Friday, September 18, 2015

துறவின் அறம் - சந்யாசயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 029

Religion by renouncing fruits of works - Sanyasa yoga ! | Bhishma-Parva-Section-029 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 17) {பகவத் கீதை - பகுதி 5}

பதிவின் சுருக்கம் : செயல், செயலைக் கைவிடுவது ஆகிய இரண்டில் எது சிறந்தது எனக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் கேட்பது; ஒரே இலக்கின் வழிகளே அவை இரண்டும் என்றும்; கர்ம யோகத்தின்படி செயலில் ஈடுபடுபவதே மேன்மையானது எனக் கிருஷ்ணன் பதிலளிப்பது; துறவறம் குறித்த கிருஷ்ணனின் விளக்கம்....

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, செயல்களைக் கைவிடுவதையும் {புகழ்கிறாய்}, அதன்பிறகு (அவற்றின்) பயன்பாடுகளையும் புகழ்கிறாய். இவை இரண்டில் எது மேன்மையானது என்பதை எனக்கு உறுதியாகச் சொல்வாயாக" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 5:1

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "செயல்களைக் கைவிடுவது {துறவு} மற்றும் செயல்களின் பயன்பாடு {கர்மம்} ஆகிய இரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பனவே ஆகும். ஆனால் இவற்றில் துறவை விடச் செயல்படுவதே {கர்மமே} மேன்மையானது. 5:2


வெறுப்போ, ஆசையோ அற்ற ஒருவன் துறவி {சந்நியாசி} என்றே எப்போதும் அறியப்பட வேண்டும். ஏனெனில், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்ட அவன், (செயலின்) கட்டுகளில் {பந்தத்தில்} இருந்து எளிதாக விடுபடுகிறான். 5:3

சாங்கியமும், யோகமும் வெவ்வேறானவை என்று மூடர்களே சொல்வார்கள். ஆனால் அறிவாளிகள் அப்படிச் சொல்வதில்லை. (அந்த இரண்டில்) ஏதேனும் ஒன்றில் நிலைத்திருப்பவன், இரண்டின் பலன்களையும் அடைகிறான் [1]. 5:4

[1] "இங்கே சாங்கியம் என்பது செயலைத் துறத்தலும், யோகம் என்பது அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} செயல்படுவதுமாகும்" என்கிறார் கங்குலி.

சாங்கிய முறையில் உள்ளவர்கள் {துறவிகள்} எந்த நிலையை அடைகிறார்களோ, அதையே யோக முறையில் உள்ளவர்களும் {அர்ப்பணிப்புடன் செயல்படுவோரும் = யோகிகளும்} அடைகிறார்கள். சாங்கியத்தையும் {துறவையும்}, யோகத்தையும் {அர்ப்பணிப்புள்ள செயலையும்} ஒன்றாகக் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆவான். 5:5

அனால், (செயலில்) அர்ப்பணிப்பு இல்லாத {யோகம் இல்லாத} துறவு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அடைவதற்கு அரிதானதாகும். (செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும் ஒரு முனிவன், தாமதமில்லாமல் பிரம்மத்தை அடைகிறான். 5:6

(செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, தனது உடலை வென்று, தனது புலன்களை அடக்கி, உயிரினங்கள் அனைத்திலும் தன்னை அடையாளம் காணும் ஒருவன், (செயலைச்) செய்தாலும் கூட {அதனால்} பிணைக்கப்படுவதில்லை. 5:7

உண்மையை அறிந்தவனும் அர்ப்பணிப்புடையவனுமான {யோகியுமான} ஒரு மனிதன், பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, தீண்டும்போதோ, நுகரும்போதோ, உண்ணும்போதோ, நகரும்போதோ, உறங்கும்போதோ, சுவாசிக்கும்போதோ, பேசும்போதோ, கொடுக்கும்போதோ, எடுக்கும்போதோ, கண் இமைகளைத் திறக்கும்போதோ, அதை மூடும்போதோ, "நான் எதையும் செய்யவில்லை" என்றே எண்ணுவான்; அவன் தனது புலன்கள் புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுகின்றன எனவே கருதுவான். 5:8-9

செயல்களைப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டு, பற்றைத் துறந்து, அவற்றில் {செயல்களில்} எவன் ஈடுபடுவானோ, அவன், நீரால் தீண்டப்படாத தாமரை இலையைப் போலப் பாவத்தால் தீண்டப்படுவதில்லை. 5:10

பற்றுதலைத் துறந்த அர்ப்பணிப்புள்ளோர் {யோகியர்}, உடலாலும், மனத்தாலும், புத்தியாலும், {ஆசையற்ற} புலன்களாலும் தன் {ஆத்ம} தூய்மையின் (தூய்மையை அடையும்) பொருட்டே செயல்களில் ஈடுபடுகின்றனர். 5:11

அர்ப்பணிப்புக் கொண்ட {யோகி} ஒருவன், செயலின் பலனைத் துறந்து, உயர்ந்த அமைதியை அடைகிறான். அர்ப்பணிப்பில்லாதவனோ, செயலின் பலனில் பற்றுக் கொண்டு, ஆசையால் செய்யப்படும் செயலில் பிணைக்கப்படுகிறான் {அவன் செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டப்படுகிறான்}. 5:12

