Wednesday, September 02, 2015

பீஷ்மரின் பாதுகாப்பு! - பீஷ்ம பர்வம் பகுதி - 018

The Protection for Bhishma! | Bhishma-Parva-Section-018 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் புறப்பாடு குறித்தும், பீஷ்மரைப் பாதுகாத்தவர்கள் குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தை நடுங்கச் செய்யும் உரத்த கூக்குரல், போருக்குத் தயாராக இருந்த போராளிகள் மத்தியில் எழுந்தது. உண்மையில், சங்குகள் மற்றும் பேரிகைகளின் ஒலிகளாலும், யானைப் பிளிறல்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் இந்தப் பூமி இரண்டாகப் பிளக்கப் போவது போலத் தெரிந்தது.


குதிரை கனைப்பொலிகளாலும், போராளிகளின் கூச்சலாலும் விரைவில் வானமும், மொத்த பூமியும் நிறைந்தது. ஓ! தடுக்கப்பட முடியாதவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் துருப்புகள் இரண்டும் மோதலில் ஒன்றை ஒன்று சந்தித்தபோது நடுங்கின. அங்கே (அந்தப் போர்க்களத்தில்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், தேர்கள் ஆகியவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போல அழகாகத் தோன்றின.

உமது தரப்பைச் சேர்ந்த போராளிகளுக்குச் சொந்தமானவையும், தங்க வளையங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பல்வேறு வடிவங்களில் ஆனவையுமான கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் தோன்றின. உமது தரப்பிலும், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும் இருந்த கொடிக்கம்பங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தெய்வீக மாளிகைகளில் உள்ள இந்திரனின் கொடியைப் போல இருந்தன. தங்கக் கவசம் அணிந்த வீரர்கள் அனைவரும், சூரியப் பிரகாசத்துடன், சுடர்விடும் நெருப்பைப் போலவோ, சூரியனைப் போலவோ தோன்றினர். குருக்களுக்கு மத்தியில் உள்ள வீரர்களில் முதன்மையானோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த விற்களுடனும், (அடிப்பதற்காக) உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும், கைகளில் தோல் கையுறைகளுடனும், கொடிக்கம்பங்களுடனும் இருந்தனர். காளைகளைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், தங்கள் (தங்களுக்குரிய) பிரிவுகளின் தலைமையில் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்விஷஹன், துர்முகன், துஸ்ஸ்கன், விவிம்சதி, சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன் ஆகியோர் பீஷ்மரின் பின்புறத்தைக் காத்தார்கள் {Dussasana, and Durvishaha, and Durmukha, and Dussaha and Vivinsati, and Chitrasena, and that mighty car-warrior Vikarna}. அவர்களுக்கு மத்தியில் சத்யவிரதன், புருமித்ரன், ஜயன், பூரிஸ்ரவஸ், சலன் ஆகியோரும் இருந்தனர் {Satyavrata, and Purumitra, and Jaya, and Bhurisravas, and Sala}. இருபதாயிரம் {20,000} தேர்வீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள், சுவால்யர்கள் {சால்வர்கள்}, மத்ஸ்யர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள், கேகயர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், {Abhishahas, the Surasenas, the Sivis, and the Vasatis, the Swalyas, the Matsyas, the Amvashtas, the Trigartas, and the Kekayas, the Sauviras, the Kitavas} கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கைச் சார்ந்த வீரர்கள் என இந்தப் பன்னிரெண்டு {12} வீரக் குலங்கள் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடத் தீர்மானித்தனர். பெரும் அளவுக்கான தேர் வரிசைகளைக் கொண்ட இவர்களும் பாட்டனைப் {பீஷ்மரைப்} பாதுகாத்தார்கள்.

பத்தாயிரம் {10,000} சுறுசுறுப்பான யானைகளுடன் கூடிய ஒரு படைப்பிரிவுடன் மகத மன்னன் அந்தப் பெரும் தேர்ப்பிரிவைப் பின்தொடர்ந்து சென்றான். தேர்ச்சக்கரங்களைக் காத்தவர்களும், யானைகளைக் காத்தவர்களுமாக அவர்கள் அறுபது இலட்சம் {60,00,000} பேர் இருந்தார்கள். (படைக்கு) முன்பு அணிவகுத்துச் சென்ற காலாட்படை வீரர்கள், விற்கள், வாட்கள், கேடயங்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் {அதாவது பல லட்சங்களில்} கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் நகராயுதம் மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்திப் போரிட்டார்கள். உமது மகனின் {துரியோதனனின்} பதினோரு {11} அக்ஷௌஹிணிகளும், ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யமுனையில் இருந்து பிரிந்த கங்கையைப் போல இருந்தன" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English