Religion by Self-Restraint - Dhyan yoga! | Bhishma-Parva-Section-030 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 18) {பகவத் கீதை - பகுதி 6}
பதிவின் சுருக்கம் : அர்ப்பணிப்பைக் {யோகத்தினைக்} குறித்துக் கிருஷ்ணன் விளக்குவது; மனத்தின் சிரமங்கள் மற்றும் அந்த மனத்தை அடக்கி ஆள்வதற்குரிய நுட்பங்களை ஈட்டும் முறை ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணன் விளக்குவது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "செயலின் பலனைக் கருதாமல், செய்ய வேண்டிய செயல்களைச் செய்பவன் துறவியும் {சந்தியாசியும்}, அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} ஆவான். அவன் (வேள்வி) நெருப்பை நிராகரிப்பவனோ, செயலைத் தவிர்ப்பவனோ ஆக மாட்டான். 6:1
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, துறவு {சந்நியாசம்} என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு {யோகம்} என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக {யோகியாக} முடியாது. 6:2
அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது; அவன் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக {அவனுக்குக்} கூறப்படுகிறது. 6:3
புலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். 6:4
ஒருவன் தன்னை {ஆத்மாவை} தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை {ஆத்மாவை} தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். 6:5
தன்னை {ஆத்மாவை} தானே அடக்கியவன் {வென்றவன்} தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ {வெல்லாதவனோ}, தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். 6:6
தன்னைத் தானே அடக்கி {வென்று}, மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) {பரமாத்மாவிலேயே} நிலைத்து நிற்கும். 6:7
அறிவு மற்றும் அனுபவத்தால் {நடைமுறை அறிவால்} எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று {பாசம்} இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ {வென்றிருக்கிறானோ}, எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே {யோகியே} அர்ப்பணிப்பு கொண்டவனாக {யோகத்தில் நின்றவனாக} கூறப்படுகிறான். 6:8
நலன்விரும்பிகள் {அன்பர்கள்}, நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் {ஏதிலர்}, இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் {நடுவர்}, (தனக்குத்) தொடர்புடையவர்கள் {சுற்றத்தார்}, நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். 6:9
அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் {மறைவிடத்தில்} தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் {ஆசைகளும்} இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். 6:10
யோகியின் நிலை |
உடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். 6:13-14
இப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். 6:15
ஓ! அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது {அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை}. உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை {துன்பத்திற்கே துன்பம்} உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் {யோகம் சித்திக்கும்}. 6:16-17
முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் {ஆத்மாவில்} எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் [1] அவன், அர்ப்பணிப்பாளன் {யோகி} என்று அழைக்கப்படுகிறான் 6:18
[1] இங்கே "புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு தன்னில் நிலைத்திருத்தல்" என்று சங்கரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.
காற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் {அசைவின்றி} இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் {யோகி} என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். 6:19
நுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் {ஆத்மாவை} தன்னில் {ஆத்மாவில்} கண்டு, தன்னில் {ஆத்மாவில்} மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப {பேரின்ப} நிலையை உணர்ந்த ஒருவன், உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் {சலிப்படையாமல்} அதிலேயே நிலைத்திருந்து, துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு {யோகம்} என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே {யோகமே} விடாமுயற்சியுடனும் [2], நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். 6:20-23
[2] "சங்கரரால் "நிஸ்சயேந Nischayena" என்பது "விடாமுயற்சி" அல்லது "உறுதியான" என்பதற்கு ஈடாக விளக்கப்படுகிறது. ஸ்ரீதரரோ அதை, "கல்வி மூலம் பெறப்பட்ட அறிவின் உறுதியுணர்வைக் கொண்டு" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.
[3] அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் {ஆத்மாவில்} ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். 6:24-25
[3] "சங்கரர் மற்றும் பிறரால் "த்ருதி க்ருஹீதயா புத்த்யா Mriti-grahitaya Buddhya" என்பது "பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டு" என்று விளக்கப்படுகிறது. இதில் K.T.டெலங், "துணிவுடன் கூடிய உறுதியான தீர்மானம்" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.
