வலிமைமிக்க வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த எழுவர், தங்கள் கவசங்களைப் பூண்டு கொண்டு, துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} பின்னே, ஆனால் பீஷ்மருக்கு முன்னே தங்கள் தேர்களில் தொடர்ந்து சென்றார்கள்.
தங்கத்தாலான இந்த வீரர்களின் நெடிய கொடிக்கம்பங்கள் அவர்களது சிறந்த தேர்களை அழகாக அலங்கரித்தபடி உயர்வான பிரகாசத்துடன் இருந்தன. ஆசான்களில் முதன்மையான துரோணனின் கொடிக்கம்பம், நீர்க்குடத்தால் {கமண்டலத்தால்} அலங்கரிக்கப்பட்ட பொற்பீடத்தையும், வில்லின் உருவத்தையும் தனது கொடியில் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிரிவுகளுக்கு வழிகாட்டிய துரியோதனனின் கொடிக்கம்பம், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை பொறித்த கொடியுடன் இருந்தது.
பௌரவன், கலிங்கர்களின் ஆட்சியாளன், சல்லியன் ஆகிய ரதர்கள், துரியோதனனுக்கு முன்னணியில் தங்கள் நிலையை எடுத்தனர். காளை பொறிக்கப்பட்ட கொடி பொருந்திய தனது கொடிக்கம்பத்துடன் உள்ள விலையுயர்ந்த தேரில், (தனது படைப்பிரிவின்) முன்னணிக்கு வழிகாட்டியபடி, மகதர்களின் ஆட்சியாளன் எதிரியை எதிர்த்து அணிவகுத்தான் [3]. இலையுதிர் காலத் திரளான மேகங்களைப் போல இருந்த கிழக்கத்தியரின் அந்தப் படை பெரியதாக இருந்தாலும், (ஒருபுறம்) அங்க நாட்டவரின் தலைவனாலும் (கர்ணனின் மகன் விருஷகேதுவால்) {மறுபுறம்} பெரும் சக்தி கொண்ட கிருபராலும் அது பாதுகாக்கப்பட்டது.
[3] இந்த இடத்தில், வங்கப் பதிப்புகளில் 'Magadhascha ripum yayau.' என்று இருக்கிறது. பம்பாய்ப்பதிப்புகளிலிலோ 'Magadhasya Kripo-yayau.' என்று இருக்கிறது. பிந்தைய உரையை {அதாவது பம்பாய்ப் பதிப்பை} ஏற்றால், "மகதத் துருப்புகளின் முன்னணி படையை வழிநடத்திய படி கிருபர் சென்றார்" என்ற பொருள் வரும் என்கிறார் கங்குலி. அடுத்த வரியிலேயே கிருபரைப் பற்றிய குறிப்பு வருவதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
பன்றிக் கொடியுடன் கூடியதும், வெள்ளியாலானதுமான தனது அழகிய கொடிக்கம்பத்துடன் தனது பிரிவின் முன்னணியில் நின்ற புகழ்மிக்க ஜெயத்ரதன் உயரிய பிரகாசத்துடன் தோன்றினான். நூறாயிரம் {100000} தேர்கள், எட்டாயிரம் {8000} யானைகள் மற்றும் அறுபதாயிரம் {60000} குதிரைகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. சிந்துக்களின் அந்த அரசத் தலைவனால் {ஜெயத்ரதனால்} கட்டளையிடப்பட்ட அந்தப் பெரும் பிரிவு (படையின்) முன்னணியில் மகத்தானவையும் எண்ணற்றவையுமான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் இருந்தது.
அறுபதாயிரம் {60000} தேர்கள், பத்தாயிரம் {10000} யானைகள் ஆகியவற்றுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளன், கேதுமானின் துணையுடன் வெளியே சென்றான். மலைபோலத் தெரிந்த அவனது பெரும் யானைகள், யந்திரங்கள் [4], வேல்கள், அம்பறாத்தூணிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகத் தெரிந்தன. அந்தக் கலிங்கர்களின் ஆட்சியாளன், நெருப்பு போன்ற பிரகாசமிக்கத் தனது நெடிய கொடிக்கம்பம், வெண்குடை, பொற்கண்டம், சாமரங்கள் ஆகியவற்றுடன் பிரகாசமாக ஒளிர்ந்தான்.
[4] இயந்திரங்கள், ஒருவேளை {கல் எறியும்} கவணாக இருக்கலாம் என்கிறார் கங்குலி.
கேதுமானும், அழகிய, அற்புதமான அங்குசம் கொண்ட யானையின் மீது ஏறி (கரு) மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலப் போர்க்களத்தில் நிலைத்திருந்தான். சுடர்மிகும் சக்தி கொண்ட மன்னன் பகதத்தன், தனது யானையைச் செலுத்திய படி, வஜ்ரந்தாங்கியைப் {இந்திரனைப்} போல வெளியே சென்றான். பகதத்தனுக்கு இணையாகக் கருதப்பட்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன், அனுவிந்தன் ஆகிய இருவரும், தங்கள் யானைகளின் கழுத்தில் அமர்ந்தபடி கேதுமானைத் தொடர்ந்து சென்றனர்.
ஓ! மன்னா, துரோணராலும், சந்தனுவின் அரசமகனாலும் {பீஷ்மராலும்}, துரோணரின் மகனாலும் {அஸ்வத்தாமனாலும்}, பாஹ்லீகனாலும், கிருபராலும் அணிவகுக்கப்பட்டதும், பல தேர்ப்பிரிவுகளை உள்ளடக்கியதுமான அந்த {கௌரவ} வியூகம் [5], யானைகளைத் தனது உடலாகக் கொண்டிருந்தது; மன்னர்கள் அதன் தலையாக இருந்தனர்; குதிரைகள் அதன் சிறகுகளாக இருந்தன. அனைத்துப் புறமும் நோக்கி முகத்துடன் கொண்ட அந்தக் கடும் வியூகம், சிரிப்பதாகவும், (எதிரியின் மீது) பாயத் தயாராக இருப்பதாகவும் தெரிந்தது" என்றான் {சஞ்சயன்}.
[5] "வியூகம்" என்பது குறிப்பிட்ட வடிவத்திலான துருப்புகளின் வரிசையாகும். இது போன்ற பல வியூகங்கள், போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த {உத்யோக} மற்றும் பிற பர்வங்களில் பேசப்படும் என்கிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |