Sunday, October 18, 2015

தாக்குதலும் எதிர் தாக்குதலும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 045அ

Attack and counter attack! | Bhishma-Parva-Section-045a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்தப் பயங்கர நாளின் மத்திய வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பற்பல) மன்னர்களின் உடல்களைச் சிதைத்த அந்தப் பயங்கரப் போர் தொடங்கியது. போரில் வெற்றியை விரும்பியவர்களான குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களின் பேரொலிகள் சிம்ம முழக்கங்களை ஒத்திருந்தது. அது வானத்திலும் பூமியிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தோல் கையுறைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதிய ஒலிகளும், சங்கொலிகளும் கலந்த அந்த அமளி, ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது. சிம்ம முழக்கங்களைச் செய்த பலர் ஒருவரை நோக்கி ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்தவையான, (கையில் பொதிந்த) கையுறைகளுடன் நீட்டி இழுக்கப்பட்ட வில் நாண்களின் ஒலிகளும், யானைப்படையின் கனமிக்க நடையின் ஒலியும், குதிரைகளின் மூர்க்கமான கனைப்பொலிகளும், அங்குசங்கள் மற்றும் தடிகள் விழும் ஒலிகளும், ஆயுதங்கள் மோதும் ஒலிகளும், ஒன்றை நோக்கி மற்றொன்றாக விரையும் யானைகளின் மணியோசைகளும் ஏற்படுத்திய ஆரவாரம் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தங்கள் உயிரையே துச்சமாகக் கருதிய குரு வீரர்கள் அனைவரும், கொடிக்கம்பங்களை உயர்த்திவயாறும், கொடிய நோக்கங்களோடும் பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர்.


சந்தனுவின் மகனும் {பீஷ்மனும்} கூட, மரணக் கோலுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைந்தார். பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு கங்கையின் மைந்தருக்கு {பீஷ்மருக்கு} எதிராகப் போர்க்களத்தில் விரைந்தான். குருக்களுக்கு மத்தியில் புலிகளான அந்த இருவரும் {பீஷ்மரும், அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் கொல்லவே விரும்பினர். வலிமைமிக்கவரான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் என்னதான் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} துளைத்துக் கொண்டிருந்தாலும், அவரால் அவனை {பீஷ்மரால் அர்ஜுனனை} நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனாலும் {அர்ஜுனனாலும்} போரில் பீஷ்மரை நடுங்கச் செய்ய முடியவில்லை.

வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி, கிருதவர்மனை எதிர்த்து விரைந்தான். இந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போரானது (காண்போருக்கு) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும்வண்ணம் கடுமையானதாக இருந்தது. சாத்யகி, கிருதவர்மனைத் துன்புறுத்தினான். கிருதவர்மனும், சாத்யகியைத் துன்புறுத்தினான். பேரொலிகளால் ஒருவரை ஒருவர் என இருவரும் தங்களைப் பலவீனப் படுத்தினர். உடலெங்கும் அம்புகளால் துளைக்கப்பட்ட அவ்விரு வலிமைமிக்க வீரர்களும் (சாத்யகியும், கிருதவர்மனும்} வசந்த காலத்தில் பூக்கும் கின்குசக மலர்களைப் போலக் காட்சியளித்தனர்.

வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு, பிருஹத்பலனுடன் போரிட்டான். எனினும், விரைவில் அந்த மோதலில், ஓ, மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, சுபத்திரையின் மகனுடைய {அபிமன்யுவுடைய} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, அவனது தேரோட்டியையும் வீழ்த்தினான். தனது தேரோட்டியின் வீழ்ச்சியில் பெரும் கோபம் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் பிருஹத்பலனைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன், மேலும் இரு கணைகளால் (பிருஹத்பலனின்) கொடிக்கம்பத்தை வெட்டி  வீழ்த்தினான். (மேலும்) ஒரு கணையால், அவனது {பிருஹத்பலனின்} தேர்ச்சக்கரங்களைக் காப்பவன் ஒருவனையும், இன்னும் ஒன்றால் {ஒரு கணையால்} அவனது தேரோட்டியையும் வெட்டினான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அபிமன்யு} தனது கூரிய கணைகளால் எதிரிகள் ஒவ்வொருவரையும் பலவீனப்படுத்தினான்.