எங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே {ஆத்மாவிலேயே} ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். 6:26
உண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு {யோகிக்கு} (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. 6:27
இப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். 6:28
தன்னை {ஆத்மாவை} நுண்மத்தில் {யோகத்தில் கலப்பதில்} அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். 6:29
என்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை {அழிவதில்லை}, எனக்கும் அவன் தொலைவதில்லை {அழிவதில்லை} [4]. 6:30
[4] "அதாவது, நான் அவனுக்கு எப்போதும் தெரிகிறேன். அதே போல, அவனும் எனது பார்வைக்குள்ளேயே இருக்கிறான். நான் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பேன் என்பது இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.
அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான் [5]. 6:31
[5] நானும், அனைத்துயிரினங்களுக்குள் இருக்கும் பிரம்மமும் ஒன்றென அறிந்து, என்னை வழிபடும் யோகி, அனைத்து சந்தர்ப்பங்களிலும், எப்போதும் என்னுடனே நீடித்து இருக்கிறான் என்றும் இதற்குப் பொருள் சொல்லப்படுகிறது.
ஓ! அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் {பரமயோகியாகக்} கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 6:32
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், {எனது} மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை [6]. 6:33
[6] இயற்கையாகவே மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதால், அதன் நிலையான இருப்பை அடைவது எப்படி? {அமைதி கொள்ளச் செய்வது எப்படி?} என்று இதை விளக்குகிறார் கங்குலி.
அடங்க மறுக்கும் மனத்தின் உருவகம் |
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, 'பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்'. 6:35
கட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை {யோகத்தை} அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது" என்றான் {கிருஷ்ணன்}. 6:36
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது? {அவன் என்ன கதியை அடைகிறான்?}. 6:37
இரண்டில் இருந்தும் [7] விழுந்த அவன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா? இல்லையா? 6:38
[7] செயலின் மூலம் அடையப்படும் சொர்க்கத்தையும், அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் பிரம்மத்துடன் கலக்கும் இரண்டு நிலைகள் அவை என்கிறார் கங்குலி.
ஓ! கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல் [8], இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை" என்றான் {அர்ஜுனன்} 6:39
[8] "எதையும் விட்டுவிடாமல் முழுமையாக சொல்வாயாக என்பதே இங்கு பொருள்" என்கிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜூனா}, நல்லதை {நற்செயல்களைச்} செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு {நல்லவனுக்கு} இங்கேயோ {இவ்வுலகிலோ}, இதன் பிறகோ {அடுத்த உலகிலோ} அழிவில்லை. 6:40
நற்செயல்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை {உலகங்களை} அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் {யோகியரின்} குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். 6:41-42
{அப்படி அடையும்} அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ! குருவின் வழித்தோன்றலே {அர்ஜுனா}, விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை {முழுமையான வெற்றியை} நோக்கி மீண்டும் உழைக்கிறான். 6:43
விருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய {முற்பிறவியில் செய்த} பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து கேட்பவனே {விசாரணை செய்பவனே} கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) [9] மேல் உயர்ந்து விடுகிறான். 6:44
[9] "தெய்வீக வார்த்தை என்பது வேதமாகும். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து வெறுமனே கேட்பதன் {விசாரிப்பதன்} மூலமாக மட்டுமேகூட, ஒருவனை, வேதச் சடங்குகளுக்கு இணங்காமல் அதைக் கடந்து செல்லச் செய்யும் அர்ப்பணிப்பின் {யோகத்தின்} திறம் மிகப் பெரியதாகும்" என்று இதை விளக்குகிறார் கங்குலி.
அர்ப்பணிப்பாளன் ஒருவனின் தியானத்திற்குப் பொருத்தமான பொருளான சியாமசுந்தரன் |
தவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் {யோகி} மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} உயர்ந்தவனாவான். எனவே, ஓ! அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக {யோகியாவாயாக}. 6:46
அர்ப்பணிப்பாளர்கள் {யோகியர்} அனைவருக்கும் மத்தியில், தனது {ஆத்மாவின்} அகத்தில் {அந்தராத்மாவில்} என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் {மேலான யோகி} என்று கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 4:47
ஆங்கிலத்தில் | In English |