சுயக்கட்டுப்பாடு கொண்ட பண்புருவம் (சுயம் = ஆத்மா), மனத்தால் செயல்கள் அனைத்தையும் துறந்து, தானே செயல்படாமலும், (எதையும்) செயல்படத்தூண்டாமலும், ஒன்பது வாயில் வீட்டில் {நவ (8) துவாரபுரத்தில்} [2] நலமாக நீடிக்கிறது. 5:13

[2] வீடு என்பது மூலத்தில் புரம் என்றிருக்கிறது. "இங்கே டெலங் "புரம்" என்பதை, "நகரம்" என்று வழங்குகிறார். இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் இரண்டு துளைகள், ஒரு வாய் மற்றும் மலம் மற்றும் சிறு நீர் கழிக்கப் பயன்படும் இரண்டு திறப்புகள் கொண்ட உடலே அது {அந்த நகரம்} என்பது நிச்சயம்" என்கிறார் கங்குலி.

செயல், அல்லது மனிதர்களின் செயல்கள், அல்லது செயல்களின் தொடர்பு ஆகியவற்றின் திறன் மற்றும் (அவற்றின்) பலன்களுக்குத் தலைவன் {பரம்பொருள்} காரணம் அல்ல. இயற்கையே (செயலில்) ஈடுபடுகிறது {செயல்படுகிறது}. 5:14

எவனுடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ தலைவன் {பரம்பொருள்} ஏற்பதில்லை. {பாவி என்றோ, நல்லவன் என்றோ எவனையும் கடவுள் ஏற்பதில்லை}. அறியாமையால் அறிவு மூடப்பட்டிருக்கிறது. இதனாலேயே உயிரினங்கள் மயங்குகின்றன {ஏமாறுகின்றன}. 5:15

ஆனால், தன்னறிவால் {ஆத்ம அறிவால்} அறியாமையை அழித்த எவனுக்கும், சூரியனைப் போன்ற அந்த அறிவு, பரம்பொருளையே வெளிப்படுத்துகிறது. 5:16

அவனில் {பரம்பொருளில்} மனம் நிலைத்தவர்கள், தன் ஆன்மாவையே அவனாகக் {பரம்பொருளாக} கொண்டவர்கள், அவனில் வசிப்பவர்கள், அவனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிவால் அழித்து, மீண்டும் திரும்பாதவாறு புறப்படுகிறார்கள் [3]. 5:17

[3] "அத்தகைய மனிதர்கள் மறுபிறப்பு எனும் கடனில் இருந்து விலக்களிக்கப் படுகிறார்கள். அவர்கள் இவ்வுடலை விட்டுப் பரமாத்மாவில் கலக்கிறார்கள்" என்கிறார் கங்குலி.

கல்வியும் பணிவும் கொண்ட ஓர் அந்தணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், ஒரு சண்டாளன் [4] ஆகியோர் மீது சமமான பார்வையையே அறிவுடையோர் செலுத்துகின்றனர். 5:18

[4] "ஸ்வபாகே: Swapacha" என்பது மூலச் சொல் என்றும், அதற்கு "தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன்" என்பது பொருள் என்றும் கங்குலி சொல்கிறார். பாரதியாரோ அது "நாயை உண்பவன்" என்ற பொருளைத் தரும் என்கிறார். இஸ்கானின் பிரபுபாதரும் அப்படியே சொல்கிறார். எனவே இங்கே கங்குலி கையாண்டிருக்கும் சாதி என்ற சொல் பொருந்தாது என்றும், மூலத்தில் சண்டாளன் என்ற சொல்லும் கையாளப்படவில்லை என்றும் தெரிகிறது.

சமநிலையில் நிலைத்து நிற்கும் மனத்தைக் கொண்டோரால் இங்கேயே பிறப்பு வெல்லப்படுகிறது; பிரம்மம் மாசற்றதாகவும், சமநிலை கொண்டதாகவும் இருப்பதால், அவர்கள் பிரம்மத்தில் நிலைப்பதாகச் சொல்லப்படுகிறது [5]. 5:19

[5] இங்கே "பிரம்மம் மாசற்றது என்றும் சமநிலை கொண்டது என்றும் ஸ்ரீதரர் சொல்கிறார். பிறரோ, மாசற்ற சமநிலை கொண்ட பிரம்மம் என்று சொல்கிறார்கள்" என்கிறார் கங்குலி.

