Monday, November 23, 2015

அர்ஜுனன் செய்த போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 055

The Battle of Arjuna! | Bhishma-Parva-Section-055 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு அபிமன்யு அங்கே விரைவது; பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த அபிமன்யுவைக் எதிர்த்து, துரியோதனன் மகனான லக்ஷ்மணன் விரைவது; அபிமன்யுவிடம் துன்புறும் தனது மகனைக் கண்டு துரியோதனன் அங்கே விரைவது; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் அங்கே விரைவது; அர்ஜுனன் புரிந்த பெரும் போர்; கௌரவவீரர்கள் அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடுவது; இரண்டாம் நாள் போரைப் பீஷ்மர் முடிவுக்குக் கொண்டு வருவது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த நாளின் முற்பகல் கடந்தும் [1], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் ஆகியோரின் அழிவு தொடர்ந்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன் மற்றும் உயர் ஆன்ம கிருபர் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களுடனும் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} போரிட்டுக் கொண்டிருந்தான்.


[1] மூலத்தில் அபராஹ்ண என்று உள்ளது; பகல் 18 - 24 நாழிகைக்குள்ளான காலமே அப்படி அழைக்கப்படுகிறது. 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். காலை விடிந்ததில் இருந்து நாழிகைகள் கணக்கிடப்படும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். காலை 6 மணிக்கு சூரியன் உதிப்பதாகக் கொண்டால், சுமாராகப் பிற்பகல் 1.10 மணி முதல் 3.30 மணி வரை உள்ள காலமே அபராஹ்ண காலமாகும்.

பாஞ்சால மன்னனின் {துருபதனின்} வலிமைமிக்க அந்த வாரிசு {திருஷ்டத்யும்னன்}, உலகம் முழுதும் கொண்டாடப்படும், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகளைக் கொன்றான். தன் விலங்குகளை {குதிரைகளை} இழந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைவாகச் சல்லியனின் தேரில் ஏறிக் கொண்டு, பாஞ்சால மன்னனின் வாரிசின் {திருஷ்டத்யும்னனின்} மீது தன் கணைகளைப் பொழிந்தான்.

துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} திருஷ்டத்யும்னன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனது கூரிய கணைகளை இறைத்தபடி அங்கே விரைந்து வந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, சல்லியன் மீது இருபத்தைந்தும் {25}, கிருபரின் மீது ஒன்பதும் {9}, அஸ்வத்தாமன் மீது எட்டும் {8} எனத் தன் கணைகளை அடித்தான். எனினும், இறகு படைத்த பல கணைகளால் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். சல்லியன் பனிரெண்டு {12} கணைகளாலும், கிருபர் மூன்று {3} கூரிய கணைகளாலும் அவனை {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

உமது பேரனான லக்ஷ்மணன் {துரியோதனனின் மகன்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபடுவதைக் கண்டு சினம் தூண்டப்பட்டு அவனிடம் {அபிமன்யுவிடம்} விரைந்தான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடங்கியது. சினம் தூண்டப்பட்ட துரியோதனனின் மகன் {லக்ஷ்மணன்}, அந்த மோதலில் கூரிய கணைகளைக் கொண்டு சுபத்திரையின் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது (அந்தச் செயல்) மிகுந்த அற்புதம் நிறைந்ததாகத் தோன்றியது.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவனும், வேகமான கரங்களைக் கொண்டவனுமான அபிமன்யு, தனது சகோதரனை {லஷ்மணனை} ஐநூறு {500} [2] கணைகளால் துளைத்தான். லக்ஷ்மணனும், தன் கணைகளைக் கொண்டு அவனது (தனது சகோதரனின் {அபிமன்யுவின்}) வில் தண்டின் நடுப்பகுதியில் {வில்லை பிடிக்கும் இடத்தில்} வெட்டினான். இதனால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மக்கள் அனைவரும் உரக்கக் கூச்சலிட்டனர். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஒடிந்த வில்லை ஒரு பக்கம் விட்டுவிட்டு, அழகானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை [3] எடுத்துக் கொண்டான். இப்படி மோதலில் ஈடுபட்டவர்களும், மனிதர்களில் காளையருமான அவ்விருவரும், ஒருவரையொருவர் சாதனைகளில் விஞ்ச விரும்பி, கூரிய பல கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.

