Saturday, September 05, 2015

சஞ்சயன் வர்ணனை! - பீஷ்ம பர்வம் பகுதி - 024

The commentary of Sanjaya! | Bhishma-Parva-Section-024 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் நிலையைக் குறித்து மீண்டும் விசாரித்த திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் அவற்றின் தன்மைகளை எடுத்துச் சொல்லி, போரின் பயங்கரங்களை விளக்கியது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அங்கே (போர்க்களத்தில்), ஓ! சஞ்சயா, எந்தத் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் முதலில் போருக்கு உற்சாகமாக முன்னேறினார்கள்? எவரது இதயங்கள் தன்னம்பிக்கையினால் நிறைந்திருந்தன? எவரெல்லாம் துயரத்தால் உற்சாகமற்று இருந்தார்கள்? அச்சத்தால் மனிதர்களின் இதயங்களை நடுங்கச் செய்யும் அந்தப் போரில், முதல் அடியை அடித்தவர்கள் யார்? அவர்கள் எனக்குச் சொந்தமானர்களா? பாண்டவர்களுக்குச் சொந்தமானவர்களா? ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எவருடைய துருப்புகளில் மலர் மாலைகளும், தைலங்களும் நறுமணத்தை வெளியிட்டன? கடுமையாக முழக்கமிடும் எவருடைய துருப்புகள், கருணையற்ற வார்த்தைகளைச் சொல்லின?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "இரு படைகளைச் சேர்ந்த போராளிகளும் அப்போது உற்சாகமாகவே இருந்தனர். இரு துருப்புகளின் மலர் மாலைகளும், தைலங்களும் இணையான நறுமணத்தையே வெளியிட்டன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அணிவகுக்கப்பட்ட அந்தப் படையணிகள், போரில் ஒன்றோடு ஒன்று மோதிய போது, அங்கு நேர்ந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. இசைக் கருவிகளின் ஒலியும், சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும், ஒருவரை நோக்கி ஒருவர் முழக்கமிடும் வீரர்களின் கடும் கத்தல்களும் மிக அதிக ஒலியுடன் இருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்ததும், ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டதும், ஆரவாரமுள்ள யானைகளின் பிளிறல்களைக் கொண்டதுமான அந்த இரண்டு படைகளில் இருந்த போராளிகளின் மோதல் பயங்கரமாக இருந்தது" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English