மனம் உறுதி பெற்றவனும், மயங்காதவனும், பிரம்மத்தை அறிந்தவனும், பிரம்மத்தில் நிலைத்திருப்பவனுமான ஒருவன் ஏற்புடையதை {இனியதை} அடையும்போது உவகைக் கொள்வதில்லை {மகிழ்வது இல்லை}; அதே போல ஏற்பில்லாததை அடையும் போது துன்புறுவதும் இல்லை. 5:20

புலன்நுகர் புறப்பொருட்களில் {புறத்தீண்டல்களில்} பற்றிலாத மனம் கொண்டவன், தன்னில் உள்ள மகிழ்ச்சியை அடைகிறான்; மனங்குவிந்து பிரம்மத்தைத் தியானித்து, அழியாத மகிழ்ச்சியை அவன் அனுபவிக்கிறான். 5:21

அந்தத் தீண்டலால் (புலன்கள் தங்களுக்குரிய நுகர்பொருட்களைத் தீண்டுவதால்) பிறக்கும் இன்பங்களே துயரை உண்டாக்குவனவாகும். அறிவாளி ஒருவன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமும் முடிவும் உள்ள இவற்றில் ஒருபோதும் இன்புறுவதில்லை. 5:22

இங்கிருக்கும் மனிதரில் எவனும், உடல் அழியும் முன்னர், நிலையான தியானத்துடன், ஆசை, கோபம் ஆகியவற்றால் விளையும் போராட்டங்களைத் தாங்கிக் கொள்ள இயன்றால், அவனே மகிழ்ச்சியுடையவனாகிறான். 5:23

தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் கண்டு, தனக்குள்ளேயே இன்புற்று, தனக்குள்ளே (அறிவு எனும்) ஒளி பொருந்திய ஒருவனே அர்ப்பணிப்பு கொண்டவன் ஆவான் {யோகியாவான்}. அப்படிப்பட்டவன் பிரம்மத்துடன் ஒன்றுபட்டு பிரம்மத்தினுள் கலக்கும் {உறிஞ்சப்படும்} நிலையை {நிர்வாணத்தை} அடைகிறான். 5:24

ஐயங்கள் அகன்று, சுயக்கட்டுப்பாட்டுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, பாவங்கள் அழிந்தவர்களாக இருக்கும் துறவிகள் {யதிகள்}, பிரம்மத்தில் கலக்கும் நிலையை {நிர்வாணத்தை} அடைகிறார்கள். 5:25

ஏனெனில், ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு, மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னறிவைக் {ஆன்ம அறிவைக்} கொண்டிருக்கும் இந்த யோகிகளுக்கு, பிரம்மத்தில் கலக்கும் நிலை இப்போதும் எப்போதும் {அருகிலேயே} இருக்கிறது. 5:26

புலன்நுகர் புறப்பொருட்கள் {புறத்தீண்டல்கள்} அனைத்தையும் (தனது மனதில் இருந்து) வெளியேற்றி, புருவங்களுக்கு இடையில் தனது பார்வையைச் செலுத்தி, மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளை (ஒன்றாகக்) கலந்து, அவற்றைத் தனது மூக்கின் வழியாகக் கடக்கச் செய்பவனும், புலன்கள், மனம், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், விடுதலையை {முக்தியைத்} தனது நோக்கமாகக் கொண்டவனும், ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், {மேற்கண்டவற்றில் எப்போதும்} அர்ப்பணிப்பு கொண்டவனுமான [6] {முனிவன்} ஒருவனே உண்மையில் விடுதலை {முக்தியை} அடைகிறான். 5:27-28

[6] இங்கே கங்குலி, "a devotee", அஃதாவது "அர்ப்பணிப்பு கொண்டவன் அல்லது பக்தன் அல்லது யோகி" என்ற பொருளில் சொல்கிறார். பாரதியாரின் விளக்கத்தின்படி, 28ம் சுலோகத்தின் முதல் வரியில் ய: ஸதா முக்த ஏவ ஸ என்று இருக்கிறது. இங்கே ய: என்பது அவன் என்று பொருள் படும், மீதம் உள்ளவை "எக்காலத்திலும் முக்தியடைவான்" என்று பொருள் தரும். ஆனால் அதற்கு முந்தைய வரியில் முநிர்மோக்ஷபராயண: என்ற வரியும் இருப்பதால், அடுத்த வரியில் ய: என்று சொல்லப்படும் அவன் முனிவன் ஆவான் என்று ஆகிறது. "முநிர்மோக்ஷபராயண:" என்ற மேற்கண்ட சொல்லின் பொருள் "மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் முனிவன்" என்பதாகும். இந்த 28ம் சுலோகத்துக்கான பாரதியாரின் மொழிபெயர்ப்பு "புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி, விடுதலை இலக்கு எனக் கொண்டு, விருப்பமும், அச்சமும், சினமும் தவிர்த்தான் முக்தனே ஆவான் முனி" என்றிருக்கிறது. அவனைப் பக்தன் என்று ஏற்பதைவிட முனிவன் என்று ஏற்பதே சிறந்ததாகத் தெரிகிறது.

வேள்விகள் மற்றும் தவத்துறவுகள் அனைத்திலும் மகிழ்பவனாகவும், உலகங்கள் அனைத்தின் பெருந்தலைவனாகவும், உயிரினங்கள் அனைத்தின் நண்பனாகவும், என்னை அறியும் ஒருவனே மன அமைதியை அடைகிறான். 5:29


ஆங்கிலத்தில் | In English