ஏற்கனவே (பாண்டு மகன்களைக்) காயப்படுத்தியவனும், செருக்குடையவனும், வீண்பெருமிதம் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனுடன் பீமசேனன் போராடினான். குருக்களின் மத்தியில் முதன்மையான அந்த (இளவரசர்கள்) இருவரும் மனிதர்களில் புலியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். அந்தப் போர்க்களத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் கணை மழையால் நிறைத்தனர். பாரதரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்மா கொண்டவர்களும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், சாதித்த போர்வீரர்களுமான அவர்களை {பீமனையும், துரியோதனனையும்} அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்துடன் பார்த்தன.

வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனை எதிர்த்து விரைந்த துச்சாசனன், கூரிய பல கணைகளால் அவனது {நகுலனின்} உயிர்ப்பகுதிகளைத் துளைத்தான். அதே வேளையில் சிரித்துக் கொண்டிருந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, (தனது) எதிரியின் கொடிக்கம்பத்தையும், வில்லையும் தனது கூரிய கணைகளால் அறுத்து, இருபத்தைந்து சிறுதலைக் கணைகளால் {க்ஷூத்ரகப் பாணங்களால்} அவனை {துச்சாசனனை} அடித்தான். எனினும், வீழ்த்தப்படக் கடினமான உமது மகன் {துச்சாசனன்}, அந்தக் கடும் மோதலில் நகுலனின் குதிரைகளையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.

அந்தப் பயங்கர மோதலில் வலிமைமிக்கச் சகாதேவனை எதிர்த்து விரைந்த துர்முகன், அவனை {சகாதேவனை} கணைகளின் மழையால் துளைத்தான். வீரனான சகாதேவனும், அச்சந்தரும் அந்தப் போரில், பெரும் கூர்மை வாய்ந்த ஒரு கணையால் துர்முகனின் தேரோட்டியை வீழ்த்தினான். போரில் ஒடுக்க முடியாத அவ்விருவரும் மோதலுக்காக ஒருவரை ஒருவர் அணுகித் தாக்கி, அடுத்தவரை விரட்டியடிக்க விரும்பி, கொடூரமான கணைகளால் ஒருவருக்கொருவர் தாக்கத் தொடங்கினர்.

மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதினான். பிறகு, அந்த மத்ரத் தலைவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனின் வில்லை அவன் பார்வையிலேயே இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், துண்டான அந்த வில்லை வீசி எறிந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் வலிமையானதும், வேகத்தைக் கொடுப்பதுமான ஒரு வில்லை எடுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நேரான அம்புகளைக் கொண்டு அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} மறைத்து, பெரும் கோபத்துடன், "நில்லும், நில்லும்" என்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்து விரைந்தான். பெரும் கோபம் கொண்ட துரோணர், எதிரிகளின் உயிரை எப்போதும் எடுக்க வல்ல அந்த உயர் ஆன்ம பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} கடினமான வில்லைத் துண்டித்தார். அதே வேளையில் மரணத்தின் இரண்டாவது கோல் போன்ற பயங்கரக் கணையையும் அந்த மோதலின் போது அவர் {துரோணர்} அடித்தார். அந்தக் கணை இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} உடலைத் துளைத்தது. பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} அந்த மோதலின் போது பதினான்கு கணைகளால் துரோணரைத் துளைத்தான். ஒருவரின் மேல் மற்றவர் எனக் கோபம் மூண்ட அவர்கள் தங்களுக்குள் கடுமையாகப் போரிட்டனர்.


ஆங்கிலத்தில் | In English