[2] வேறு பதிப்புகளில் 50 கணைகள் என்று சொல்லப்படுகிறது.

[3] பம்பாய் உரையில் சொல்லப்படும் "Vegavattaram" என்பதே சிறப்பானது என்றும், "பெரும் வேகத்தைக் கொடுக்கவல்லது" என்பது அதன் பொருளாகும் என்றும், சுற்றி வளைத்துச் சொல்வதைத் தவிர்க்கவே "கடினமான" வில் என்று தான் உரைத்திருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது பேரனால் (அபிமன்யுவால்) இப்படித் துன்புறுத்தப்படும் தனது வலிமைமிக்க மகனைக் {லக்ஷ்மணனைக்} கண்ட மன்னன் துரியோதனன், அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். (அந்த இடத்தை நோக்கித்) உமது மகன் {துரியோதனன்} திரும்பியதும், மன்னர்கள் அனைவரும் தேர்க்கூட்டங்களுடன் அனைத்துப் புறங்களில் இருந்து அர்ஜுனனின் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், கிருஷ்ணனுக்கு நிகரான ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அபிமன்யு} இப்படி அந்த வீரர்களால் சூழப்பட்டாலும், சிறிதும் நடுங்காதிருந்தான்.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபட்டு வருவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டும், தனது மகனைக் காக்க விரும்பியும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். அதன் பேரில், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் இருந்த மன்னர்கள் தங்கள் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்து வந்தனர்.

அப்போது, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை ஆகியவற்றால் திடீரென எழுப்பப்பட்ட பூமியின் புழுதி, அடர்த்தியாக வானத்தை மூடுவது தெரிந்தது. மேலும் ஆயிரக்கணக்கான யானைகளும், நூற்றுக்கணக்கான மன்னர்களும், அர்ஜுனனின் கணைகளை அடைந்த போது {நெருங்கிய போது}, எந்த முன்னேற்றத்தையும் மேற்கொண்டு அடைய முடியவில்லை. உயிரினங்கள் அனைத்தும் உரத்த அலறல்களை வெளியிட்டன. திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.

குருக்களுடைய அத்துமீறலின் விளைவுகளைப் பொறுத்தவரை, அப்போது அது {அத்துமீறலின் விளைவு} கடுமையான மற்றும் கொடூரமான தன்மையை அடைந்தது [4]. கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட அம்புகளின் விளைவால், வானத்தையோ, திசைப்புள்ளிகளையோ, சூரியனையோ வேறுபடுத்திக் காண முடியவில்லை [5].

[4] கௌரவர்களால் உண்டான கடுமையான, கொடுமையான அநீதி நன்கு வெளிப்பட்டது என்று இங்கே பொருள் கொள்ளலாம்.

[5] இவை அனைத்தும் முழுமையாக அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டன என்பதே இங்கே பொருள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

(தங்கள் முதுகில் இருந்த) கொடிகளை இழந்த யானைகள் பலவாக இருந்தன. தங்கள் குதிரைகளை இழந்த தேர்வீரர்களும் பலராக இருந்தனர். தங்கள் தேர்களை இழந்து உலவி கொண்டிருந்த தேர்ப்படைத் தலைவர்கள் சிலரும் காணப்பட்டனர். தங்கள் தேர்களை இழந்த சில தேர்வீரர்கள், தோள்கள் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, கைகளில் ஆயுதத்துடன் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. குதிரையோட்டிகள் தங்கள் குதிரைகளைக் கைவிட்டும், யானையோட்டிகள் தங்கள் யானைகளைக் கைவிட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடினர். அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் மன்னர்கள் விழுவதும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளில் இருந்து அவர்கள் வீழ்த்தப்படுவதும் காணப்பட்டது.

கடுமையாக மாறிய முகம் கொண்ட அர்ஜுனன், கதாயுதத்தைப் பிடித்தபடி உயர்த்தப்பட்ட வீரர்களின் கரங்களையும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாள்களையோ, ஈட்டிகளையோ, அம்பறாத்தூணிகளையோ, கணைகளையோ, விற்களையோ, அங்குசங்களையோ, கொடிகளையோ தாங்கிக் கொண்டிருந்த கரங்களையும் தனது பயங்கரக் கணைகளைக் கொண்டு போர்க்களமெங்கும் வெட்டினான். அந்தப் போரில், உடைந்து சுக்குநூறாக்கப்பட்ட முள் பதித்த தண்டங்கள், உலக்கைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} சவளங்கள் {பிராசங்கள் - ஈட்டிகளில் ஒரு வகை}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பட்டா கத்திகள், கூர்முனை கொண்ட போர்க்கோடரிகள், வேல்கள் {தோமரங்கள்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துண்டுதுண்டான கேடயங்கள், கவசங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வீசி எறியப்பட்ட அனைத்து வகை ஆயுதங்கள், பொற்காம்புகள் கொண்ட குடைகள், இரும்பு கொக்கிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாற்றுக் கோல்கள் {அங்குசம் போன்றது}, சாட்டைகள் மற்றும் பூட்டாங்கயிறுகள் ஆகியவை குவியல்களாகக் கொட்டப் பட்டிருப்பதை அந்தப் போர்க்களத்தில் காண முடிந்தது.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீர அர்ஜுனனைப் போரில் எதிர்த்து முன்னேற உமது படையில் ஒரு மனிதனும் இல்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனைப்} போரில் எதிர்த்து சென்ற எவரும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். உமது போராளிகள் அனைவரும் ஓடும்போது அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் அற்புத சங்குகளை முழங்கினர்.

அந்தப் போரில் (குரு) படை நிர்மூலமாக்கப்பட்டதைக் கண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, புன்னகைத்தவாறே பரத்வாஜரின் வீர மகனிடம் {துரோணரிடம்}, "கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனும், பாண்டுவின் வீரமகனுமான இந்த வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தான் ஒருவனே (நமது) துருப்புகளைக் கையாளத் தகுதி வாய்ந்தவன் போல, அவர்களைக் கையாள்கிறானே. நாம் இப்போது காணும் இவனுடைய வடிவம் யுக முடிவில் தோன்றும் அந்தகனுக்கு {அனைத்தையும் அழிப்பவனுக்கு} ஒப்பாக இருப்பதால், இன்று இந்தப் போரில், எவ்வழியிலும் இவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறான். (நம்முடைய) இந்தப் பரந்த படையை மீண்டும் திரட்டுவது இயலாது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓடும் நமது துருப்புகளைப் பாரும். அதோ, அனைத்து வழிகளிலும் முழு உலகின் பார்வையைக் கொள்ளையடிக்கும் சூரியன், அஸ்தம் [6] என்று அழைக்கப்படும் சிறந்த மலையை அடையப் போகிறான். இதனால், ஓ! மனிதர்களில் காளையே {துரோணரே}, (படைகளைத்) திரும்ப அழைக்கும் நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். சோர்வும், பீதியும் அடைந்திருக்கும் வீரர்கள் அனைவரும் போரிட மாட்டார்கள்" என்றார் {பீஷ்மர்}.

[6] வனபர்வம் பகுதி 223ல் "சூரியன் உதிப்பதும், மறைவதும் முறையே இரு மலைகளுக்குப் பின்னால் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவன் {சூரியன்} உதய மலையில் இருந்து உதித்து, அஸ்த மலையில் மறைகிறான் என்பதே அந்நம்பிக்கை" என விளக்குகிறார் கங்குலி.

ஆசான்களில் சிறந்த துரோணரிடம் இதைச் சொன்னவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர், உமது படைகளைத் திரும்ப அழைக்க ஏற்பாடு செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்து, மாலையின் சந்திப்பொழுது ஏற்பட்டதும், உமது படைகளும், அவர்களது படைகளும் பின்வாங்கின" {என்றான் சஞ்சயன்}.

இரண்டாம் நாள் போர்முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English